கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

apache
apache

ஒரு 150–160சிசி பைக் வாங்கலாம் என்று ஐடியா. மைலேஜ், ஹேண்ட்லிங்கில் பெயர் பெற்ற நல்ல பைக்கைப் பரிந்துரை செய்யுங்கள். அவ்வப்போது லாங் ரைடும் போவேன். அப்பாச்சி RTR160 பைக் பிடித்திருக்கிறது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடல் Xconnect வசதியோடு வந்திருக்கிறது. வசதிகளில் அப்பாச்சி ஓகே. என் நண்பர்கள் யமஹா FZ-S பைக்கையும் பரிந்துரை செய்கிறார்கள். பிக்–அப் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் எது பெஸ்ட்?

- ராமு வைத்யா, ஜெயங்கொண்டம்.

ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் சமீபத்திய ஒரு சர்வேயில் – 54% வாடிக்கையாளர்கள், FZ-S பைக்குக்குப் பதிலாக RTR160 பைக்தான் பெஸ்ட் என்று தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். இத்தனைக்கும் யமஹா FZ-S பைக், அப்பாச்சியைவிட எக்ஸ் ஷோரூம் விலையில் சுமார் 8,000 ரூபாய் குறைவு. இதுவே பேஸ் மாடல் FZ-S–யைவிட 10,565 ரூபாய் அதிகம் அப்பாச்சி. யமஹா ஒரு ஹேண்ட்லிங்குக்குப் பெயர் பெற்ற 149 சிசி பைக். இது ஏர்கூல்டு இன்ஜின்தான். இதன் பவரும் மிகவும் குறைவு. 12.4bhp பவர்தான். எனவே, பெர்ஃபாமென்ஸில் அப்பாச்சியை அடித்துக் கொள்ள முடியாது. ஆனால், யமஹாவின் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டுக்கு முன் டிவிஎஸ் நெருங்க முடியவில்லை. மொத்தம் 6 கலர்களில் வருகிறது FZ-S. இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்ஸ், அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய மேனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்ட FZ-S பைக், சிட்டிக்குள் புகுந்து புறப்பட்டு வர ஓர் அற்புதமான ஸ்போர்ட்ஸ் பைக்.

அப்பாச்சி – ஒரு ஸ்போர்ட்ஸ் நேக்கட் பைக். இதன் ரைடு குவாலிட்டியும் டைனமிக்ஸும் வேற லெவலில் இருக்கிறது. நீங்கள் லாங் ரைடு போவீர்கள் என்பதால், இதைச் சொல்கிறோம். 110 கிமீ வேகத்தில் போனாலும், இதன் டைனமிக்ஸ் குலையவில்லை. நம் வாசகர் ஒருவர் அடிக்கடி சென்னை–ஈரோடு போய் வருவதைச் சொல்வார். இதன் பவர் யமஹாவைவிட அதிகம். 17.6bhp. டார்க்கும் FZ-S–யைவிட அதிகம் என்பதால், பிக்–அப்பும் செம! இதிலிருப்பது ஆயில் கூல்டு இன்ஜின். அதனால், கூடுதல் ஃபன் டு டிரைவ் கிடைக்கும். யமஹாவைவிட கன்னாபின்னா விலை அதிகம் என்றாலும், அதற்கேற்ற வகையில் வசதிகளைக் கொடுத்துச் சரிக்கட்டி விடுகிறது அப்பாச்சி. SmartXConnect எனும் மொபைலுடன் இணைத்துக் கொள்ளும் கனெக்டட் வசதி, Ride-Urban-Rain-Sport என பல ரைடிங் மோடுகள், GTT எனும் த்ராட்டில் கொடுக்காமலேயே டிராஃபிக்கில் தானாகப் போகும் வசதி (Glide Through Technology), ரேஸிங் கிரிப் டயர்கள் என எல்லாமே உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இதன் கி.கிளியரன்ஸும் யமஹாவைவிட அதிகம். (180 மிமீ). FZ-S–யைவிட 11 கிலோ எடை அதிகம் என்றாலும், இதன் ஹேண்ட்லிங் சூப்பர். டேங்க் கொள்ளளவு 12 லிட்டர்தான். யமஹாவில் 1 லிட்டர் அதிகம். அதற்கேற்றபடி ஓரளவு டீசன்ட்டான மைலேஜைத் தருகிறது RTR160. இதன் ரியல் டைம் மைலேஜாக வாடிக்கையாளர்கள் சொல்வது 43 கிமீ. இரண்டிலுமே சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான்.

ஆன்ரோடு விலையில் சுமார் 15,000 பட்ஜெட் குறைவாகவும், இன்ஜின் ஸ்மூத்னெஸ்ஸும் வேண்டும் என்றால், யமஹாவை டிக் அடியுங்கள். விலை அதிகமானாலும், ஃபன் வேண்டுமென்றால் அப்பாச்சியைக் கிளப்புங்கள்!

எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி
எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி

எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி அவசியமா?

நான் போன ஆண்டு புது டாடா அல்ட்ராஸ் வாங்கினேன். இரண்டாவது சர்வீஸ் முடிந்து டெலிவரி எடுக்கும்போது, எனது பில் ரூபாய் 11,000 –த்தைத் தாண்டியிருந்தது. பில்லில் எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி என்கிற காலத்தில் 7,200 ரூபாய் இருந்தது. என்னிடம் தகவல்கூடச் சொல்லவில்லை. அவர்களாகவே பில் போட்டு பணத்தையும் வசூலித்து விட்டார்கள். இன்னும் 3 ஆண்டுகள், 75,000 கிமீ–க்கு இந்த வாரன்ட்டியை எக்ஸ்டெண்ட் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி என்றால் என்ன… அது கட்டாயத் தேர்வா? அல்லது நம் விருப்பமா? இது நிஜமாகவே வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதா?

- சரண்ராஜ், கோவை.

எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி என்பது, வாரன்ட்டியை சில காலங்களுக்கு விரிவாக்கிக் கொள்வது. இது நமது விருப்பத் தேர்வுதான். இன்ஷூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் போல இது கட்டாயம் கிடையாது. உங்களைக் கேட்காமல் அவர்கள் இதை பில்லிங் செய்தது தவறுதான். நீங்கள் புகார் அளிக்கலாம்.

இங்கே நீங்கள் ஒரு விஷயம் குறிப்பிடவில்லை. புது கார் வாங்கும்போது, எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி எடுக்கவில்லையா… அப்படி எடுக்காத பட்சத்தில்தான் இதுபோல் சர்வீஸ் ஆட்கள் உங்களை எடுக்கத் தூண்டியிருக்கிறார்கள்.

பொதுவாக, புது கார் வாங்கும்போது நெட் ஆன்ரோடு விலை என்றொன்று உண்டு. இது எக்ஸ் ஷோரூம், ரிஜிஸ்ட்ரேஷன் (சாலை வரியோடு சேர்த்து), இன்ஷூரன்ஸ் – இந்த மூன்று மட்டும் சேர்ந்ததுதான் நெட் ஆன்ரோடு விலை. இதுதான் நீங்கள் வாங்கப் போகும் புது காரின் விலை. உதாரணத்துக்கு, ஒரு டாடா அல்ட்ராஸ் XE காரின் ஆன்ரோடு விலை 6.85 லட்சம் ரூபாய். இதில் எக்ஸ் ஷோரூம் விலை 5.90 லட்சம். ரிஜிஸ்ட்ரேஷன் செலவு 65,000 ரூபாய். இன்ஷூரன்ஸ் 30,000 ரூபாய். இதைச் சேர்த்தால் 6.85 லட்சம் வருகிறது. இதில் எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி, ஆக்சஸரீஸ், மற்ற செலவுகள் என்று எக்ஸ்ட்ரா சில ஆயிரங்கள் வரும். அதையும் சேர்த்தே உங்களிடம் கணக்குக் காட்டுவார்கள். உதாரணத்துக்கு, இந்த 6.84 லட்சத்தையே 7.02 லட்சத்துக்குக் கணக்குக் காட்டுவார்கள். கார் வாங்கும்போது, சில வாடிக்கையாளர்கள் விலை குறைக்கச் சொல்லி டீலர்களிடம் பேரம் பேசுவார்கள். அவர்களுக்காக டீலர்கள் புத்திசாலித்தனமாக இந்த எக்ஸ்டெண்டட் வாரன்ட்டியை எடுத்துவிட்டு, ‘நீங்க ஸ்பெஷல் கஸ்டமர்ங்கிறதால, 15,000 ரூபாய் குறைச்சிருக்கோம்… ஓகேவா’ என்று டீல் பேசுவார்கள். நீங்கள் இந்த டீலில் மயங்கி, எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி எடுக்காமல் விட்டிருந்திருப்பீர்கள்.

ஆனால், இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். கார் வாங்கும்போதே, `Manufacturer Warranty’ என்றொரு அம்சம் எல்லா கார்களுக்கும் உண்டு. இது ஸ்டாண்டர்டாக 2 ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ–க்கு கவர் ஆகும். இது ஒவ்வொரு பிராண்டுக்கும் ஏற்ப வேறுபடும். இது பலருக்கும் தெரிவதில்லை. இதுபோக வாரன்ட்டியை எக்ஸ்டெண்ட் செய்வதுதான் எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி. இது எக்ஸ்ட்ரா 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ வரை கவர் செய்து கொள்ளலாம். இந்த விடுபட்ட எக்ஸ்ட்ரா வாரன்ட்டியைத்தான் நீங்கள் இந்த சர்வீஸில் கட்டியிருக்கிறீர்கள்.

மேலும் இந்த எக்ஸ்டெண்டட் வாரன்ட்டியில் என்னென்ன அம்சங்கள் கவர் ஆகும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆல்டர்நேட்டர், ஸ்டார்ட்டர் மோட்டர், கியர்பாக்ஸ், ஸ்டீயரிங் காலம், ரேக் அண்ட் பினியன், இன்ஜெக்டர், மற்ற சென்ஸார்கள் போன்ற முக்கியமான தயாரிப்புப் பாகங்கள் இதில் கவர் ஆவதால், நீங்கள் இந்தக் காலகட்டத்தில் ஏதும் பிரச்னை என்றால், இதைச் செலவில்லாமலேயே சரி செய்து கொள்ளலாம் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டும்.

மற்றபடி தேய்மானம் சம்பந்தப்பட்ட எந்த சமாச்சாரங்களும் இதில் கவர் ஆகாது. உதாரணத்துக்கு – க்ளட்ச் பாக்ஸ், டயர், ஹெட்லைட், பிரேக் ஷூ, பிரேக் பேடு போன்ற தேய்மானம் ஆகும் விஷயங்கள் இந்த எக்ஸ்டெண்டட் வாரன்ட்டியில் கவர் ஆகாது.

அதேபோல், உங்கள் புது காரில் மேலே சொன்ன தயாரிப்புப் பாகங்கள் சிலவற்றில் பிரச்னை எனும்போது, 2 ஆண்டுகளுக்குள் என்றால் நீங்கள் வாரன்ட்டியில்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி என்றால், மேற்கொண்டு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிமீ–க்கு க்ளெய்ம் செய்து கொள்ளலாம் என்று அர்த்தம்.

எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி என்பதை கார் வாங்கும்போதே எடுத்து விடுவது மிகவும் நல்லதுதான். உதாரணத்துக்கு, ஒரு புது ஹேட்ச்பேக்குக்கு 11,000 ரூபாய் EW என்று வைத்துக் கொள்வோம். 3 ஆண்டுகளுக்கு… அதாவது 36 மாதங்களுக்கு இதைக் கணக்கு செய்தால், மாதம் 310 ரூபாய்க்குள்தான் வருகிறது. இது பெரிய நஷ்டத் தொகை இல்லை. வெள்ளம், புயல், விபத்து என்று வரும்போது இது பெரிதும் கை கொடுக்கும் என்பதுதான் உண்மை.

ஜீப் காம்பஸ்
ஜீப் காம்பஸ்

அவசரமாக கார் வாங்கியே ஆக வேண்டிய சூழலில் இருக்கிறேன். எனது அதிகபட்ச பட்ஜெட் 23 - 24 லட்சம். 7 சீட்டரெல்லாம் வேண்டாம்; 5 சீட்டர் எஸ்யூவி போதும். 2.0லி அல்லது அதற்கு மேல் இருந்தாலும் ஓகே! டீசலாக இருந்தால் பெஸ்ட். தரமும் வசதிகளும் முக்கியம். 15 கிமீ மைலேஜ் தந்தால் நலம். லாங் டிரைவ்தான் எனது முக்கிய நோக்கம். புனே, மும்பை, கோவா என்று அலுவலக நிமித்தம் காரில்தான் எனது பயணம். இதற்கு ஒரு நல்ல பரிந்துரை தேவை.

– நித்தேஷ், திருத்துறைப்பூண்டி.

உங்கள் பட்ஜெட் தாராளமாகவே இருக்கிறது. மகிழ்ச்சி. இந்த பட்ஜெட்டுக்கு 7 சீட்டரே நிறைய ஆப்ஷன்கள் உண்டு. ஆனால், 5 சீட்டர் போதும் என்றிருக்கிறீர்கள். எஸ்யூவி என்று சொல்லியிருக்கும் நீங்கள் அடிக்கடி ஆஃப்ரோடு செய்யும் தேவை உண்டா என்பதைச் சொல்லவில்லை. பல கார்களை ஃபில்டர் செய்து பார்த்ததில், எங்கள் குழு கடைசியாக இரண்டு கார்களை டிக் அடித்திருக்கிறது. எம்ஜி ஆஸ்ட்டர் மற்றும் ஜீப் காம்பஸ்.

இரண்டு கார்களுமே தரம் மற்றும் தொழில்நுட்பத்தில் சொல்லியடிக்கின்றன. எம்ஜியைப் பொருத்தவரை Artificial Intelligence தொழில்நுட்பம், தானாக பிரேக் பிடிக்கும் எமர்ஜென்சி பிரேக்ஸ், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ட் செய்யும் அம்சம், முன்பக்க பாதிப்பைத் தடுக்கும் ஃபார்வர்டு கொலிஷன் ப்ரிவென்ஷன், தானாக மாறும் லேன் அசிஸ்ட் என்று அட்டானமஸ் லெவல் 2 பாதுகாப்பு சிஸ்டம் உண்டு. பனேராமிக் சன்ரூஃப், பவர்டு டிரைவர் சீட், டச் ஸ்க்ரீன், மொபைலிலேயே கன்ட்ரோல் செய்து கொள்ளக் கூடிய கனெக்டட் வசதிகள் என்று கொடுக்கும் காசுக்கு ஏற்ற காராக ஜொலிக்கிறது எம்ஜி ஆஸ்ட்டர். பெர்ஃபாமன்ஸ் வேண்டுமென்றால், 1.3 லிட்டர் டர்போ எடுக்கலாம். சுமாரான மைலேஜ் வேண்டுமென்றால், 1.5NA இன்ஜின் ஓகே! ஆனால், இதில் பெட்ரோல் மட்டும்தான். நீங்கள் கேட்ட டீசல் இல்லை. இதன் விலை உங்கள் பட்ஜெட்டுக்குள் நன்றாகவே அடங்குகிறது.

ஜீப் காம்பஸ் மற்றுமொரு சரியான ஆப்ஷன். நீங்கள் நெடுஞ்சாலைப் பயணம் அடிக்கடி போவதால், ஜீப் காம்பஸ் வெறித்தனமான அனுபவம் உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் விரும்பியபடி இதன் 2.0லிட்டர் டீசல் இன்ஜின், 168bhp பவர், 35.0kgm டார்க் – அற்புதமான ஓட்டுதலைக் கொடுக்கும். எம்ஜி அளவுக்கு தொழில்நுட்பத்தில் சொல்லியடிக்கவில்லை என்றாலும், வசதிகளும் தரமும் பக்கா! ஆஃப்ரோடும் ஜீப்பில் இன்னும் வேற லெவலில் இருக்கும். நீங்கள் கேட்ட 24 லட்சத்தில் இதன் ஸ்போர்ட் மாடல் உங்களுக்குச் சரியான சாய்ஸ்.

கொஞ்சம் காத்திருந்தால், காம்பஸின் அண்ணனாக மெரிடியனும் வரவிருக்கிறது. என்ன, விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

டிஃபாகர் ஆப்ஷன்
டிஃபாகர் ஆப்ஷன்
Willowpix

குளிர் மற்றும் மழைக் காலங்களில் கார் ஓட்டுவதுதான் எனக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. காரணம், விண்ட்ஷீல்டு மற்றும் பக்கவாட்டு விண்டோக்களில் ஏற்படும் பனி. எனது காரில் டிஃபாகர் ஆப்ஷன் இல்லை. இதற்கு என்னதான் தீர்வு?

– அப்துல் சமத், திருப்பத்தூர்.

மழை நேரங்களில் கார் ஓட்டுவதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. இது மாதிரி நேரங்களில் வைப்பர்கள்தான் மிகவும் முக்கியம். வைப்பர்கள் சரியில்லாமல் கார் ஓட்டுவது, கண்களைத் திறந்து உள்நீச்சல் அடிப்பதுபோல பிரயோஜனமில்லாத விஷயம். ‘மழைதான் பேய்ஞ்சிருக்கே… விண்ட்ஷீல்டுதான் நனைஞ்சிருக்கே’ என்று நிறுத்தியிருந்த காரை எடுக்கும்போது, பட்டென்று வைப்பரை ஆன் செய்யாதீர்கள். மழை நீர் நேராக விழுந்தால் பரவாயில்லை; மரங்களுக்கு அடியில் நிறுத்தியிருக்கும்போது, காற்றிலிருந்து வரும்போது தூசியோடுதான் விண்ட்ஷீல்டில் தங்கும். இதனால், ஸ்க்ராட்ச் நிச்சயம் விழும். விண்ட்ஷீல்டில் தண்ணீர் ஊற்றித் துடைத்தபிறகுதான் வைப்பரை ஆன் செய்ய வேண்டும். அதேபோல், காரை ஆன் செய்வதற்கு முன்பு வைப்பரைப் போடாதீர்கள். வைப்பர் மோட்டார் ஃப்யூஸ் உடைய வாய்ப்புண்டு.

உங்களுக்கு ஏற்படும் பனிப் பிரச்னை எல்லோருக்குமே உண்டு. இது மேனுவலாக நாம் செய்யும் தவறில்தான் இருக்கிறது. இப்போது வரும் கார்களில் டிஃபாகர் ஆப்ஷன் ஸ்டாண்டர்டாகக் கொடுத்திருப்பார்கள். இது இல்லாத சாதாரண ஏசி கார்கள் என்றால்… முதலில் ஏசி–யை ஆன் செய்யாமல் புளோயரை மட்டும் ஓடவிடுங்கள். ‘ஃப்ரெஷ் ஏர் இன்டேக் மோடு’–ஐ ஆன் செய்யுங்கள். பிறகு ஏசியைப் போடுங்கள். இப்போது இரண்டு விஷயங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று – ஏர் வென்ட்டுகள் மேல்நோக்கிப் பார்த்தபடி இருக்க வேண்டும். இரண்டு – ரீ–சர்க்குலேட் மோடு ஆனில் இருக்கக் கூடாது. பனி சட்டெனக் காணாமல் போகும்.

மற்றபடி, பக்கவாட்டுக் கண்ணாடிகளில் உருவாகும் பனித்துளிகளை மேனுவலாக ஜன்னலை இறக்கிவிட்டு, கையை வைத்துத்தான் துடைத்துக் கொள்ள வேண்டும். அவுட்சைடு மிரர்களிலும் அப்படித்தான். இந்தத் தொல்லையைச் சரிசெய்ய, இப்போது வரும் காஸ்ட்லி கார்களில் ஹீட்டட் மிரர்கள் மற்றும் விண்ட்ஷீல்டுகள் வந்துவிட்டன.