Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்
பெலினோ
பெலினோ
கிளான்ஸா
கிளான்ஸா

எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு குழப்பம். மாருதியின் பெலினோதான் டொயோட்டாவின் கிளான்ஸா. பிரெஸ்ஸாதான், அர்பன் க்ரூஸர். ஆனால் விலையை ஒப்பிடும்போது மாருதிதான் டொயோட்டாவைவிடக் குறைவாக இருக்கிறது. டொயோட்டா வாங்கும் வாடிக்கையாளர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அப்படி வாங்குபவர்கள் என்ன ரகம்… ஏன் இப்படி முடிவெடுக்கிறார்கள்? டொயோட்டா என்னதான் நினைச்சுட்டு இருக்கு?

- சரவணராஜ், வாலாஜாபேட்டை.

நீங்கள் கேட்பது நிஜம்தான். ஒரு பெலினோ Zeta–வின் ஆன்ரோடு விலை 7.05 லட்சம் வருகிறது. இதுவே டொயோட்டா கிளான்ஸாவின் மிட் வேரியன்ட் 8.25 லட்சம். அதாவது, இரண்டு கார்களுக்கும் சுமார் 1.25 – 1.50 லட்சம் வரை வித்தியாசம். ஆனால், கார்களின் அம்சங்கள், வசதிகள், இன்ஜின், இன்ஃபோடெயின் மென்ட்… அட டிசைன்கூட அதேதான். நீங்கள் சொல்வதுபோல் லோகோ மட்டும்தான் வித்தியாசம். அப்படி இருந்தும் பெலினோவைத் தாண்டி கிளான்ஸா வாங்கும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் – டொயோட்டா கொடுக்கும் வாரன்ட்டிதான் என்கிறார்கள் நம் வாசகர்கள். தனது மற்ற கார்களைப்போலவே 1 லட்சம் கிமீ அல்லது 3 ஆண்டுகள் வாரன்ட்டி தருகிறது டொயோட்டா. இதுவே பெலினோவை ஒப்பிடும்போது வெறும் 40,000 கிமீ மட்டுமே வாரன்ட்டி தருகிறது மாருதி. முக்கியமாக No Extra Cost–ல் காம்ப்ரிஹென்ஸிவ் வாரன்ட்டி தருகிறது டொயோட்டா.

இதில் ஒரு புத்திசாலித்தனமும் உண்டு. அதாவது, ஒரு பெலினோவின் Zeta Smarty Hybrid வாங்குவதற்குப் பதில் டொயோட்டா கிளான்ஸாவின் G MT வேரியன்ட் வாங்குவது புத்திசாலித்தனம். காரணம், இரண்டின் விலை வித்தியாசமும் மிகவும் நெருக்கத்தில்தான் இருக்கிறது. Value for Money–யில் கிளான்ஸாவே வெற்றி பெறுகிறது. மேலும் வாரன்ட்டியும் மாருதியை விட அதிகம். கிளான்ஸாவின் V டாப் வேரியன்ட்டில் இருக்கும் கிட்டத்தட்ட பெரும்பான்மையான வசதிகளும் G MT–ல் கிடைத்துவிடும். மைல்டு ஹைபிரிட்டால் மைலேஜும் பக்கா! கிளான்ஸாவில் கிடைக்கும் ப்ரீமியமான வாங்கும் அனுபவம், மாருதியில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனது ப்ரீமியம் நெக்ஸா ஷோரூமில் பெலினோவை விற்பனை செய்கிறது மாருதி. இருந்தாலும், டொயோட்டா எனும் பிராண்டுக்காகவே கிளான்ஸாவை வாங்குபவர்களும் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் அர்பன் க்ரூஸரையும் கொண்டு வருகிறது டொயோட்டா. காரணம்… 56% வாடிக்கையாளர்கள் பெலினோவைவிட கிளான்ஸைாவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எர்கானமிக்ஸ்
எர்கானமிக்ஸ்

வீடியோ ரிவ்யூக்களில் `எர்கானமிக்ஸ்', என்றொரு வார்த்தை அடிக்கடி சொல்கிறீர்களே… எர்கானமிக்ஸ் என்றால் என்ன? எர்கானமிக்ஸ் சரியில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

– அருண்சுந்தர், திருச்சி.

வணக்கம். Ergonomics என்பதற்கு எல்லாத் துறைகளிலும் ஒரு விளக்கம் உண்டு. எல்லாவற்றிலும் மனிதர்களுக்குத் தேவைகளுக்குத் தொடர்புள்ளபடி ஒரு டிசைனைச் செய்தால் அது எர்கானமிக்ஸ். ஆட்டோமொபைலிலும் அப்படித்தான். நீங்கள் உங்கள் பைக்கின் சீட்டில் உட்கார்ந்து வசதியாக ஹேண்டில்பாரைப் பிடித்து பைக் ஓட்டும்படி உங்கள் ரைடிங் பொசிஷன் பக்காவாக இருக்கிறதா… கார் ஓட்டும்போது கண்களை சாலையில் இருந்து வெளியே எடுக்காமல் பவர் விண்டோஸையோ, டச் ஸ்க்ரீனையோ ஆப்பரேட் செய்ய முடிகிறதா… காரின் பின் பக்கம் அமர்ந்து கால்களை நீட்டி மடக்கி, தலை கூரையில் இடிக்காமல் வசதியாக அமர முடிகிறதா… பைக்கின் கியர்களோ… ஸ்விட்ச்களோ உங்கள் கவனத்தைத் திசை திருப்பாமல் இயக்க முடிகிறதா… இப்படி எல்லாவற்றிலுமே எர்கானமிக்ஸ் உண்டு.

சில கார்களில் டிரைவருக்கான ஆர்ம்ரெஸ்ட், கியர் போடும்போது சிக்கலை ஏற்படுத்தும். இவற்றை எர்கானமிக்ஸ் சிக்கல் என்கிறார்கள். ஹூண்டாய், டட்ஸன் போன்ற சில கார்களில் பவர் விண்டோஸ் பட்டனை சென்டர் கன்ஸோலில் வைத்திருப்பார்கள். எம்ஜி போன்ற சில கார்களில் கோ–டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவருக்கும் ஆர்ம்ரெஸ்ட் சரியாக இருக்காது. டாடா ஹேரியர் போன்ற கார்களில் அதன் பெரிய ரியர்வியூ மிரர், கார்னரிங்குகளில் விசிபிலிட்டியை மறைத்து பிளைண்ட் ஸ்பாட்டை ஏற்படுத்தும். இவை எல்லாமே எர்கானமிக்ஸ் சிக்கல்கள்.

ஆரம்ப கால புல்லட்களில் பிரேக்குகள் இடது பக்கமும், கிக்கர் அதோடேயே இன்டக்ரேட் செய்யப்பட்டும் இருக்கும். நாளடைவில் பிரேக் என்றால், வலது காலில்தான் இருக்க வேண்டும் என்பது விதியாக மாறியது. இப்படிச் சில புதுமைகள்கூட எர்கானமிக்ஸ் சிக்கல்களில் வரலாம். எலெக்ட்ரிக் பைக்குகளில் இந்தச் சிக்கல்கள் நிறைய உண்டு.

உதாரணத்துக்கு, ஒக்கினாவா போன்ற ஸ்கூட்டர்களில் இண்டிகேட்டர் இருக்க வேண்டிய இடத்தில் ஹார்ன் இருக்கும். ஹார்ன் இருக்க வேண்டிய இடத்தில் ஹெட்லைட் ஸ்விட்ச் இருக்கும். பட்டன் ஸ்டார்ட் இருக்க வேண்டிய இடத்தில் மோடு பட்டன்கள் இருக்கும். அதேபோல், பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பேட்டரி பொசிஷனுக்காக அதன் ஃப்ளோர் போர்டை உயர்த்தி வைத்திருப்பார்கள். இது சாதா ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு செட் ஆகாது.

இதுபோன்ற சிக்கல்களுக்கு வாகனத்துடன் கொஞ்சம் புரிதலும் பழகலும் இருந்தால் சரியாகிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேக்னைட்
மேக்னைட்

புது கார் வாங்க இருக்கிறேன். எனக்கு டாடாவின் பஞ்ச் காரும் நிஸானின் மேக்னைட்டும் மிகவும் பிடித்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டுமே என் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. என் குழப்பத்துக்கு முடிவு சொல்லுங்கள்!

- அறிவுச்செல்வன், சென்னை.

மேக்னைட், பஞ்ச் – இரண்டுமே 4 மீட்டருக்குட்பட்ட நல்ல காம்பேக்ட் எஸ்யூவிகள். இதில் டாடா பஞ்ச் ஒரு சப் காம்பேக்ட் எஸ்யூவி. அதாவது, மேக்னைட்டைவிட சிறுசு. ஆனால், பஞ்ச்சின் கட்டுமானமோ செம கெத்து. அல்ட்ராஸ் தயாராகும் ALFA ப்ளாட்ஃபார்மில் தயாராவதால், இதன் கிண்ணென்ற கட்டுமானம் சூப்பர். குளோபல் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய சப்காம்பேக்ட் எஸ்யூவி டாடா பஞ்ச்.

இதில் ஆஃப்ரோடு செய்த வாடிக்கையாளர்களிடம் விசாரித்ததில், இதன் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும், 370 மிமீ வாட்டர் வேடிங் தன்மையும் அற்புதம் என்கிறார்கள். டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கார் ப்ளே, 6 ஸ்பீக்கர் ஹர்மான் சிஸ்டம் எல்லாமே ஓகே!

அல்ட்ராஸில் இருக்கும் அதே 86bhp பவரும் 1.2 லிட்டரும், 3 சிலிண்டரும் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் உற்சாகமாக இல்லை. இதன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது ஸ்மூத்தாக இருக்காது. இதன் AMT கியர்பாக்ஸிலும் முன்னேற்றம் தேவை. ஆனால், க்ளட்ச் லைட் வெயிட்டாக இருப்பதால் இந்தக் குறை தெரியவில்லை. இது 16.44 விநாடிகளில் 100 கிமீ–யை எட்டும். இதன் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஃபங்ஷனும் கொஞ்சம் ஸ்லோ. பின் பக்கம் 2 பேருக்கு மட்டுமே இதன் இடவசதி வசதியாக இருக்கும். 3 பேருக்குக் கொஞ்சம் இடநெருக்கடிதான். பின் பக்கமும் ஏசி வென்ட் இல்லை. இதன் விலையை மேக்னைட், ட்ரைபரைவிட அதிகமாகவே பொசிஷன் செய்திருக்கிறார்கள்.

மேக்னைட்டுக்கு வரலாம். டாப் எண்ட் மேக்னைட்டில் எல்இடி ஹெட்லைட்ஸில் ஆரம்பித்து ரியர் ஏசி வென்ட்கள், 360 டிகிரி கேமரா, TPMS, 1 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், 8.0 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கார் ப்ளே, 6 JBL ஸ்பீக்கர் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் (இது எக்ஸ்ட்ரா ஆப்ஷன்) என்று ஏராளமான வசதிகள் இருந்தாலும், பாதுகாப்பில் பஞ்ச்சுக்கு முன்னால் பம்மித்தான் ஆக வேண்டும். ட்ரைபர் தயாராகும் CMF-A+ ப்ளாட்ஃபார்மில்தான் ரெடியாகிறது மேக்னைட். இதன் டர்போ பெட்ரோல் 1.0 இன்ஜின், 100bhp பவருடன் ஸ்மூத்தாக இருக்கிறது. டாடாவில் AMT என்றால், இதிலிருப்பது CVT. இதில் ஓவர்டேக்கிங் செய்வதும் எளிது. 0–100 கிமீ வேகத்தை எட்ட 12.8 விநாடிகள். இது பன்ச்சைவிட வேகம் அதிகம். பின் பக்க இடவசதியும் அருமை. தாராளமான இடவசதி, லெக்ரூம், ஹெட்ரூம் என எல்லா ரூம்களும் பக்கா! காரின் அளவும், பெர்ஃபாமன்ஸும், வசதிகளும் டாடா பஞ்ச்சைவிட அதிகமாக இருந்தும், இதன் விலையும் டாடா பன்ச்சைவிட குறைவாகவே இருக்கிறது. பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் தவிர, எல்லாவற்றிலும் ரேட்டிங் அதிகமாகவே வாங்குகிறது நிஸான் மேக்னைட். ஓட்டிப் பார்த்து முடிவெடுங்கள்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி

எனது முதல் ஸ்கூட்டரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். பட்ஜெட்டை முடிவு பண்ணத் தெரியவில்லை. எனக்கான சரியான யோசனை தாருங்கள்! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது என்னென்ன கவனிக்க வேண்டும்?

- சுந்தரேஷன், கோவை.

நல்ல முடிவு. முதலில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் எதில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிவிடுகிறோம். பெர்ஃபாமென்ஸ், சார்ஜிங் பிரச்னைகள், நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்தில் கிளம்புவது, ரீ–சேல் போன்றவற்றைத் தவிர்த்து ஒரு எலெக்ட்ரிக் வாகனம் நமக்கு நல்ல பலன் தரும்.

பட்ஜெட்டைச் சொல்லவில்லை என்பதால், அகலக்கால் வைக்க வேண்டாம். ரூபாய் 80,000 என்று வைத்துக் கொள்ளலாம். இந்த விலைக்குள் ஆம்பியர், ஒக்கினாவா, கோமாகி, ஹீரோ போன்ற ஸ்கூட்டர்கள் நல்ல ஆப்ஷன்கள். ஏத்தர், ஓலா, பவுன்ஸ் போன்றவற்றை ஆப்ஷனில் வையுங்கள்.

இதற்கும் விலை குறைவான ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் இருப்பது லெட் ஆசிட் பேட்டரியாக இருக்கலாம். அது அவுட்டேட்டட் ஆகிவிட்டது. அதைத் தாண்டி இதில் ஆசிட் லீக்கேஜ் பிரச்னை உண்டு. ஆயிரங்கள் அதிகமானாலும் லித்தியம் அயன் பேட்டரி பைக்கையே வாங்குங்கள்.

பேட்டரிக்கு எத்தனை ஆண்டு வாரன்ட்டி… எத்தனை சார்ஜிங் சர்க்கிள் என்பதையும் டீலர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சார்ஜிங் என்பது ஃபுல் சார்ஜா அல்லது… ஒரு தடவை சார்ஜ் போட்டாலே ஒரு சர்க்கிள் கணக்கு வருமா என்பதைக் கேட்கவும். ஆம்பியர் போன்ற வாகனங்களில் 1,000 சர்க்கிள்கள் வாரன்ட்டி என்கிறார்கள்.

உங்கள் வீடு தரை தளத்தில் இருக்கிறதா… மேல் தளத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. கிரவுண்ட் ஃப்ளோரில் இருந்தால், சார்ஜிங் ஸாக்கெட்டுகளை எக்ஸ்டெண்ட் செய்து நேரடியாகவே ஸ்கூட்டருடன் கனெக்ட் செய்து கொண்டு சார்ஜ் போடுங்கள். மாடி போர்ஷன் என்றால், சார்ஜிங்கில் சிக்கல் உண்டு.

நீங்கள் முதல் மாடி அல்லது அதற்கும் மேலே குடியிருக்கிறீர்கள் என்றால், ‘Detachable Battery’ ஆப்ஷன் அந்த பைக்கில் இருக்கிறதா என்று கேட்டு வாங்குங்கள். அதாவது, பேட்டரியைக் கழற்றி எடுத்து வீட்டுக்குள்ளே கொண்டு போய் சாதாரண 5Amp சார்ஜரில் பவர் ஏற்றிக் கொள்ளலாம். ஒக்கினாவா, ஆம்பியர் போன்ற ஸ்கூட்டர்களில் இந்த ஆப்ஷன் உண்டு.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள், நீங்கள் பைக் வாங்கப் போகும் நிறுவனத்திடமே சொன்னால்… உங்களுக்கு சார்ஜிங் பாயின்ட் பொருத்த வாய்ப்பு உண்டா என்பதைக் கேட்கவும்.

நீங்கள் மட்டும்தான் ஓட்டப் போகிறீர்களா… அல்லது உங்கள் வீட்டுப் பெண்கள், வயதானவர்கள் ஓட்டப் போகிறார்களா என்று சொல்லவில்லை. அப்படியென்றால், அவர்களுக்கு விலை குறைந்த, வேகமே போகாத எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம். இதில் ஆக்ஸிலரேட்டரை முறுக்கு முறுக்கு என முறுக்கினாலும், 25 கிமீ–க்கு மேல் போகாது. ஒக்கினாவா R30, ஒக்கினாவா லைட், ஹீரோ ஃப்ளாஷ் E2, ஹீரோ ஆப்டிமா, ஆம்பியர் ரியோ போன்ற ஸ்கூட்டர்கள் நல்ல தேர்வுகள். இந்த ஸ்கூட்டர்களுக்கு ஆர்சி, லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் போன்ற எந்தப் பஞ்சாயத்துகளும் இல்லை.

நாம் ஏற்கெனவே சொன்னபடி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எர்கானமிக்ஸ்தான் கொஞ்சம் இடிக்கும். இவற்றில் கால் வைக்கும் ஃப்ளோர் போர்டு உயரம் இல்லாத ஸ்கூட்டராக டெஸ்ட் ரைடு செய்து வாங்கவும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism