Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2022 / கார்கள்

Motor Vikatan Awards
பிரீமியம் ஸ்டோரி
News
Motor Vikatan Awards

சிறந்த கார்கள் 2022

விருது சீஸன் களை கட்ட ஆரம்பித்து விட்டது. இந்த முறை வாசகர்கள் நம்மை முந்திக்கொண்டு, ‘‘எங்கள் ஓட்டு யாருக்குத் தெரியுமா?’’ என்று கேட்டு மெயில்/கடிதம்/சமூக வலைதளம் என்று பல ஏரியாக்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டார்கள். மோட்டார் விகடன் நடுவர்கள் குழுவும், வாசகர்களின் கருத்தும் இயைந்துபோன சில முடிவுகளின்படிதான் இந்த ஆண்டும் விருதுகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த மனதையும், மோட்டார் விகடன் விருதுகளையும் வென்ற 2022–ம் ஆண்டுக்கான சிறந்த கார்/பைக்குகளின் அணிவகுப்பு இங்கே ஆரம்பமாகிறது!

மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திரா எக்ஸ்யூவி700

கார் ஆஃப் தி இயர் 2022

மஹிந்திரா எக்ஸ்யூவி700

‘‘உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், 30 லட்ச ரூபாய்க்கு ஒரு ஃபார்ச்சூனர் வாங்கும் மனநிறைவை, ஒரு 18 லட்ச ரூபாய் எக்ஸ்யூவி 500 தருகிறது!’’ – இது மோட்டார் விகடன் கமென்ட் இல்லை. ஒரு வாசகர் சொன்ன தீர்ப்பு. எக்ஸ்யூவி 500 காருக்கே அப்படி எனும்போது, எக்ஸ்யூவி700 வரும்போது வாசகர்களிடம் எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்கும்? அதுவும் புது லோகோவுடன் புது ஜெனரேஷனில் பார்த்தவுடன் ப்ரீமியமாகக் கவர்ந்தது எக்ஸ்யூவி700. லாஞ்ச் ஆன 3 மணி நேரத்தில் 25,000 முன்பதிவுகளை அள்ளியது எக்ஸ்யூவி 700. ஒரு காரில் பலதரப்பட்ட வேரியன்ட்கள்தான், அதைப் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களிடம் எடுத்துச் செல்லும். எக்ஸ்யூவி700–ல் மேனுவல்/ஆட்டோமேட்டிக், டீசல்/பெட்ரோல், 5 சீட்டர்/7 சீட்டர், ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் என ஆன்ரோடு விலை சுமார் 15.65 லட்சம் முதல் 27 லட்சம் விலை வரை மொத்தம் 23 வேரியன்ட்கள்.. எக்ஸ்யூவி 700–ல். 2.0 லி பெட்ரோலின் ஸ்மூத்னெஸ், 2.2 டீசலின் பவர் டெலிவரி.. அதைவிட பெரிய 50 லட்ச ரூபாய் காரில் இருக்கும் வசதிகள்… ADAS, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம்… அலெக்ஸா பில்ட்–இன் வசதி, AdrenoX கனெக்ட் வசதி, ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங்.. இன்னும் வசதிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் லக்ஸூரி பேக் என்றொரு வேரியன்ட் வேறு… அதில் வயர்லெஸ் சார்ஜிங்.. பிளைண்ட் வியூ மானிட்டர், முழங்காலுக்குக் காற்றுப்பை என்று மேலும் பல வசதிகள். நெருக்கடியான மூன்றாவது வரிசை மற்றும் சில சின்ன தரம் குறைந்த பிளாஸ்டிக் பாகங்கள் என குறைகள் இருந்தாலும்… விலைக்கேற்ற… ஒரு முழுமையான பேக்கேஜாக இருக்கிறது இந்த எக்ஸ்யூவி 700. அனைத்துக்கும் மேலாக பாதுகாப்புக்கான NCAP க்ராஷ் டெஸ்ட்டில் ஐந்து ஸ்டார் வாங்கியிருப்பதால், இந்த ஆண்டின் சிறந்த கார்… மஹிந்திரா எக்ஸ்யூவி700.

மாருதி சுஸூகி செலெரியோ
மாருதி சுஸூகி செலெரியோ

பட்ஜெட் ஹேட்ச்பேக் 2022

மாருதி சுஸூகி செலெரியோ

மாருதி என்றாலே பட்ஜெட்தான். இந்த ஆண்டு இறுதியில் தனிக்காட்டு ராஜாவாக வந்திருக்கும் செலெரியோ, ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் சான்ட்ரோ, டியாகோ போன்றவற்றுக்குக் கடும்போட்டியை ஏற்படுத்தக் காத்திருக்கிறது. காரணம், மற்ற நிறுவனங்களெல்லாம் வசதிகள், சொகுசு என்று போட்டி போட்டுக் கொண்டிருக்க… மைலேஜில் சொல்லியடித்து மக்களைப் பேச வைத்துவிட்டது. ஆம்! இப்போதைக்கு இந்தியாவிலேயே அதிக அராய் மைலேஜ் கொண்ட கார் செலெரியோ. 25.23 கிமீ. ஏஎம்டி என்றால், இன்னும் ஒரு கிமீ அதிகம். ‘6 லட்ச ரூபாய்க்கு ஒரு நல்ல மைலேஜ் கார்’ என்றால், இப்போதைக்கு செலெரியோதான் ஆப்ஷன். பட்ஜெட்டைத் தாண்டி டச் ஸ்க்ரீன், புஷ் பட்டன், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் என்று வசதிகளிலும் கலக்கும் செலெரியோவுக்கு, இந்த ஆண்டின் பட்ஜெட் ஹேட்ச்பேக் விருது.

ஹூண்டாய் ஐ20 N-Line
ஹூண்டாய் ஐ20 N-Line

ப்ரீமியம் ஹேட்ச்பேக் 2022

ஹூண்டாய் ஐ20 N-Line

ஒரு காரைப் பார்க்கும்போதே ப்ரீமியம் லுக் ஃபீல் வர வைப்பது சவாலான விஷயம். ஐ20 N-Line கார், அதில் சிரமப்படவே இல்லை. ஆனால், சிரமப்பட்டு இந்த காரை டிசைன் செய்திருக்கின்றனர் ஹூண்டாய் பொறியாளர்கள். ராலி காரை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்ட ஐ20 N-Line, டிரைவிங் ஆர்வலர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்படி இருந்தது. இதில் ஏஎம்டி கியர்பாக்ஸ், இன்னும் ஓட்ட உற்சாகமாக இருந்தது. பெண்களின் வாக்குகளும் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்குக்கு அதிகமாக கிடைத்திருக்கிறது. 11.35 லட்சம் எனும் ப்ரீமியம் விலைக்கு ஏற்ப – ஷார்ப்பான டைனமிக்ஸ், எல்இடி ஹெட்லைட்ஸ், புஷ் பட்டன் ஸ்டார்ட், டர்போ இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் என்று கலக்கலாக வந்த ஐ20 N-Line, ஹேட்ச்பேக்குகளிலேயே ப்ரீமியமாகச் சிரிக்கிறது.

ஸ்கோடா ஆக்டேவியா
ஸ்கோடா ஆக்டேவியா

எக்ஸிக்யூட்டிவ் செடான் 2022

ஸ்கோடா ஆக்டேவியா

செடான் என்றாலே ஸ்கோடாதான் போல. ‘10 லட்சத்துக்கும் செடான் இருக்கு; 35 லட்சத்துக்கும் செடான் இருக்கு’ என்று எக்ஸிக்யூட்டிவ் செக்மென்ட்டில் ஆக்டேவியாவை இந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக மாற்றி இறக்கி இருந்தது ஸ்கோடா. இதன் 2.0லிட்டர் 190bhp பவர் கொண்ட பெட்ரோல் இன்ஜினின் ரிஃபைன்மென்ட் வேற லெவல். இந்த ஸ்ட்ராங்கான இன்ஜின்தான் ஆக்டேவியாவை சூப்பர்யா என்று சொல்ல வைக்கிறது. சூப்பர்பில் இருந்த அதே அளவு பூட் ஸ்பேஸ் – 600 லிட்டர். இது எக்ஸிக்யூட்டிவ் என்பதற்கு இதன் சீட்டிங் சொகுசு மட்டுமில்லை; (6 அடி உயரம் உள்ளவர்கள்கூட காலை நீட்டிக் கொண்டு சொகுசாகப் பயணிக்கலாம்) இதன் வித்தியாசமான, ஹேண்டியான கியர்லீவரும் ஓர் உதாரணம். விலை அதிகம் என்கிற மைனஸ் இருந்தாலும், இந்த ஆண்டின் சிறந்த கட்டுமஸ்தான எக்ஸிக்யூட்டிவ் செடான் ஆக்டேவியாதான்.

வால்வோ S60 பெட்ரோல்
வால்வோ S60 பெட்ரோல்

என்ட்ரி லக்ஸூரி செடான் 2022

வால்வோ S60 பெட்ரோல்

வால்வோவின் இந்த 3rd ஜெனரேஷன் S60 – போன ஆண்டே இந்த விருதை வாங்க வேண்டியது. டிசம்பர் மாதக் கடைசியில் லாஞ்ச் ஆனதால், ஓட்டிப் பார்க்க முடியவில்லை. அடுத்த ஆண்டு இந்த S60–யை ஓட்டிப் பார்த்ததில்தான் இதன் ரிஃபைன்மென்ட்டும் சொகுசும் தெரிந்தது. பல விஐபி–க்களின் சாய்ஸாகவும் இருப்பது இந்த வால்வோ S60தான். படகு போன்ற இதன் நீளமும் (4,761மிமீ); தனவான்களுக்கு ஏற்றபடி காலை நீட்டி அமர செமிஸ்லீப்பர் பஸ்போன்ற வீல்பேஸும் (2,872மிமீ), 190bhp பவரும் 1,969சிசி கொண்ட இதன் பெட்ரோல் இன்ஜினின் தெறி பெர்ஃபாமன்ஸும், குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பாதுகாப்பும், ரேடார் பாதுகாப்புத் தொழில்நுட்பமும் சேர்ந்து இந்த ஆண்டின் லக்ஸூரி செடான் விருதை இதற்கு கொண்டு சேர்க்கிறது.

டாடா பஞ்ச்
டாடா பஞ்ச்

சப் காம்பேக்ட் எஸ்யூவி 2022

டாடா பஞ்ச்

குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்குவதெல்லாம் டாடாவுக்கு சாதாரணமான விஷயமாகிவிட்டது இப்போதெல்லாம்! சின்ன ஹேட்ச்பேக்காக இருந்தாலும், எஸ்யூவியாக இருந்தாலும் சரி – சப்காம்பேக்ட் காராக இருந்தாலும் சரி – டாடா கார்களின் கட்டுமானத்துக்காகவே விருதுகள் தரலாம். காம்பேக்ட்டைவிடக் குறைவான சப்காம்பேக்ட்டாக இருந்தாலும் – கரடுமுரடான சாலைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற எஸ்யூவி குணம், (190மிமீ கி.கிளியரன்ஸ்), இதன் சீட் சொகுசு, டிரைவிங் மேனர்கள், 366 லிட்டர் பெரிய பூட்ஸ்பேஸ், வசதிகளோடு இணைந்த ஒட்டுமொத்த பேக்கேஜ் எல்லாமும் சேர்ந்து பஞ்ச்சுக்கு லைக்ஸ்களைக் குவிக்கின்றன. வெளியே ஸ்டைலிஷ் ஆகவும், உள்ளே சியர்ஃபுல்லாகவும், ஓட்டுதலில் ஃபன் ஆகவும் மனதைக் கொள்ளை கொள்ளும் டாடாவின் பஞ்ச்தான் இந்த ஆண்டின் சிறந்த மைக்ரோ எஸ்யூவி.

ரெனோ கைகர்
ரெனோ கைகர்

காம்பேக்ட் எஸ்யூவி 2022

ரெனோ கைகர்

டஸ்ட்டர் அளவுக்கு இன்னும் ரெனோவுக்கு கைகர் பெயர் பெற்றுத் தரவில்லை என்றாலும், காம்பேக்ட் எஸ்யூவி என்று வந்தால், கைகரை டிக் அடிப்பவர்கள் இருக்கிறார்கள். இதன் ஆரம்ப விலையே 5.45 லட்சம் – 9.55 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) எனும்போது, இந்த எஸ்யூவியைத் தேர்வு செய்யாமல் எப்படி இருக்க முடியும்? நிஸான் மேக்னைட் தயாராகும் அதே உறுதியான கட்டுமானம் கொண்ட ப்ளாட்ஃபார்ம்; போட்டி கார்களில் இல்லாத CVT கியர்பாக்ஸ்; அதிக மைலேஜைத் தரும் (20 கிமீ/அராய்) NA இன்ஜினின் AMT கியர்பாக்ஸ்; சிறப்பான ஓட்டுதல், மேக்னைட்டைவிட 69 லிட்டர் அதிக பூட்ஸ்பேஸ் (405லிட்டர்); மேடு பள்ளங்களைச் சமாளிக்கும் சஸ்பென்ஷன் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (205 மிமீ) என்று தாராளபிரபுவாக மிட்சைஸ் எஸ்யூவி 2022இருப்பதால்… காம்பேக்ட் எஸ்யூவி விருது கைகருக்கு!

ஃபோக்ஸ்வாகன் டைகூன்
ஃபோக்ஸ்வாகன் டைகூன்

மிட்சைஸ் எஸ்யூவி 2022

ஃபோக்ஸ்வாகன் டைகூன்

இந்த மிட்சைஸ் எஸ்யூவி போட்டிதான் ஜூரிகளுக்குப் பெரிய சவாலாக இருந்தது. காரணம், இதே கேரக்டர்களையும் பரிமாணத்தையும் கொண்டிருக்கும் குஷாக்கும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதுதான். டைகூனில் பலரை மிகவும் கவர்ந்தது – நான்கு சிலிண்டர்களில் இரண்டு சிலிண்டர்களை ஆஃப் செய்யும் அம்சம். இது பலரைக் குஷிப்படுத்தியது. மைலேஜுக்கு இது மிகவும் உதவியதாகச் சொன்னார்கள். காரின் ஸ்டெபிலிட்டி, கட்டுமானம், ஸ்மூத்தான DSG/6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்கள் என எல்லாமே குஷாக்கின் அம்சங்களாக இருந்தாலும் – குஷாக்கின் வெயிட்டிங் பீரியடையும், அதைவிட குறைவான விலையையும் ஒப்பிட்டு டைகூன் வாங்கிய பல வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு ஏற்ப இந்தப் போட்டியில் டைகூன் ஜெயித்திருக்கிறது.

ஹூண்டாய் அல்கஸார்
ஹூண்டாய் அல்கஸார்

ப்ரீமியம் எஸ்யூவி 2022

ஹூண்டாய் அல்கஸார்

ஜெயித்தது ப்ரீமியம் எஸ்யூவி செக்மென்ட்டில்; ஆனால் அல்கஸாரை மிட்சைஸ் செக்மென்ட் வாடிக்கையாளர்களே வாங்கும் அளவுக்கு இதை பொசிஷன் செய்ததற்காகவே பாராட்டுகள்.16.30 லட்சம் எக்ஸ் ஷோரூமிலேயே இதன் விலை துவங்குகிறது. வென்டிலேட்டட் சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங், 10.25 டச் ஸ்க்ரீன் கொண்ட கனெக்ட்டட் வசதி, 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், டிரைவ் மற்றும் ட்ராக்ஷன் மோடுகள், எல்இடி ஹெட்லைட்ஸ் – இப்படிப் பல வசதிகள் இந்த ப்ரீமியம் போட்டியில் அல்கஸாரை ஜெயிக்க உதவியிருக்கின்றன. பெட்ரோல்/டீசல், மேனுவல்/ஆட்டோமேட்டிக் என எல்லாவற்றிலுமே அல்கஸாைர வாங்கலாம் என்பது கூடுதல் ஸ்பெஷல். 9.5 விநாடிகளில் 100 கிமீ வேகத்தைத் தொடும் இதன் பெர்ஃபாமன்ஸ், சிறப்பான ஓட்டுதல் தரம், செக்மென்ட் ஃபர்ஸ்ட் வசதிகள் எல்லாம் சேர்ந்தே அல்கஸார், இந்த காஸ்ட்லி ப்ரீமியம் போட்டியில் ஈஸியாக ஜெயிக்கிறது.

மெர்சிடீஸ் பென்ஸ் GLA
மெர்சிடீஸ் பென்ஸ் GLA

என்ட்ரி லக்ஸூரி எஸ்யூவி

மெர்சிடீஸ் பென்ஸ் GLA

வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து, பென்ஸ் கார்கள் அடிக்கடி ஃபேஸ்லிஃப்ட் ஆகிக் கொண்டே இருக்கும். அப்படி இந்த ஜூலை மாதம் வந்த மெர்சிடீஸ் பென்ஸ் GLA–வில் பழசைவிட ஏகப்பட்ட மெருகூட்டல்கள் தெரிந்தன. உயரமான ரூஃப், பெரிய 19 இன்ச் வீல்கள், சிட்டிக்குள் ஈஸியாக ஓட்டக் கூடிய பெட்ரோல் இன்ஜின், ஹைவேஸில் பறக்க உதவும் டீசல் இன்ஜின், ஸ்மூத்தாக இயங்கும் 7 மற்றும் 8 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ், முன்பைவிட அதிகமான வீல்பேஸ் மற்றும் இடவசதி, வாய்ஸ் கமாண்ட் வசதிகள், எஸ்யூவிக்கு ஏற்ற அந்தக் கட்டுமானம் மற்றும் ஓட்டுதல் என எல்லாமே சாதகமாகவே இருக்கிறது இந்த பென்ஸுக்கு. இதில் பெர்ஃபாமன்ஸ் விரும்பிகளுக்கு AMG மாடலும் தெறியாக உண்டு என்பது ஸ்பெஷல். இந்த பென்ஸ் GLA – 50 லட்சத்துக்கு ஓர் அற்புதமான என்ட்ரி லெவல் சொகுசு எஸ்யூவி.

டாடா டிகோர் Ziptron EV
டாடா டிகோர் Ziptron EV

சிறந்த எலெக்ட்ரிக் கார் 2022

டாடா டிகோர் Ziptron EV

டிகோரில் Xpres–T என்றொரு எலெக்ட்ரிக் கார் ஒன்று ஃப்ளீட் மார்க்கெட்டில் விற்பனையாகி வந்தது. அதன் குறைந்த பராமரிப்பையும், நல்ல ரேஞ்சையும், விலையையும் பார்த்த வாடிக்கையாளர்கள், பிரைவேட் மார்க்கெட்டுக்கும் இதை எதிர்பார்த்தார்கள். அப்படித்தான் வந்தது டிகோர் Ziptron. நெக்ஸானின் இதயமான Ziptron–ன் குணநலன்களைக் கொண்டும், IP67 ரேட்டிங் கொண்ட 26kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டும் இயங்கும் டிகோரின் ஓட்டுதலில் குறைச்சல் இல்லை. நாம் இதை பெங்களூரு சென்று நாள் முழுக்க, பேட்டரி காலியாகும் வரை இதை ஓட்டிப் பார்த்த நினைவு வருகிறது. இதன் ஃபுல் ரேஞ்ச், மிகச் சரியாக 190–200 கிமீ கிடைத்தது. இது ஹைவேஸுக்குச் சரிப்படாது என்றாலும், ஃபாஸ்ட் சார்ஜிங் இருப்பதால் பிரச்னை இருக்காது. இப்போதைக்கு 12 - 13 லட்ச ரூபாய் விலைக்குள் ஒரு சிக்கனமான எலெக்ட்ரிக்குக்கு டிகோரைத் தவிர வேறு ஆப்ஷன் இல்லை. இந்த ஆண்டின் சிறந்த எலெக்ட்ரிக், டாடா டிகோர் Ziptron.

ஃபோர்ஸ் கூர்க்கா
ஃபோர்ஸ் கூர்க்கா

பெஸ்ட் ஆஃப்ரோடர் 2022

ஃபோர்ஸ் கூர்க்கா

இந்தியாவில் விலை குறைவான ஜீப் ஸ்டைல் ஆஃப்ரோடர்கள் என்றால் தார்… அதன் பிறகு சட்டென நினைவுக்கு வருவது. கூர்க்கா. மஹிந்திரா தாரைவிட கூர்க்காவில் – சின்ன ஏணி, டிஃப்ரன்ஷியல் லாக்குகள், ஸ்நார்க்கிள் என ஆஃப்ரோடுக்கான வசதிகள் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும். பென்ஸில் இருக்கும் 2.6லிட்டர் இன்ஜின், அதே பென்ஸில் இருந்து பெறப்பட்ட G28 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், 700 மிமீ தண்ணீருக்குள் செல்லக்கூடிய வாட்டர் வேடிங் தன்மை, முன்/பின் என இரண்டு பக்கமும் டிஃப்ரன்ஷியலை லாக் செய்து கொள்ளும் வசதி, மிகவும் செங்குத்தான மலைகளில் ஏற 4W Low கியர் செட்–அப், சேறு சகதிகளிலும் தானாகக் கிளம்பும் அளவுக்குக் கொப்புளிக்கும் இதன் டார்க், பெரிய பள்ளங்களில் இறங்கினாலும் பம்பர்கள் இடிக்காத அளவு இதன் 37–25–33 டிகிரி அப்ரோச்/டிப்பார்ச்சர்/பிரேக் ஓவர் ஆங்கிள்கள், 4 மற்றும் 2 வீல் டிரைவ் ஆப்ஷன்கள் என 16 லட்சம் ரூபாய்க்குப் பல வசதிகள். இந்தச் சென்னை மழைக்கே தண்ணி காட்டிய கூர்க்காதான் இந்த ஆண்டின் பெஸ்ட் ஆஃப்ரோடர்.

எம்ஜி ஆஸ்ட்டர்
எம்ஜி ஆஸ்ட்டர்

டெக்னாலஜி ஆஃப் தி இயர் 2022

எம்ஜி ஆஸ்ட்டர்

‘ஆஸ்ட்டர் அறிவாளியா… பலசாலியா’ என்ற தலைப்பில் மோ.வி–யில் வந்த கவர் ஸ்டோரிக்குப் பதில் சொல்லிவிட்டது ஆஸ்ட்டர். ‘ஆஸ்ட்டர் இரண்டுமேதான்’ என்கிற ரீதியில் வாசகர்களிடம் இருந்து ஆஸ்ட்டருக்குக் குவிந்த ரெஸ்பான்ஸ்கள் எக்கச்சக்கம். உங்கள் வீட்டில் அமேஸான் அலெக்ஸா இருக்கிறதா.. அதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இதை ஒரு மொபைல் அலெக்ஸா என்றே சொல்லலாம். ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் கொண்ட Personal Assistance என்பதுதான் எம்ஜி ஆஸ்ட்டரின் அடையாளமே! எமர்ஜென்ஸி பிரேக்கிங், லேன் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என இதில் உள்ள ADAS Level 2 தொழில்நுட்பம் வேற லெவல். அட, ரிவர்ஸ் எடுக்கும்போது உதவும் Rear Cross Traffic Alert இன்னும் ஒரு படி மேலே! மேலும் டிஜிட்டல் சாவி, போனிலேயே காரை இயக்கும் தொழில்நுட்பம் என்று டெக்னாலஜியின் உச்சத்தில் இருக்கும் எம்ஜி ஆஸ்ட்டருக்குத்தான் இந்த விருது!

ஜீப் காம்பஸ்
ஜீப் காம்பஸ்

ஃபேஸ்லிஃப்ட் ஆஃப் தி இயர் 2022

ஜீப் காம்பஸ்

அண்மையில் ஃபேஸ்லிஃப்ட் காம்பஸின் ஓட்டுதல் தரத்தையும் ஆஃப்ரோடையும் சோதனையிட்டபோது வியந்தே போனோம். கொஞ்சம் அசந்தால் பெஸ்ட் ஆஃப்ரோடருக்கான விருதைத் தட்டிச் செல்லக் கூடிய காம்பஸ், மிகச் சாதாரணமாக இந்த ஆண்டுக்கான ஃபேஸ்லிஃப்ட் விருதை வாங்குகிறது. ஒரு எஸ்யூவி அல்லது ஸ்போர்ட்ஸ் காருக்கான குணநலன்களை மட்டுமல்ல; அத்தனை ஆஃப்ரோடுக்கான அம்சங்களையும் கொண்டிருக்கிறது காம்பஸ். இதன் புது 7 ஸ்லாட் கிரில், பெட்ரோல்/டீசல் ஆப்ஷன்கள், 4வீல் டிரைவ், வென்டிலேட்டட் முன் சீட்கள், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, முழுக்க லெதர் சீட்கள், பெரிய 18 இன்ச் அலாய்வீல்கள், சன்ரூஃப் என்று தேவையான எல்லா மாற்றங்களையும் கொடுத்து அசத்திவிட்டது ஜீப். அதிலும் 80–வது ஆண்டு Anniversary Special Editon, ‘ஃபேஸ்லிஃப்ட்னா இப்படி இருக்கணும்’ என்று சொல்லாமல் சொல்கிறது. 2022–ல் காம்பஸில் 7 சீட்டர் எஸ்யூவி வேறு வருவதாகத் தகவல்.