Published:Updated:

மோட்டார் விகடன் விருதுகள் 2021

மோட்டார் விகடன் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் விகடன் விருதுகள்

இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான வாசகர்கள் எங்களை ஆச்சரியப்படுத்தினார்கள்.

ந்த ஆண்டின் சிறந்த கார், பைக், ஸ்கூட்டர் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க, வழக்கம்போல இந்த ஆண்டும் உங்களில் பலர் ஆன்லைனில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பங்கெடுத்துக் கொண்டீர்கள். உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான வாசகர்கள் எங்களை ஆச்சரியப்படுத்தினார்கள். குறிப்பாக ரத்தினம், குறள், ஜாஃபர், கதிர்ராஜா, அசோக்குமார், கார்த்திகேயன், நந்தா, ரஷீத், கோபிநாத், மஞ்சுநாதன், மன்னன் அன்பு, செல்வராஜ் சத்தீஷ், ரமேஷ் கண்ணன், ஜனா ஆகியோர் செய்திருந்த தேர்வும் நம் நடுவர்கள் செய்திருந்த தேர்வும், ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தது. அவர்களுக்கும் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட மற்ற அனைவருக்கும் மோட்டார் விகடனின் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

மோட்டார் விகடன் விருதுகள் 2021

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கார் ஆஃப் தி இயர்: கியா சோனெட்

மோட்டார் விகடன் விருதுகள் 2021

டந்த ஆண்டு வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்த செல்ட்டோஸுக்கு அடுத்தபடியாக, போட்டி மிகுந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் குதித்தது கியா. வென்யூவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், சோனெட் முற்றிலும் வேறுபட்ட தயாரிப்பாகவே காட்சியளித்தது. ஹூண்டாய்க்கும் இதற்குமான ஒற்றுமை, காரின் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எதிரொலிக்கிறது. மற்றபடி செல்ட்டோஸையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, சோனெட்டில் சிறப்பம்சங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது கியா. காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில், டீசல் இன்ஜின் - டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் காம்போவுடன் கிடைக்கும் ஒரே கார் இதுதான்! இதற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு என்னவென்றால், இரண்டே மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் புக் செய்யப்பட்டன. இதில் 60% பெட்ரோல் மாடல்களும், 40% டீசல் மாடல்களும் அடக்கம். மேக்னைட், i20, ஹோண்டா சிட்டி, கிளாஸ்ட்டர், டியாகோ, தார் என்று பலத்த போட்டிக்கு நடுவே, ஆல்ரவுண்டராகச் சொல்லியடித்து மோட்டார் விகடனின் 2021 சிறந்த காருக்கான விருதைப் பெறுவது - கியா சோனெட்தான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பட்ஜெட் ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர்: டட்ஸன் ரெடி-கோ

மோட்டார் விகடன் விருதுகள் 2021

‘ஒரு பட்ஜெட் கார், பட்ஜெட் காரின் சைஸில் இருக்கலாம். ஆனால் அது பார்க்க பட்ஜெட் கார் போல இருக்கக் கூடாது’ - இந்த விதியை டட்ஸன் கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறது. இப்போதுதான் மெல்ல மெல்ல தன்மேல் விழுந்திருக்கும் பட்ஜெட் இமேஜிலிருந்து அது வெளியே வந்து கொண்டிருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், ரெடி-கோ BS-6 அமைந்திருக்கிறது. காருக்குள்ளேயும் வெளியேயும் பல மாற்றங்கள் நடந்திருப்பதால், ஒரு ஃபேஸ்லிப்ஃட்போல அல்லாமல் புதியதொரு தயாரிப்பாகக் காட்சியளிப்பதே இதன் பெரிய ப்ளஸ். எதிர்பார்த்தபடியே முன்பைவிட விலை உயர்ந்திருந்தாலும், புதிய வசதிகளைக் கொடுத்துள்ளது டட்ஸன். மேலும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கேற்ப, ரெடி-கோவின் கட்டுமானம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இதுவே இந்த ஆண்டின் சிறந்த ஹேட்ச்பேக்.

என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர்: டாடா டியாகோ

மோட்டார் விகடன் விருதுகள் 2021

டியாகோ BS-6 அறிமுகமானபோது, ஒரு மகிழ்ச்சியான செய்தியை டாடா அறிவித்தது. அதாவது Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 4 ஸ்டார் ரேட்டிங்கை இந்த கார் பெற்றிருப்பதுதான் அது (இது டிகோருக்கும் பொருந்தும்). தனது வகையிலேயே பாதுகாப்பான மாடலாகத் திகழும் டியாகோ, டிரைவர்ஸ் காராகவும் இருப்பது தெரிந்ததே! இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் தோற்றம், காருக்கு முன்பைவிட ஸ்போர்ட்டியான லுக்கைத் தந்துள்ளது. கேபினிலும் சில வித்தியாசங்கள் தெரிகின்றன. தற்போது பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே டியாகோவை வாங்க முடியும் என்பது சிலருக்கு வருத்தத்தைத் தரக்கூடும். மற்றபடி மிட்ரேஞ்ச் ஹேட்ச்பேக் போன்றதொரு உணர்வை, இந்த என்ட்ரி லெவல் டாடா கார் அள்ளித் தருவதால், இதுவே இந்த ஆண்டின் சிறந்த என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்.

வேரியன்ட் ஆஃப் தி இயர்: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் டர்போ

மோட்டார் விகடன் விருதுகள் 2021

பெலினோ RS, டியாகோ JTP, ஃபியட் புன்ட்டோ அபார்த்... இந்த பவர்ஃபுல் ஹேட்ச்பேக்குகள் எல்லாமே வரலாறாகிவிட்டன. தற்போது ப்ரீமியம் ஹேட்ச்பேக்குகளில் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் வந்துவிட்ட நிலையில், மிட் ரேஞ்ச் ஹேட்ச்பேக்குகளில் அந்த ஆப்ஷன் இல்லையே என்ற குறைபாட்டுக்கான விடையாக இது வந்திருக்கிறது. ஆராவில் இருக்கும் அதே இன்ஜின்-கியர்பாக்ஸ் காம்போதான் என்றாலும், அதைவிடக் குறைவான எடை காரணமாக, இங்கே பெர்ஃபாமன்ஸ் இன்னும் அதிரடி. சொல்லப்போனால், இதைவிட விலை அதிகமான போலோ TSI-யைவிட இது வேகமாக உள்ளது (0 - 100 கிமீ வேகம்: 9.82 விநாடிகள்). மற்றபடி வழக்கமான கிராண்ட் i10-ல் இருக்கும் பிராக்டிக்கலான கேபின் - எளிதான ஓட்டுதல் - நீட்டான டிசைன் ஆகியவை அப்படியே இங்கும் தொடர்வதால், இதுவே இந்த ஆண்டின் வேரியன்ட் ஆஃப் தி இயர்.

ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஆஃப் தி இயர்: ஹூண்டாய் i20

மோட்டார் விகடன் விருதுகள் 2021

னது பெயரிலிருந்து எலீட்டை நீக்கிவிட்டு, மூன்றாம் தலைமுறை i20 களமிறங்கியுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மிட்சைஸ் செடான்களுக்குச் சவால் விடும் விதமாக, சிறப்பம்சங்களில் வேற லெவல் பண்ணுகிறது i20. புக்கிங் தொடங்கிய 20 நாள்களில், 20 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டன. மேலும் இந்த காரின் வரலாற்றில் முதன்முறையாக, கார் ஆர்வலர்களுக்குப் பிடித்தமான டர்போ பெட்ரோல் இன்ஜின் - ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் புதிய i20 கிடைப்பது செம. மேலும் ஹூண்டாயின் லேட்டஸ்ட்டான ‘Sensuous Sportiness’ டிசைன் விதிகளின்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், காரின் தோற்றம் செம ஷார்ப்பாக உள்ளது. கேபினும் அதற்கு ஈடுகொடுக்கும்படி அம்சமாக அமைந்துள்ளது. இந்த BS-6 யுகத்தில், சிறப்பான மைலேஜ் மற்றும் அதிக டார்க்கைத் தரும் டீசல் இன்ஜின் தொடர்வதால், இதற்கே இந்த விருது!

காம்பேக்ட் செடான் ஆஃப் தி இயர்: ஹூண்டாய் ஆரா

மோட்டார் விகடன் விருதுகள் 2021

ரண்டாம் தலைமுறை எக்ஸென்ட் என இந்தப் புதிய காம்பேக்ட் செடானை வழிமொழியலாம். என்றாலும், அந்த காரைவிட அனைத்து ஏரியாக்களிலும் முன்னேறிய தயாரிப்பாக ஈர்க்கிறது ஆரா. தனது லேட்டஸ்ட் தயாரிப்புகளைப்போலவே, இங்கும் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மற்றும் அதிகப்படியான வசதிகளை ஹூண்டாய் வழங்கியிருக்கிறது. மேலும் போட்டி கார்களில் டீசல் இன்ஜின் காணாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில், அதையும் இந்த கார் தொடர்வது நன்மையே! கூடவே AMT ஆப்ஷனும் உண்டு (1.2 NA பெட்ரோல் இன்ஜினிலும் இது உண்டு). தவிர விலை உயர்வும் கட்டுக்குள் இருந்தது என்பது, வாடிக்கையாளர்களுக்கு ப்ளஸ் பாயின்ட் தான். மொத்தமாகப் பார்க்கும்போது, காம்பேக்ட் எஸ்யூவிகளிடம் தனது இருப்பை இழந்து கொண்டிருக்கும் இந்தப் பிரிவுக்கு, ஆரா புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.

மிட்சைஸ் செடான் ஆஃப் தி இயர்: ஹோண்டா சிட்டி

மோட்டார் விகடன் விருதுகள் 2021

க்ராஷ் டெஸ்ட் விதிகள், BS-6, இன்சூரன்ஸ் போன்ற பல காரணங்களால், கார்களின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது. புதிய மாடல்களில் இது ஒரு பிரச்னையாகத் தெரியக்கூடாது என்பதற்காக, கார் உற்பத்தியாளர்கள் அதிக வசதிகளை வழங்குவதைப் பார்க்க முடிகிறது. இதே உத்தி, ஐந்தாம் தலைமுறை சிட்டியிலும் எதிரொலித்தது. ஆனால் அதைத் தாண்டி, அதிகரிக்கப்பட்ட அளவுகள் காரணமாக, ஒரு மினி சிவிக் ஃபீலிங்கை இந்த ஹோண்டா கார் தந்தது உண்மைதான். முற்றிலும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், கார் ஆர்வலர்களை எப்போதும்போலத் திருப்திபடுத்திவிடுகிறது. முன்பைவிட ஸ்மூத்தாக இயங்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பிராக்டிக்காலிட்டியில் ஈர்க்கிறது. காரின் வெளிப்புறத்தைப்போலவே, கேபினிலும் ப்ரீமியம் மயம் தொடர்கிறது. கூடவே சிட்டிக்கே உரித்தான சொகுசான இருக்கைகள்.... சூப்பர் Chauffeur அனுபவம்!

என்ட்ரி லக்ஸூரி செடான் ஆஃப் தி இயர்: பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூபே

மோட்டார் விகடன் விருதுகள் 2021

டி A3 மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் CLA இருந்த செக்மென்ட்டுக்கு, சரியான நேரத்தில் என்ட்ரி ஆகியிருக்கிறது பிஎம்டபிள்யூ. முன்னே சொன்ன கார்களில் அடுத்த தலைமுறை வெர்ஷன்கள் இன்னும் இந்தியாவுக்கு வராத சமயத்தில், கெத்தாக வந்திருக்கிறது 2 சீரிஸ் கிரான் கூபே. ப்ரீமியம் செடான்களைவிடக் கொஞ்சம் அதிக விலையில் வந்திருக்கும் இந்த கார் ஸ்டைலான டிசைன் - தரமான கேபின் - அதிக சிறப்பம்சங்கள் - பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸ் என அசத்துகிறது. மேலும் பிஎம்டபிள்யூவின் வழக்கமான RWD பாணியிலிருந்து விலகி, FWD அமைப்பை 2 சீரிஸ் கிரான் கூபே கொண்டிருக்கிறது. என்றாலும் இது தரும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தில், எந்தவிதமான மாற்றமும் இல்லை. காம்பேக்ட்டான டிரைவர்ஸ் லக்ஸூரி செடான் கார் என்றால் இதுதான்.

எம்பிவி ஆஃப் தி இயர்: கியா கார்னிவல்

மோட்டார் விகடன் விருதுகள் 2021

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் வெளியான இந்த எம்பிவி, இனோவா க்ரிஸ்டாவின் தொடர்ச்சியாகத் திகழ்கிறது. கார்னிவலில் இருக்கும் வசதிகளின் பட்டியல், காரைப்போலவே நீளமாக உள்ளது. மேலும் டொயோட்டாவில் கிடைக்காத ப்ரீமியம் & சொகுசு அனுபவம், இதன் கேபினில் நீக்கமற நிறைந்திருக்கிறது. தவிர எக்கச்சக்கமான சீட்டிங் ஆப்ஷன்கள் இருப்பதால், அவரவர் தேவைக்கு ஏற்றபடி காரை வாங்கிக் கொள்ளலாம். இவ்வளவு பெரிய காரின் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கும் என்ற சந்தேகத்திற்கான விடை, கார்னிவலை ஓட்டும்போது காணாமல் போய்விடுகிறது. எனவே எதிர்பார்த்தபடியே நெடுஞ்சாலைகளில் ஸ்கோர் செய்யும் இந்த லக்ஸூரி எம்பிவியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருப்பதால், இதை நகரத்தில் ஓட்டுவதும் சுலபமாக இருக்கலாம். இந்த நடமாடும் மினி மீட்டிங் ஹால்/வீடு, சூப்பர் பேக்கேஜ்!

மிட்சைஸ் எஸ்யூவி ஆஃப் தி இயர்: ஹூண்டாய் க்ரெட்டா

மோட்டார் விகடன் விருதுகள் 2021

லாக்டவுன் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்புதான், இந்த மிட்சைஸ் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது. இந்தச் சமயத்தில் புதிய கார்களின் விற்பனை பூஜ்யம் என்றிந்தபோதும், மே 2020 மாத விற்பனையில் இதுதான் நம் நாட்டில் அதிகமாக விற்பனையான கார் (3,212 கார்கள்). வெறும் 7 மாதங்களில், 1.15 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் புக்கிங் ஆகிவிட்டன. இதற்கு இந்த பிராண்டின் மதிப்பு மற்றும் ஆல்ரவுண்டர் திறனே காரணம். 60% பேர் டீசல் மாடல்களைத் தேர்ந்தெடுத்திருப்பதன் வாயிலாக, டீசல் இன்ஜின்கள் மீதான மவுசு குறையவில்லை என்பது நிரூபணமாகிறது. அனைத்து ஏரியாக்களிலும் மேம்பட்ட தயாரிப்பாக வந்திருக்கும் க்ரெட்டா, எஸ்யூவி பிரிவில் ஹூண்டாயின் சந்தை மதிப்பை அதிகப்படுத்தி விட்டது.

ப்ரீமியம் எஸ்யூவி ஆஃப் தி இயர்: எம்ஜி கிளாஸ்ட்டர்

மோட்டார் விகடன் விருதுகள் 2021

ADAS தொழில்நுட்பம்... போட்டி கார்கள் மட்டுமல்லாது, நம் நாட்டில் விற்பனையாகும் லக்ஸூரி கார்களில்கூட இல்லாத இந்த வசதியை அறிமுகப்படுத்தியதிலேயே, பலரைத் திரும்பி பார்க்க வைத்துவிட்டது XL சைஸ் க்ளாஸ்டர். குறுகிய காலத்திலேயே 2,000-க்கும் அதிகமான கார்கள் புக் ஆகிவிட்டன. கிளாஸ்ட்டரில் இருப்பது ஒரே டீசல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணிதான் என்றாலும், 2 வீல் டிரைவ் மாடலில் சிங்கிள் டர்போ - 4 வீல் டிரைவ் மாடலில் ட்வின் டர்போ எனக் கச்சிதமாக வித்தியாசப்படுத்திவிட்டது எம்ஜி. வசதிகளில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் இந்த எஸ்யூவி, அதிக இடவசதி - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் - ஸ்மூத் இன்ஜின் - ஸ்டைலான கேபின் எனப் பக்கா பேக்கேஜாக ஈர்க்கிறது. கொஞ்சம் ஆஃப் ரோடு திறனுடன், 7 பேருக்கான இடவசதி கொண்ட ப்ரீமியம் எஸ்யூவி தேவை என்றால், கிளாஸ்ட்டரை டிக் அடிக்கலாம். இதன் வாரன்ட்டி - பராமரிப்பு பேக்கேஜ் கூடுதல் போனஸ்தான்.

என்ட்ரி லக்ஸூரி எஸ்யூவி ஆஃப் தி இயர்: ஆடி Q2

மோட்டார் விகடன் விருதுகள் 2021

இதர ஜெர்மானியப் போட்டியாளர்கள் ஏற்கெனவே இந்த செக்மென்ட்டுக்கு வந்துவிட்ட நிலையில், லேட்டாக ஆனால் லேட்டஸ்ட்டாக இந்த கோதாவில் இறங்கியுள்ளது ஆடி Q2. நம் நாட்டில் CBU முறையில் முழு காராக இறக்குமதி செய்யப்படுவதால், இந்த ஆண்டில் வெளியான VW T-Roc போலவே இதுவும் Price to Size ரேஷியோவில் பின்தங்குகிறது. மேலும் இடவசதியில் மட்டும் போட்டி கார்களைவிடக் குறைவு. என்றாலும் சிறப்பான பெர்ஃபாமன்ஸ் - அற்புதமான ஓட்டுதல் - அட்டகாசமான கேபின் தரம் என முக்கியமான விஷயங்களில் இந்த க்ராஸ்ஓவர் டிஸ்டிங்ஷன் வாங்கிவிடுகிறது. டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வந்திருக்கும் Q2, தனது வகையிலே டிரைவர்ஸ் காராகத் திகழ்கிறது. இதன் காம்பேக்ட் சைஸ் & நீட் டிசைன், இளசுகளை ஈர்க்கக்கூடும்.

மிட்சைஸ் லக்ஸூரி எஸ்யூவி ஆஃப் தி இயர்: ரேஞ்ச்ரோவர் இவோக்

மோட்டார் விகடன் விருதுகள் 2021

Euro NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுவிட்டது இவோக். இந்த இரண்டாம் தலைமுறை ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிதான், இதுவரை க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட இந்த நிறுவன மாடல்களிலேயே பாதுகாப்பானது. எனவே இந்தியாவில் களமிறங்குவதற்கு முன்பாகவே, பலத்த அதிர்வலைகளைப் புதிய இவோக் ஏற்படுத்தி இருந்தது. தனது வகையிலே ஃபேஷன் ஐகான் ஆக அறியப்படும் இந்த எஸ்யூவி, தனது ஓனர்களையே ஓட்டுனர்களாக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்கார கார். காரின் வெளிப்புறத்தைப்போலவே, கேபினும் படு ஸ்டைலாக இருப்பது செம. பெட்ரோல் இன்ஜினில் 48V மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இருப்பது, தன்வசமுள்ள வசதிகளில் இந்த கார் அடைந்திருக்கும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஓட்டுதல் அனுபவத்திலும் எதிர்பார்த்தபடியே அசரடிக்கிறது, புதிய ரேஞ்ச் ரோவர் இவோக்.

ப்ரீமியம் லக்ஸூரி எஸ்யூவி ஆஃப் தி இயர்: மெர்சிடீஸ் பென்ஸ் GLS

மோட்டார் விகடன் விருதுகள் 2021

நம் நாட்டில் GLS அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 6,700-க்கும் அதிகமான நபர்களை இந்த XL சைஸ் சொகுசு கார் சென்றடைந்திருக்கிறது. Modular High Architecture (MHA) ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ள GLS, முந்தைய மாடலைவிட அளவில் பெரிது. அதற்கேற்ப காரின் டிசைன் கெத்தாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கேபினில் எங்கு காணினும் ஸ்க்ரீன் மயம் என்பதால், இது ஹை-டெக் ரகம் (பென்ஸின் லேட்டஸ்ட் MBUX மல்ட்டிமீடியா சிஸ்டம் உண்டு). வசதிகளிலும் தரத்திலும் அதிரடிக்கும் உட்புறத்தில், 7 பேர் வசதியாக உட்கார முடிவது ப்ளஸ். 2.5 டன் எடையுள்ள GLS, 7 விநாடிகளில் 100 கிமீ வேகத்தைத் தொட்டுவிடுகிறது என்பதை நம்ப முடியவில்லை (உபயம்: 3.0 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள்). இது S-க்ளாஸ் எஸ்யூவி என்ற பெயருக்கு நியாயம் சேர்ப்பதுடன், S-க்ளாஸைவிடச் சுமார் 40 லட்ச ரூபாய் குறைவான விலையில் இந்த லக்ஸூரி எஸ்யூவியை வாங்க முடியும்.

எலெக்ட்ரிக் கார் ஆஃப் தி இயர்: டாடா நெக்ஸான் EV

மோட்டார் விகடன் விருதுகள் 2021

அறிமுகமான வெறும் 6 மாதங்களிலேயே, 1,000 எலெக்ட்ரிக் நெக்ஸான்களைத் தயாரித்து விட்டது டாடா. மேலும் எலெக்ட்ரிக் கார்களில் 62% சந்தை மதிப்பை, சீக்கிரமே தன்வசப்படுத்தி விட்டது இந்த ஸ்டைலான எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி. வழக்கமான மாடலில் இருக்கும் சொகுசான கேபின் மற்றும் அதிகப்படியான வசதிகளுடன், அட்டகாசமான பெர்ஃபாமன்ஸும் அற்புதமான ஓட்டுதலும் சேர்ந்திருக்கிறது. எலெக்ட்ரிக் கார்கள் மெதுவாக இயங்கும் என்ற எண்ணத்தை இந்த டாடா கார் அடித்து நொறுக்குகிறது (0 - 100 கிமீ வேகம்: 9.64 விநாடிகள் - S மோடு). பெட்ரோல்/டீசலில் இயங்கும் மாடலைவிட, ஒவ்வொரு கிமீ-யையும் 4-6 ரூபாய் குறைவான செலவில் பயணிக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விதத்தில், தினசரி நகர்ப்புறப் பயன்பாட்டை மேற்கொள்வதற்கு ஏற்புடைய காராக நெக்ஸான் EV மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சென்சேஷன் ஆஃப் தி இயர்: மஹிந்திரா தார்

மோட்டார் விகடன் விருதுகள் 2021

பைக்கில் RE க்ளாஸிக் 350 எப்படியோ, கார்களில் மஹிந்திரா தார் அப்படி. இந்த நவீனமயமாகிவிட்ட உலகில், ரெட்ரோ தயாரிப்புகளுக்குக் கிடைக்கும் அமோகமான ஆதரவினால், பழைமையுடன் புதுமை கலந்து இவை மாறவேண்டிய சூழல் வந்துவிட்டது. அதற்கேற்ப லைஃப் ஸ்டைல் கார் என்ற அந்தஸ்த்தை அடைந்துவிட்ட தார், ஆஃப் ரோடைத் தாண்டி ஆன் ரோடிலும் ஸ்கோர் செய்தாக வேண்டிய கட்டாயம். அந்தச் சவாலை மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறது. முதல் தலைமுறை தாரில் இல்லாத Hard Top/பெட்ரோல் இன்ஜின்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைத் தாண்டி, வசதிகளிலும் தொழில்நுட்பத்திலும் எகிறியடித்திருக்கிறது புதிய தார். எல்லாமே புதிதாக இருப்பதால், கார் ரொம்ப ஃப்ரெஷ்ஷாக உள்ளது. தனது 75-வது பிறந்த நாள் அன்று, இந்த இரண்டாம் தலைமுறை எஸ்யூவியை சென்ட்டிமென்ட்டாக அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா. கொரோனா நிதிக்காக, முதலில் தயாரிக்கப்பட்ட தார் ஏலத்துக்கு வந்தபோது, அது 1.11 கோடி ரூபாய்க்குப் போகும் என யாருமே கற்பனை செய்திருக்க மாட்டார்கள். அப்போதே இந்த எஸ்யூவியின் வெற்றி முகம் தெரியத் தொடங்கிவிட்டது. பாதுகாப்புக்காக குளோபல் NCAP வழங்கும் 4 ஸ்டார் ரேட்டிங்குடன் பாதுகாப்பையும் உறுதி செய்திருப்பதால், இந்த சென்சேஷனல் விருது தாருக்குத்தான்.