Published:Updated:

சாதா இல்லை, இப்போ தாதா! மாருதியின் நியூ ஏஜ் பெலினோ!

மாருதியின் புதிய பெலினோ
பிரீமியம் ஸ்டோரி
மாருதியின் புதிய பெலினோ

இதில் சின்னச் சின்ன அப்டேட்களை மட்டும் மாருதி கொடுக்கவில்லை, முழுவதுமாக பெலினோவை மறுவடிவம் செய்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

சாதா இல்லை, இப்போ தாதா! மாருதியின் நியூ ஏஜ் பெலினோ!

இதில் சின்னச் சின்ன அப்டேட்களை மட்டும் மாருதி கொடுக்கவில்லை, முழுவதுமாக பெலினோவை மறுவடிவம் செய்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

Published:Updated:
மாருதியின் புதிய பெலினோ
பிரீமியம் ஸ்டோரி
மாருதியின் புதிய பெலினோ

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களுள் ஒன்று பெலினோ. 2015-ல் இந்த கார் வெளியானதில் இருந்தே இந்திய வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அவ்வப்போது பெலினோவைக் கொஞ்சம் அப்டேட் செய்வது மாருதியின் வழக்கம். இந்த முறையும் நிறைய அப்டேட்டகளுடன் பெலினோவை இந்திய மார்க்கெட்டில் கடந்த மாத இறுதியில் வெளியிட்டது மாருதி. புதிய அப்டேட் செய்யப்பட்ட பெலினோ வெளியாவதற்கு முன்பே - அதன் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, புதிய வசதிகள், அதிக மைலேஜ் என பெலினோவைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் ஏற்றியது மாருதி. எப்போது வெளியாகும், எப்போது வெளியாகும் எனக் காத்திருந்து கடந்த வாரம் பிப்ரவரி 23-ம் தேதி வெளியானது புதிய பெலினோ. எப்படி மாறியிருக்கு பெலினோ?

பொதுவாக புதிய அப்டேட்களுடன் கார் மாடல்களை வெளியிடும்போது, ஃபேஸ்லிஃப்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். சின்னச் சின்ன அப்டேட்களுடன் இருக்கும் அவற்றில் பெரிதாக நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், பெலினோவைப் பொறுத்தவரை, ஃபேஸ்லிஃப்ட் என்ற வார்த்தையை மாருதி பயன்படுத்தவே இல்லை. இதில் சின்னச் சின்ன அப்டேட்களை மட்டும் மாருதி கொடுக்கவில்லை, முழுவதுமாக பெலினோவை மறுவடிவம் செய்திருக்கிறது என்றே கூற வேண்டும். சரி முதலில் எதையெல்லாம் மாருதி மாற்றியிருக்கிறது எனப் பார்த்துவிடலாம்.

மாற்றங்கள்:

பெலினோவின் வெளிப்புற ஸ்டைலிங்கில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்திருக்கிறது மாருதி. முன் பக்கம் நல்ல அகலமான தேன்கூடு வடிவ கிரில்லைக் கொடுத்திருக்கிறது மாருதி. கிரில்லின் அடிப்பகுதியில் சில்வர் ஆக்ஸென்ட் ஒன்று ஹெட்லைட் வரை நீள்கிறது. புதிய ரேப்அரெளண்டு LED ஹெட்லைட்கள், புதிய ஃபாக் லைட் ஹவுசிங்குடன் மறுவடிவம் செய்யப்பட்ட பம்பரையும் பொருத்தியிருக்கிறார்கள். பக்கவாட்டுப் பகுதியில் பார்த்தால், புதிய 16 இன்ச் அலாய் வீல்களைப் பார்க்க முடியும். பக்கவாட்டில் ஜன்னலின் கீழே ஒரு சிறிய க்ரோம் ஸ்ட்ரிப் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் க்ரோம் ஸ்ட்ரிப்பானது, பின்பக்கம் வரை நீள்கிறது. பின்பக்கம் புதிய `C' வடிவ LED டெய்ல்லைட்டைக் கொடுத்திருக்கிறார்கள், அதோடு புதிய பம்பர்களும். வெளிப்பக்க டிசைனில் மாற்றங்கள் இவ்வளவுதான். இவற்றோடு புதிய பெலினோவை, ஆர்டிக் ஒயிட், ஸ்ப்ளென்டிட் சில்வர், கிராண்ட்யூர் கிரே, நெக்ஸா புளூ, ஒப்யூலென்ட் ரெட் மற்றும் லூக்ஸ் பீஜ் என ஆறு கலர் வேரியன்ட்களிலும் வெளியிட்டிருக்கிறது மாருதி.

LED ஹெட்லைட் முதல் பம்பர் வரை எல்லாமே மாறியிருக்கிறது
LED ஹெட்லைட் முதல் பம்பர் வரை எல்லாமே மாறியிருக்கிறது
காரின் இன்டீரிரும் நல்ல மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது
காரின் இன்டீரிரும் நல்ல மாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறது

உள்பக்கம் வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் S-க்ராஸில் இருப்பது போலவேயான டேஷ்போர்டையும், ஸ்விப்ட்டில் இருப்பதுபோன்ற ஸ்டீயரிங் வீலையும் பெலினோவில் கொடுத்திருக்கிறது மாருதி. புதிய முன்பக்க சீட்கள், க்ளைமேட் கன்ட்ரோலுக்குப் புதிய ஸ்விட்ச், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்குப் புதிய டிசைன் என இந்த பெலினோவில் எல்லாவற்றிலும் புதுமையைக் காட்ட முயன்றிருக்கிறது மாருதி.

புதிய வசதிகள்:

ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டி லேயே செக்மென்ட் ஃபர்ஸ்ட்டாக சில வசதிகளையும் பெலினோவில் அளித்திருக்கிறது மாருதி. அதில் முக்கியமான ஒன்று - ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே. நாம் வாகனத்தை இயக்கும் போதே, சாலையில் இருந்து நமது கவனத்தைச் சிதறடிக்காமல் நமக்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்காக இந்த ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளேவைக் கொடுத்திருக்கிறது மாருதி. நாம் செல்லும் வேகம், ஆர்பிஎம், நேரம் என நமக்குத் தேவையான முக்கியமான தகவல்களை இந்த ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே நமக்குக் காட்டுகிறது. அதேநேரம் உள்பக்கம் இருந்து பார்பதற்கு இது கொஞ்சம் `கூலாகவும்' இருக்கிறது.

ஃப்ரீ ஸ்டாண்டிங் 9 இன்ச் டச் ஸ்கிரீன் செம ப்ரீமியம். ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் கனெக்ட்ட வசதியுடன் வருகிறது பெலினோ
ஃப்ரீ ஸ்டாண்டிங் 9 இன்ச் டச் ஸ்கிரீன் செம ப்ரீமியம். ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் கனெக்ட்ட வசதியுடன் வருகிறது பெலினோ

பார்க்கிங் செய்யும்போது பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதற்கும், நமக்கு வசதியாக இருக்கும் வகையிலும் 360 டிகிரி கேமராவைக் கொடுத்திருக்கிறார்கள். இதுவும் செக்மென்ட் ஃபர்ஸ்ட்தான். புதிய 9 இன்ச் HD திரையுடன் கூடிய ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் இன்ஃபோடெய்ன் மென்ட் சிஸ்டத்தைக் கொடுத்திருக்கிறது மாருதி. இவற்றுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, அமேஸான் அலெக்ஸா சப்போர்ட், வாய்ஸ் கமாண்ட் சப்போர்ட் ஆகியவையும் எக்ஸ்ட்ரா. மேலும், சுஸூகி கனெக்ட் வசதியையும் இந்தப் புதிய பெலினோவில் கொடுத்திருக்கிறது மாருதி.

பூட் ஸ்பேஸ் 339 லிட்டரில்  இருந்து 318 லிட்டராகக் குறைந்திருக்கிறது
பூட் ஸ்பேஸ் 339 லிட்டரில் இருந்து 318 லிட்டராகக் குறைந்திருக்கிறது

இன்ஜின்:

மாற்றங்கள் வெறும் டிசைன் மற்றும் வசதிகளில் மட்டுமில்லை; இந்த பெலினோவிற்குப் புதிய இன்ஜினையும் கொடுத்திருக்கிறது மாருதி. 90bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டூயல்ஜெட் K12N பெட்ரோல் இன்ஜினைன புதிய பெலினோவில் பயன்படுத்தியிருக்கிறது மாருதி. கியர்பாக்ஸும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறது. முந்தைய பெலினோவில் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுத்திருந்தது, தற்போது அதற்கு மாற்றாக AMT-யைக் கொடுத்திருக்கிறது. மைலேஜும் முந்தைய பெலினோவைவிட அதிகமாக மேனுவல் கியர்பாக்ஸுடன் 22.35 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் 22.94 கிமீ ஆக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது மாருதி (ARAI டெஸ்டட் மைலேஜ்). இவற்றுடன் நான்கு வீல்களிலும் 14-இன்ச் டிஸ்க் பிரேக்குகளுடன், புதிய சஸ்பென்ஷன் செட்டப்பையும் புதிய பெலினோவில் பயன்படுத்தியிருக்கிறது மாருதி.

புதிய பெலினோ
புதிய பெலினோ


பாதுகாப்பு அம்சங்கள்:

வாடிக்கையாளர்கள் மாருதி மேல் வைக்கும் குற்றச்சாட்டுகளுள் ஒன்று, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது. இந்த பெலினோவில் அந்தக் குறையையும் போக்கியிருக்கிறது மாருதி. இதன் டாப் எண்டான Zeta மற்றும் Alpha வேரியன்ட்களை 6 ஏர்பேக்குகளுடன் வெளியிட்டிருக்கிறது மாருதி. மற்ற இரு வேரியன்ட்களிலும் 2 ஏர்பேக்குகளைக் கொடுத்திருக்கிறது.

புதிய மாருதி பெலினோ
புதிய மாருதி பெலினோ

இவற்றுடன் ஹில் ஹோல்டு அசிஸ்ட்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், EBD-யுடன் கூடிய ABS வசதி, ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டிரைவர் மற்றும் கோ-டிரைவர் சீட்பெல்ட் ரிமைண்டர் மற்றும் LED ஃபாக் லேம்ப் எனப் பல பாதுகாப்பு அம்சங்களை பெலினோவில் வழங்கியிருக்கிறது மாருதி. இந்த முறை NCAP-ல் நிச்சயம் சிறந்த ரேட்டிங்கை எதிர்பார்க்கலாம்.

விலை என்ன?

பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தியிருப்பது, புதிய வசதிகளை அளித்திருப்பது, புதிய இன்ஜின் என மாருதியின் அப்டேட்களை எல்லாம் பார்த்தபோது விலையையும் மாருதி ஏற்றிவிடுமோ என்றுதான் தோன்றியது. ஆனால், மாருதியின் ஸ்பெஷாலிட்டியான `பட்ஜெட்டையும்' அது கைவிடவில்லை. இத்தனை அப்டேட்களுடனும், முந்தைய பெலினோவைவிட அதிகபட்சமாக 40,000 ரூபாய் மட்டுமே கூடியிருக்கிறது. சில வேரியன்ட்களில் முந்தைய பெலினோவை விட விலை குறைவாகவே இருக்கிறது புதிய பெலினோ. சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என மொத்தம் நான்கு ட்ரிம்களாக, இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வெளியாகியிருக்கும் மாருதியின் அடிப்படை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 6.35 லட்சம் ரூபாய். அதன் டாப் எண்டின் விலை 9.49 லட்சம் ரூபாய்.

இதை எழுதி முடித்த கையோடு, பெலினோவை ஓட்ட கோவா பறந்து கொண்டிருக்கிறது நமது மோ.வி ரிவ்யூ டீம்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டுக்குக் காத்திருங்கள்!

விலை:

சிக்மா - மேனுவல் - 6.35 லட்சம் ரூபாய்

டெல்ட்டா - மேனுவல் - 7.19 லட்சம் ரூபாய் - ஆட்டேமேட்டிக் - 7.69 லட்சம் ரூபாய்

ஸீட்டா - மேனுவல் - 8.09 லட்சம் ரூபாய் - ஆட்டேமேட்டிக் - 8.59 லட்சம் ரூபாய்

ஆல்ஃபா - மேனுவல் - 8.99 லட்சம் ரூபாய் - ஆட்டேமேட்டிக் - 9.49 லட்சம் ரூபாய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism