கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

நிஸானின் முத்தான 3 கார்கள்!

நிஸான் எக்ஸ் ட்ரெய்ல்
பிரீமியம் ஸ்டோரி
News
நிஸான் எக்ஸ் ட்ரெய்ல்

அறிமுகம்: நிஸான் கார்கள்

நம் நாட்டைப் பொறுத்தவரை நிஸானுக்கு உயிர் மூச்சாக இருப்பதே அதன் மேக்னைட்தான். நிஸான் கிக்ஸும் இப்போது விற்பனையில் இருக்கிறது என்றாலும், மேக்னைட் அளவுக்கு ஹிட் இல்லை. இந்த நிலையில், `நாங்களும் ஹிட் அடிக்கப் போறோம்' என்பதை ஊருக்கும் உலகுக்கும் உரத்தச் சொல்வதற்காக, தங்களது எதிர்காலத் திட்டங்களை விளக்க டெல்லியில் ஒரு பெரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது நிஸான்.

அதில், எக்ஸ் ட்ரெய்ல் (X-Trail) நான்காவது ஜெனரேஷன் கார் மற்றும் வெளிநாடுகளில் அது விற்பனை செய்யும் கேஷ்காய் (Qashqai) மற்றும் ஜூக் (Juke) அகிய மூன்று எஸ்யூவிகளை காட்சிபடுத்தி இருந்தது நிஸான்.

இதில் எக்ஸ் ட்ரெய்ல் மற்றும் கேஷ்காய் ஆகிய இரண்டு கார்களும் இந்தியச் சாலைகளுக்கும் சந்தைக்கும் சரிப்பட்டு வருமா என்பதை, அது ஏற்கனவே சோதிக்க ஆரம்பித்து விட்டதாகவும் நிஸான் கூறியது. இதில் நிஸான் எக்ஸ் - ட்ரெய்லின் முதல் மற்றும் இரண்டாம் ஜெனரேஷன் கார்கள் நம் நாட்டில் விற்பனையில் இருந்தன. ஆனால் மூன்றாம் தலைமுறை காரை நிஸான் நம் நாட்டிற்குக் கொண்டு வரவில்லை. இந்த நிலையில் வெளிநாடுகளில் விற்பனையாகும் நான்காம் தலைமுறை எக்ஸ்-ட்ரெய்ல் காரை இந்தியாவில் CBU (Completely Built Unit) வடிவில் கொண்டு வர இயலுமா என்று நிஸான் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நிஸான் இந்த அளவுக்கு யோசிப்பதற்குக் காரணம் விலை. ஐரோப்பாவில் விற்பனையாகும் அதே காரை அதே தரத்துடன், சிறப்பம்சங்களோடு நம் நாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் விலை கட்டுக்கடங்காமல் போய்விடும். என்றாலும் எக்ஸ்-ட்ரெய்ல் செக்மென்ட், இந்த விலையைத் தாக்குப் பிடிக்கும் என்று நிஸான் நம்புகிறது.

இந்த எக்ஸ் ட்ரெய்லில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்டால், அதன் E-Power என்கிற தொழில்நுட்பம் என்று சொல்கிறது நிஸான். மின்சாரத்தில் ஓடக்கூடிய கார் வேண்டும். ஆனால், ஒரு முறை சார்ஜ் செய்தால் அது எத்தனை கிமீ போகும்; வழியில் சார்ஜ் குறைந்து போனால் எங்கே சார்ஜ் செய்வது; சார்ஜ் செய்ய எவ்வளவு நேரமாகும் என்பது போன்ற கவலைகளே இல்லாமல் மின்சாரத்தில் ஓடக்கூடிய கார் என்றால் அது e-Power-ல் சாத்தியம் என்கிறது நிஸான்.

காரணம் இது இயங்குவது பேட்டரியால் என்றாலும், இதை சார்ஜ் செய்ய வேண்டியதே இல்லை. இதில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினே, பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளும். பேட்டரியில் இருந்து செல்லும் மின்சாரம்தான் மோட்டாரை இயக்கும். மோட்டாரில் இருந்து சக்கரங்களுக்குச் சக்தி போகும். இதில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், ஜஸ்ட் ஒரு ஜெனரேட்டர் மாதிரி மட்டும்தான். ஓஹோ... அப்படி என்றால் ஹைபிரிட் என்று சிம்பிளாகச் சொல்ல வேண்டியதுதானே என்று கேட்க முடியாது. காரணம் - ஹைபிரிட்டுக்கான விளக்கம் என்னவென்றால், எந்த ஒரு காரை பெட்ரோல் அல்லது மின்சாரம் ஆகிய இரண்டின் வாயிலாகவும் இயக்க முடியுமோ அதுதான் ஹைபிரிட். அதனால் இதை ஹைபிரிட் என்ற வரையறைக்குள் அடக்க முடியாது. இது அதற்கும் மேலே... வேண்டும் என்றால் இதை Range-Extender Hybrid என்று சொல்லலாம் என்கிறது நிஸான்.

ஆக, இந்த E-Power வசதி கொண்ட காரை சார்ஜ் செய்ய ப்ளக்கைத் தேட வேண்டியதில்லை. கூடுதல் மைலேஜும் கிடைக்கும். ஃபோக்ஸ்வாகன் டிகுவான் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார்கள் விற்பனையாகும் அதே செக்மென்ட்டில் இருக்கும் இந்த எக்ஸ்-ட்ரெய்லில் 5 மற்றும் 7 சீட் ஆப்ஷன்ஸ் உண்டு. அதேபோல 2WD மற்றும் AWD ஆப்ஷன்ஸும் உண்டு. ஸ்கோடா கோடியாக்குக்குப் போட்டியாக வரவிருப்பதால், விலையில் அந்த அளவுக்குப் போட்டி இருக்காது என்று நிஸான் நம்புகிறது. நிஸான் - ரெனோவின் CMF-C ப்ளாட்ஃபார்மில் உற்பத்தி செய்யப்படும் எக்ஸ்-ட்ரெய்ல், 2.5 லிட்டர் இன்ஜின் வேரியன்ட்டுக்கு உண்டு.

கேஷ்காய்
கேஷ்காய்

கேஷ்காய்: ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டூஸான் ஆகிய கார்கள் விற்பனையாகும் செக்மென்ட்டில் இருக்கும் கேஷ்காய், எக்ஸ்-ட்ரெய்லைவிட சற்றே சிறியது. நிஸான் கிக்ஸில் இருக்கும் அதே 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும். நிஸான் கிக்ஸைப்போலவே இது வெளிப்படுத்தும் சக்தியும் 156bhpதான். 6 ஸ்பீடு அல்லது CVT என்று இரண்டு வகையான கியர் ஆப்ஷன்ஸும் உண்டு. இதில் எக்ஸ் ட்ரெய்லில் இருப்பதைப் போல E-Power வேரியன்ட்டும் உண்டு.

ஜூக்
ஜூக்

ஜூக்: இது, நம் நாட்டில் அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் உலகெங்கும் பத்து லட்சம் ஜூக் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன என்பதால், இதில் அப்படி என்ன இருக்கிறது என்ற ஆர்வம் எழும். ஸ்போர்ட்டியான டிசைன் கொண்ட ஜூக், டொயோட்டா ஹைரைடர், மாருதி சூஸுகி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் விற்பனையாகும் செக்மென்ட்டைச் சேர்ந்தது. 4.2 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் காரை இயக்குவது டர்போ பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டம். அதனால் மைலேஜ் தாராளமாகக் கிடைக்கும்.

நிஸான் எக்ஸ் ட்ரெய்ல்
நிஸான் எக்ஸ் ட்ரெய்ல்