ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

காற்று... தண்ணீர்... மணல்... எதுவானாலும் கிழி கிழி!

லேண்ட்ரோவர் டெஃபெண்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
லேண்ட்ரோவர் டெஃபெண்டர்

ஆஃப்ரோடு டிரைவ்: லேண்ட்ரோவர் டெஃபெண்டர்

வெற்றியாளர்கள் எப்போதுமே கம்ஃபர்ட் ஸோனை விரும்பமாட்டார்கள். லேண்ட்ரோவர் கார்கள் அப்படித்தான். திறந்த சாலை இருந்தால் உற்சாகமாகப் பறக்கும்; சாலையே இல்லையென்றால் இன்னும் உற்சாகமாகி விடும். அப்படிப்பட்ட ஒரு ஆஃப்ரோடு கார்தான், லேண்ட்ரோவரின் டெஃபெண்டர்.

நம் ஊரில் ‘‘டெஃபெண்டரில் ஒரு தடவையாவது ஆஃப்ரோடு பண்ணிடணும்’’ என்ற லட்சியம் கொண்ட சிலர் இருக்கிறார்கள். டெஃபெண்டரை ஓட்டும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்போது, அதைவிட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.

பார்க்கும்போதே, ஏதாவது ஒரு மணற்பாதையிலோ, பாறைகளிலோ வெறித்தனமான ஒரு ஆஃப்ரோடு செய்ய வேண்டும் எனும் ஆசையைத் தூண்டுகிற தோற்றம். 3 டோர் 90 சீரிஸ், 5 டோர் 110 சீரிஸ் என இரு பாடி ஸ்டைல்களில் வருகிறது டெஃபெண்டர். பாக்ஸ் டைப், உயரமான டால் பாயாக இருந்தாலும் சாலைகளில் பறப்பதற்கேற்ற இதன் Drag Co-efficient அளவில், அதாவது ஏரோ-டைனமிக் அளவில் வேலை பார்த்திருக்கிறார்கள். காற்றையோ, தண்ணீரையோ எதை வேண்டுமானாலும் கிழி கிழி என கிழித்துக்கொண்டு பறக்கலாம்.

2.0லி டீசல் (200, 240bhp), 2.0லி டர்போ பெட்ரோல் (300 bhp), 3.0 ஹைபிரிட் பெட்ரோல் (400bhp) என மொத்தம் 4 ஆப்ஷன்கள் உண்டு. ஆனால் நம் ஊருக்கு, 2.0லி பெட்ரோல்தான் வரும்.

இன்ஜின் I 2,996 சிசி, 6 சிலிண்டர், டர்போ (பெ) பவர் I 400bhp 
0-100 கி.மீ I 6.1 விநாடி வாட்டர் வேடிங் I 900 மிமீ
கியர்பாக்ஸ் I 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் விலை I சுமார் 80 - 95 லட்சம்
இன்ஜின் I 2,996 சிசி, 6 சிலிண்டர், டர்போ (பெ) பவர் I 400bhp 0-100 கி.மீ I 6.1 விநாடி வாட்டர் வேடிங் I 900 மிமீ கியர்பாக்ஸ் I 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் விலை I சுமார் 80 - 95 லட்சம்

300bhp பவர் என்றால், கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான பவர். எல்லாவற்றுக்குமே 8-ஸ்பீடு ZF ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ்தான். முக்கியமான ஆஃப்ரோடிங்கில், கியர் லீவருடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்காது.

முதலில் ஹைவேஸில் டெஃபெண்டரை விரட்டலாம். பெட்ரோல் இன்ஜினில் செம ரிஃபைன்மென்ட் தெரிகிறது. ரூஃப் ரேக், தடிமனான பின் பக்க ஸ்பேர் டயர் என டெஃபெண்டர் கொஞ்சம் ஹெவிடியூட்டிதான். ஏரோ-டைனமிக் மாற்றங்கள் இருந்தாலும், லேசாக பாடி ரோல் இருந்தது. ஆனால், ஸ்டெபிலிட்டி அட்டகாசம். சட்டென 150 கி.மீ-யை எட்ட முடிந்தது. வெறும் 6.1 விநாடிகளில் 100 கி.மீ-ல் பறந்து கொண்டிருந்தது டெஃபெண்டர். 400 குதிரை சக்திகளாச்சே! ஹைவேஸில் மேனுவல் மோடில் ஸ்விட்ச் செய்து பறப்பது ஜாலியாக இருந்தது.

இதில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் உண்டு. அதாவது, காரின் உயரத்தை சாஃப்ட்ரோடு/ஆஃப்ரோடுக்கு ஏற்ப குறைத்து/கூட்டிக் கொள்ளலாம். சிட்டியில் ஓட்ட ‘Access’ என்றொரு மோடு உண்டு. 40 மிமீ வரை கார் குறைகிறது. ஆஃப்ரோடு என்று வந்துவிட்டால் அவ்வளவுதான். நினைத்துப் பார்க்க முடியாத கி.கிளியரன்ஸ்... 291 மிமீ.. அம்மாடியோவ்!

லேண்ட்ரோவர் டெஃபெண்டர்
லேண்ட்ரோவர் டெஃபெண்டர்

உயரமான சீட், பெரிய விண்டோ என்று விசாலமாக இருந்தது ஓட்டும்போது. மூன்றாவது வரிசை சீட்டுகள் இருந்தன. வெளியே இருந்து பார்க்கும்போது, டெஃபெண்டரில் நிறைய பேரை ‘உச்’ கொட்ட வைக்கும் விஷயம் - ‘இவ்வளவு காஸ்ட்லி கார்ல அலாய் வீல் இல்லையே’ என்பதாகத்தான் இருக்கும்.

ஆனால், வேண்டுமென்றேதான் ஸ்டீல் வீல் கொடுத்திருக்கிறது லேண்ட்ரோவர். மோசமான சாலைகளில் அலாய் வீல்கள்போல் க்ராக் விழுவது, பஞ்சர் ஆகி பிரேக் டவுன் ஆவது போன்ற விஷயங்கள் ஸ்டீல் வீல்களில் இருக்காது. அதுபோக, மோசமான தாக்கங்களையும் எளிதாக உள்வாங்கும் சக்தி ஸ்டீல் வீல்களுக்கு உண்டு. இந்த மீடியா டிரைவிலேயே கிட்டத்தட்ட 20 பஞ்சர்களைத் தாங்கியபடி ஓடியது டெஃபெண்டர். இதன் டெரெய்ன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் அற்புதமாக வேலை செய்கிறது.

இந்த ஜனவரியில் ரிலீஸான JLR-ன் Pivi Pro இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் இந்த டெஃபெண்டரில். ஜாகுவார், லேண்ட்ரோவர் கார்கள் எல்லாவற்றுக்கும் இனி இதுதான். இதன் 10 இன்ச் டச் ஸ்க்ரீனில் 4K கிராபிக்ஸ் என்றொரு ஸ்க்ரீனிங் கொடுத்திருக்கிறார்கள். வேலைப்பாடு அத்தனை துல்லியம். Pivi Pro-வின் ஹைலைட் - இது டூயல் சிம் கனெக்ட்டிவிட்டி கொண்டிருக்கிறது என்பதுதான்.

நமக்காகவே ஒரு சாலையை... இல்லை... பாதையே இல்லாத பாதையைக் காட்டினார்கள். 10 கி.மீ தூரத்துக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்படியான பாதை. நேரத்தை விடுங்கள்; அத்தனை ஏற்றங்கள், இறக்கங்கள், பாறைகள், மணற்திட்டுகள், சேற்றுக் குழிகள் என்று காரின் ஒவ்வொரு மில்லிமீட்டரையும் சோதனை போடுவதற்கான வாய்ப்பு.

லேண்ட்ரோவர் டெஃபெண்டர்
லேண்ட்ரோவர் டெஃபெண்டர்

எந்த இடத்திலும் தேங்கவே இல்லை டெஃபெண்டர். இதன் பெரி...ய்யயய.. கி.கிளியரன்ஸும், ஆக்ஸில் வீல் ஆர்ட்டிக்குலேஷனும், டிபார்ச்சர்/அப்ரோச் ஆங்கிளும் அப்படிப்பட்டவை. ஏர் சஸ்பென்ஷன் வேறு... நம்மைப் படுத்தி எடுக்காமல் ‘சொய்ங் சொய்ங்’ என ஜம்மென பயணிக்க வைத்தது. இதன் வாட்டர் வேடிங் அளவு 900 மிமீ. அதாவது, 900 மிமீ ஆழம் வரை தண்ணீருக்குள் சென்று வரலாம் இந்த டெஃபெண்டரில். வழுக்கும் பாதைகளிலும், போக்கே இல்லாத மணற்திட்டுகளிலும் சென்ஸ் ஆஃப் கன்ட்ரோல் அட்டகாசம். கிட்டத்தட்ட 700 மிமீ ஆழம் கொண்ட ஒரு சின்ன ஆற்றை, சுமார் 20 கி.மீ தூரம் வரை கடக்க முடிந்தது இந்த டெஃபெண்டரில் என்றால் நம்புவீர்களா?

இந்த ஆகஸ்ட் மாதவாக்கில் வரவிருக்கும் இந்த டெஃபெண்டரின் விலை சுமார் 80 லட்சம் முதல் 95 லட்சம் வரை இருக்கும். ‘Explorer Pack’ என்றொரு ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள் டெஃபெண்டரில். அதாவது, எக்ஸ்ட்ராவாக 5 லட்சம் கொடுத்தால், எக்ஸ்டெர்னலாக ஸ்டோரோஜ் பாக்ஸ்கள், மடித்து வைக்கக் கூடிய ஏணி, உயர்த்தப்பட்ட ஏர் இன்டேக், ரூஃப் கேரியர், அங்கங்கே மேட் ஃபினிஷில் கறுப்பு நிற ஆஃப்ரோடு அம்சங்கள் என்று ஒரு பக்காவான ஆஃப்ரோடர் டெஃபெண்டரை உங்கள் கண் முன்னே நிறுத்துகிறது லேண்ட்ரோவர். அதாவது, ரவுண்டாக ஒரு கோடி செலுத்தினால், ஒரு வெறித்தனமான ஆஃப்ரோடுக்கு ரெடியாகலாம்.