கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஓலாவின் பட்ஜெட் E-ஸ்கூட்டர்!

ஓலா எஸ்1 ஏர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓலா எஸ்1 ஏர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஓலா எஸ்1 ஏர் (S1 Air)

ஓலாவின் பட்ஜெட்  E-ஸ்கூட்டர்!

எந்த ஸ்கூட்டரை எடுத்தாலும் 1 லட்ச ரூபாயைத் தாண்டுவதுதான் நமக்கு விதிக்கப்பட்ட மார்க்கெட் நிலவரம்; டிசைன்; தலையெழுத்து என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் இதில் அடங்கும்! ஹீரோ, ஒக்கினாவா போன்ற சில கம்மி பேட்டரி பேக் கொண்ட ஸ்கூட்டர்கள் மட்டும் விதிவிலக்காக இருந்தாலும், பெரிய பெர்ஃபாமன்ஸையும், நல்ல டீலர் நெட்வொர்க்கையும், ரேஞ்சையும், வசதிகளையும் எதிர்பார்க்க முடியாது.

இந்தத் தலையெழுத்தை மாற்றி இந்தத் தலைமுறையைச் சந்தோஷப்பட வைத்திருக்கிறது ஓலா. சும்மா டீஸரை மட்டும் ரிலீஸ் பண்ணி, ஹைப்பை மட்டும் ஏற்றிக் கொண்டிருக்காமல்… சட்டு புட்டென்று அந்த முடிவை எடுத்துவிட்டது ஓலா.

ஆம்! 80,000 ரூபாய்க்குள் ஒரு விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லாஞ்ச் செய்து அதகளப்படுத்தி விட்டது ஓலா. தனது முந்தைய வேரியன்ட்டான S1 Pro–வின் பேஸ் வேரியன்ட்டாக… S1 Air என்ற பெயரில் இதை வெளியிட்டிருக்கிறது ஓலா.

விலை குறைந்துள்ளதால், வசதிகளில் காஸ்ட் கட்டிங் வேலையைப் பார்த்து விட்டதோ என்று கவலைப்படத் தேவையில்லாத அளவு – S1 ப்ரோவில் இருந்த அதே ப்ரீமியம்னெஸ், கிட்டத்தட்ட அதே வசதிகள், போதுமான பெர்ஃபாமன்ஸ், தேவையான ரேஞ்ச் என்று கலக்கலாக வந்திருக்கும் S1 ஏர் பற்றிப் பார்க்கலாம்.

என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால்… முதலில் பெண்களும், எடை குறைந்தவர்களும் எளிதாகக் கையாளும் வகையில், இதன் எடையில்தான் முக்கியமாகக் கவனித்துச் செய்திருக்கிறது. இதன் எடை வெறும் 99 கிலோதான். இது முந்தைய வேரியன்ட்டை விட சுமார் 25 கிலோ குறைவு என்பதால், யார் வேண்டுமானாலும் இதை எளிதில் கையாளலாம். அதற்காக பில்டு குவாலிட்டியில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்கிறது ஓலா.

S1 Pro-வை இன்ஸ்பயர் செய்தே…. அதாவது S1 தயாராகும் அதே ப்ளாட்ஃபார்மில்தான் இதை டிசைன் செய்திருப்பதால்… ஏர் ஸ்கூட்டரைப் பார்த்தால், அச்சு அசல் S1 Pro மாதிரியேதான் இருக்கிறது. எனவே, ‘பட்ஜெட் ஸ்கூட்டர்தான் வாங்கியிருக்கீங்களா’ என்று யாரும் முதல் பார்வையில் கேட்டுவிட வாய்ப்பில்லை. அந்த கட்டிங் எட்ஜ் டிசைன்தான் ஓலாவின் கிளாமரே!

அதே செவ்வக வடிவ ஹெட்லைட் டிசைன் செம! விலை மலிவான ஸ்கூட்டர் என்பதற்காக, எல்இடியில் காம்ப்ரமைஸ் செய்துவிடவில்லை. காஸ்ட்லி வேரியன்ட்டில் இருக்கும் டச் ஸ்க்ரீனும் அதே 7.0 இன்ச்சில், அதுவும் TFT டிஸ்ப்ளேவில், இதன் டிஜிட்டல் டச் ஸ்க்ரீன் ப்ரீமியமாக இருக்கிறது. இதன் ரெஸ்பான்ஸ் பற்றி இப்போதெல்லாம் சிலாகிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். ஓலாவின் புதிய தொழில்நுட்பமான MoveOs3 அப்டேட்டுடனும் வந்திருக்கிறது இந்த S1 Air.

இந்த மூவ்ஓஎஸ்3 அப்டேட்டில் பல விஷயங்கள் இருக்கின்றன. இதில் ப்ராக்ஸிமிட்டி சென்ஸார் பொருத்தப்பட்டுள்ளதால் பல விஷயங்களை பாஸ் கோடு இல்லாமலே செய்யலாம். ஸ்கூட்டர் உரிமையாளர், கிட்டே போனால் தானாக ஸ்கூட்டர் அன்லாக் ஆவது, தள்ளிச் சென்றால் லாக் ஆகிக் கொள்வது, ஸ்கூட்டரை ட்ராக் செய்வது, மலைச்சாலைகளில் ஜாலியாகப் பயணிக்க ஹில் ஹோல்டு ஃபங்ஷன், ஸ்கூட்டரில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஏற்ப லைட் தீம்கள் மாறுவது, விட்ஜெட் உள்ளிட்ட அம்சங்கள் என்று பல விஷயங்களைத் திணித்திருக்கிறார்கள்.

மொத்தம் 5 கலர்களில் வருகிறது S1 ஏர். மற்றபடி ஓலா S1 Pro-வுக்கும் இதற்கும் ஏகப்பட்ட மாற்றங்களை உற்றுப் பார்த்தால் கண்டுபிடிக்கலாம். இதன் ஃப்ளாட்டான கால் வைக்கும் போர்டு ஏரியா, (S1 மற்றும் S1 Pro ஸ்கூட்டர்களில் வாழைப்பழ வடிவில் கொஞ்சம் கர்வ்டு ஆக இருக்கும்), உயரம் குறைந்த ரைடர்களுக்கு வசதியாகவும் இருக்கும், பொருட்களை ஈஸியாக ஏற்றிப் பயணிக்கவும் வசதியாக இருக்கும். இதன் சீட் உயரம் 792 மிமீ என்பது கொஞ்சம் அதிகமோ!

ஸ்விங் ஆர்ம், ஹப் மோட்டார், சாதாரண ஸ்கூட்டர்களில் இருக்கும் வழக்கமான முன் பக்க டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின் பக்கம் டூயல் ஸ்ப்ரிங் செட்அப், ரீ–டிசைண்டு செய்யப்பட்ட கிராப் ரெயில், டூயல் டோன் கலர்கள், முக்கியமாக எடை என்று பல வித்தியாசங்கள் உண்டு.

இதன் சிங்கிள் பீஸ் ட்யூபுலர் கிராப் ஹேண்டில், ஸ்போர்ட்டியாகவே இந்த ஸ்கூட்டரைக் காட்டுகிறது. இதன் அண்டர் சீட் ஸ்டோரேஜ்… அதாவது சீட்டுக்கு அடியில் இது 34 லிட்டர் இடவசதி கொண்டிருக்கிறது. இது காஸ்ட்லி ஸ்கூட்டர்களைவிட வெறும் 2 லிட்டர்தான் குறைவு.

ஓலாவின் பட்ஜெட்  E-ஸ்கூட்டர்!

நான் இதைச் சட்டெனக் கண்டுபிடித்தது இப்படித்தான். ஓலா S1 ப்ரோவில், இதன் ரியர் சஸ்பென்ஷன் மோனோ ஷாக்காக… அதுவும் படுக்கை வசத்தில் இருக்கும். இந்த S1 Air–ல் டூயல் ஸ்ப்ரிங்கை வைத்துக் கண்டுபிடிக்கலாம். டிரம் பிரேக்ஸை வைத்தும், ஸ்டாம்ப்டு ஸ்டீல் வீல்களை வைத்தும் கண்டுபிடிக்கலாம். மற்றபடி இதன் ப்ரீமியம்னெஸ்ஸும், டிசைனும் காலியாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஓலா. வெரி குட் ஓலா!

இதன் பேட்டரி, மோட்டார் போன்ற சமாச்சாரங்களுக்கு வரலாம். இதில் ஓலா S1 வேரியன்ட்டைவிடக் குறைவான பவர் தரும் 2.47kW சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இது சிங்கிள் சார்ஜுக்கு IDC ரிப்போர்ட்படி சுமார் 101 கிமீ தரும் என்று க்ளெய்ம் செய்கிறது. S1 ப்ரோவின் அராய் ரேஞ்சான 181 கிமீ–யைத் தாண்டி, அதைப் பார்த்துப் பார்த்து ஓட்டி, 200 கிமீ வரை அச்சீவ் செய்து, ஓசியாக ஓலா ஸ்கூட்டரைத் தட்டிச் சென்ற வாடிக்கையாளர்கள் உண்டு. அப்படியென்றால், இதையும் க்ளெய்ம் செய்யப்பட்ட மைலேஜைவிட ஓட்டலாம் என்று இப்போதே கிசுகிசுக்கிறார்கள். ஆனாலும், சுமார் 90 கிமீ ரேஞ்ச் தந்தாலே, கம்யூட்டர்களுக்கு வரம்தான். Eco மோடில் இதை முயற்சித்துப் பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதன் டாப் ஸ்பீடு 85 கிமீ என்கிறார்கள். நாம் இதை இன்னும் ஓட்டிப் பார்க்கவில்லை. சுமார் 75 கிமீ போனாலே, இந்த S1 Air-யை வைத்துக் காற்றில் பறக்கலாம். இதில் எக்கோ, நார்மல், ஸ்போர்ட் என்று 3 ரைடிங் மோடுகள் கொடுத்திருக்கிறார்கள். அதனால், வழக்கம்போல ஓட்டுதலில் உற்சாகமாக இருக்கலாம் இந்த S1 Air.

பின்னால் மவுன்ட் செய்யப்பட்ட இதன் ரியர் ஹப் மோட்டாரின் சக்தி 4.5kW. அதாவது, இதன் பீக் பவர் 6bhp. இது 0–100 கிமீ–யைக் கடக்க சுமார் 9.8 விநாடிகள் எடுத்துக் கொள்ளும் என்கிறது. 0–40 கிமீ–க்கு வெறும் 4.3 விநாடிகள் ஆகிறது. ஒரு சாதாரண கம்யூட்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இது ஓகேதான்.

சார்ஜிங்கைப் பொருத்தவரை இதை 0–100% சார்ஜ் ஏற்றுவதற்கு 4.5 மணி முதல் 4.7 மணி நேரம் வரை ஆகும். இது நார்மலான ரெகுலர் சார்ஜரில் ஆகக் கூடிய நேரம். இதில் சிறப்பு என்னவென்றால், இதற்கு ஹைப்பர் சார்ஜிங் வசதியும் கொடுத்திருக்கிறது ஓலா. ஓலாவின் இதற்கெனப் பிரத்யேகமாக இருக்கும் ஹைப்பர் சார்ஜிங் நெட்வொர்க்கில் இதைச் சட்டுபுட்டுனு ஒரு 5 நிமிடத்தில் சார்ஜ் செய்தால், சுமார் 15 கிமீ வரை போகலாம் என்கிறார்கள்.

பொதுவாக, ஓலா ஸ்கூட்டர்கள் விரைவான புக்கிங்குகளிலேயே செய்திகளில் அடிபட்டு விடும். இந்த S1 Air–ம் புக்கிங் குவிந்து விட்டதாம். ஓலா, வழக்கம்போல் இதிலும் ஒரு ட்ரிக்கைக் கையாண்டிருக்கிறது. தீபாவளிக்கு முன்பு, அல்லது தீபாவளியன்று இதை புக் செய்தவர்களுக்கு மட்டுமே அந்த 79,999 ரூபாய் விலை. இதை நீங்கள் படித்து விட்டு புக் செய்யும்போது, இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 84,999 ரூபாயாக இருக்கும். அவ்வ்வ்!

S1 Air–யை ரிவீல் செய்யும்போது, கூடவே தனது எலெக்ட்ரிக் காருக்கான டீஸரையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது ஓலா. அநேகமாக 2024–க்குள் ஓலாவின் ஸ்டைலான எலெக்ட்ரிக் க்ராஸ்ஓவர் கார் ஓடிக் கொண்டிருக்கலாம்.

ஓலா கார்
ஓலா கார்

நீ/அ/உ: 1,865/710/1,155 மிமீ

வீல்பேஸ்: 1,359 மிமீ

பூட் ஸ்பேஸ்: 34 லிட்டர்

கெர்ப் எடை: 99 கிலோ

சீட் உயரம்: 792 மிமீ

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்: 7 இன்ச் டிஜிட்டல் டச் ஸ்க்ரீன்

ரேஞ்ச் IDC: 101 கிமீ

எலெக்ட்ரிக் மோட்டார் பவர்: 4.5kW (6bhp)

பேட்டரி பவர்: 2.47kWh

பேட்டரி டைப்: லித்தியம் அயன்

ரெகுலர் சார்ஜிங்: 4.5 மணி நேரம்

டாப் ஸ்பீடு: 90 கிமீ (ஸ்போர்ட்ஸ் மோடு)

ரைடு மோடுகள்: Eco/Normal/Sport

0–40 கிமீ: 4.3 விநாடிகள்

0–60 கிமீ: 9.8 விநாடிகள்

சஸ்பென்ஷன் (மு/பி): ட்வின் ஃபோர்க்/டூயல் ஷாக்

ஃப்ரேம்: ட்யூபுலர்

வீல்கள்: ஸ்டாம்ப்டு ஸ்டீல் வீல்கள்