Published:Updated:

ஐ20 ஆக்டிவ்... முரட்டுத்தனமான குட்டிப் பையன்!

ஐ20 ஆக்டிவ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ20 ஆக்டிவ்

பழைய கார்: ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் டீசல்/பெட்ரோல்

ஐ20 ஆக்டிவ்... முரட்டுத்தனமான குட்டிப் பையன்!

பழைய கார்: ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் டீசல்/பெட்ரோல்

Published:Updated:
ஐ20 ஆக்டிவ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ20 ஆக்டிவ்

சிலருக்குப் பெட்ரோல் கார்கள்தான் பிடிக்கும்; காரணம், அதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும், சத்தம் போடாத அதன் ஸ்மூத்னெஸ் டிரைவிங்கும். சத்தம் போட்டாலும் பரவாயில்லை; நல்ல மைலேஜ் மற்றும் நெடுஞ்சாலையில் பறக்கக் கூடிய நிலைத்தன்மையும் பெர்ஃபாமன்ஸும் டீசலில்தான் கிடைக்கும் என்று டீசலை டிக் அடிக்கும் பலர் இருக்கிறார்கள். தங்களின் முதல் காரே டீசலாக இருந்தால் நல்லது என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்குச் சரியான ஆப்ஷன்தான் ஹூண்டாயின் ஐ20 ஆக்டிவ் ஹேட்ச்பேக்.

இது ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக் ரகமாக உலா வந்த கார். ரெகுலர் ஐ20 ஹேட்ச்பேக்கைத் தாண்டிய இதன் க்ராஸ்ஓவர் டிசைன்தான் இதை மார்க்கெட்டில் கொஞ்சம் நிலைநிறுத்தி வைத்திருந்தது. இதை ஒரு க்ராஸ்ஹேட்ச் என்று செல்லமாக அழைத்து வந்தார்கள். நல்ல இடவசதியுடன், ஒரு வெல்பேக்கேஜ்டு குட்டி எஸ்யூவி ஒன்றைப் பழைய மார்க்கெட்டில் தேடிக் கொண்டிருந்தால், ஐ20 ஆக்டிவ்வை டிக் அடிக்கலாம்.

அதற்கு முன் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

50,000 கிமீக்கு மேல் ஓடிய ஆக்டிவ் ஐ20-ல் க்ளட்ச் வியரில் கவனம் தேவை
50,000 கிமீக்கு மேல் ஓடிய ஆக்டிவ் ஐ20-ல் க்ளட்ச் வியரில் கவனம் தேவை

முரட்டுத்தனமான குட்டிக் கார்!

முதன் முதலில் 2015–ல்தான் ஹூண்டாய்க்கு இப்படி ஒரு க்ராஸ்ஓவரைக் கொண்டு வரலாம் என்கிற ஐடியாேவே வந்தது. சாதாரண ஹேட்ச்பேக் தான் – கொஞ்சம் முரட்டுத்தனமான லுக்கிலும், க்ராஸ்ஓவர் ஸ்டைலிலும் இருக்க வேண்டும் என்று ஹூண்டாய் கொண்டு வந்ததுதான் இந்த ஐ20 ஆக்டிவ். அங்கங்கே பாடி கிளாடிங்குகள், முன்/பின் என ஸ்கஃப் ப்ளேட்கள், எஸ்யூவி மாதிரி ரூஃப்ரெயில்கள் என்று முரட்டுப்பையன் மாதிரி இருக்கும் ஐ20 ஆக்டிவ். க்ராஸ்ஓவர் என்றால், சின்ன ஆஃப்ரோடும் பண்ண வேண்டும்தானே; அதற்காக சாதாரண ஹேட்ச்பேக்கில் இருந்து இந்த க்ராஸ்ஓவரின் ஹேட்ச்பேக்கை 190 மிமீ எனும் கிரவுண்ட் கிளியரன்ஸில் வைத்திருந்தார்கள். இது ஒரு காம்பேக்ட் எஸ்யூவிக்கு இணையானது.

டர்போ டீசலா… நேச்சுரல் பெட்ரோலா…?

இதில் சாதா ஐ20–ல் இருக்கும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான். 90bhp கொண்ட 1.4லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் மற்றும் 83bhp பவர் கொண்ட 1.2 லிட்டர் இன்ஜின். இதில் 1.2 லிட்டர் என்பது டர்போ கிடையாது; சாதாரண Naturally Aspirated இன்ஜின்தான். பெர்ஃபாமன்ஸ் பார்ட்டிகளுக்கு டர்போ பிடித்திருந்தது. காரணம், இதிலிருக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். இதுவே NA இன்ஜினில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான்.

ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை இந்த ஐ20 ஆக்டிவ்வில் கொடுக்கவில்லை ஹூண்டாய். CRDi இன்ஜினின் ரிஃபைன்மென்ட்டுக்கு ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் ஒரு நல்ல பெயர் உண்டு. இயல்பிலேயே இது ஸ்மூத்தாகவும் ரிஃபைண்டாகவும் இருக்கும். பவர் டெலிவரி லீனியராகக் கிடைப்பதுதான் இதில் பெரிய ப்ளஸ். ஹைவேஸில் இதை நன்கு உணரலாம். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் செயல்பாடு சிட்டிக்குள்ளும் எளிமையாக இருக்கும். பெட்ரோல் இன்ஜின் மாதிரி ஸ்மூத்தாக இயங்கும் இதன் கியர்பாக்ஸ். உதாரணத்துக்கு, இதை நான் சிட்டியில் ஓட்டும்போது, அதிக கியரில் குறைந்த வேகத்தில் போனால்கூட இன்ஜின் நாக்கிங் இல்லாமல், திணறாமல் ஓடியது. இதனுடைய மைலேஜ், சுமார் 16 கிமீ கிடைத்தது. நெடுஞ்சாலைகளில் நிச்சயம் 18 கிமீ வரை கிடைக்கிறதாகச் சொல்கிறார்கள்.

இப்போது 1.2 லிட்டர் இன்ஜினுக்கு வரலாம். இதுவும் நல்ல ரிஃபைண்டு செய்யப்பட்ட இன்ஜின்தான். இதிலிருப்பது 5 ஸ்பீடு கியர்பாக்ஸ். சிட்டிக்குள் இந்த 5 ஸ்பீடு காரை ஓட்ட செமையாக இருக்கும். இந்த பெட்ரோல் இன்ஜினின் பெப்பினெஸ் பலருக்கும் பிடிக்கும். ஆனால், ஹைவேஸில் டீசல் அளவுக்கு இந்த பெட்ரோலில் ஒரு பன்ச் மிஸ் ஆகத்தான் செய்கிறது. பெட்ரோல் பயன்படுத்தியவர்கள் சிட்டிக்குள் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், மைலேஜிலும் இது டீசலைவிட பின்வாங்கவே செய்கிறது. நமது வாசகர் ஒருவருடன் நான் இதில் மலையேறியபோது, இது சுமார் 11.5 கிமீ மைலேஜ் கொடுத்ததாக ஞாபகம். பயன்படுத்தியவர்களைக் கேட்டபோது, இது சுமார் 12 – 13 கிமீ வரையே கொடுப்பதாகச் சொல்கிறார்கள். ஹைவேஸிலும் டீசல் அளவு இல்லை.

பிரேக் செயல்பாடுகளில் குறை இருப்பதாகச் சொல்கிறார்கள்
பிரேக் செயல்பாடுகளில் குறை இருப்பதாகச் சொல்கிறார்கள்

ஓட்டுதலில் இதைக் கவனிங்க!

வழக்கமான ஐ20–யைவிட இதில் சஸ்பென்ஷனை உயர்த்தி இருப்பதால்… இதன் ட்ராவல் அதிகமாக இருக்கும். அதனால், இதன் ஓட்டுதல் நிச்சயம் சொகுசாகவே இருக்கிறது. ஐ20–யை விட அருமை. இது ஒரு சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்அப் என்பதால்.. குறைந்த வேகங்களில் இதன் செயல்பாடு சொகுசாகவே இருக்கிறது. இதன் ஹேண்ட்லிங்கும் பக்கா. காம்பேக்ட் கார் என்பதால், சிட்டிக்குள் வளைத்து நெளித்து ஓட்ட சூப்பர்.

வழக்கம்போல்… அந்த ஸ்டீயரிங் ஃபீட்பேக்… இந்த ஹூண்டாய் காரில்… ப்ச்! இதன் எடை அதிகமான ஸ்டீயரிங்தான் இந்த காரின் ஃபன் டு டிரைவ் எனும் அம்சத்தைக் குலைக்கிறது என்கிறார்கள். சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்அப் என்பதால் சில மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும்போது… ‘தட்... டமால்’ எனும் சத்தம் பழகிக் கொள்ள வேண்டும். அதேபோல், ஹைவேஸில் பெரிய கார்னரில் திரும்பும்போது, பாடி ரோல் நன்றாகவே தெரியும்.

மற்றபடி தரத்தில்.. ஹூண்டாய் கார்களைப் பற்றிக் கவலையே படத் தேவையில்லை. ரெகுலர் ஐ20–ன் அதே கேபின்தான் இதிலும். ஸ்டாண்டர்டு ஐ20–ல் பீஜ் – பிளாக் என டூயல் டோனில் இருந்தால்… இதற்குக் கொஞ்சம் ஸ்போர்ட்டி லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக… ஆல் பிளாக் தீமில் இதன் டேஷ்போர்டு டிசைன் இருக்கிறது. புளூ கலர் ஆக்ஸென்ட்டுகள், பளீரென ஆரஞ்ச் நிற ஆக்ஸென்ட்டுகள் என காரின் வெளிப்பக்க கலருக்கு ஏற்றபடி இதன் ஆம்பியன்ட் தீம் இருக்கிறது. இதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் அருமையாக இருக்கும். ஆனால், நீங்கள் பயன்படுத்திய கார் – விபத்துக்குள்ளாகி ஃபிட் அண்ட் ஃபினிஷில் கோளாறு ஏற்பட்டிருக்கிறதா என்பதை ஒரு முறை சோதனை போட்டுவிடுங்கள்.

இன்டீரியர் தரம் ஓகே. டச் ஸ்கிரீனை செக் செய்யவும்
இன்டீரியர் தரம் ஓகே. டச் ஸ்கிரீனை செக் செய்யவும்

வாங்கும்போது என்ன கவனிக்கணும்?

Base, S மற்றும் SX என மொத்தம் 3 வேரியன்ட்களில் வந்தது ஐ20 ஆக்டிவ். 2018–ல் ஒரு இந்த ஆக்டிவ்வை ஃபேஸ்லிஃப்ட் செய்தது ஹூண்டாய். அதன் பிறகு கடைசி இரண்டு வேரியன்ட்களில் மட்டும்தான் விற்பனையாது ஐ20 ஆக்டிவ். எனவே நீங்கள் வாங்கப்போவது Base மாடலாக இருந்தால்… நிச்சயம் 2015 – 2017 மாடலாகத்தான் இருக்கும். விலை கொஞ்சம் அடித்துப் பேசலாம். ஃபேஸ்லிஃப்ட்டில் எக்ஸ்டீரியர் கலர் டூயல் டோன் ஸ்கீமில் ஸ்டைலாக இருக்கும்.

டாப் வேரியன்ட் SX–ல் அப்போதே வசதிகளை வாரி இறைத்திருந்தது ஹூண்டாய். ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன், 6 காற்றுப்பைகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், எல்இடி டிஆர்எல், கார்னரிங் ஹெட்லைட்ஸ், 16 இன்ச் அலாய் வீல்கள் என்று பட்டையைக் கிளப்பும். என்ன, விலை உங்களுக்கு ஒத்துவர வேண்டும்.

இதில் சில விஷயங்களை மட்டும் கவனியுங்கள். இந்த ஐ20 ஆக்டிவ்வின் க்ளட்ச் வியர், கிழிந்து போவதாகப் புகார் சொல்கிறார்கள். நீங்கள் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, க்ளட்ச் கொஞ்சம் ஸ்லிப்பியாகவோ இருந்தால்… செம டைட்டாகவோ இருந்தால்… Worn out Clutch என்று தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் 50,000 – கிமீ–க்கு மேல் ஓடியிருந்தால்… க்ளட்ச் பிளேட் உங்கள் செலவுதான். டீசல் மாடலுக்கு இந்த க்ளட்ச் பிளேட்டின் விலை கொஞ்சம் காஸ்ட்லியாகவே இருக்கும்.

ஐ20 ஆக்டிவ்
ஐ20 ஆக்டிவ்

அதேபோல், குறைந்த வேகங்களில் இந்த காரின் பிரேக்கிங் செயல்பாட்டில் குறை இருப்பதாகவும் சொல்கிறார்கள் சில வாடிக்கையாளர்கள். டெஸ்ட் டிரைவில் இதையும் மறக்க வேண்டாம்.

டாப் எண்ட் மாடலின் டச் ஸ்க்ரீன், சில நேரங்களில் அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிற்பதாகவும் சிலர் புகார் வாசித்தார்கள். டச் ஸ்க்ரீனையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

நீங்கள் வாங்கப் போவது பெட்ரோல் மாடல் என்றால்… மைலேஜ் உங்களுக்கு நிச்சயம் கட்டுப்படியாகுமா என்பதையும் யோசித்துக் கொள்ளுங்கள். காரணம், ‘10 கிமீ மைலேஜ்தான் கொடுக்குது’ எனும் ஐ20 ஆக்டிவ் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.

எஸ்யூவி வாங்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை; ஆனால், குட்டிக் குட்டி ஆஃப்ரோடு செய்யும் அளவுக்கு 5 லட்சம் பட்ஜெட்டுக்கு ஒரு சின்ன எஸ்யூவி தேவை என்பவர்கள் – இந்த ஐ20 ஆக்டிவ்வைத் தேர்ந்தெடுக்கலாம். அதேநேரம், கொஞ்சம் பட்ஜெட் பார்ட்டிகள் என்றால்.. லேசாக விலை அதிகமாக இருந்தாலும்… மைலேஜில் நீங்கள் மனம் நொந்துவிடக் கூடாது என்பதால்… டீசல் ஐ20 ஆக்டிவ்தான் நமது சிபாரிசு.

கார் - ஐ20 ஆக்டிவ்

தயாரிப்பு - ஹூண்டாய்

மாடல் - 2015 – 2018

விலை - சுமார் 4.5 – 5.5 லட்சம்

இன்ஜின் - 1.4 லிட்டர் டர்போ டீசல்

பவர் - 90bhp

ப்ளஸ் - இன்ஜின் ரிஃபைன்மென்ட், கேபின் தரம், ஸ்டைல், கி.கிளியரன்ஸ்

மைனஸ் - க்ளட்ச் தேய்மானம், ஹேண்ட்பிரேக் பெடல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism