கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் விகடனும் மஹிந்திராவும்!

மோட்டார் விகடனும் மஹிந்திராவும்!
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் விகடனும் மஹிந்திராவும்! ( elenabs )

வொர்க்‌ஷாப்: Automotive Design and Development

சலிக்கவே சலிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால், அது கார்களையும் பைக்குகளையும் பற்றிப் பேசுவது. நமக்குள் பேசிக்கொள்வதில் ஒருவித சந்தோஷம் உண்டு. இதையே விஷயம் தெரிந்தவர்கள், இந்தத் துறையில் தினம் தினம் பல சவால்களையும் சாதனைகளையும் அடுத்தடுத்து சந்திப்பவர்கள் பேசுவதைக் கேட்கும்போது, நம் மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரளும்.

இதில் மறைந்திருக்கும் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், இது பலரின் வாழ்க்கைப் பாதையையே மடைமாற்றவல்லது. குறிப்பாக மாணவர்கள்; அதிலும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் தங்களுக்கான எதிர்காலத்தைத் தேடும் இளைஞர்கள் ஆகியோருக்கு இதுபோன்ற உரையாடல்கள் பெரும் உதவியாக மட்டுமல்ல; உத்வேகத்தைக் கொடுப்பதாகவும் அமையும்.

இதுபோன்ற உரையாடல்களைப் பயிற்சிப் பட்டறைகள் வாயிலாகத் தொடர்ந்து நடத்தி வரும் மோட்டார் விகடன், மஹிந்திராவோடு இணைந்து தற்போது நடத்திவரும் Automotive Design and Development வொர்க்‌ஷாப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மோட்டார் விகடனும் மஹிந்திராவும்!

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சுமார் 20 வல்லுநர்கள், 14 தலைப்புகளின் கீழ் 8 நாட்கள் நடத்தும் இந்தப் பயிலரங்கம், 57 நிமிடங்களில் 25,000 முன்பதிவுகளைப் பெற்ற மஹிந்திரா XUV700-வை Case Studyயாக வைத்து நடத்தப்படுகிறது.

கல்வியில் முன்னணியில் இருக்கும் மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவும், மாணவர்களுக்கு இதுபோன்ற சமகால விஞ்ஞான மற்றும் வணிகவியல் வெற்றிகளை மையமாக வைத்தே பாடத் திட்டத்தை அமைக்கின்றன. அதனால்தான் படிக்கும் படிப்பைச் சுமையாகக் கருதாமல், சுவையாகக் கருதி மாணவர்கள் அங்கே ஆர்வத்தோடு படிக்கிறார்கள். செயல்முறைக் கல்வியின் வாயிலாக அறிவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

தொழில்துறைக்கும் கல்லூரிகளுக்கும் இடையே பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று உறுதியாக நம்பும் மோட்டார் விகடன், மஹிந்திராவுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இது போன்ற முயற்சிகள் பெருகப் பெருக, நமது மாணவர்க்ளுக்கான வேலை வாய்ப்புகள் பன்மடங்காகும் என்பது தின்னம்.

மஹிந்திரா தார் மற்றும் XUV 700 ஆகிய வாகனங்களை வடிவமைத்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் கொண்ட பெரும் குழுவுக்குத் தளபதியாக இருந்து வழிநடத்தியவர் மஹிந்திராவின் வேலுசாமி. மோட்டார் விகடனின் பயிலரங்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான அம்சஙகளைப் பல்கலைக் கழகத்துக்குப் பாடத்திட்டம் தயாரிக்கும் ஈடுபாட்டோடும் முனைப்போடும் தன் சகாக்களோடு இணைந்து இவர் தயாரித்தார்.

அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பொறியாளர்களைப் போலவே மாணவர்களும் இளம் பொறியாளர்களும் ஆர்வலர்களும் இந்தப் பயிலரங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கெடுத்தார்கள் என்பதுதான் இந்த முயற்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி.