Published:Updated:

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20

ஹெட்லேம்ப்
பிரீமியம் ஸ்டோரி
ஹெட்லேம்ப்

எங்க தல விஆர்!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20

எங்க தல விஆர்!

Published:Updated:
ஹெட்லேம்ப்
பிரீமியம் ஸ்டோரி
ஹெட்லேம்ப்

ப்ரோட்டோ டைப் என்றால் என்ன என்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக ஒரு சில விஷயங்களை இப்போது பார்க்கலாம். ஹெட்லேம்ப் என்பது ஒரு காருக்கு எத்தனை அவசியம் என்பது தெரியும். இவற்றில் லோ பீம், ஹை பீம் - இவை பற்றித் தெரியும்தானே?

லோ பீம் என்பது குறிப்பிட்ட ஒளிவெள்ளத்தை, (லக்ஸ் வேல்யூ) முறையான கோணத்தில் சாலையில் உமிழ வேண்டும். கூடுதலான லக்ஸ்களை நீண்ட கோணத்தில் கொட்டுவது ஹை பீமின் வேலை. இதைச் சரியாகக் கண்காணித்து, அளவிட்டுச் சான்றிதழ் அளிப்பது அராய் எனும் இந்திய அரசு நிறுவனம். இதில் ஏதும் குறைபாடுகள் தென்பட்டால், சம்பந்தப்பட்ட காரை மேற்கொண்டு உற்பத்தி செய்ய இயலாமலும் போகலாம். அதேநேரம், ஒரு LH/RH ஹெட்லேம்ப் டிசைனை டூலிங் செய்ய 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டிவரும். இவ்வளவு பணம் போட்டு டூல் தயாரித்து, அராய்க்குச் சோதனைக்கு அனுப்பி அதில் ஏதும் குறை இருந்தால், கோடிக்கணக்கில் பணமும் மாதக்கணக்கில் காலவிரயமும்தான் ஏற்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையே ஒரு டிசைன் பரிசோதனை மாதிரி ப்ரோட்டோ தயாரித்து அதன் டிசைனை - ஒளி அளவை உறுதி செய்து குறை இருப்பின் நிவர்த்தி செய்து அராய்க்கு அனுப்பி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் அல்லவா? இந்தச் சோதனை ப்ரோட்டோவுக்கான செலவுத் தொகை ஒட்டு மொத்த டூலிங்கில் 10-ல் ஒரு பங்கு மட்டுமே! இன்றுவரை இத்தகைய துல்லியமான டூலிங்குக்கும், டெஸ்ட் ப்ரோட்டோக் களுக்கும் கொரியா, தைவான், சீனா போன்ற நாடுகளை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது.

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20

ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு புதுயுக ப்ரோட்டோ, அதிரடியாக கார் டிசைன் உலகில் புகுந்து, பெரும் பிரளயத்தையே சத்தமில்லாமல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுதான் விர்ச்சுவல் ப்ரோட்டோ டைப்பிங்.

டிசைன் உறுதி செய்யப்பட்ட மறுநொடியே, ஒரு மாயக் கண்ணாடியின் உதவியுடன் அந்த டிசைனை அச்சு அசலாக கண் முன்னே கொண்டு வந்து காட்டும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் மற்றும் 3D புரொஜெக்ஷன் போன்ற தொழில்நுட்பங்களின் நீட்சிதான் இந்த விர்ச்சுவல் ப்ரோட்டோ டைப்பிங்.

நாம் முன்னே சொன்ன ஹெட்லேம்ப் டிசைனை, அதன் சோதனையை VR (Virtual Reality)-ன் உதவியுடன், கணினி மூலம் மிகத் துல்லியமாக அளவிடுவதுடன், அதன் வேறு பல தொழில்நுட்பத் தகவல்களையும் கண்காணித்து அறிய முடியும். உதாரணமாக, ஹெட்லேம்ப் லென்ஸின் சூட்டை அறியலாம். கூடுதலாக, நம் புறக்கண்களால் பார்க்க முடியாத பல நடவடிக்கைகளைப் பார்த்து விடலாம். இன்ஜின் சிலிண்டருக்குள் நடக்கும் அதிவேக பிஸ்டன் நடனத்தைப் பார்த்து அதிசயிக்கலாம்.

விர்ச்சுவல் ரியாலிட்டி என்பது ஒரு 3D படம் பார்க்கப் போகும்போது, ஒரு கண்ணாடி தருகிறார்களே... அதேபோல்தான். கண்ணாடி அணிந்த நிலையில் காட்சிகள், பொருட்கள், மனிதர்கள் எல்லாம் நம் கண்ணருகே வந்து போகிறார்களே... இதுதான். அதேபோன்று ஒரு பெரிய கனமான கண்ணாடி அணிந்துகொண்டால், உங்களைச் சுற்றிலும் ஒரு 3D படம் விரியும். அங்கே நீங்கள் ஒரு காருக்கு உள்ளேயோ, வெளியிலோ இருப்பதுபோன்ற ஒரு டிஜிட்டல் வெளியை விர்ச்சுவலாக உருவாக்கும் வித்தைதான் VR. இதற்கெனப் பிரத்யேக மென்பொருட்கள் இருக்கின்றன.

ஒரு திடமான ப்ரோட்டோ, 1:1 எனும் சமவிகித அளவில் இருக்கும். ஆனால், இன்னும் பல படிகள் மேலே போய் 10 மடங்கு பெரிதான க்ளோஸ்-அப்-பில் கார் பாகங்களைப் பார்க்க முடிவது VR-ன் உன்னதங்களில் ஒன்று.

இங்கு எவ்வளவோ பெரிய பெரிய நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இருந்தும், டெக்னிக்கலான பார்ட்ஸ்களின் ப்ரோட்டோ கம்பெனிகள்தான் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அழகான டிசைன் பார்ட்கள், அதாவது ஸ்டைலிங் ப்ரோட்டோ பார்ட்களைத் தயாரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும். தற்போதைய சூழலில் ‘க்ராஃப்ட்மேன்ஷிப்’க்குச் சவாலான பல வேலைகளை நாம் முன்னெடுப்பதில்லை.

அத்தகைய நுணுக்கமான கலைநுட்பத் திறனாளர்களும் இங்கு இல்லை. இது நிவர்த்தி செய்ய வேண்டிய ஒன்று. ஏனென்றால், அங்குதான் சவால்களும், அதற்குத் தகுந்த சன்மானமும் அதிகம். இன்றைய டிஜிட்டல் வீச்சுத் திறன்மிக்க சூழலில், விர்ச்சுவல் ப்ரோட்டோ டைப்பிங் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. சாஃப்டவேரில் முன்னணியில் இருக்கும் நம்மால், VR-யிலும் டிஜிட்டல் க்ராஃப்ட்மேன்ஷிப்பை எட்ட முடியும்.எட்டிவிட வேண்டும். ஏனென்றால், விர்ச்சுவல் ப்ரோட்டோ டைப்பில் பல நன்மைகள் குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் நடக்கக் கூடும்.

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20

கார் ஸ்டைலிங் என்பது, பலமுறை மெருகூட்டல்களைக் (ஃபைன் ட்யூனிங்) கடந்தே ஃபைனல் ஆகும். பல மாதங்கள் இதற்குச் செலவாகும். VR இந்த நேரத்தைப் வெகுவாக குறைத்து விடும். க்ரியேட்டிவ் ஐடியா ஒரு மின்னல் கீற்றுபோல! அவை தோன்றி மறைவதற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ப்ரோட்டோவுக்குப் பிந்தைய ஸ்டைலிங் ப்ராசஸ் ஆன கலர், இழைமம் (டெக்ஷர்), மெட்டீரியல் போன்ற ஏரியாக்களிலும் புகுந்து விளையாட முடியும்.

அடுத்ததாக பெயின்ட். பெயின்ட் பண்ணப்படாத காரைக் கற்பனைகூடச் செய்ய முடியாது. ஆனால், காருக்கான பெயின்ட் மற்ற எல்லாவற்றிலும் இருந்து வேறுபடுகிறது. இதுவும்கூட நேரம் அதிகம் விழுங்கும் வேலைதான்.

இந்த நேரத்தில்தான் நம்ம ‘தல’ VR-ன் உதவி தேவைப்படுகிறது. அதற்கு முன் சிஎம்டி ( CMT) எவ்வளவு சுவாரஸ்யமானது என்று பார்த்தல் அவசியம்.

- வடிவமைப்போம்

இத்தனை ப்ரோட்டோக்களா?

புரோட்டோவில் பல மாதிரி மாடல்கள் பல நிலைகளில் உருவாக்கப்படும். எந்த நிலையில் எந்த வகை புரோட்டோ என்பதற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி பிராசஸ் வைத்திருக்கின்றன. சில மாதிரிகள்...

Design Valdation Proto - இது விஷன் மாடல். டிசைன் ஸ்டூடியோவில் கட்டப்படும் மாதிரி. இதில் எக்ஸ்டீரியர், இன்டீரியர் மட்டுமே பிரதிநிதித்துவம் பெறுகிறது.

Pre Development Proto - வெற்றிகரமான வடிவமைப்புக்கு அடுத்த நிலையில் வரும் மாதிரி. இதில்தான் உற்பத்தி வல்லுநர்கள் உள்ளே நுழைந்து பல மாறுதல்களைச் சொல்வார்கள்.

Production Process Validation Proto - உற்பத்திக்கு உகந்ததா என உறுதி செய்தபின் டூலிங் என்கிற அச்சு வார்ப்பு, காரின் நிர்ணய விலை உள்ளிட்ட காஸ்டிங் போன்றவை மேலும் தெளிவாகும்.

Customer Testing Proto - இந்த மாதிரிகள் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, வாடிக்கையாளருக்குக் காட்டி, ப்ளஸ் மைனஸ் பட்டியலிட்டு தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.

Safety Testing Proto - பாதுகாப்பு விதிமுறைகளுக்கானது இந்த மாதிரி.

Manufacture Validated - இது இறுதிக்கட்டம். இந்த வகை மாதிரிகள் தெளிவான நன்மை பயக்கும் பட்சத்தில் நேராக வாடிக்கையாளருக்கு விற்றுவிடக் கூடும். எனவே, இதுதான் இறுதிநிலை. இவற்றில் வெற்றி பெற்றால் சாலையில் வெற்றிகரமாக கார் ஓடும். தேசிய நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் செய்யும்போது, உடல் முழுதும் கருப்பு / வெள்ளைப் பட்டைகளில் மறைக்கப்பட்ட இனம்புரியாத கார்கள் உடன் பயணித்தால், அது டெஸ்ட்டிங் புரோட்டோ என்பதை அறிக.