மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹம்மரின் முதல் கஸ்டமர் யார் தெரியுமா?

கார்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் #31

மெரிக்கா ஒரு குடியேற்ற நாடு. கொடிய பாலைவனம் ஒரு பக்கம் , அருவிகளையே உறைய வைக்கும் கடும் குளிர் இன்னொரு பக்கம் என பரந்த நிலப்பரப்பையும், அகண்ட நீண்ட சாலைகளையும், திட்டமிடப்பட்ட நகர அமைப்புகளையும் கொண்டது அந்த நாடு. இந்தப் பின்னணியில்தான் அந்த நாட்டின் கார் டிசைன் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அமெரிக்க கார் டிசைன் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் விஷயம் இந்த மூன்றும்தான்.

1. Muscle கார்களும் அமெரிக்காவும்...

2. ஹம்மரின் கதை...

3. அமெரிக்காவின் பிக்-அப் மோகம்

கார்
கார்

`ஓல்டஸ்மொபைல் 88’தான் முதல் முதலில் - அதாவது, 1949-ம் ஆண்டு அறிமுகமான மஸில் கார். அதையடுத்து அமெரிக்காவெங்கும் மஸில் கார் மோகம் வேகமெடுத்து 1960-களில் உத்வேகம் பெற்றது.

நீண்ட ஹூட், அதற்குள் அதிக திறன் கொண்ட 5 லிட்டர் v8 என்ஜின், அகண்ட முன்பக்க கிரில், ஒரு கச்சிதமான பாடி பில்டர்போல உருண்டு திரண்ட, ஆனால் செதுக்கி வைத்ததைப்போன்ற வீல் ஆர்ச்சுகள். கண்டிப்பாக ரியர் வீல் டிரைவ். ஒரு சிறுத்தை தன் உச்சக்கட்ட வேகத்தில் உந்தித்தள்ளும்போது ஏற்படும் பின்னங்கால் மடிப்புகளைப் போன்ற ரியர் ஹான்ச்சஸ் (rear haunches), மிகுந்த அழுத்தமாக அதேசமயம் எடுப்பான ஷோல்டர் லைன், அதற்கு ஈடு கொடுக்கும் கேரக்டர் லைன், மொத்தமாகவே இரண்டு டோர். கூபே வடிவம்... இதுதான் மஸில் காரின் இலக்கணம்.

1960-களில் அமெரிக்கா எங்கும் Drag racing பெருகிவந்த நேரத்தில், கூடவே இந்த மஸில் கார்களும் பெரும்கவனம் பெற்றன. Drag racing என்பது இரண்டு கார்கள் பங்குகொள்ளும் ஒரு பந்தயம். இரண்டு மஸில் கார்களை, எந்தவித வளைவுகளுமற்ற நேரான பாதையில் பந்தயம் விடுவதே ட்ராக் ரேஸிங்.

 கார்
கார்

Dodge, Plymouth, Chrysler, ford, GM என எல்லா அமெரிக்க பிராண்ட்களும் தங்களுடைய மஸில் கார்களைக் களமிறக்கி ரசிகர்களைச் சுண்டி இழுத்துக் கொண்டிருந்தன. இது போதாதென்று ட்ராக் ரேஸிங், ஸ்ப்ரின்ட் கார் ரேஸிங் போன்றவற்றுக்கும் பிரத்யேகமாக ட்யூனிங் செய்வது மற்றும் சிறப்புப் பாகங்கள் பொருத்தி காரை கஸ்டமைஸ் செய்வது என்றும் பல நிறுவனங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்தன.

குறிப்பாக Mopar என்னும் கம்பெனி ஃபோர்டு மற்றும் கிரைஸ்லர் கம்பெனிகளின் கார்களை கஸ்டமைஸ் செய்தன. Pontiac GTO, 1968 டாட்ஜ் சூப்பர் பீ, 1970 ப்ளைமவுத் டஸ்ட்டர்... இப்படி பல கார்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் எல்லாவற்றிலும் வேகமான மஸில் கார் 1970 AMC ரிபல் `தி மெஷின்'தான். 6.4 லிட்டர் இன்ஜின் கொண்ட இதன் திறன் 340 hp (254 kW). 0–60 mph வேகத்தை 6.8 நொடிகளிலும் கால் மைல் தூரத்தை 14.4 நொடிகளிலும் கடக்கக் கூடியது.

வசீகரமான மஸில் கார் என்று நான் கருதுவது ஃபோர்டு மஸ்டாங். அமெரிக்க எல்லையைத் தாண்டியும் இந்த மஸில் கார் சிறகு விரித்துப் பறக்குமளவுக்கு, இந்த காரின் அழகுக்கு ரசிகர்கள் இருந்தார்கள் .

 கார்
கார்

1970-களுக்குப் பிறகு மஸில் கார் மோகம் மங்கிப் போனது. 2000 ஆண்டுகளில் மீண்டும் வந்த ஃபோர்டு மஸ்டாங்கும், செவர்லேவின் கமெரோவும் மீண்டும் ஓரு ரவுண்டு வந்தன.

அமெரிக்கர்கள் எதையும் பெரிதாகவே எதிர்பார்க்கிறார்கள்; செய்கிறார்கள்; வாங்குகிறார்கள். ஹம்மர் என்னும் ராட்சசனும் அப்படியே! இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தால் ஜீப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பின்னர், அது மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தும் காராக மாறிப்போனது. ஜீப் என்பது ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் என்பது போய், தனித்துவமான வாகனமாக இன்றும் அறியப்படுகிறது. அந்நேரம் அமெரிக்க ராணுவத்தின் தேவைகள் அதிகரித்ததால், ஒரு புதிய ராட்சசன் உதயமானான். நிறைய ராணுவ வீரர்களைச் சுமந்து செல்ல, பாலைவனச் சூழலை எதிர்கொள்ள என பிரமாண்டமான ஒரு ராணுவ வாகனம் தயாரானது.

AM General என்ற ராணுவத் தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம், ஏராளமான பொருட்செலவில் ஹம்வீ (HMMWV - ஹை மொபிலிட்டி மல்டிபர்பஸ் வீல்ட் வெஹிகிள்) என்னும் வாகனத்தை உருவாக்கியது. 1990-களின் வளைகுடாப் போரில், இந்த வாகனத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதை அமெரிக்கா பேரார்வத்துடன் பார்த்தது. ஹம்வீயால் பெரிதும் கவரப்பட்ட அர்னால்டு ஸ்வாஸ்னேகர், ஒரு படத்தில் ஹம்வீயைப் பயன்படுத்த, ஹம்வீ உலகெங்கும் வைரல் ஆனது. அதன்பின் அர்னால்டு, AM General நிறுவனத்திடம் வைத்த வேண்டுகோளின் பேரில் முதல் ஹம்மர் தயாரானது . சாலைகளில் பயணப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 1992-ல் முதல் முதலாக விற்பனைக்கு வந்தது. முதல் ஹம்மர் வாடிக்கையாளர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். இது ஒரு ராணுவ வாகனம் என்பதால், ஹம்மர் H1 என்று அழைக்கப்பட்ட அந்த ராட்சச கார், ஓட்டுவதற்கோ கையாள்வதற்கோ ஏற இறங்கவோ பயணிகள் கார் போல இலகுவாக இல்லை.அளவிலும் மிகப் பெரியதாக இருந்ததால், H1-ன் காரின் தம்பியாக ஹம்மர் H2 வடிவமைக்கப்பட்டது.

இதனிடையில், ஹம்மர் பிராண்டை அமெரிக்காவின் ஆட்டோமொபைல் ஜெயண்ட் GM வாங்கியது. 2000-களின் துவக்கத்தில் பெரிதும் பேசப்பட்டு, அழகாகவும் கவர்ச்சியாகவும் வடிவமைக்கப்பட்ட ஹம்மர் H2, 2002 முதல் விற்பனைக்கு வந்தது. H2 என்னும் க்யூட் SUV, GM கார் டிசைனர்களால் வெளித்தோற்றத்திலும் உள்ளலங்காரத்திலும் பெரிய மாற்றத்துக்கு ஆளானது. H1 போலவே பாக்ஸியான, தட்டையான வடிவம். அளவில் சற்று சிறியது என்றாலும், சாலையில் மற்ற கார்களைவிட பருமனான அளவு. சாலையில் ஹம்மர் H2 சென்றால் யாரும் திரும்பிப் பார்க்காமல் கடக்க முடியாது.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் துவங்கி, அரேபிய ஷேக்குகள் வரை பலரும் இதைப் போட்டி போட்டு வாங்கினார்கள். ஒரு கருப்பு ஹம்மர் எதிர்வந்தால், ஒரு போர் யானையின் நினைவு வரக்கூடும்.

பொருளாதார மந்தநிலையும் பெட்ரோலியப் பொருட்களின் விலையும், அமெரிக்காவை இருமுனைகளில் தாக்கிய ஒரு காலகட்டத்தில், அமெரிக்க மக்கள் ஹம்மரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார்கள். காரணம், ஹம்மரின் மிக மிகக் குறைந்த மைலேஜ். பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹம்மரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. டயர்கள் பஞ்சராக்கப்பட்டன. ஒரு சில ஹம்மர்கள் அப்படியே எரிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன.

GM என்ற அமெரிக்க ஆட்டோமொபைல் ஆலமரம், ஆட்டம் கண்டது. இறுதியில் ஹம்மர் 2010-ல் மூடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சீன நிறுவனம் ஹம்மரை GM இடமிருந்து வாங்க முயற்சித்ததாகவும், அமெரிக்க எல்லையைத் தாண்டி அப்படி ஒரு நிறுவனத்தை அனுப்ப விரும்பாத GM, மீண்டும் ஹம்மரை உயிர்ப்பிக்க முனைவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதில் இம்முறை, ஹம்மர் எலெக்ட்ரிக் காராக அவதாரம் எடுக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

அமெரிக்கர்வில் மஸில் கார்கள் ஒரு கலாசார அடையாளமாக மாறிப் போனதென்றால், ஹம்மர் ஒரு பொருளாதாரப் பாடமாக என்றும் நினைவில் நிற்கும். இதில் வடிவமைப்பு சார்ந்தும் உணர்ந்து கொள்வதற்கு நிறைய உண்டு. டிசைன் என்பது அழகியல், கலையியல் மற்றும் பொறியியல் சார்ந்தது என்பதே பொதுவான கருத்து. டிசைனில் மேற்சொன்னவற்றோடு மக்கள் சார்ந்த அரசியலும் இருக்கிறது என்பது இனி வரும் இளைய வடிவமைப்பாளர்கள் புரிந்து கொள்வது அவசியம்.

அமெரிக்காவில் கார்களைவிட பிக்-அப் ட்ரக்குகளே பெரிதும் வரவேற்பு பெற்றிருக்கின்றன. 2019-ல் அமெரிக்காவில் கார் விற்பனையைவிட பிக்-அப் மற்றும் SUV விற்பனை 3 மடங்கு அதிகம். கோட், டையோடு ஒருவர் அலுவலகத்துக்கு பிக்-அப் ட்ரக்கில் செல்வது நமக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அமெரிக்கர்கள் பிக்-அப் ட்ரக்குகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது ஏன் என்பது ஆராய்ச்சிக்குரிய சங்கதி .

தனிப்பட்ட வரிச்சலுகைகள் பிக்-அப்களுக்கு உண்டு என்பது ஒரு காரணமாக இருக்கலாம் . பரந்த வேறுபட்ட தன்மையுள்ள நிலப்பகுதிகளை உடைய ஒரு நாட்டில் பெரிய சைஸ் மற்றும் ஆஃப்ரோடிங் வசதி ஆகியவை கூடுதல் தகுதிதானே! அமெரிக்காவுக்கு கார் டிசைனைப் பொறுத்தவரை ஒரு தனி வரலாறும் கலாசாரமும் உண்டு. இந்தக் கோணத்தில் டெஸ்லாவின் சைபர் ட்ரக்கைப் புரிந்துகொள்ளவோம்.

(வடிவமைப்போம்)