Published:Updated:

கறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு!

 தொடர்
பிரீமியம் ஸ்டோரி
தொடர்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் #30

கறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் #30

Published:Updated:
 தொடர்
பிரீமியம் ஸ்டோரி
தொடர்
மெரிக்க கார் டிசைன் என்பது, ஒரு திரைப்படத்தின் திரைக்கதையையும் மிஞ்சிவிடும் அளவுக்கு சுவாரஸ்யங்களும், திருப்பங்களும், தடைகளும், துரோகங்களும், காதலும், கவர்ச்சியும் நிறைந்தது. துவக்க காலத்தைய கார்கள், சமூகத்தில் மிகவும் மேல்நிலையில் இருந்த பணக்காரர்களுக்கான வாகனமாக மட்டுமே ஐரோப்பாவில் இருந்து வந்தது.

கார் உற்பத்தி வரலாற்றில் முதன்முதலாக மாஸ் மேனுஃபேக்ச்சரிங் என்ற எல்லோருக்குமான காரை முயற்சி செய்து, அதை வெற்றி கண்டது அமெரிக்கா. இந்த வெற்றிதான், கார் என்பது சாமானியர்களுக்கான வாகனமாகவும் உருவெடுக்கப் பாதை போட்டது.

மாஸ் மேனுஃபேக்ச்சரிங் என்ற உற்பத்தி யுக்தியை அறிமுகப்படுத்திய ஹென்றி ஃபோர்டுக்குச் சற்று முன்பாகவே, அதாவது 1896-ல் DURYEA என்னும் நிறுவனம், ஒரே மாதிரியான 13 கார்களை, ஒரே சமயத்தில் இந்தக் கோட்பாட்டை கடைப்பிடித்து உற்பத்தி செய்தது.

ஆரம்ப காலத்தில் கார் என்பது விஞ்ஞானிகளின் கைக்குழந்தையாகவே இருந்தது. அதனால், தொழில்நுட்பமும் அது சார்ந்த அம்சங்களும் முக்கியத்துவமும் பெற்று வந்தன. பாடி டிசைன், கார் ஸ்டைலிங் போன்றவை அப்போது கார் நிறுவனங்களின், ‘முக்கியம்’ என்கிற பட்டியலிலேயே இல்லை. கார் மட்டுமல்ல, அந்தக் காலத்தின் டைப்ரைட்டர்கள், எலெக்ட்ரிக் சேவிங் மெஷின்கள், தையல் மெஷின்கள், ஏன் ஆகாய விமானம்கூட கிட்டத்தட்ட நேக்கட் அண்ட் ஃபங்ஷனல் என்ற அளவில்தான் இருந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல் உலகப்போரின்போதுதான் கார்கள் கவசம் பெற்றன. ராணுவ வீரர்கள் தாக்குதலிலிருந்து தப்பிக்க பாடி ஒர்க் செய்யப்பட்டது. அதுவே கேபின் போன்ற ஒரு இன்ஜினீயரிங் கவர் வடிவமைக்கத் தூண்டுதலாக அமைந்தது. பாதுகாப்பான இன்டீரியர், பாடி ஸ்டைலிங் போன்றவை பின்னாளில் படிப்படியாக வந்து சேர்ந்தன.

கறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு!

ஐரோப்பாவில், பல வகையான கோச் கட்டும் விற்பன்னர்கள், கார் உற்பத்தி செய்ய முனைப்புக் காட்டினார்கள். அந்தக் காலகட்டத்தில், ஐந்து அடிக்கும் மேலான விட்டத்துடன் முன் சக்கரம் உடைய மிதிவண்டிகளைக்கூட அமெரிக்கா உற்பத்தி செய்து கொண்டிருந்தது. சைக்கிள் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம், கார் உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டத் துவங்கினார்கள்.

ஒரு போக்குவரத்துச் சாதனமாக மட்டும் பார்க்காமல், அதன் அழகு, செயல்பாடு, வேகம் என்று காரின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்கர்கள் ரசிக்கத் துவங்கினார்கள். எத்தனையோ கண்டுபிடிப்புகள் அந்தக் காலத்தில் வந்து கொண்டிருந் தாலும் கூட அவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, காரின் மீதுதான் பெரும்பாலான அமெரிக்கர்களின் கவனமும் குவிந்தது. 1950-களில் அமெரிக்க மக்கள் தொகையில் ஆறில் ஒருவர், ஆட்டோமொபைல் துறை சார்ந்து, நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டு இருந்தார்கள்.

கார் என்பதை ஒரு பொருளாகப் பார்க்காமல், அதைத் தங்களின் வாழ்வோடு கலந்த உணர்வுப் பூர்வமான அம்சமாக, உலகெங்கிலுமுள்ள மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். Status, Power, Fun, Glamour, Freedom போன்ற வார்த்தைகளின் அர்த்தங்களாக கார் வேகமாக மாறத்துவங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து இன்றுவரை போர், சுனாமி, வறட்சி, பஞ்சம், புயல், பெருந்தொற்று என்று ஏதாவதொரு பூதம் தோன்றி நம்மைப் பின்நோக்கி இழுத்தாலும்... ஒவ்வொரு அனுபவமும் நமக்குப் பலப் பல அரிய அனுபவங்களைத்தான் கொடையாகக் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றன. ஆட்டோமொபைல் துறைக்கு முதல் உலகப்போர் அளித்த கொடை ஏராளம். அசெம்பிளி உத்திகளும், சிக்கலான மெக்கானிக்கல் நடைமுறைகளும் பெருமளவில் எளிமைப்படுத்தப்பட்டது போர்க்காலத்தில் ஏற்பட்ட தேவைகள்தான். பாடி டிசைன் என்கிற ஸ்டைலிங் முக்கியத்துவம் பெற ஆரம்பித்ததும் போர்க் காலத்தில்தான்.

கறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு!

ஆம், 93 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1927-ம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில்தான் ஜெனரல் மோட்டார்ஸ் தனது அதிகாரப்பூர்வமாக GM டிசைன் ஸ்டுடியோவைத் துவங்கியது.

அதுவரை மெக்கானிக்கல் இன்ஜினீயர்களின் அறிவியல் மூளையாலும், கால்குலேடிவ் கண்களாலும் மட்டும் கட்டமைக்கப்பட்டு வந்த bodywork, கலா ரசனையும் கற்பனைத் திறனும் கொண்ட டிசைனர்களின் கைவண்ணத்தாலும் அழகு பெற ஆரம்பித்தது. அன்று துவங்கிய இந்த நல்ல விஷயம், இன்றுவரை தொடர்கிறது.

GM-ன் கார் டிசைன் வரலாற்றைப் புரிந்து கொண்டால், ஒட்டுமொத்த அமெரிக்க கார் டிசைன் வரலாற்றையும் புரிந்து கொண்டுவிடலாம். GM, உலகத்திலேயே நம்பர் ஒன் கார் கம்பெனியாக பலவருடங்கள் கோலோச்சியது. சமீபகாலங்களில் டொயோட்டா அந்த இடத்தைத் தட்டிச் சென்றது. இத்தனைக்கும் கார் மேக்கிங் என்னும் உத்தியை, டொயோட்டா - ஜெனரல் மோட்டார்ஸிடம் இருந்தே கற்றது.

General Motors, Ford Motor Company, மற்றும் Fiat Chrysler Automobiles ஆகிய இம்மூன்று கம்பெனிகளையும் `BIG THREES’ என்று அமெரிக்காவில் குறிப்பிடுவார்கள். அவற்றில் GM மட்டுமே, கிட்டத்தட்ட 19 கார் பிராண்டுகளைத் தன்னகத்தே வைத்திருந்தது. ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா என உலகெங்கிலும் பல கம்பெனிகளை வாங்கிப் போட்டு வைத்திருந்தாலும், GM என்ற பிராண்டில் ஒரு கார்கூடப் பார்க்க முடியாது.

கறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு!

அமெரிக்காவில் GMC, ஷெவர்லே, ஓல்டஸ் மொபைல், ஐரோப்பாவில் ஓபல், வாக்ஸஹால், ஜப்பானில் இசுஸூ, ஆஸ்திரேலியாவில் ஹோல்டன் என GM ஒரு காலத்தில் `ஓஹோ’ என்று கொடிகட்டிப் பறந்தது. இன்று அதற்கு நேரெதிராக நொடித்துப் போனாலும், கார் டிசைன் உலகத்தில், அது நாட்டிய கல்வெட்டுக்கள் என்றென்றும் நிலைத்து இருக்கும்.

Harley Earl, தன் 34 வயதில் டிசைன் துறைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். சிறுவயதில் பெரும் பொறுப்பை அவர் ஏற்க காரணமாக அமைந்தது, 1927 LaSalle என்னும் கொள்ளை அழகான கார். அக்காலத்தில் ford நிறுவனத்திற்குச் சரியான பதிலடியாக இருந்த கலர்புல் வாகனம் அது.

டிசைன் டிப்பார்ட்மென்ட்டை அறிமுகப்படுத்தும்போது GM வெளியிட்ட வாசகம் என்ன தெரியுமா? “study the question of art and color combinations in General Motors products...”அதே காலகட்டத்தில் ஃபோர்டின் கார்கள், பெரும்பாலும் கருப்பு நிறத்திலேயே வெளிவந்தன. அதைப் பற்றி ஹென்றி போர்டு, “நீங்கள் எந்தக் கலரை விரும்புகிறீர்களோ, அந்தக் கலரில் காரைத் தருகிறோம்; அது கறுப்பு நிறமாக இருக்கும்வரை!” என்கிறார். [“the customer can have it any color he wants as long as it is black”].

கறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு!

இந்தக் கறுப்பு மோகத்தைத் தாண்டி கார்களைக் கொண்டு சென்றவர் ஹார்லி. `கான்செப்ட் கார்’ என்ற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியதே ஹார்லிதான். ஃபேஸ் லிஃப்ட் என்ற ஐடியாவைக் கொண்டு வந்தவரும் அவர்தான்.

1950-களில் tailfins-களுடன் கூடிய கார்களை அறிமுகப்படுத்தியது... அமெரிக்காவின் கார் டிசைன் பெருமைகளுள் ஒன்றான corvette என்னும் ஸ்போர்ட்ஸ் கார்... எல்லாவற்றுக்குக்கும் சிகரம் வைத்தாற்போல முதன்முதலில் வடிவமைப்புத் துறைக்குப் பெண்களைப் பணியமர்த்தியது என இவர் டிசைன் உலகில் போட்ட `முதல்’ ஏராளம்.

இன்று கான்செப்ட் கார்களுக்கென்றே பிரத்யேகமான டிசைன் ஸ்டுடியோக்களும், ஸ்பெஷலான வடிவமைப்பாளர்களும், அவற்றை ரசிப்பதற்கென்றே தனியான ரசிகர் பட்டாளமும் உண்டு. இப்போது ஆண்டுக்கு ஒருமுறை ஹோண்டா சிட்டி போன்ற கார்கள் புது அவதாரம் எடுத்து வாடிக்கயாளர்களைத் திக்குமுக்காட வைப்பதை எல்லாம் அப்போதே முயன்றிருக்கிறார்.

கறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு!

இதைப்போல பற்பல சாதனைகளை, முன்னெடுப்புகளை அமெரிக்காவின் GM முன்னெடுத்தாலும், அத்தனைக்கும் சிகரமாக உலகின் பல பகுதிகளிலும் இருந்து வல்லுநர்களை அழைத்து வந்து, கார் டிசைன் மட்டுமின்றி மிகத் துல்லியமான, நேர்த்தியான கார் தயாரிப்பு முறைகளையும் பயிற்றுவித்தது அமெரிக்கா. குறிப்பாக GM . ஜப்பானின் டொயோட்டா உள்ளிட்ட பல கம்பெனிகள் நேரடியாக டெட்ராய்டுக்கு வரவழைக்கப்பட்டு, தொழில் நுட்பங்களைக் கற்பித்தது. உலகெங்கிலும் 10 டிசைன் சென்டர்கள் இன்றும் பரபரப்பாக இயங்கிக்கொண்டி ருப்பது GM டிசைன் சென்டரின் சிறப்பு.

தற்பொழுது ஜெனரல் மோட்டார்ஸின் அகில உலக டிசைன் தலைவராக எட் வெல்பர்ன் (Ed Welburn) பொறுப்பில் இருக்கிறார். ஆட்டோமொபைல் டிசைனர்களால் பெருமரியாதையாகப் பார்க்கப்படும் வெல்பர்ன், ஒரு நிகரற்ற டிசைன் லீடர் மட்டுமின்றி ஒரு மாபெரும் நிர்வாகி. நிறைய இந்திய இளைஞர்கள் கார் டிசைன் துறையில் கால் பதிக்கக் காரணமான இவர், கறுப்பின அமெரிக்கர். இந்தியாவில், பெங்களூருவில் GM-ன் பிரத்தியேக இந்திய டிசைன் சென்டர் அமைந்ததும் இவரால்தான். இன பேதம், தேச பேதம், நிற பேதம் மற்றும் பால் பேதம் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும் என்று ஏட்டளவில் மட்டுமின்றி, நடைமுறையிலும் உறுதியாகக் கடைப்பிடிக்கும் நியதியை GM-ன் அனைத்து டிசைன் சென்டர்களிலும் பார்க்க முடியும். அப்படி ஏதும் சிறு தவறு நடந்தாலும், எவ்வித பாரபட்சமும் இன்றி பணி இழக்க நேரிடும்.

அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸின் பங்களிப்பு உலகளாவியது என்றாலும், பின்னாட்களில் அமெரிக்காவிடம் இருந்தே பாடம் கற்றுக்கொண்டு, அமெரிக்க மண்ணிலேயே அமெரிக்க நிறுவனங்களை வீழ்த்துமளவுக்கு ஜப்பானிய ஹோண்டாவும் டொயோட்டாவும் வளர்ந்து எழுந்தது வரலாறு.

(வடிவமைப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism