Published:Updated:

ஸ்கேட்போர்டும் கார் ஆகும்!

ஜிஎம் ஸ்கேட்போர்டு
பிரீமியம் ஸ்டோரி
ஜிஎம் ஸ்கேட்போர்டு

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 39

ஸ்கேட்போர்டும் கார் ஆகும்!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 39

Published:Updated:
ஜிஎம் ஸ்கேட்போர்டு
பிரீமியம் ஸ்டோரி
ஜிஎம் ஸ்கேட்போர்டு
ந்தியா என்கிற நாட்டை வடிவமைப்பின் பின்னணியோடு நோக்கும்போது, ஆட்டோமொபைல் துறையில் வளர்ந்து வருகிற எந்த ஒரு நாட்டிலும் இல்லாத பெரிய மார்க்கெட் இங்கு உருவாகி வருவது தெளிவாகத் தெரிகிறது. மருத்துவம் உள்ளிட்ட பல துறைகள் புதிய வடிவம் எடுப்பது தவிர்க்க முடியாத சூழலில், ஆட்டோமொபைல் துறை தன் 100-வது ஆண்டு காலப் பயணத்தில் அடுத்த கட்டத்தை எட்டவிருக்கிறது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு குறிப்பிட்ட பேருந்தை மிஸ் பண்ணியவர்கள், உடனே மெட்ரோவில் ஏறி தாம்பரத்தை விரைவாக அடைந்து, அந்தப் பேருந்தைப் பிடித்துவிட வாய்ப்பு இருக்கிறது . அதைப்போல டிசைன் என்னும் இந்தப் பேருந்தைத் தவறாமல் பிடித்து விட வேண்டும். இன்று நாம் ஆட்டோமொபைல் வடிவமைப்பு சார்ந்து எடுக்கிற முடிவுகள், மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். முன் நிகழ்ந்த குறைகளைச் சரிசெய்ய இது மிகச் சரியான தருணம். இதைப் பற்றிப் பேசுவதற்கு அதிகம் ஆளில்லாத காரணத்தால், அந்த உரிமையை நான் எடுத்துக் கொள்வது சரி என்றே படுகிறது.

ஸ்கேட்போர்டும் கார் ஆகும்!

முதலில் டிசைன் என்றால் என்ன? தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளல் தான் வடிவமைப்பு என்று பலமுறை பதிவு செய்து வருகிறோம். இப்போது கொரோனா அச்சுறுத்தல், `பர்சனல் மொபிலிட்டி’ என்ற சொல்லையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. நாம் எதற்காக ஓர் இடத்திலிருந்து காரை எடுத்துக் கொண்டு மற்றோர் இடத்துக்கு நகர்கிறோம் என்ற கேள்விக்கு வரும் விடை, பல சிக்கல்களை எளிமையாக்கிவிடக் கூடும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு வீடு வாங்குவதற்குக் குடும்பத்தோடு 50 கிமீ தொலைவில் உள்ள ஊருக்குச் செல்வதாகக் கொள்வோம். சென்னையில் அம்பத்தூரில் இருந்து கேளம்பாக்கம் 50 கிமீ தொலைவு. பகல் நேரத்தில் போவதற்குக் குறைந்தது ஒன்றரை மணிநேரம் பிடிக்கும். ஆக, ஒரு வீட்டைப் பார்த்து வருவதற்கு 3 மணிநேரப் பயணம். 1 மணி நேரம் வீடு பார்க்க, விலை பேச... வழியில் உணவு சாப்பிட மேலும் ஒருமணி நேரம் என ஒரு பகல் பொழுதே கழியும். இப்படி ஓர் இடத்துக்குப் பல இடம் அலைந்து போய்ப் பார்த்தால்தான் மனத்துக்குப் பிடித்த வீடு அமையும். இப்படி எத்தனை நாள் அத்தனை பேரும் மொத்தமாகக் கிளம்ப முடியும்? இதற்குப் பதிலாக வீட்டில் இருந்தபடியே உங்கள் டிவியில் உங்களுக்குத் தேவையான பட்ஜெட்டுக்குள் வரும் பல வீடுகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் உங்கள் உள்ளங்கையில் வந்து சேர்ந்தால்?

ஜிஎம் ஸ்கேட்போர்டு
ஜிஎம் ஸ்கேட்போர்டு

ஒரு வீட்டோடு இன்னொன்றை ஒப்பிட்டுப் பார்த்து, பிடித்த வீட்டை வீட்டிலிருந்தே முடிவு செய்யலாம். நேர விரயம் மிச்சம்; அலைச்சல் மிச்சம்; செலவு மிச்சம். போக்குவரத்து நெரிசலில் இருந்து ஒரு கார் குறையும். இப்படிப் பல நன்மைகள் உண்டு. நேரில் சென்று பார்க்கிற அனுபவம் வேறுதான். ஆனாலும், இருக்கிற இடத்திலேயே டிஜிட்டலாக அனுபவத்தை உண்டாக்கி, ஒரு சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண்பதும் நம் கையில்தான் இருக்கிறது.

ஆனால், இதுவே நீங்கள் காரை எடுத்துக் கொண்டு, உல்லாசமாக குற்றாலம் சென்று குளிப்பதாக இருந்தால், கண்டிப்பாகக் கிளம்பி விடுங்கள். தேவை வேறு; கொண்டாட்டம் வேறு. குற்றாலக் குளியலை வீட்டில் உட்கார்ந்து விர்ச்சுவலாக எப்படி அனுபவிக்க முடியும்? மேற்சொன்ன இரண்டு சம்பவங்களிலும் அனுபவம் என்ற ஒன்றே முதன்மையான காரணமாக இருக்கிறது.

ஹினோ ஸ்கேட்போர்டு
ஹினோ ஸ்கேட்போர்டு

இனி ஸ்டைலிங் என்பது முதன்மையல்ல; டிசைன் என்ற சொல் முதன்மையல்ல; ஆனால் இவை இரண்டையும் உள்ளடக்கி எக்ஸ்பீரியன்ஸ் என்பதே வடிவமைப்பைக் குறிக்கும் சொல்லாக்கமாக இருக்கும். அதை UX /UI என்கிறார்கள். யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் யூசர் இன்டர்பேஸ் என்று குறிப்பிடுகிறார்கள். இதனால் கார் உள்ளிட்ட பல வாகனங்களின் உருவங்கள் மாறலாம். மனித அனுபவத்துக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுத்து இதர தனித்துவ லக்ஸுரிகள் பின்னுக்குத் தள்ளப்படலாம். சுருக்கமாகச் சொல்வதானால், வடிவமைப்புத் துறையில் மக்களாட்சி மலரப் போகிறது.

இந்தியருக்கும் இத்தாலியருக்கும் அரசியல், பொருளாதார, கலாசார அடிப்படையில் பல வேறுபாடுகள் உண்டு. எத்தனை வேறுபாடுகள் இருந்தும் அங்கும் இங்கும் ஒரே கார்... ஏன்? நமக்கான தேவைகள் வேறாக இருக்கும் போதும், அதற்கேற்ற அனுபவப் பீடமாக காரை வடிவமைக்க வேண்டி யிருக்கிறது.

எலெக்ட்ரிக் காருக்கான ஸ்கேட்போர்டு சேஸி
எலெக்ட்ரிக் காருக்கான ஸ்கேட்போர்டு சேஸி

இதை மேலும் சரியாகப் புரிந்து கொள்ள ஆட்டோமொபைல் துறையில் இப்போது பாப்பரப்பாகப் பேசப்படும் 3 ஸ்டார்ட் அப்களைப் பற்றித் தெரிந்து கொள்வது உதவும்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த REE என்னும் புதிய நிறுவனம் - உலகின் முதல் மாடுலர், ஸ்கேலபிள், எலெக்ட்ரிக் ஸ்கேட் போர்டு சேஸியை 2019-ல் ஜெர்மனி ஃப்ராங்க்ஃபர்ட் மோட்டர் ஷோவில் அறிமுகப்படுத்திய போது, ஓர் எலெக்ட்ரிஃபையிங் வரவேற்பை உலகம் தந்தது. பெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான்களுக்கெல்லாம் அதிர்ச்சியைத் தந்தது ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தின் சேஸி.

குழந்தைகள் விளையாடும் ஸ்கேட் போர்டுதான் இதன் அடிப்படையில் உள்ள இன்ஸ்பிரேஷன். தாழ்வான, தட்டையான நீண்ட பலகையின் நான்கு முனைகளிலும் வீல்களைப் பொருத்திய ஒரு மிக மிக எளிமையான கட்டுமானமே இந்த ஸ்கேட் போர்டு. எலெக்ட்ரிக் கார்களில் தலைவலியாக இருப்பதே பேட்டரிகளும், எலெக்ட்ரிக் மோட்டாரின் எடையும்தான். ஆனால், இந்த கான்செப்ட்டில் பேட்டரிகளை லாவகமாக பலகையின் தளத்துக்கு அடியில் அடுக்கி வைத்திருந்தார்கள். நான்கு வீல்களிலும் மோட்டார், இவற்றுக்கு ஈடு கொடுப்பதைப்போல மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் நான்கு சக்கரங்களிலும்.

இதில் கவர்ச்சியான விஷயம் என்னவென் றால், உங்கள் எண்ணம்போல உங்களுக்குத் தேவையான வாகனத்தை நீங்கள் இதன் மேல் வடிவமைத்துக் கொள்ளலாம். மாடுலர் என்பது அதோடு மட்டுமல்ல; சேஸியின் நீள அகலங்களையும் நம் இஷ்டம் போல மாற்றிக்கொள்ளலாம். பேட்டரிகளைப் பொருத்து வாகனத்தின் திறனைக் கூட்ட - குறைக்கச் செய்யலாம். வெளியே எளிமையாகத் தெரியும் இது, உள்ளே ஃப்யூச்சரிஸ்டிக்கான வேறு லெவல் தொழில்நுட்பம்.

இந்த கான்செப்ட் அறிமுகப்படுத் தப்பட்ட வெகு குறுகிய காலத்தில் REE-யோடு கைகோர்க்க, முதலீட்டில் பங்கு கொள்ள பல ஜாம்பவான்கள் முன்னுக்கு வந்தார்கள். மிட்சுபிஷி, ஹினோ போன்றவை அவற்றுள் சில.

குறிப்பாக, ஹினோ உடனடியாக இந்த ஸ்கேட் போர்டு டெக்னாலஜி யைப் பற்றிக் கொண்டு, அதன் அடிப்படையில் பல்வேறு கான்செப்ட் வாகனங்களை 2019-ல் அறிமுகப்படுத்தியது. அப்படி உலகெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த ஸ்கேட் போர்டு கம்பெனி, ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் என்பதை மறந்துவிடக் கூடாது. REE நிறுவனத்தின் தலைவர் டேனியல் பேரல், REE corner என்னும் இந்த சேஸியை மாஸ் மேனுஃபேக்ச்சரிங் செய்யத் தேவையான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதில் கூடுதலான செய்தி, இந்தியாவிலிருந்து மஹிந்திரா இவர்களோடு கைகோக்கிறது என்பதுதான். 2023-ல் இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள முயற்சிகள் நடக்கின்றன. corona தாமதப்படுத்தினால், 2025-ல் இங்கு இது சாத்தியமாகலாம்.

ஆனால், லோ ஃப்ளோர் ஸ்கேட் போர்டு இந்தியச் சாலைகளை எதிர்கொள்ளுமா? இந்தியச் சாலைகளுக்காக மாற்றியமைக்கப் படுமா? இந்தியச் சாலைகளை இஸ்ரேலிய வல்லுநர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களா? அல்லது இந்தியச் சாலைகள் முறையாக வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்படுமா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில்களைப் பற்றியெல்லாம் கவலையேபடாமல், காலம் ஸ்கேட் போர்ட்டில் ஏறிப் பறக்க ஆரம்பித்து விட்டது.

இப்படிப்பட்ட ஸ்கேட் போர்டுகளை, சிறிய ஸ்டார்ட் அப்கள்கூட செய்து காட்டிவிட முடியும் என்பது பெரும்நம்பிக்கையை அளிக்கிறது. இன்ஜினீயரிங் படித்து வேலை தேடுபவர்கள் முயற்சிக்கலாம். Micro manufacturing என்னும் புதிய உத்தி, நூறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தி வந்த ராட்சச வாகன உற்பத்திக் கோட்டைகளைத் தகர்க்கிற ஆற்றல் கொண்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்திச் சாலைகள் முளைத்து எழுந்தால், வேலை வாய்ப்புகளும் கிளைத்து வளரலாம்.

டெஸ்லாவின் எலான் மஸ்க், முன்பு அறிமுகப்படுத்திய சைபர் ட்ரக் ஏற்படுத்திய அதிர்வலைகளைப் பற்றித் தெரியும். அவர், தற்போது இங்கிருந்து நியூயார்க்குக்கு 49 நிமிடங்களில் பயணிப்பதற்கு ராக்கெட் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எல்லா வழக்கமான உற்பத்தி முறைகளையும் தூக்கித் தூர எறிந்துவிட்டு, ஒரு ஃப்ளாட்டான வடிவத்தில் அவர் செய்த பரிசோதனை முயற்சியிலிருந்து பின் வந்தாலும், அவரின் இந்தத் தட்டையான நீண்ட வடிவத்தைப் பின்பற்றி ஒரு முற்றிலும் புதிய கனவு விரிகிறது. அது அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஆட்டோமொபைல் கொண்டாட்டம் என்றே சொல்லலாம்.

(வடிவமைப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism