கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

ஜெர்மன் கோட்டைக்குள் கொரியா!

நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 34

சியோல் மோட்டார் ஷோவில் பிஎம்டபிள்யூ, தனது ‘ஐ விஷன்’ டைனமிக்ஸ் கான்செப்ட்டைக் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த ‘ஐ விஷன்’ என்கிற கான்செப்ட் டிசைன் பின்னணியில் இருந்தது ஓர் இளம் டிசைனரான லிம் சியங் மொ (Lim Seung-mo). பிஎம்டபிள்யூவின் டிசைன் ஸ்டூடியோ வடிவமைத்த, ‘ஐ விஷன்’ டைனமிக்ஸ் கான்செப்ட்டின் முன்னணி டிசைனர் அவர்.

மற்றுமொரு கொரிய BMW designer கிம் நூ-ரி (Kim Nu-ry). இவர் 3 சீரிஸ் காரின் இன்ட்டிரீயர் டிசைனர். இப்படி இவர்கள் டிசைனராகப் பணியாற்றிய கார்களை மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்துவது அவர்களைப் பொறுத்தவரை ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்வு . இவர்களைப் போலவே, பல கொரிய டிசைனர்கள், கொரியாவின் எல்லைகளையும் தாண்டி உலக முன்னணி டிசைன் ஸ்டுடியோக்களில் பணியாற்றுகிறார்கள். ஆசியாவைச் சேர்ந்தவர்கள் நுழைய முடியாத கோட்டையாக இருந்த ஜெர்மனியின் ஸ்டைலிங் ஸ்டுடியோக்களுக்குள், ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக கொரிய வடிவமைப்பாளர்கள் மாறியிருக்கிறார்கள். இன்று ஆட்டோமொபைல் தாண்டி, எலெக்ட்ரானிக் துறையிலும், K-Pop வாயிலாக என்ட்டர்டெயின்மென்ட் துறையிலும்கூட கொரியர்கள் உலகமெங்கும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிடிக்க வேண்டிய பஸ்ஸை சரியான நேரத்தில் பிடித்துவிட்டார்கள் .

ஜெர்மன் கோட்டைக்குள் கொரியா!

நிலப்பரப்பில் தமிழ்நாட்டைவிடவும் சிறியது தென்கொரியா. எனினும் முன்னேறிய நாடுகளின் வரிசையில் அது ஜம்மென்று சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறது. இந்தியக் குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் 2010 அமெரிக்க டாலர்கள். அதாவது சுமார் 1,47,000 இந்திய ரூபாய். அதுவே, கொரியாவைச் சேர்ந்த ஒரு குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் 33,320 அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் 24,26,229 ரூபாய். அதாவது ஜப்பானையே எட்டிப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது தென்கொரியா. இந்தச் சாதனையை அது முப்பதே ஆண்டுகளில் நிகழ்த்தி இருக்கிறது. இந்த அசுர வளர்ச்சியின் ஆதாரமாக இருப்பது ஆட்டோமொபைல் துறைதான். கூடவே எலெக்ட்ரானிக் சார்ந்த வீட்டு உபயோகச் சாதனஙகள். கொரியா ஒரு சிறிய நாடு என்பதால், வெளி நாடுகளுடனான வர்த்தகத்தையே பெரிதும் நம்பி இருக்கிறது. அதனால், ஏற்றுமதியைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்து வர்த்தகத்தில் கொரிய நிறுவனங்களே உலக அளவில் இன்று முன்னணியில் இருக்கின்றன .

கொரியாவின் வர்த்தக வரலாற்றை ஹூண்டாய், கியா, சாம்சங் மற்றும் LG ஆகிய ஒரு சில நிறுவனங்களின் வரலாற்றைக் கொண்டே அணுக முடியும். அந்நாட்டின் கிரியேட்டிவிட்டி மற்றும் இனோவேஷன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அணுகுவது மேலும் சுலபம் என்கின்றன, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரைகள். ஆம், டிசைன் என்னும் ஆயுதத்தைக் கொண்டே உலக வர்த்தகத்தை கொரியா வென்றெடுத்தது.

இந்தக் கருத்துக்கு வலிமை சேர்க்க, நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எடுத்துக் கொள்வேன். ஒன்று ஹூண்டாய் என்னும் நிறுவனத்தின் எழுச்சி; இரண்டு சாம்சங் என்ற நிறுவனத்தின் வியூகங்கள்.

ஜெர்மன் கோட்டைக்குள் கொரியா!

வடிவமைப்பு என்பது அறிவையும், அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் மக்களிடம் எளிமையாக, அழகாகக் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதற்கு உதாரணம் - தென்கொரியா. அழகியல், அறிவியலுக்குத் துணை செய்கிறதா இல்லை, அறிவியல் அழகியல் என்கிற டிசைனுக்குத் துணை செய்கிறதா என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால் தொழில்நுட்பம் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியமானது பயன்பாடு என்பதுதான் உண்மை.

`How Samsung Became a Design Powerhouse?’ `சாம்சங், வடிவமைப்பின் ஆற்றல் மையமானது எப்படி?’ என்ற தலைப்பே பல கதைகளைச் சொல்கிறது. பொதுவாக சாம்சங் என்பது டிவி மற்றும் செல்போன் தயாரிக்கும் நிறுவனம்தானே? அப்படியானால் `எலெக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்களின் வார்த்தகத்தில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பெற்றது எப்படி?’ என்றுதானே தலைப்பு இருக்க வேண்டும்? மாறாக, ஹார்வார்ட் கட்டுரைத் தலைப்பு, Design Powerhouse என்று சொல்வதன் பின்னணியில் இருக்கும் செய்தி என்ன?

Hyundai Motor Company: Design Takes the Driver’s Seat - ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கட்டுரையின் அடுத்த தலைப்பு இது!

உலகின் டாப் ஆட்டோமொபைல் கம்பெனிகளின் வரிசையில் 5-வது இடத்தை, ஹூண்டாய் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மூன்றே பிராண்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு இந்தச் சாதனை. (ஹூண்டாய், கியா, ஜெனிசிஸ் ) முதலிடம் பிடித்த VW குரூப்பில் 12 பிராண்ட்கள் உள்ளன. ஃபோக்ஸ்வாகன் தயாரிப்பது ஆண்டுக்கு 108 லட்சம் வாகனங்கள் என்றால், ஹூண்டாய் வெறும் 3 பிராண்டுகளோடு, 75 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கிறது.

ஜெர்மன் கோட்டைக்குள் கொரியா!

கொரியாவின் சாதனைக்கு - ஹார்வார்ட், டிசைனை ஏன் காரணமாகச் சொல்கிறது.?

60-களின் இறுதிவரை கொரியா ஒரு வளர்ச்சியடையும் நாடு என்றே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. 1971 இறுதியில் அந்த நாட்டில் பதிவாகியிருந்த மொத்த கார்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சம் மட்டுமே! கார் என்பது அப்போது, கொரிய நாட்டின் ஒரு சராசரிக் குடிமகனின் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது . 1971-ல் கொரியாவின் ஜிடிபி பர் காப்பிட்டா, 300 அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,250 தான். (அப்போது ஓர் அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ஏழு ரூபாய் ஐம்பது காசு.)

கார் உற்பத்தி ஒரு நாளில் நிகழ்ந்து விடாது. ஆனாலும், கொரியன் அரசு 60-களின் இறுதியில் வெளிநாட்டு கார் நிறுவனங்களை முற்றிலுமாகத் தடை செய்ததது. உள்நாடுகளில் உள்ள சிறு சிறு நிறுவனங்களை ஒன்றிணத்து ஆட்டோமொபைல் தொழில் வளர ஊக்குவித்தது. அந்தச் சமயத்தில் கொரியாவில் 3 பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முளைத்து எழுந்தன. முதலில் கியா (kia), இரண்டாவது தேவூ (Daewoo), மூன்றாவதாகத்தான் ஹூண்டாய்.

அப்போது போர்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு, கொரியாவிலிருந்து டெக்னீஷியன்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு பயிற்சி பெற்று திரும்பிவந்து, கார் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டார்கள். ஃபோர்டின் உதவியுடன் கொரிய மண்ணில் 1968-ல் cortina எனும் மாடல் உருவானது.

லிம் சியங் மொ
லிம் சியங் மொ

1969-ல் ஃபோர்டு, ஹூண்டாயுடனான ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்தது. கொரியாவில் கொரியர்களால் கொரியர்களுக்கான கார் தயாரிக்க வேண்டிய நிர்பந்தம் ஹூண்டாய்க்கு நேர்ந்தது. அமெரிக்கர்களிடம் தொழில்நுட்பம் கற்றுக் கொண்டிருந்த கொரியன் இன்ஜினீயர்கள் கையைப் பிசைந்துகொண்டு நின்றார்கள், ஸ்டைலிங் அண்ட் டிசைன் எப்படிச் செய்வது என்று?

அந்த நேரத்தில் மிட்சுபிஷி உதவியுடன், பவர் டிரெயின் மற்றும் சேஸி தயாரானது. ஆனால், ஸ்டைலிங்குக்குக் கைகொடுத்தது இத்தாலி ஜியோஜியாரோவின் இட்டால் டிசைன்தான். கொரியாவிலிருந்து 5 இன்ஜினீயர்கள் இத்தாலிக்குச் சென்று இட்டால் டிசைனில் product development கற்றார்கள். ஒருவழியாக வெற்றிகரமாக கொரியாவின் முதல் காராக, ஹூண்டாய் PONY - 1974-ல் ஒரு ப்ரோட்டோடைப் கான்செப்ட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்று, வானளாவிய பெரியதும் சிறியதுமான இரட்டைக் கோபுரங்களைத் தலைமையகமாகக் கொண்ட கியா மற்றும் ஹூண்டாயின் கட்டடங்களுக்கு மிக அருகில்தான் `Gyeongbu Expressway’ எனும் பெருநெடுஞ்சாலை இருக்கிறது. இது தலைநகர் சியோலையும், நாட்டின் பெரிய துறைமுகமான பூசனையும் இணைக்கும் சாலை.

60-களில் கொரியா, பொருளாதாரத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த காலத்தில் இந்தச் சாலை நிர்மாணிக்கப்பட்டது. அந்நாட்களில் கொரியாவின் மொத்த பட்ஜெட்டில் 10 சதவிகிதத்தைச் செலவிட்டு நிர்மாணிக்கப்பட்டது இந்தச் சாலை என்கிறார்கள்.

மிகுந்த தொலைநோக்குடன், பின்னாட்களில் வர்த்தக ஏற்றுமதியைச் சாத்தியமாக்கும் நோக்கத்தோடு ராணுவக் கட்டுமானப் பொறியாளர்களால் உலகத்தரத்தில் கட்டப்பட்ட இந்தச் சாலையில்தான் இன்று வரை வாகனங்களும், மின்னியல் சாதனங்களும் கொரியாவிலிருந்து உலக நாடுகளுக்குக் கப்பல் கப்பலாக ஏற்றி அனுப்பப்படுகின்றன என்பது கொரியர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்.

(வடிவமைப்போம்)