Published:Updated:

காரின் அழகு கலரில் தெரியும்!

car
பிரீமியம் ஸ்டோரி
car

தொடர்: 21- நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்

காரின் அழகு கலரில் தெரியும்!

தொடர்: 21- நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்

Published:Updated:
car
பிரீமியம் ஸ்டோரி
car

CMT என்றும், CMF என்றும் பரவலாகக் குறிப்பிடப்படும் துறை, வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. C என்பது colour, M - Material, T - Texture, F - Finish.

ஒரு மகிழ்ச்சியான விஷயம் - CMF டிசைனர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான்.

CMT / CMF என்பது Exterior, Interior Design-ல் பல முக்கியமான இறுதி முடிவுகள் எடுக்கும் உச்சக்கட்டம். காரின் வெளிப்புறத் தோற்றத்தில் பெரும் விவாதங்களுக்கு உள்ளாவது இந்த வண்ண வரிசைதான். திருமணத்துக்குப் புடவையை, அதன் கலரைத் தேர்ந்தெடுப்பதுபோல்தான் இந்தக் காரியமும்.

முதலில் கலர், பின்பு என்ன மெட்டீரியல்.. அதாவது பட்டா, பருத்தியா? மூன்றாவது - டெக்‌ஷர். அதாவது நூலின் தரம் மற்றும் ஜரிகை என இம்மூன்றையும் CMT-யோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். கல்யாணப் புடவையிலேயே ஒரு தீர்மானத்துக்கு வருவதற்குள் எத்தனை குழப்பங்கள்?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
காரின் அழகு கலரில் தெரியும்!

கலர் முடிவுகள் - மூன்று காரணிகளை உள்ளடக்கியது. முதலில் User, அதாவது வாடிக்கையாளரின் பின் இயங்கும் உளவியல்; அடுத்து அந்த `Brand’ எனும் நிறுவனத்தின் பின்புலம்; மூன்றாவதாக எதிர்வரும் ட்ரெண்டைச் சரியாகக் கணித்தல்.

ஓர் இளம் விளையாட்டு வீரனின் முதல் காருக்கும், ஒரு மிகப் பெரிய நிறுவன அதிபரின் பத்தாவது சொகுசுக் காருக்குமான கலர் தேடல்கள் முற்றிலும் வேறுபட்டே இருக்கும். ஏனென்றால், இருவருமே பல்வேறு விதங்களில் முற்றிலும் வேறுபட்டவர்கள். வெற்றி நோக்கிய இலக்குகளை இருவேறு கலர்களில் அவர்கள் வெளிக்காட்ட விழைவார்கள். இதைச் சாத்தியப்படுத்துவது CMF டிசைனர்களின் பொறுப்பு.

தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த அந்தக் காடுதான், அந்த ப்ரீமியம் காரின் கலருக்கான இன்ஸ்பிரேஷன்!

காரின் வெளிப்புற கலர் பெயின்ட்டைப் பொறுத்தவரை பொதுவாக நான்கு வகைகள் உண்டு.

1. SOLID PAINT

இது ஒரே அப்ளிகேஷன். ப்ளைன் ஆக இருக்கும். பழைய Premier கார்கள், ட்ரக்குகளில் இந்த Solid பெயின்ட்டையே அடிக்கிறார்கள்.

2. மெட்டாலிக்

ஜொலி ஜொலிக்கும் வகையைச் சேர்ந்தது இந்த மெட்டாலிக். பெரும்பாலும் அலுமினியம் போன்ற உலோகம் இதில் கலந்திருக்கும். இதனால் ஒளி அதிகமாக பிரதிபலிக்கப்படுகிறது.

3. PEARLESCENT

இது முத்துப்போன்ற ஜொலிஜொலிப்பும் மென்மையும் உடைய ஃபினிஷ். இதற்குக் காரணம், இந்த பெயின்ட் வண்ணக் கலவையோடு, அலுமினியத்துக்குப் பதிலாக செராமிக் பொருள்கள் கலந்திருக்கும்.

4. MATTE

இது ஜொலிக்காது. ஆனால் இந்தப் பளபளப்பற்ற தன்மையில் ஒரு கவர்ச்சியும் ஸ்போர்ட்டினெஸ்ஸும் இருக்கும். இப்போது பல ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனங்கள், அந்தப் பளபளப்பற்ற மேட் கலர்களில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கலர் டிசைன் என்பது எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெரிய கடல் என்றே எண்ணத் தோன்றுகிறது. கடல் ஒரு மாபெரும் Inspiration அல்லவா? தனக்கான காரின் கலரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், ஒருவர் தான் யார் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தி விடுகிறார்.

காரின் அழகு கலரில் தெரியும்!

அது மட்டுமல்லாது, ப்ளாஸ்டிக் பாகங்கள், ரப்பர் மற்றும் மெட்டல் ஆகிய முடிவுகள் Exterior CMT-ல் அடக்கம்.

காரின் இன்டீரியரைப் பொறுத்தவரை டிசைனருக்குப் பெரிய சவால், ப்ளாஸ்டிக், மெட்டல் கிளாஸ், ரப்பர், ஃபோம் போன்ற மெட்டீரியல்கள், கசியும் எலெக்ட்ரானிக் வெளிச்சங்கள், ப்ரின்ட் செய்யப்பட்ட ஸ்விட்ச்களின் (Operative Visual Display) இயக்கம் குறித்த சமிக்ஞைகள், (Audible Display) ஒலி உணர்த்திகள் என பல சிக்கல்களான விதிமுறைகள். இப்படி இத்தனை காரணிகளையும் ஓட்டுனருக்கு, வாடிக்கையாளருக்கு ஒரு சிறு குழப்பமும் ஏற்படுத்தாமல் கொண்டு சென்று உணர்த்துவது ஒரு சுவையான அனுபவம்.

இன்டீரியர் டிசைன் துறை ஒரு குழுவாகவே செயல்படுகிறது. முதலில் கலர் என்கிற வண்ணத்திட்டம். இதற்குத்தான் டிசைனர்கள் அதிகம் மெனக்கெடுவர். ஒரு புதிய கலர் அனுபவத்தை வாடிக்கை யாளருக்கு வரவழைக்கும் ஆதார ஊற்றைப் பிடிக்க இயற்கையைத்தான் பல நேரங்களில் நம்ப வேண்டியிருக்கிறது. ஓர் அற்புதமான மாலை வேளையில் கடல் மணல் பரப்பும், கடல் நீரின் நீலமும், அதன் பின்னணியில் மலைக்குன்றுகளும், பாறைகளில் பட்டுத் தெறிக்கும் மஞ்சள் வெயிலும் சரியாகப் படம் எடுக்கப்பட்டால் ஓர் உயிர்ப்பான கலர், ஹார்மனிக்கு ஆதாரமாக அமைந்துவிடக் கூடும்.

இப்படித்தான் `அக்யூரா ப்ரிசிஹன் கான்செப்ட்’ காரின் Color Inspiration board-க்காக, ஒரு மாறுபட்ட ஆற்றல்மிகு கலர் தீமைத் தேடி 15 நாட்களாக ஆப்ரிக்கக் கண்டத்தின் பல்வேறு இடங்களைச் சுற்றி வந்தார்கள்.

ஒரு நாள் எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த டிசைனர் குழுவின் கண்களுக்கு முன் Kruger தேசியப் பூங்கா தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அது ஒரு தென்னாப்பிரிக்கக் காடு. காட்டுத் தீயில் மிருகங்களும், மரம் செடி கொடிகளும் மளமளவென எரிந்து கருகிக் கொண்டிருந்தன. செந்நிறக்குழம்பு போன்ற தீப்பிழம்பும் அடர்ந்த புகை மூட்டமும் மேலே சென்று, வெண்மேகங்களோடு கலந்த தருணம், இயற்கையின் பிரம்மாண்டத்தையும், கோபத்தையும் உணர்த்தியது. `இதேதான்’ என்று டிசைனர்கள் அந்தக் காட்சியைப் பதிவேற்றிக் கொண்டனர்.

இந்தக் காட்சிதான் Acura Precision Concept-ன் CMF-ன் இன்ஸ்பிரேஷன். இது நடந்த இரண்டே நாட்களில் கருகிய கரித்தூள்களுக்கிடையே கிளர்ந்து எழுந்த புதிய தளிர், அந்த டிசைன் குழுவின் மனதைக் கிளறி, ஒரு புதுவித மாறுபாடான சிந்தனையைத் தந்தது. அதை அவர்கள் `Alluring Contrast’ என்றார்கள். `மாறுபாடான கவர்ச்சி’ - மனித உணர்வுகளின் ஊடாக புதிய அனுபவங்களை உருவாக்கும் கலையே இந்த வடிவமைப்பு.

இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் வண்ணத் திட்டங்கள் பெயின்ட்டாக வார்க்கப்பட்டு, அதைப் பல்வேறுபட்ட மெட்டீரியல்களில் அடிப்பது... அவை துல்லியமாக மேட்ச் ஆவது போன்றவை சற்றே டெக்னிக்கலான சமாச்சாரங்கள். குறிப்பிட்ட கலரை துல்லியமாக பல்வேறு பிரிவுகளுக்குக் கடத்துவதற்கும் பார்ப்பதற்கும் பல்வேறு சங்கேதக் குறியீடுகள் (Code) உள்ளன. Graphics Design-ல் பயன்படும் RGB, CMYK போல Product Design-ல் `RAL CODE'.

`Pantone Code’ ஆகிய கோட்களால் பெயின்ட்கள் குறிக்கப்படுகின்றன. கார் நிறுவனங்கள் காரின் வெவ்வேறு இடங்களில் இதைக் குறித்திருக்கும். உதாரணமாக, ஹோண்டா கார்கள் தங்கள் `B’ பில்லரின் உட்பகுதியில் குறித்து வைத்திருக்கும்.

காரின் அழகு கலரில் தெரியும்!

மெட்டீரியல்களைப் பொறுத்தவரை பாதுகாப்பு, எடை மற்றும் விலை என்ற மூன்று காரணிகளின் அடிப்படையில், டிசைனர்கள் தகுந்த மெட்டீரியல்களைத் தேர்ந்தெடுப்பர்.

Texture என்பது உங்கள் காரின் டேஷ்போர்டில் மேற்பகுதியில் இருக்கும் சொர சொரப்புதான். இந்த Texture இன்டீரியரின் எல்லா ப்ளாஸ்டிக் பகுதிகளிலும் செய்யப்படும். Texture இல்லாத ப்ளாஸ்டிக் பாகங்கள் பளபளப்பாகி, ஓட்டுனரின் கண்களைக் கூச வைக்கும்.

இந்த டெக்‌ஷர்கள் Die-களிலேயே செய்யப்பட வேண்டும். 45 மைக்ரோனிலிருந்து சுமார் 70 மைக்ரோன் வரை இதன் ஆழம் இருக்கும். இது Chemical Etching முறையில் செய்யப்படும். ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனமும் தங்களுக்கென தனித்துவமான Texture/Grain-களை வைத்துப் பாதுகாக்கின்றன. அவற்றை நாம் எடுத்துப் பயன்படுத்த இயலாது.

அடுத்து ஃபினிஷ். சில கார்கள் க்ரோம்களில் ஜொலிப்பதும், அலுமினியம் ஃபினிஷிலும், வுட் ஃபினிஷ் எனும் மர வேலைப்பாடுகளும் கொண்டு மினுங்குவதையும் பார்த்திருப்பீர்கள். இவற்றுக்குப் பின்னால் ஒரு பெரிய CMT / CMF டீமே இருக்கிறது.

ஒரு காலத்தில் ப்ரோட்டோ டைப்கள் பல வண்ணங்களில், பல Texture-களில், பல பெயின்ட்களில் உருவாக பல நாட்கள் ஆனது. ஆனால் VR எனும் புதிய ரட்சகனால், பல நூற்றுக்கணக்கான கார் மாடல்களை, நமக்குப் பிடித்த் கலர்களில் - ஃபினிஷ்களில் நொடியில் மாற்றிக் காட்டி ஒருமித்த முடிவை எட்ட முடியும்.

- வடிவமைப்போம்