Published:Updated:

கார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா

கார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா
பிரீமியம் ஸ்டோரி
கார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 24

கார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 24

Published:Updated:
கார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா
பிரீமியம் ஸ்டோரி
கார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா

டந்த 2004 அக்டோபர் மாதம், அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் ஆட்டோமோட்டிவ் ஹால் ஆப் ஃபேம் (Automotive Hall of Fame) என்கிற ஆட்டோமோட்டிவ் உலகத்துக்கான அருங்காட்சியகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. ஆட்டோமொபைல் துறையில் தவிர்க்கவே முடியாத ஆகச் சிறந்த ஆளுமைகள் அன்று கௌரவிக்கப் பட்டார்கள். அன்று, 83 வயது நிரம்பிய கார் டிசைனர் ஒருவரும் அந்த அங்கீகாரத்தைப் பெருமையோடு பெற்றுக் கொண்டார். அவர் பெயர் செர்ஜியோ பினின்ஃபெரினா (Sergio Pininfarina).

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Ferrari, Alfa Romeo, Chevrolet, Bentley, Volvo, Maserati, Peugeot என அவர் தொடாத கார் பிராண்டே இல்லை. இருந்தும் அவர் பெற்றுக்கொண்ட விருது, அவருக்கானது அல்ல... அவருடைய தந்தை பட்டிஸ்டா பெரினா (Battista Farina) என்னும் மாமனிதருக்கான விருது. பினின்ஃபெரினா (Pininfarina) என்னும் டிசைன் சாம்ராஜ்யத்தை நிறுவியவர்தான், இந்த பட்டிஸ்டா.

பினின்ஃபெரினா என்பது இத்தாலிய கார் வடிவமைப்பு நிறுவனம். இத்தாலியின் ஆட்டோமொபைலுக்கு என்று பிரத்யேகமாகப் பெயர் பெற்ற நகரம் டொரினோ. உலகெங்கிலும் இருந்து கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் கார் வடிவமைப்புக்காக இத்தாலியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த காலம் அது.

 மகன் செர்ஜியோவுடன் பட்டிஸ்டா
மகன் செர்ஜியோவுடன் பட்டிஸ்டா

1930-ல் பினின்ஃபெரினா என்னும் பெயரில் ஒரு கார் ஸ்டைலிங் கம்பெனியை டொரினோவில் நிறுவினார் பட்டிஸ்டா. அப்போது அவருக்கு வயது 37. ஆனாலும் தன் 12-வது வயதிலிருந்து தன் அண்ணன் ஜியோவின்னி (Giovanni) நடத்திக் கொண்டிருந்த கோச் கட்டும் பட்டறையில் வேலை செய்த அனுபவம் அவருக்கு இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதோடு கூடுதலாக, பட்டறைக்கு வந்து போன பல்வேறு கார் நிறுவன முதலாளிகளின் அறிமுகம் இருந்தது. ஃபோர்டு அதிபரின் அழைப்பின் பேரில் 1920-ம் ஆண்டில், அவர் அமெரிக்கா சென்றார். டெட்ராய்டில் அவர் ஹென்றி ஃபோர்டைச் சந்தித்தார். அமெரிக்காவிலேயே தங்கி ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்யக் கிடைத்த வாய்ப்பை மறுத்து, இத்தாலிக்குத் திரும்பினார்.

புதிய தொழில்நுட்பத் தகவல்களும், அமெரிக்க வளர்ச்சியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், ஃபோர்டு நிறுவனத்தில் பணியாளர்களிடம் வழிந்தோடிய உற்சாகமும் அவருக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தன.

கார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா

எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர் பட்டிஸ்டாவின் தனித்துவமான வடிவமைப்புத் திறமையும் சேர்ந்துகொள்ள... ஒரு வரலாற்று வடிவமைப்பு நிறுவனம் உதயமானது. உலகின் புகழ்பெற்ற பல்வேறு நிறுவனங்களின் கார் டிசைன்கள் இங்கே உருவாகின. ஃபெராரி மற்றும் ஆல்பா ரோமியோவின் புகழ்பெற்ற கார் மாடல்கள் பினின்ஃபெரினாவால் வடிவமைக்கப் பட்டவையே!

இன்றும் அதன் டிசைன் பயணம் தொடர்கிறது. 90-வது ஆண்டைத் தொட்டிருக்கும் இந்த நிறுவனம், நம் நாட்டைச் சேர்ந்த மஹிந்திராவால் ஏற்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் 1,330 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது மஹிந்திரா. பட்டிஸ்டா 1966-ல் காலமானார்.

ஆனால், 1961-ல் இருந்தே அவர் மகன் மற்றும் மருமகனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டார். தன் இறுதிக்காலத்தில் கார் டிசைனோடு சேர்த்து, சில சினிமா படங்களையும் தயாரித்து இயக்கினார்.

பினின் என்ற இத்தாலிய வார்த்தைக்கு தமிழில், ‘சின்ன’ என்று பொருள். அவர் தன் தந்தைக்கு

10-வது மகனாகப் பிறந்ததால், குடும்பத்தில் அவரை பினின் என்றே அழைப்பது வழக்கம். ஆனால், அவர் துவங்கி வைத்த பினின்ஃபெரினா சின்ன நிறுவனம் அல்ல. டிசைன் உலகின் டைட்டன் அது. யூனிபாடி கன்ஸ்ட்ரக்ஷன் (unibody construction) என்னும் இன்றைக்கும் பயன்பாட்டில் இருக்கும் உற்பத்தி உத்திக்கு இவர்கள்தான் பிள்ளையார் சுழி போட்டார்கள். இப்போது இந்த முறை `மோனோகாக் பாடி’ என அறியப்படுகிறது. இந்த உத்தியால் காரின் எடையைப் பெருமளவு குறைக்க முடியும். உயரத்தையும் கட்டுப்படுத்தலாம்.

`விண்ட் டனல் டெஸ்ட்’ என்பது காரின் ஏரோ டைனமிக்ஸைச் சோதித்து அறியவும், மேலும் சில மாற்றங்களின் மூலமாக வடிவமைப்பு மேம்படுத்தவும் உதவும் ஒரு வழிமுறையாகும். ஒரு பிரத்யேக டனலின் உள்ளே காரை நிறுத்தி, வலிமையான காற்று வீசும் விசிறிகளைக்கொண்டு காற்று வேகத்தை ஏற்றி இறக்கி காரின் புறப்பரப்பை, வடிவமைப்பைச் சோதித்து அறியும் முறையை அறிமுகப்படுத்தியது இவர்கள்தான். 1930-ல் இருந்து உலகின் எல்லா முன்னணி கார் நிறுவனங்களுக்கும் டிசைன், ஸ்டைலிங், இன்ஜினீயரிங் மற்றும் உற்பத்தி முறை என அனைத்துத் தளங்களிலும் தன் பங்களிப்பைத் தந்து மிக வெற்றிகரமாகப் பயணித்தது இந்த நிறுவனம். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், நாஷ்-கெல்விநேடர் என்ற கம்பெனியின் அம்பாஸடர் என்றொரு மாடல் அமெரிக்காவில் 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 ஃபெராரி 330 GTC spider
ஃபெராரி 330 GTC spider

இன்று நாஷ்-கெல்விநேடர் என்னும் கம்பெனி இல்லை. ஆனால் இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாகிப் போன அம்பாஸடர் காரில், பினின்ஃபெரினாவின் கைவண்ணத்தை நாம் இன்றைக்கும் காணலாம். அம்பாஸடரின் விளம்பரங்களில் அதன் வடிவமைப்பின் இத்தாலியத் தொடர்பையும், குறிப்பாக பினின்ஃபெரினா என்னும் நிறுவனத்தின் பெயரையும் சேர்த்தே விளம்பரப் படுத்தினார்கள்.

இதனால், அமெரிக்காவின் மூலை முடுக்குகளிலும் பினின்ஃ பெரினாவின் புகழ் பரவியது. அதே காலகட்டத்தில், அங்கே அம்பாஸடருக்கு நேர் எதிராகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்டுடிபேக்கர் காரின் விளம்பரங்களிலும், அதன் டிசைனர் ரெமோ லூயியின் பெயரைக் குறிப்பிட்டு பிரபலப்படுத்தியது ஒரு சுவாரஸ்யமான தகவல். பினின்ஃபெரினாவின் ஆகச் சிறந்த டிசைன்களாக நான் கருதுவது, Alfa Romeo Giulietta Spider மற்றும் ferrari 330 spider ஆகிய இரண்டு மாடல்களைத்தான். காரணம் - இவை டிசைன் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கார் கம்பெனிகளும் மேற்சொன்ன கார் நிறுவனங்களும் டிசைனர்களும் இந்த இரு கார்களின் ஸ்டைலிங்கை ஒரு இன்ஸ்ரபிரேஷனாக எடுத்துக் கொண்டு, மேலும் இத்தகைய ஸ்டைல்களை விரிவு படுத்தினார்கள். குறிப்பாக ஜப்பான், சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களை சொல்லலாம்.

பினின்ஃ பெரினாவைப் பற்றிப் பேசும்போது, ஃபெராரியையும் ஃபெராரியைப் பற்றிப் பேசும்போது பினின் ஃபெரினாவையும் பேசித்தான் ஆகவேண்டும். ஃபெராரியை பவர்ஃபுல் பிராண்ட்டாகப் பரிமளிக்கச் செய்ததில் பினின்ஃபெரினாவுக்குப் பெரும்பங்கு உண்டு.

ஃபெராரி 330 GTC spider-ல் ஃபெராரியின் DNA மிகச் சரியாக அடித்தளமிடப் படுகிறது. மிகக் கவர்ச்சியான, அதே நேரம் ஏரோடைனமிக் முகப்பு எல்லோராலும் ரசிக்கத்தக்க வகையிலும் செதுக்கியெடுக்கப் பட்டு இருக்கும்.

ஒரு பிரத்யேக டனலின் உள்ளே காரை நிறுத்தி, வலிமையான காற்று வீசும் விசிறிகளைக் கொண்டு காற்றின் வேகத்தை ஏற்றி இறக்கி - காரின் புறப்பரப்பை, வடிவமைப்பைச் சோதித்து அறியும் முறையை அறிமுகப்படுத்தியது இவர்கள்தான்.

இவ்வளவு கச்சிதமான பானெட் அதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை . எடுப்பான ஹெட்லைட்ஸ், போர் விமானங்களை - அவற்றின் வேகத்தினை நினைவு படுத்தும். ஹெட் லைட்ஸுக்கு நேர் கீழே ஒரு கான்வெக்ஸ் (convex) சர்ஃபேஸ் கொள்ளை அழகு.

ஹெட்லைட்ஸுக்கு ஓர் அற்புதமான பேலன்ஸ் இதன் மூலம் கிடக்கிறது. இங்கிருந்து தடையற்று வேகமாக நீளும் ஷோல்டர் லைன் ஒரு தேர்ந்த வேகக் குறியீடு. மின்னி எழிலுற மறையும் வீல் ஆர்ச்சுகள், அடக்கி வாசிக்கும் பிரைட்ஒர்க் பளபளப்பு, கனகச்சிதமாக அமைந்த கிரில் என இன்றும் புதிதுபோல மிளிர்கிறது. இப்படி எல்லாவிதத்திலும் அழகும் புதுமையும் எளிமையும் குழைத்தெடுத்த இந்த ஃபெராரி 330 ஸ்பைடரின் மொத்த உற்பத்தி 99 கார்கள் மட்டுமே! உலகின் மிக அழகான கார்களின் வரிசையில் முக்கிய இடம்பிடித்த இந்த மாடல் கார், 2014-ம் ஆண்டு,

2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏலம்போனது.

இத்தாலியின் 5 பெரிய டிசைன் ஹவுஸ்களான

Pininfarina, Zagato, Bertone, Italdesign Giugiaro and Carrozzeria Ghia ஆகியவற்றைப் புறந்தள்ளிவிட்டு, கார் டிசைன் வரலாற்றை எழுதிவிட முடியாது.

இத்தாலிய டிசைனில் அப்படி என்ன இருக்கிறது? என்று ஒரு முறை ஃபினினிடம் கேட்டார்கள். ``இத்தாலிய டிசைன் என்பது சரியான விகிதத்தில் அமைந்த ப்ரோபோஷன், மிக எளிமையான வடிவமைப்பு, ஒன்றோடு ஒன்று இயந்துபோகும் தன்மை, ஒன்றுக்கொன்று தொடர்புடைய கோடுகள், அனைத்துக்கும் மேலாக அழகு என்பதையும் தாண்டி காலங்களைத் தாண்டியும் உயிர்ப்புடன் திகழும் வண்ணம். இவைதான் இத்தாலிய டிசைன்.'' என்றார்

இந்த வாக்கியம் மிகையில்லாத உண்மை என்பது பல காலகட்டங்களில் நிரூபிக்கப்பட்டது. பினின்ஃபெரினாவோடு மேலும் பல இத்தாலிய டிசைன் கம்பெனிகள் போட்டி போட்டுக்கொண்டு கிளைத்தெழுந்தன. அதை ‘கார் டிசைன் போர்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ஃபெராரிக்கு பினின்ஃபெரினா என்றால், லம்போகினிக்கு ஒரு டிசைன் ஹவுஸ் பக்கபலமாக இருந்தது. அது....

- வடிவமைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism