உலகின் எந்த மூலையில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் உருவானாலும், அது தன் வாகன வடிவமைப்புக்கு இத்தாலி கார் டிசைன் நிறுவனங்களிடம் வந்தே ஆக வேண்டிய ஒரு காலகட்டம். அந்நாட்களில் இத்தாலிய டிசைன் மையங்கள் அனைத்தும் தனித்துவமான சொகுசு கார்களைக்கூட ஸ்போர்ட்ஸ் கார்களின் சாயலில் வடிவமைத்து வந்தார்கள். சாதாரண மக்களுக்கும் கார் எப்படி இருக்க வேண்டும் என்று அப்போது யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், புகழ்மிக்க இத்தாலிய டிசைனர்களால் வடிவமைக்கப்பட்ட சாமானிய மனிதர்கள் பயன்படுத்தும் கார்கள்கூட, ஸ்போர்ட்ஸ் கார்களின் சாயலிலோ , ஜெட் விமானங்களின் தாக்கத்தோடோ வடிவமைக்கப்பட்டன.

தனக்கான கார் எளிமையாகவும் எடுப்பாகவும் இருந்தால் போதும் என்ற சாதாரண குடிமகனின் மனநிலையைச் சரியாகப் புரிந்துகொண்ட ஃபோக்ஸ்வாகன், தனித்துவமான டிசைன் மொழியோடு ஒரு புதிய காரை 1974-ல் அறிமுகப்படுத்தியது. அதுதான் இன்றைக்கும் உலகச் சாலைகளில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப். அதனை வடிவமைத்தவர் `ஜியார்ஜெட்டோ ஜியூஜியாரோ (Giorgetto Giugiaro). அவர் அடித்தளமிட்டுத் துவங்கிய இத்தாலிய நிறுவனம்தான் `இட்டெல் டிசைன்' (ITALDESIGN).
1968-ல் ஆரம்பிக்கப்பட்ட, `இட்டெல் டிசைன்' பெயரிலேயே இத்தாலியைத் தாங்கியிருந்தது நல்ல வியாபார உத்தியாகப் பார்க்கப்பட்டது. ஜியூஜியாரோவின் `இட்டால் டிசை'னுக்கு அடுத்தடுத்து பல கார் கம்பெனிகள் வாடிக்கையாளர்களாகக் கிடைத்தார்கள். ஆல்ஃப் ரோமியோ, பிஎம்டபிள்யூ என பட்டியல் நீண்டாலும்...ஃபோக்ஸ்வாகன் உடனான நீண்ட பயணமே ஜியூஜியாரோவை புகழின் உச்சிக்குக்கொண்டு சென்றது. கோல்ஃபைத் தொடர்ந்து பஸாத், ஜெட்டா என்று ஃபோக்ஸ்வாகன் அறிமுகப்படுத்திய மற்ற கார்களையும் இவரது டிசைன் நிறுவனமே வடிவமைத்தது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS`இட்டெல் டிசைன்' என்றால் ஃபோக்ஸ்வாகன், போக்ஸ்வாகன் என்றால் `இட்டெல் டிசைன்' என்றாகிப்போனது . இதன் தொடர்ச்சியாக பின்னாளில் ஃபோக்ஸ்வாகன், `இட்டெல் டிசைன்' கம்பெனியை முழுவதுமாக வாங்கித் தன்னகப்படுத்திக்கொண்டது. 1999-ல், `Car Designer of the Century’ என்ற பெருமையும் ஜியூஜியாரோவைத் தேடிவந்தது.

`இட்டெல் டிசைன்', புகழின் உச்சத்தில் இருந்தபோது `Marille’ எனும் இத்தாலிய உணவு உற்பத்தி நிறுவனம், தங்கள் `பாஸ்தா’வை வடிவமைக்கும் பொறுப்பை இவரிடம் கொடுத்தது. காலத்தால் அடித்துச் செல்ல முடியாத அளவுக்கு இந்த பாஸ்தா எல்லைகள் தாண்டிப் பரவ, அதன் வடிவமைப்பும் முக்கியமான காரணமாக அமைந்தது.

தொடக்கத்தில் `இட்டெல் டிசைன்', பல சூப்பர் கார்களை வடிவமைத்தாலும், கோல்ஃப் எனும் மாடலுக்காகவே ஜியூஜியாரோ பெரிதும் நினைவுகூறப்படுகிறார். 70-களில் `Flat, Straight and Wedgy'-யான பேப்பர் மடிப்புகளின் வடிவம் ட்ரெண்டாக இருந்தபோது வெளிவந்த கோல்ஃப் சட்டென்று உலகையே கவர்ந்தது. கவித்துவமான வீல் ஆர்ச்சுகள், கவர்ச்சியான வளைவுகள், தட்டையான பரப்பு எனப் பளிச்சென்று இருந்தது கோல்ஃப். அன்று தொடங்கிய இதன் வெற்றிப் பயணம் இன்றும் தொடர்கிறது.

`இட்டெல் டிசை'னின் பங்களிப்போடு வடிவமைக்கப்பட்ட, DMC De Lorean என்ற அமெரிக்க கார், 80-களில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக இளைஞர்களைக் கிறங்கடிக்கும் பல அம்சங்கள் இந்த காரில் இருந்தன. பிளாக்பஸ்டர் ஹாலிவுட் திரைப்படமான `Back to the Future’ என்ற படத்திலும் இந்த கார் அசத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எல்லா நாடுகளிலும் எல்லா கம்பெனிகளும் ஒரே மாதிரியான அடிப்படைக் கட்டுமான நியதியிலேயே கார்களைத் தயாரித்து வந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது. அப்போது ஸ்போர்ட்ஸ் காரும் ஹேட்ச்பேக்கும் ஒன்றுபோலவே ஒரே உயரத்தில், பெரிய அளவு வித்தியாசமில்லாமல் வடிவமைக்கப்பட்டு வந்தன. அந்தச் சமயம், அதாவது, 1978 வாக்கில் `ஃபியட்’ நிறுவனம், முற்றிலும் புது வகை கார் கட்டுமானத்தைத் கண்டறியும் தேடலில் ஈடுபட்டிருந்தது.

இந்தத் திட்டத்தைச் சரியாகப் புரிந்துகொண்ட ஜியூஜியாரோ, ஒரு புதிய லே-அவுட்டை முன்வைத்தார். இந்தப் புதிய வகை கார்கள் டாக்ஸியாக மற்றும் பலர் அமர்ந்து பயணிக்கும்படியாகவும் அமைய வேண்டும் என்றும் விவரித்தார். இதன் நீளம் 4 மீட்டருக்கும் அதிகமாக, `H Point’ என்பது சற்றே நிமிர்ந்து அமர்ந்திருக்கும்படியான முற்றிலும் புதிய கார் அனுபவமாகவும் இருந்தது . அதுதான் லான்சியா மெகாகாமா கான்செப்ட் . (லென்சியா என்பது பியட் குழுமத்தில் இருந்து வரும் சிறு கார் நிறுவனமாகும்). இதனுடன் `Museum of Modern Art’-ம் இணைந்து கொண்டது. இதுவே 1978-ல் ஒரு கான்செப்ட் காராக `டூரின் மோட்டார் ஷோ’வில் அறிமுகப்படுத்தப்பட்டது. கான்செப்ட் கார் என்பது மாதிரி வடிவமே. இதை காராக அறிமுகப்படுத்த வேண்டுமானால், குறிப்பிட்ட கார் நிறுவனத்தின் இன்வெஸ்ட்மென்ட் கமிட்டியின் ஒப்புதல் வேண்டும்.

ஐந்து டோர்களோடு பெரிய பின்பக்கக் கதவுகளும், Multi functional ஆகவும், `Monospace’ ஆகத் திரண்ட இந்த கான்செப்ட்டை உற்பத்தி செய்ய இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி ஒப்புதல் அளிக்கவில்லை. அப்போது அது வந்திருந்தால் இன்றைய `டொயோட்டா இனோவா’ வகை கார்களுக்கு , அதாவது MPV வகை கார்களுக்கு, அதுதான் ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கும்
இத்தாலியின் ஃபியட் குழும நிறுவனங்கள் கைவிட்டுவிட்ட இந்தக் கனவை , ஜப்பானின் நிஸான் நிறுவனம், பின்னாளில் ஒரு சவாலாக ஏற்று `Prairie’ என்ற மாடலைக் கொண்டு வந்தது. 4.5 மீட்டர் நீளமும், 1.6 மீட்டர் அகலமும், அதே அளவு உயரமும் உடைய இந்த கார் 1.5, 1.6, 1.8 மற்றும் 2 லிட்டர் இன்ஜினோடு உற்பத்திக்கு வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜப்பானில் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் MPV இயக்கத்தைப் பெரிதுபடுத்தி, உலகின் வேறு பகுதிகளுக்கும் கொண்டு சென்றன . ரெனோவின் `எஸ்பேஸ்' (espace), க்ரைஸ்லரின் மினி வேன்கள் என தொடர்ந்தது. எந்த ஃபியட் முதலில் எம்பிவி ஐடியாவில் இருந்து பின்வாங்கியதோ, அதே ஃபியட்தான் பின்பு 2011-ல் `பியட் 500L’ என்ற ஒரு எம்பிவி முயற்சியில் இறங்கியது.
`இட்டெல் டிசைன்' வடிவமைத்த கார்களின் வரிசையில் ஆல்ஃபா ரோமியோக்களும், பெராரிகளும் இருந்தாலும், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய சாமானியனின் கார்களே காலங்கள் கடந்தும் அதன் புகழைப் பறைசாற்றுகின்றன. 90-களில் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த FIAT UNO, நம் ஜியூஜியாரோ கைப்பட வரைந்த கான்செப்ட்தான். முன்பக்கக் கண்ணாடியில் ஒரே ஒரு வைப்பருடன் வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் காரும் இதுதான்.
(வடிவமைப்போம்)