Published:Updated:

பினின்ஃபெரினாவும் பெர்டோனேவும்!

பினின்ஃபெரினாவும் பெர்டோனேவும்!
பிரீமியம் ஸ்டோரி
பினின்ஃபெரினாவும் பெர்டோனேவும்!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 25

பினின்ஃபெரினாவும் பெர்டோனேவும்!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 25

Published:Updated:
பினின்ஃபெரினாவும் பெர்டோனேவும்!
பிரீமியம் ஸ்டோரி
பினின்ஃபெரினாவும் பெர்டோனேவும்!

ஃபெராரிக்கு ஒரு பினின்ஃபெரினா இருக்கிறது என்றால், லம்போகினிக்கு நம்பிக்கையான நண்பன் உண்டு. அது, பெர்டோனே என்னும் கார் ஸ்டைலிங் நிறுவனம். டொரினோ நகரின் சிறப்புகளில் ஒன்று இந்த நிறுவனம். இத்தாலியின் மற்ற டிசைன் ஹவுஸ்களைப் போலவே, கோச் கட்டுமான நிறுவனமாக 1912-ல் துவக்கப்பட்டதுதான். இதன் நிறுவனரான ஜியோவன்னி பெர்டோனே (Giovanni Bertone) ஒரு கோச் நிபுணராக ஆக வேண்டும் என்று சிறுவயதில் ஆசைப்பட்டவர். அந்த நாட்களின் புதிய தேவையாக உருவான கார் காலம், இவரை கார் டிசைனராக அவதாரம் எடுக்க வைத்தது. குறிப்பிட்ட சில காரின் பாடிகள் இவரால் உருவெடுத்தாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு பெர்டோனே பெரிய அளவில் வளர்ச்சி கண்டது. காரணம், ஜியோவன்னியின் மகன் நியூசியோ பெர்டோனே (Nuccio Bertone) வின் டிசைன் முன்னெடுப்புகள்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1960-70-களில் ஒரு டிசைன் யுத்தமே நடந்து கொண்டிருந்தது. கார் ஸ்டைலிங் வரலாற்றில் இதை 'டிசைன் வார்' என்றே குறிப்பிடுகிறார்கள். ஃபெராரியும் லம்போகினியும் இன்றுவரை உலகின் அசைக்க முடியாத ஸ்போர்ட்ஸ் கார் ஆளுமைகளாகத் திகழ்வதற்குப் பின்னணியில் இருப்பது, அந்த டிசைன் யுத்தம்தான். அதன் பின்னணியில் இருப்பவை பினின்ஃபெரினாவும் பெர்டோனே எனும் இரு நிறுவனங்கள்தான்.

 நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 25
நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 25

எந்த ஒரு துறையிலுமே இரு நேரெதிரான, ஆனால் இணையான போட்டியாளர்கள் இருக்கும்போது, அதன் ஆடுகளத்தில் நிலவும் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்குக்கும் பஞ்சம் இருக்காது. போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகமாகி ஆர்வத்துடன் களமாடுகிறார்கள். ரஜினி - கமல் இதற்கு நல்லதோர் உதாரணம். இருவரின் படைப்புகளும் முற்றிலும் ஒன்றோடொன்று வேறுபட்டவை. சில நேரங்களில் ஒரே இயக்குநர் இயக்கிய இந்த இருவரின் படங்களும் முற்றிலும் மாறுபட்ட தன்மை கொண்டவையாக இருந்தாலும், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப் பட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருவருக்கும் இடையில் நிலவிய தொழில்முறைப் போட்டி, உண்மையில் ஒரு ஸ்போர்ட்டிவ்வான, ஆரோக்கியமான போட்டி. இந்தப் போட்டியால் ஒருவரை ஒருவர் நகலெடுப்பது தவிர்க்கப்படுகிறது. திரைக்கலை புதிய புதிய உச்சங்களைத் தொடுவதற்கான முயற்சிகளைப் பல்வேறு தளங்களில் இவர்கள் முன்னெடுத்தனர். இந்த இருவரையும் பின்பற்றி பல புதியவர்கள் முளைத்தெழுந்தார்கள்.

ஆடுகளம்
ஆடுகளம்

எப்படி இந்த இருவரின் பெயரால் அவர்களை முன்வைத்து கலை உலகம் செழித்ததோ , அப்படி கார் டிசைன் உலகிலும் நடந்தது. பென்னின், பெர்த்தோ போன்ற டிசைனர்களைப் பார்த்து, அவர்களைப் பின்பற்றி பலர் டிசைன் துறைக்கு ஆர்வத்துடன் வந்தார்கள். கார் டிசைனை ரசிப்பதற்கென்றே உலகெங்கிலும் டிசைன் ரசிகர்கள் உருவாகினர். பல்கலைக்கழகங்களில் டிசைன் சம்பந்தமான படிப்புகளும் பட்டங்களும் ஆரம்பமாகின. கார் டிசைன் பல நாடுகளில் பேசுபொருளாக ஆகி விவாதங்கள் தொடர்ந்ததால், கார் ரசிகனுக்கென்றே சிறப்புப் பத்திரிகைகள் (CAR STYLING, AUTO AND DESIGN) தோன்றின.

இந்தப் பிரத்யேகப் பத்திரிகைகள் பிரசுரித்த புதிய டிசைன்களைத் தழுவியும் விலக்கியும் புதிய டிசைன் உத்திகள் கையாளப்பட்டன. எனவே, இரு துருவங்களாகப் பிரிந்து போட்டியிடுவதால், மின் காந்தப்புலம் உருவாகும் என்பது அறிவியல் மட்டுமல்ல... கலையியலும்தான். பினின்ஃபெரினா ஏரோடைனமிக்ஸ் தன்மை கொண்ட கவர்ச்சியான `CURVE' வளைவுகளைக் கொண்டு பெருங்கவர்ச்சியான FORM என்னும் வடிவுகளை முன்னெடுத்தது என்றால், பெர்டோனே இதற்கு முற்றிலும் வேறான, நேரெதிரான, அதே சமயம் `EFFECTIVE' ஆன கோணத்திலிருந்து கார் டிசைனை அணுகியது. முற்றிலும் புதிய ஒரு வடிவத்தைக் கையாண்டு பெரிய வெற்றி பெற்றது. இது மக்கள் மத்தியில் ஃபெராரிக்கு இணையான வரவேற்பையும் பெற்றது. பினின்ஃபெரினாவுக்கு ஆப்பு வைக்க பெர்டோனே கையிலெடுத்த ஆயுதம் ஆப்புதான். ஆம், ஆப்பு தட்டையானது; ஒருமுனையில் கூறாக இருக்கும் V போன்ற வடிவம். மரத்தை இலகுவாகப் பிளந்துகொண்டு முன்னேறும் ஆப்பு வடிவம் காற்றையும் வேகமாகப் பிளந்துகொண்டு முன்னே செல்லும் என்ற சித்தாந்தத்தின், நம்பிக்கையின் அடிப்படையில் நியூசியோ வடிவமைத்த `FLAT AND WEDGY FARM' ஒரு பெரிய வரலாற்று அலையை டிசைன் துறையில் ஏற்படுத்தியது. லம்போகினி MIURA P400 என்னும் மாடல் அந்தக் கால கட்டத்தில் பெரிதும் விரும்பப்பட்ட காராக வலம்வந்தது. லம்போகினிக்கு ஒரு டிசைன் திசையை ஏற்படுத்திக் கொடுத்த மாடல் இந்த MIURA.

 ஃபெராரி மாடுலோ
ஃபெராரி மாடுலோ

இதற்கு முந்தைய லம்போகினியில் மாடல்கள் எல்லாம் பத்தோடு பதினொன்றாக மற்ற உலக கார்களை ஒத்த வடிவத்தில்தான் இருந்தன. 1964-ல் வெளிவந்த லம்போகினி 350 GT, அதற்குப் பின்பு வந்த 1966 லம்போகினி 400 GT போன்ற கார்கள் வடிவமைப்பில் ஒரு தனித்துவத்தைக் காண முடியாது.

ஆனால், அதற்குப் பின்பு வந்த COUNTACH லம்போகினிக்கு என்று உலக வரிசையில் ஒரு தனி இடத்தைத் தக்கவைத்து கொடுத்தது. இன்றுவரை WEDGY AND SPORTYயாக லம்போகினியை உயிர்ப்புடன் சாலைகளில் நகர்த்திக் கொண்டிருக்கும் வலிமையான வடிவமைப்புக்குப் பின்னணியில் பெர்டோனே இருக்கிறது. பெர்டோனேவின் கைவண்ணத்தில் தட்டையான ஹூட், ஒரு நேர்கோடு கொண்டு இணைத்தது போன்ற பின்பக்க விளக்கு ஒரு புதிய முயற்சி. ஆச்சர்யமளிக்கும் வகையில் இது எல்லோரையும் கவந்தது மட்டுமல்ல, வேகச் சோதனைகளிலும் லாவகமாக வெற்றிபெற்றது . காற்றை வென்று வேகமாக முன்னேறிச் செல்ல ஒரே வழிதான் உண்டு என்ற நம்பிக்கையைத் தகர்த்தது. மேலும், லம்போகினியும் பெர்டோனேவும் கூட்டு முயற்சியில் கொண்டு வந்த கார் COUNTACH.

பெர்டோனே தொடர்ச்சியாக டிசைன் செய்த அனைத்து கார்களிலும் இந்தத் தட்டை மூக்கை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தது என்பது உண்மை. LANCIA STRATOS, FIAT X1/9 போன்ற பெர்டோனேவின் புகழ்பெற்ற கார்கள் ஃப்ளாட்டான சர்ஃபேஸ்களுடன் தொடர்ந்து வந்து பெரும் வரவேற்பைப் பெற்றன.

 லம்போகினி மியூரா P-400s
லம்போகினி மியூரா P-400s

இதைத் தழுவி ஜப்பானிய நிறுவனங்களும் தட்டையான BOXY கார்களை வடிவமைத்து உலகச் சந்தைக்கு அறிமுகப்படுத்தின. இந்த முறையிலான ஸ்டைலிங்கின் தாக்கத்தை, முதலில் வந்த மாருதி 800-ல் பார்க்கலாம். கான்டெஸா க்ளாஸிக் கார்களின் நீண்ட தட்டையான பானெட்டுக்கான இன்ஸ்பிரஷன் வந்தது இங்கிருந்துதான். இதே காலகட்டத்தில் CAD என்னும் கம்ப்யூட்டர் புரட்சியும் சேர்ந்துகொள்ள, இந்தத் தட்டையான நீண்ட நேர்கோட்டால் நிறைவு செய்த `FLAT AND WEDGY' ஜுரம் உலகையே பிடித்து ஆட்டியது.

இந்த ஜுரம் பினின்ஃபெரினாவையும் விட்டு வைக்கவில்லை என்பது பலரும் அறியாத ஆச்சரியம். பினின்ஃபெரினா டிசைன் செய்த ஃபெராரி MODULO என்னும் கான்செப்ட் மாடலில் இடம்பெற்ற இந்தத் தட்டை மூக்கினால், இதை ஃபெராரியாக ஏற்றுக்கொள்ள இன்றைய கார் ஆர்வலர்களுக்குச் சற்று கடினமாக இருந்தாலும், BRAND IDENTITY என்று ஒன்று பெரிதாக உருவெடுத்த அந்தக் காலகட்டத்தில், இந்த மாடல் 20-க்கும் அதிகமான விருதுகளை வென்றெடுத்திருந்தது. இன்றும் இந்த கான்செப்ட்டை டொரினோவில் உள்ள ஃபெராரி மியூசியத்தில் பார்க்கலாம். 1980களில் Fiat Ritmo Cabrio and the Fiat X1/9 போன்ற கார் மாடல்களை பெர்டோனே உற்பத்தி செய்தது. பெர்டோனே என்னும் பிராண்டாகவே விற்பனை செய்யும் அளவுக்கு வலிமையான நிறுவனமாக வலம் வந்தது.

2001-ல் டாடாவுக்காக PRIMA டிரக் டிசைன் பெர்டோனேவில் உருவான போது, நானும் கொஞ்சம் இணைந்து பணியாற்றியது நினைவில் வந்துபோகிறது.

இத்தாலிய டிசைன் ஹவுஸ்களில் கார் டிசைன் கோலோச்சி வந்த காலங்களில், குறிப்பிட்ட கார் - இந்த நிறுவனத்திலிருந்து வருகிறது என்பதைவிட இதை யார் வடிவமைத்தது என்பதே பெரிய கேள்வியாக இருந்தது.

பினின்ஃபெரினாவுக்கு ஆப்பு வைக்க பெர்டோனே கையிலெடுத்த 
ஆயுதம், ஆப்புதான்.
பினின்ஃபெரினாவுக்கு ஆப்பு வைக்க பெர்டோனே கையிலெடுத்த ஆயுதம், ஆப்புதான்.

அந்த அளவுக்கு கார் டிசைன்களின் முத்திரை, நிறுவனத்தையும்விட ஆழமாகப் பதிந்திருந்ததால் `ITAL DESIGN, IDEA' போன்ற மேலும் சில நிறுவனங்கள் முளைத்தன . ஒரே மாதிரியான காரை இரண்டு வெவ்வேறு நிறுவனங்களுக்கு ஸ்டைல் செய்து கொடுக்கும் இந்த டிசைனர் முத்திரைகளே இத்தாலிய டிசைன் கம்பெனிகளுக்கு எதிராக வேலை செய்து, பெரும் சரிவையும் சந்திக்க நேர்ந்ததெல்லாம் கார் டிசைன் வரலாறாகிப்போனது.

இன்றைக்கு பெர்டோனேவிலிருந்து ஒரு குழு பிரிந்துவந்து `TORINO DESIGN' என்னும் நிறுவனத்தை ஆரம்பித்து, சைனா போன்ற நாடுகளில் கார் கம்பெனிகளுக்கு டிசைன் சேவை செய்துகொண்டிருக்கிறார்கள்.

- வடிவமைப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism