மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்!

தொடர்
பிரீமியம் ஸ்டோரி
News
தொடர்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 32

டிசம்பர் 2019-ல் டெஸ்லாவின் இலன் மாஸ்க், சைபர் ட்ரக்கை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பே டெஸ்லாவின் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்கள், சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. சைபர் ட்ரக் ஒரு டெக்னோ ஸ்டைலிஷ் பிக்-அப்பாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்குக் கிடைத்ததோ அதிர்ச்சியும் ஏமாற்றமும்தான்.

இலன் மாஸ்க் காட்டிய சைபர் ட்ரக்கைப் பார்த்தபோது, ‘இது உண்மையான சைபர் ட்ரக் கிடையாது. பார்வையாளர்களை வேடிக்கைக்காக டீஸ் செய்கிறது இலன் மாஸ்க்’ என்றுகூட சிலர் நினைத்தார்கள். ஆனால் அதுதான் நிஜமான சைபர் ட்ரக் என்று உறுதியானபோது, அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்!

`காலேஜ் ஆப் க்ரியேட்டிவ் ஸ்டடிஸ்’ என்பது டெட்ராய்டில் இயங்கும் தலைசிறந்த டிசைன் காலேஜ். இதனைச் சேர்ந்த பௌல், இந்த சைபர் ட்ரக்கைப் பற்றிக் கூறும்போது, ‘முதல் பார்வையிலேயே அதை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சுற்றி வளைக்காமல் வெளிப்படையாகவே சொன்னார். உலகின் பல பகுதிகளில் இருக்கும் ஆட்டொமொபைல் டிசைனர்களும் இதே போன்ற கருத்தைத்தான் வெளிப்படுத்தினார்கள்.

ஏன் இந்த ஏமாற்றம்? முதலில் இதை கார் அல்லது பிக்-அப் ட்ரக் என்று ஏற்றுக் கொள்வது கடினம். கார் வடிவமைப்பு சார்ந்த எந்த ஒரு வரையறைக்குள்ளும் அது அடங்கவில்லை. இதைவிட மினிமல் கார் என்று எதையும் காட்ட முடியாது. முழுவதும் தட்டையான சர்ஃபேஸ்கள். ரசனையற்ற, வளைவு நெளிவுகளற்ற, மருந்துக்குக்கூட அழகியல் இல்லாத காராகத்தான் அது காட்சியளித்தது. முன்பக்கத்துக்கும் பக்கவாட்டு புரொஃபைலுக்கும் கொஞ்சமும் தொடர்பற்ற தன்மை, யாருக்கும் சலிப்பையே உண்டாக்கும். இந்தக் குறைகள் அனைத்தையும் மாஸ்க் உணர்ந்தே இருந்தார். இருந்தாலும் தைரியமாகவே இதை அவர் அறிமுகப்படுத்தினார். ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் பொருட்களையும் மனிதர்களையும் சுமந்து செல்லும் ஒரு வாகனத்துக்கு எதற்கு மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்வதோடு, டிசைனுக்கு என்று பெரிய தொகையைச் செலவிட வேண்டும் என இலன் மாஸ்க் கருதியதே சைபர் ட்ரக்கின் சாதாரண டிசைனுக்குக் காரணம். இந்தச் சிந்தனையில் சமூக அக்கறையும் இல்லாமல் இல்லை. ‘வளையும் தன்மையற்ற மெட்டீரியல்களை எதற்குச் சிரமப்பட்டு வளைத்து நெளிக்க வேண்டும்? வாகனத்தின் வேகமும் திறனும் பாதுகாப்பும் உறுதிப்படுத்துகிற ஒரு பெட்டியைப்போல இந்த சைபர் ட்ரக் இருப்பதில் என்ன தவறு?’ என்ற கோட்பாடுதான் இந்த சைபர் ட்ரக்கின் வடிவமைப்புக்கு அடிநாதமாக இருந்தது.

ஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்!

சமீபத்தில் நிஸான் அறிமுகப்படுத்திய ஆரியா என்னும் புத்தம் புதிய க்ராஸ் ஓவரை எடுத்துக் கொண்டால், அமெரிக்க டெஸ்லாவின் முன்னெடுப்பை முற்றிலும் நிராகரிக்கும் கான்செப்ட்டாகவே அது இருந்தது. எலெக்ட்ரிக் கார்தான் என்றாலும், வடிவமைப்பில் ஜப்பானிய டச்சும் இருந்தது.

ஐக்கி (iki) என்து ஜப்பானில் அழகியல் சார்ந்த ஒரு வாழ்வியல் கோட்பாடு. இப்படி பல வகையான அழகியல் கோட்பாடுகள் ஜப்பானில் உண்டு. உதாரணம் - Wabi -Sabi.

இந்த ஐக்கி என்னும் அழகியல் தத்துவத்தின் பிரதிபலிப்புதான் ஆரியா. இது ஜப்பானிய ஃபியூச்சரிஸம் என்று நிறுவப்படுகிறது. பெரும் பணக்காரர்களாக இருந்தாலும், பகட்டான உடை - ஆபரணங்களை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தக் காலகட்டத்தில், ஐக்கி என்னும் அழகியல் முறை பின்பற்றப்பட்டது. ஒருவர் மிகவும் அமைதியாவும் அடக்கமாகவும் இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருப்பார். அது அவரது முகத்திலும், நடவடிக்கைகளிலும் தெரியும். நிஸான் மட்டுமல்ல; ஹோண்டா, டொயோட்டா, மஸ்தா போன்ற கார் நிறுவனங்களிலும் இந்த ஐக்கி கோட்பாட்டைப் பார்க்கலாம்.

ஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்!

ஜப்பானியப் பொருட்களுக்கு உலகெங்கிலும் பெரும் மரியாதை கிடைத்திருப்பதில், இந்த ஐக்கி கோட்பாட்டுக்குப் பெரிய பங்கு உண்டு. ஐரோப்பிய சுவர்க் கடிகாரங்கள் இந்தியாவுக்கு வந்தபோது, வீட்டிலிருந்த சிறுவர்களைக்கூட நாம் அவற்றின் அருகில் போக அனுமதிக்கவில்லை. அந்த அளவுக்கு அந்தக் சுவர் கடிகாரங்களைப் பாதுகாத்தோம். அதே கடிகாரங்களை ஜப்பானிய மக்கள், அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அதிலிருக்கும் பாகங்களைக் கொண்டு ஒரு ரோபோவை உருவாக்கினார்கள். விருந்தினர்களை வணங்கி டீ கொடுத்து உபசரிக்கும் அளவுக்கு, `கரகுரு’ (karakuru) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபோவைத் தயார்படுத்தியிருக்கிறார்கள். தங்களை உபசரித்து டீ கொடுக்கும் ரோபோ, தங்களின் சுவர்க் கடிகாரத்தின் உதிரிபாகங்களில் இருந்துதான் உயிர்த்தது என்பதை ஐரோப்பியர்களால்கூடக் கண்டுபிடிக்க இயலாது. காரணம், தொழில்நுட்பம் எந்த நாட்டினுடையது என்றாலும், அதைத் தத்தெடுத்து மேம்படுத்துவதில் ஜப்பானியர்களுக்கு நிகர் யாருமில்லை. கேமராவாக இருந்தாலும் சரி, டிவியாக இருந்தாலும் சரி... அதை மேம்படுத்துவதில் ஜப்பானியர்கள் கில்லாடிகள்.

* ஜப்பானிய மண்ணில் 1904-ல் முதன் முதலில் ஓடிய வாகனம் கார் அல்ல; ஒரு பஸ். நீராவி இன்ஜினில் இயங்கிய அதைத் தயாரித்தவர், தொரவோ யமஹா.

* அதே ஆண்டில் ஜப்பானின் முதல் காரான `Model A’-வை மிட்ஸ்பிஷி ஜோஜென் (Mitsubishi Zozen) தயாரித்தார். மொத்தம் 22 கார்களே உற்பத்தி செய்தார்கள். இந்த கார் அப்போதைய `ஃபியட் A3-3’-ன் தழுவலாக இருந்தது.

* 1930-ல் நிஸான், கார் தயாரிப்பைத் துவங்கி, `ஆஸ்டின் 7’ காரைத் தழுவி ஒரு மாடலை உற்பத்தி செய்தது. ஆனால் இதை விற்பனை செய்ய, அது மிகவும் சிரமப்பட்டது. அந்த நிறுவனம்தான் டொயோட்டா. 1936-ல் `Chrysler airflow’ எனும் அமெரிக்க மாடலை அப்பட்டமாகக் காப்பி அடித்து ஒரு காரை உருவாக்கியது. அதுவும் வாடிக்கையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

* 1930-களில் ஜப்பானிய கார் வர்த்தகத்தைப் பெருமளவில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது - அமெரிக்காவின் 3 பெரிய ஆட்டோமொபைல் கம்பெனிகளான ஃபோர்டு, GM மற்றும் கிரைஸ்லர்தான். யோக்கோஹோமாவில் ஃபோர்டு ஒரு மிகப் பெரிய தொழிற்சாலையையே நிறுவியிருந்தது. ஜிஎம் தன் பங்குக்கு ஒசாகாவில் ஒரு கார் தொழிற்சாலையை நடத்தி வந்தது. 1925-லிருந்து 1936 வரை ஜப்பானில் விற்பனையான அமெரிக்க கார்களின் எண்ணிக்கை 2,08,967. ஆனால், ஜப்பானியத் தயாரிப்புகளின் விற்பனை மொத்தமாகவே 12,127-தான். 1936-ம் ஆண்டு ஜப்பானிய அரசு, ஒரு வாகன உற்பத்திச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, உள்நாட்டுத் தயாரிப்புகளைச் சர்வதேசத் தரத்துடன் தயாரிக்க முன்னெடுப்புகளைச் செய்ய, ஜப்பான் கார் கம்பெனிகளுக்கு அதுவே ஓர் ஆரம்பமாக இருந்தது. அதன் பிறகுதான், `Made in Japan’ என்னும் வார்த்தைகள் பொறிக்கப்பட்ட பொருள்களுக்கு உலகெங்கும் தனி மரியாதை கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுத்தது.

ஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்!

வடிவமைப்பாளராக ஜப்பானிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களில் பல இருந்தாலும், அதில் முக்கியமானது - பாதுகாப்பு, குறைந்த பராமரிப்புச் செலவு, நீடித்த உழைப்பு - எல்லாவற்றுக்கு மேலாக ஆடம்பரமற்ற டிசைன் ஆகியவற்றின் இருப்பிடமாக இருக்கின்றன ஜப்பானிய கார்கள். இதற்கு ஆதாரமான வேர்கள், ஜப்பானிய வாழ்வியல் தத்துவங்களிலிருந்தே தொடங்குகின்றன. ஜென் தத்துவங்களை அவர்கள் தாள்களில் கார்களாக வரைகிறார்கள் . ஜப்பானிய கலை உணர்வாக்கங்களையும், வாபி -சாபி, ஐகி உள்ளிட்ட Aesthetic கலைக் கோட்பாடுகளை காரின் வடிவங்களாகச் செதுக்கி எடுக்கின்றனர். கார் டிசைன் என்பது கார்களின் உள்ளே இல்லை; அது வாழ்வியல் உணர்வுகளைக் கவித்துவமாக, தனித்துவமாகக் கலைப்படுத்துவது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

(வடிவமைப்போம்)