Published:Updated:

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி-பதில்

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

நான் கடந்த சில வருடங்களாக, மஹிந்திரா TUV300 காரை உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது 18 லட்ச ரூபாயில், புதிய எஸ்யூவி வாங்க முடிவெடுத்துள்ளேன். எனக்குப் பல ஆண்டுகளாகவே, ஸ்கார்ப்பியோ (S9) மீது பெரும் விருப்பம் உண்டு. ஆனால் எனது குடும்பத்தினருக்கு, XUV500தான் (W7) பிடித்திருக்கிறது. நண்பர்கள் டாடா ஹேரியர் அல்லது ஜீப் காம்பஸ் ஆகியவற்றில் ஒன்றை வாங்குமாறு கூறுகின்றனர். இதில் ஜீப் காம்பஸ் நன்றாக இருந்தாலும், அது எனது பட்ஜெட்டைத் தாண்டிவிடுகிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் நான்தான் காரைப் பயன்படுத்துவேன் (தினசரி பயன்பாடு 60 கிமீ). நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் மட்டுமே குடும்பத்தினர் என்னுடன் காரில் பயணிப்பார்கள். எப்போதுமே காரை நானே ஓட்டுவேன் என்பதால், டிரைவர் இருக்கை நல்ல உயரத்தில் இருப்பது அவசியம். மேலும், புதிய காரில் எஸ்யூவி பீலிங் இருக்க வேண்டும் என்பதுடன், அது 5 சீட்டர் என்றாலும் ஓகே. இந்த பட்ஜெட்டில் இருக்கும் வேறு ஆப்ஷன்கள் என்னென்ன?

ஆ.சிவசுப்பிரமணியன், சென்னை.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கார்களை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு டீசல் எஸ்யூவிதான் தேவைப்படுவதாகத் தோன்றுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கார்ப்பியோ மற்றும் XUV5OO ஆகிய இரண்டு எஸ்யூவிகளுமே, தமது இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. இதன் புதிய வெர்ஷன்கள் அடுத்த 6-10 மாதங்களில் வெளிவரலாம் என்பதால், இதன் BS-6 மாடல்களை இப்போது வாங்குவது நல்ல முடிவாக இருக்காது. உங்களுக்கு ஸ்கார்ப்பியோ பிடித்திருக்கிறது என்ற ரீதியில் பார்த்தால், டாடா ஹேரியர் உங்களுக்கான சாய்ஸாக இருக்கலாம். XM வேரியன்ட் உங்கள் பட்ஜெட்டில் வரும் என்பதுடன், அதில் போதுமான வசதிகளும் இருக்கின்றன. மேலும் மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டின் டாப் செல்லிங் மாடல்களில் இருக்கும் கியா செல்ட்டோஸைக்கூட நீங்கள் பரிசிலிக்கலாம். இரண்டு கார்களையும் டெஸ்ட் டிரைவ் பார்த்துவிடுவது நலம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மோட்டார் கிளினிக்

எனக்கு 40 வயதாகிறது. சமீபத்தில்தான் கார் ஒட்டுவதற்கான உரிமத்தைப் பெற்றேன். எனவே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் சிறப்பான பூட் ஸ்பேஸ் உடன்கூடிய ஹேட்ச்பேக்கைப் புதிதாக வாங்க ஆசைப்படுகிறேன். எனக்கு மாருதி சுஸூகியின் தயாரிப்புகள் மீது ஈர்ப்பில்லை என்பதுடன், ஹோண்டாவின் பிரியோ மிகவும் பிடித்திருக்கிறது.

- ஜெயராமன், இமெயில்.

பிரியோவின் உற்பத்தியை ஹோண்டா எப்போதோ நிறுத்திவிட்டது. எனவே அது விற்பனை செய்யப்பட்டபோது, அதற்குப் போட்டியாக இருந்த i10 காரின் லேட்டஸ்ட் வெர்ஷனான கிராண்ட் i10 நியோஸ் கார் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். இதில் உங்கள் தேவையான AMT கியர்பாக்ஸ் இருப்பதுடன், போதுமான பூட் ஸ்பேஸும் உள்ளது. மற்ற ஹூண்டாய் தயாரிப்புகள் போலவே, ஸ்டைலான டிசைன் மற்றும் அதிக வசதிகள் என இந்த ஹேட்ச்பேக் கவனத்தை ஈர்க்கிறது. மற்றபடி டீலர் நெட்வொர்க், ரீ-சேல் மதிப்பு, ஒட்டுமொத்தத் தரம், பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றிலும் கிராண்ட் i10 நியோஸ் தனித்து நிற்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோட்டார் கிளினிக்

எனது பட்ஜெட் 6.5 லட்ச ரூபாய். 5 பேர் பயணிக்கக்கூடிய பெட்ரோல் கார்தான் வேண்டும். ஸ்விஃப்ட், டிசையர், வேகன்-ஆர், அல்ட்ராஸ், ட்ரைபர் ஆகியவற்றில் எதை வாங்கலாம்? பல வேரியன்ட்கள் & ஆப்ஷன்கள் இருப்பதால், எனக்கான காரைத் தேர்ந்தெடுப்பதில் ஒரே குழப்பமாக உள்ளது. எனவே தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன்.

- லோகேஸ்வரன், இமெயில்.

ங்கள் பட்ஜெட்டில், போதுமான வசதிகளுடன் கிடைக்கக்கூடிய ஒரே கார் வேகன்-ஆர்தான். இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட டாப் வெர்ஷனைப் பார்ப்பது நல்லது (ZXi). ஏனெனில் நீங்கள் குறிப்பிட்ட மற்ற கார்களும் உங்கள் பட்ஜெட்டில் வரும் என்றாலும், அதில் அதன் ஆரம்ப வேரியன்ட்களைத் தான் வாங்க முடியும். பிராக்டிக்கலான ஃபேமிலி காராகப் பெயர்பெற்ற வேகன்-ஆரில் தற்போது ஸ்விஃப்ட் மற்றும் டிசையரில் இருந்த 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருப்பதால், அது நெடுஞ்சாலைப் பயன்பாட்டுக்கான காராகவும் ப்ரமோஷன் பெற்றுவிட்டது. ஆனால், இதன் குறுகலான வடிவமைப்பு காரணமாக, 5 பேருக்கான இடவசதி கிடைப்பது கொஞ்சம் சிரமம்தான். எனவே உங்களுக்கு 5 சீட்கள் தவிர அதிக பூட் ஸ்பேஸும் தேவை என்றால், ட்ரைபரை நீங்கள் தாராளமாகப் பரிசீலிக்கலாம். இதிலும் வேகன்-ஆர் போல AMT ஆப்ஷன் உண்டு.

மோட்டார் கிளினிக்

நான் கடந்த 6 ஆண்டுகளாக, ஹோண்டா ஆக்டிவாவைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், ஒரு 200-250 சிசி பைக்கை வாங்கத் தீர்மானித்துள்ளேன். நகர்ப்புறங்களில் தினசரிப் பயன்பாடு இருந்தாலும், மாதம் ஒருமுறை பைக்கில் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வேன். சுஸூகி ஜிக்ஸர் 250, யமஹா FZ-S 250, டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 ஆகியவற்றில் எது நல்ல சாய்ஸ்? இதே விலையில் வேறு ஏதேனும் ஆப்ஷன்கள் இருக்கின்றனவா?

- வரூண், சென்னை.

FZ 250 பைக்கின் BS-6 வெர்ஷனை யமஹா இன்னும் அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், அதன் அதிகாரப்பூர்வமான படங்கள் மற்றும் டெக்னிக்கல் விவரங்கள் கொரோனாவுக்கு முன்பே வெளிவந்துவிட்டன. கொரோனா காரணமாக, இந்த பைக் இன்னும் இந்த நிறுவன ஷோரூம்களுக்கு வரவில்லை. ஸ்லிப்பர் க்ளட்ச், புளூடூத் கனெக்ட்டிவிட்டி உடனான மீட்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், KYB சஸ்பென்ஷன், LED ஹெட்லைட் & டெயில் லைட், பின்பக்க ரேடியல் டியூப்லெஸ் டயர் என வசதிகளில் எகிறியடிக்கும் அப்பாச்சி RTR 200, ஏறக்குறைய இதே விலையில் கிடைக்கக்கூடிய பல்ஸர் 200NS உடன் ஒப்பிடும்போது, பெர்ஃபாமன்ஸில் பின்தங்கிவிடுகிறது. நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான ஜிக்ஸர் 250-ல், எதிர்பார்த்தபடியே எந்தவிதமான டூரிங் அம்சங்களும் இல்லை. தவிர போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, டீலர் - சர்வீஸ் நெட்வொர்க் விஷயத்தில் சுஸூகி கொஞ்சம் பின்னடைவைச் சந்தித்து விடுகிறது. எனவே பஜாஜ் அறிமுகப்படுத்தி இருக்கும் டொமினார் 250 பைக், உங்களுக்கான தேர்வாக இருக்கக்கூடும். இதை ஒருமுறை டெஸ்ட் டிரைவ் செய்துவிடுங்கள்.

மோட்டார் கிளினிக்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்துகளால், கியர் அமைப்பைக் கொண்ட/ எடை அதிகமான பைக்குகளை ஓட்ட வேண்டாம் என மருத்துவர்கள் கூறி விட்டார்கள். எனவே, குறைந்த எடை & விலையில் கிடைக்கக் கூடிய டிவிஎஸ் XL 100 மொபெட், எனக்கேற்ற வாகனமாக இருக்குமா?

- மூர்த்தி, திருவள்ளூர்.

ந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே மொபெட்டான XL 100, கம்ஃபர்ட் மற்றும் ஹெவி டியூட்டி எனும் இரு வேரியன்ட்களில் கிடைக்கிறது. சிற்சில வித்தியாசங்களைத் தாண்டி, இரண்டுக்கும் மெக்கானிக்கலாக எந்த வேறுபாடும் இல்லை. BS-6 அப்டேட்டுக்குப் பிறகு, என்ட்ரி லெவல் 100சிசி பைக்குகளுக்கு இணையான விலைக்கு, இந்த டிவிஎஸ் தயாரிப்பு வந்துவிட்டது. LED DRL, USB பாயின்ட், டூயல் டோன் ஃபினிஷ், இன்ஜின் கில் ஸ்விட்ச், டெலிஸ்கோபிக் ஃபோர்க், 16 இன்ச் வீல்கள் என அதை நியாயப்படுத்தும்விதமான அம்சங்கள் அதில் இருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், கனரகப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மொபெட்டின் பெர்ஃபாமன்ஸ், அனைவருக்கும் பிடித்தபடி இருக்காது என்பதே நிதர்சனம். எனவே உங்கள் பட்ஜெட்டை நீங்கள் கொஞ்சம் அதிகப்படுத்தினால், ஸ்கூட்டி பெப் ப்ளஸ் மற்றும் ஹீரோ ப்ளஷர் ப்ளஸ் ஆகியவற்றில் ஒன்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com