கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

நான் பல வருடங்களாக, டொயோட்டா இனோவாவைப் பயன்படுத்தி வருகிறேன். முன்பு அதில் நாங்கள் மொத்தம் 5 நபர்கள் சென்றோம் என்றால், இப்போது வெறும் 2 பேர்தான். எனவே மிட்சைஸ் எஸ்யூவிக்கு மாறலாம் என எண்ணுகிறேன். அதில் அதிக பூட் ஸ்பேஸ் மற்றும் ரோடு கிரிப் இருந்தால் நன்றாக இருக்கும். ஹெக்டர், செல்ட்டோஸ், க்ரெட்டா ஆகியவற்றில் எதை வாங்கலாம்?

செல்வராஜ், வேலூர்.

மோட்டார் கிளினிக்

உங்கள் தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, பூட் ஸ்பேஸில் ஹெக்டரும் ரோடு கிரிப்பில் செல்ட்டோஸும் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் 5 சீட்களைக் கொண்ட ஹெக்டரைப் பொறுத்தவரை, அது நீங்கள் வைத்திருக்கும் இனோவாவை விடவே அளவில் கொஞ்சம் பெரிதாகவே உள்ளது. மேலும் இதிலிருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற கார்களைவிட பவர்ஃபுல் ரகம். எனவே பெரிய & பவர்ஃபுல்லான கார் வேண்டும் என்றால், இந்த எம்ஜி எஸ்யூவி நல்ல தேர்வாக இருக்கும். இல்லையெனில், நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் சுலபமாகப் பயணிக்கும்படியான சைஸில் கச்சிதமாக இருக்கும் செல்ட்டோஸ் பொருத்தமான காராக இருக்கலாம். இதிலிருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், ஸ்மூத்னெஸ் மற்றும் மைலேஜுக்குப் பெயர் பெற்றது. எனவே உங்கள் தேவைக்கேற்ற காரை, டெஸ்ட் டிரைவ் செய்து முடிவெடுங்கள்.

நான் தற்போது வைத்திருக்கும் டிசையர் 1.3 லட்சம் கிமீயைத் தாண்டி விட்டதால், காரை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டேன். நான் புதிதாக வாங்கப்போகும் காம்பேக்ட் எஸ்யூவியின் ரீசேல் மதிப்பு, சிறப்பாக இருத்தல் அவசியம். மேலும் எனது மாதாந்திரப் பயன்பாடு 2,000-2,500 கிமீ வரை இருக்கும் என்பதால், குறைவான பராமரிப்பு - அதிக மைலேஜையும் எதிர்பார்க்கிறேன். மாருதி சுஸூகியில் டீசல் ஆப்ஷனே கிடையாது என்பதால், எந்த பிராண்ட் எனக்கு ஏற்புடையதாக இருக்கும்? எனது பட்ஜெட் 10-12 லட்ச ரூபாய்.

பாலசுப்ரமணியன்.எஸ், பொள்ளாச்சி.

மோட்டார் கிளினிக்

கியா புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் சோனெட், உங்களுக்கு ஏற்ற காராக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஹூண்டாயின் வென்யூவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட காராக இது ஸ்டைலாக நிற்கிறது. இந்த நிறுவனத்தின் செல்ட்டோஸ் போலவே, பல்வேறு இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் மற்றும் அதிகப்படியான சிறப்பம்சங்களுடன் சோனெட் கவனம் ஈர்க்கிறது. போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, பின்பக்க இடவசதியில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி பின்தங்கிவிடுகிறது. மற்றபடி புதிய நிறுவனத்தின் மாடலாக இருப்பினும், ஒட்டுமொத்தத் தரம் மற்றும் ஓட்டுதல் அனுபவத்தில் இது மனநிறைவைத் தந்துவிடுகிறது.

எனது உயரம் 5.1 அடி மற்றும் எடை 60 கிலோ. எனது உருவ அமைப்பிற்கு ஏற்றபடியான புதிய பைக் எது? 150-180 சிசி இன்ஜின் திறனுடன் இருப்பது அவசியம். நான் கடந்த 6 ஆண்டுகளாக, ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கை உபயோகப்படுத்தி வருகிறேன். எடை அதிகமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் எனக்கு ஆர்வம் இல்லை.

மகேந்திரன்.பி, இமெயில்.

மோட்டார் கிளினிக்

160சிசி பைக்குகளிலேயே, குறைவான சீட் உயரம் கொண்ட பைக் அவென்ஜர் ஸ்ட்ரீட் (737மிமீ). மற்றபடி FZ-S V3 பைக்குக்கு அடுத்தபடியாக, இந்த செக்மென்ட்டில் எக்ஸ்ட்ரீம் 160Rதான் எடை குறைவான பைக் (138.5 கிலோ). இரு பைக்குகளுமே, கிட்டத்தட்ட ஒரே செயல்திறனையே வெளிபடுத்தக்கூடும். ஆனால் இவற்றின் பொசிஷனிங் காரணமாக, ஓட்டுதல் அனுபவத்தில் வித்தியாசம் இருக்கும். க்ரூஸர் பைக் அவென்ஜர், நெரிசல்மிக்க இடங்களில் பைக்கை நிறுத்தும்போது, அதன் அதிக நீளம் நெருடலைத் தரலாம். யூ-டர்ன் போடும்போதும் இது பொருந்தும். இதுவே காம்பேக்ட்டாக இருக்கும் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான எக்ஸ்ட்ரீம், நகரச்சாலைகளில் புகுந்து புறப்பட ஏதுவான பைக்காக உள்ளது. ஆனால் இதன் பில்லியன் சீட், அனைவருக்கும் சொகுசாக இருக்குமா என்பது சந்தேகமே!

நான் கடந்த சில ஆண்டுகளாக, அப்பாச்சி RTR 160 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 200-220சிசி பிரிவில் புதிய பைக் வாங்க ஆசை. எனது பட்ஜெட்டான 1.4 லட்ச ரூபாய்க்கு வரும் பல்ஸர் 220, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது தேர்வு சரியானதா?

சஞ்சய் குமார். எம், சேலம்.

மோட்டார் கிளினிக்

கடந்த ஏப்ரல் மாதத்தில், நம் நாட்டில் கொரோனாவுடன் அமலுக்கு வந்த BS-6 மாசு விதிகள் காரணமாக, இரு சக்கர வாகனங்களின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. எனவே பெரிய பைக் வாங்கும் எண்ணத்தில் இருந்த பலர், அதைவிடத் திறன் குறைவான தயாரிப்புகளை வாங்குவதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இதன் வெளிப்பாடாக, பெரிய பைக் போன்ற தோற்றத்தில், சிறிய இன்ஜின் கொண்ட தயாரிப்புகள் அறிமுகமாகின்றன (உதாரணம்: ஹோண்டா ஹார்னெட் 2.0). நீங்கள் குறிப்பிட்ட பல்ஸர் 220 பைக்கைப் பொறுத்தவரை, அதன் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாதது பெரிய மைனஸ். இருப்பினும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், செமி ஃபேரிங், ஆயில் கூலர் கொண்ட இன்ஜின், கேஸ் ஷாக் அப்சார்பர், பேக்லிட் ஸ்விட்ச்கள், டூ-பீஸ் சீட்கள் மற்றும் ஹேண்டில்பார் எனக் குறிப்பிடும்படியான அம்சங்கள் அதில் நிறைந்துள்ளன. மேலும் பழைய இன்ஜினாக இருப்பினும், இந்த பல்ஸரின் 220சிசி இன்ஜினுக்கு என்றே, இன்றும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கிறது. இதனுடன் போட்டி போடும் எக்ஸ்ட்ரீம் 200R/200S/200T ஆகியவற்றின் BS-6 வெர்ஷன்களை, ஹீரோ நிறுவனம் இன்னும் களமிறக்கவில்லை. எனவே ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், உங்கள் பட்ஜெட்டைக் கொஞ்சம் அதிகரித்து, பல்ஸர் 200NS அல்லது அப்பாச்சி RTR 200 ஆகிய பைக்குகளை நீங்கள் பரிசீலிக்கலாம்.

நான் தற்போது பயன்படுத்தி வரும் ஆல்ட்டோவை எக்ஸ்சேஞ்ச்சில் போட்டுவிட்டு, புதிதாக காம்பேக்ட் செடான் வாங்கத் தீர்மானித்துள்ளேன் (திருமணம் ஆகிவிட்டதால், போதுமான இடவசதி & பூட் ஸ்பேஸுடன் கூடிய கார் தேவை). அதிக அராய் மைலேஜைக் கொண்டிருக்கும் டிசையர் எனக்குப் பிடித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் ZXi வேரியன்ட், எனது பட்ஜெட்டில் வருகிறது. எனது தேர்வு சரியானதா? இதே விலையில் கிடைக்கும் அமேஸ் எப்படி இருக்கிறது?

வினு, திருவாரூர்.

மோட்டார் கிளினிக்

மாருதி சுஸூகி கார்களை வைத்திருக்கும் பலர், அடுத்தபடியாகத் தனது புதிய காரையும் அதே நிறுவனத்தில் வாங்குவது என்பது பொதுவான அம்சம். இதற்கு அந்த நிறுவனத்தின் பரந்து விரிந்த டீலர் நெட்வொர்க், கட்டுப்படியாகக்கூடிய பராமரிப்புச் செலவுகள், சிறப்பான ரீ-சேல் மதிப்பு ஆகியவையே காரணம். எனவே அந்த ரீதியில் பார்க்கும்போது, நீங்கள் தற்போது வைத்திருக்கும் ஆல்ட்டோவிலிருந்து டிசையர் ஒரு Logical Upgrade ஆக நிச்சயம் இருக்கும். இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் டூயல் ஜெட் இன்ஜின்தான், போட்டி கார்களில் இருக்கும் Naturally Aspirated இன்ஜின்களைவிடத் தொழில்நுட்பத்தில் அப்டேட்டாக இருக்கிறது. எனவே எதிர்பார்த்தபடியே, இதன் ஆன்-ரோடு மைலேஜ் அவற்றைவிட நன்றாகவே இருக்கக்கூடும். டிசையரை பூட் ஸ்பேஸிலும் பாதுகாப்பிலும் வீழ்த்திவிடும் அமேஸ் (க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங்), அராய் மைலேஜிலும் வசதிகளிலும் பின்தங்கிவிடுகிறது. டிசையர் போலவே 90bhp பவரைத் தரும் 1.2 லிட்டர் i-Vtec பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சிறப்பாக இருப்பினும் (டிசையரில் AMTதான்), இன்ஜின் பெர்ஃபாமன்ஸில் அமேஸ் சோடை போய்விடுகிறது. தவிர பராமரிப்புச் செலவுகளில் மாருதி சுஸுகிக்குச் சவால் விடுத்தாலும், இந்த ஹோண்டாவின் விலை கொஞ்சம் அதிகம்தான்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

மோட்டார் கிளினிக்

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com