
கேள்வி பதில்

என்னிடம் ஒரு மஹிந்திரா கார் இருக்கிறது. என்னுடைய டேஷ்போர்டில், Android Connectivity உடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாங்கிப் பொருத்த நினைக்கிறேன். மேலும் ஆஃப்டர் மார்க்கெட்டில் டச் ஸ்க்ரீன் பொருத்துவதால், ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா? ஏதேனும் கம்பெனிகளை ரெக்கமண்ட் செய்வீர்களா?
– சுந்தரமூர்த்தி, வேலூர்.
கார்களுக்கு இன்ஃபோடெயின்மென்ட் பொருத்துவதில், சில விலை மலிவான சீனத் தயாரிப்புகளிடம் கவனமாக இருக்க வேண்டும். எல்லா ஆஃப்டர் மார்க்கெட் டச் ஸ்க்ரீன் தயாரிப்புகளிலும், CAN (Controller Area Network) பஸ் என்றொரு தொழில்நுட்பம் உண்டு. இது மைக்ரோ கன்ட்ரோலர்கள் மூலம் கார்களுக்குப் பலதரப்பட்ட தகவல்களையும், விஷயங்களையும் தரும். வாகனங்கள் பற்றிய எல்லாவற்றையும் கன்ட்ரோலர்கள் மூலம் ட்ராக் செய்வது இந்த CAN Busதான். இதுதான் நமது ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல்களையும் தங்கு தடையில்லாமல் ஆப்பரேட் செய்ய உதவும். கூடவே, புது டிஸ்ப்ளே யூனிட்டில் உங்கள் காரில் ஏற்கெனவே TPMS (Tyre Pressure Monitoring System) போன்ற தகவல்கள் இருந்தால், அவையும் தெரியும்.
ஏற்கெனவே சொன்னது போல், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட்டில் அதிக ரேம் மற்றும் மெமரி கொண்ட தரம் குறைவான சீன மார்க்கெட்டுகளைப் பொருத்துவதை நாங்கள் ரெக்கமண்ட் செய்வதில்லை. Sony, Blaupunkt, Pioneer போன்ற நம்பிக்கையான பிராண்டுகள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கனெக்டிவிட்டிக்குப் பொருத்தமானவையாக இருக்கலாம். நிறைய பேர் சோனியில் XAV-AX8000 மற்றும் பயனீரில் DMH-Z5290BT போன்றவை நல்ல தங்கு தடையில்லாத சேவையை வழங்குவதாகச் சொல்கிறார்கள்.

காம்பேக்ட் எஸ்யூவி வாங்க இருக்கிறேன். பிரெஸ்ஸா.. வென்யூ… இரண்டும்தான் என் தேர்வு. எது ஓகே?
டேவிட் பால், திருச்சி.
இரண்டுமே அற்புதமான காம்பேக்ட் எஸ்யூவிகள்தான். இரண்டுக்குமே பிராண்ட் வேல்யூ உண்டு. மாருதியில் ஹூண்டாய் அளவுக்கு இப்போது வசதிகளும் வர ஆரம்பித்து விட்டன. சன்ரூஃப் கொண்ட முதல் மாருதி எஸ்யூவி பிரெஸ்ஸா. உங்களின் முக்கியத் தேவை எது என்று சொல்லவில்லை. டிரைவிங்கில் ஒரு பன்ச்சும், ஃபன் டு டிரைவும்தான் முக்கியம் என்றால், ஹூண்டாய் வென்யூவின் 1.0 லிட்டர் டர்போ இன்ஜின் அருமையான தேர்வு. அதிலும் இதன் DCT கியர்பாக்ஸை நெடுஞ்சாலைகளில் விரட்டி ஊருக்குப் போய் வருவது ஜாலியாக இருக்கும். இதன் ரோடு பிரசன்ஸும் அருமை. இதில் 6 காற்றுப்பைகள் என்பது பாதுகாப்பில் ஒரு பலம்.
ஒரு பக்காவான ஃபேமிலி கார் என்றால், பிரெஸ்ஸாவைச் சொல்லலாம். இதிலிருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் – வென்யூ ஓட்டும் அளவுக்கு உற்சாகத்தைக் கொடுக்காது. ஆனால், இதன் தாராள இடவசதி, பிராக்டிக் கலான பராமரிப்புச் செலவுகள் எல்லாமே பக்கா! இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்த இரண்டின் விலைக்கு இணையாக கியா செல்ட்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டாவின் மிட் வேரியன்ட் வாங்கி விடலாம் என்பதும் முக்கியமான விஷயம். இதில் முதல் இரண்டு கார்களைவிட இடவசதியும், ரோடு பிரசன்ஸும் பக்காவாகக் கிடைக்கும்.

நான் ஒரு கார் வாங்கப் போகிறேன். சிஎன்ஜி வாங்கலாமா…
அல்லது பெட்ரோல் வாங்கலாமா என்கிற குழப்பம் இருக்கிறது. அப்படியே சிஎன்ஜி வாங்கினால்.. ஆப்ஷன்களும் குறைவாகவே உள்ளன. என்ன செய்ய?
- சுரேஷ்குமார், நாமக்கல்.
முதலில் உங்கள் தேவை என்ன என்பதை உறுதி செய்யுங்கள். சிட்டிக்குள் மட்டும்தான் ஓட்டுவேன்; மைலேஜ்தான் மிகவும் முக்கியம் என்பவர்கள் மட்டும் சிஎன்ஜி வேரியன்ட்டுக்குப் போவது நல்லது. சிஎன்ஜி வேரியன்ட் என்பது சிட்டிக்கு மிகவும் அற்புதமான கார். சிஎன்ஜியைக் கிலோ கணக்கில் வாங்கலாம். 1 கிலோ சிஎன்ஜியின் விலை உங்கள் பகுதியில் 64 ரூபாய் முதல் 67 வரை விற்கப்படுகிறது. சிஎன்ஜியின் பெரிய ப்ளஸ் – அதன் மைலேஜ்தான். ஒரு கிலோ சிஎன்ஜி–க்கு ஹேட்ச்பேக் கார்கள் – ஆவரேஜாக 20 கிமீ வரை கிடைக்கும். ஒரு ஹேட்ச்பேக் காரில் சிஎன்ஜியின் கொள்ளளவு – 10 கிலோ டேங்க் இருக்கும். இதில் 8 – 9 கிலோ நிரப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 9 X 64 = 576 ரூபாய். 9 X 20 = 180 கிமீ. அதாவது, 576 ரூபாய்க்கு சுமார் 180 கிமீ என்பது அருமையான மைலேஜ்தானே! சிட்டிக்குள் இதைவிட வேறென்ன வேண்டும்? இதில் பராமரிப்புச் செலவும் மிகக் குறைவாகவே சிஎன்ஜி கார்களில் இருக்கும். பெட்ரோலைவிட சிஎன்ஜி கார்கள் பெஸ்ட் என்றே சொல்லலாம்.
சிஎன்ஜி கார்களில் சில குறைகளும் உண்டு. இதில் பூட் ஸ்பேஸை நீங்கள் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டும். 5 பேர் கொண்ட குடும்பம் டூர் அடிப்பதும் கஷ்டம். மேலும், சிஎன்ஜியில் பெர்ஃபாமன்ஸும் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. ஹைவேஸில் பெட்ரோலில் டாகிள் செய்து ஓட்டுவது நலம். மேலும், சிஎன்ஜி கார்களை நடு வேரியன்ட்டில்தான் லாஞ்ச் செய்வதால், வசதிகளும் குறைவாக இருக்கும்.
இப்போதைக்கு டாடாவில் டிகோர், டியாகோ… மாருதியில் வேகன்–ஆர், ஸ்விஃப்ட், ஈக்கோ, டிசையர் போன்றவற்றில் மட்டும்தான் சிஎன்ஜி கார்கள் உண்டு. இதில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ… அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.