பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

வணக்கம். நான் வாலாஜாபேட்டை சரவணன். நான் தினசரிப் பயன்பாட்டுக்கு ஒரு 200சிசி பைக் வாங்கலாம் என்றிருக்கிறேன். என் வயது 38. உயரம் 5.5 அடி. எனக்கு நேக்கட் பைக்குகள் மீதுதான் விருப்பம். இதுவரை ஸ்கூட்டர்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறேன். முதன்முறையாக நேக்கட் பைக் வாங்க இருக்கிறேன். ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T எனக்குப் பிடித்திருக்கிறது. பஜாஜ் NS200–ம் ஆப்ஷனில் இருக்கிறது. உங்கள் பரிந்துரையைச் சொல்லுங்கள்.

- சரவணன், வாலாஜாபேட்டை.

நகரப் பயன்பாட்டுக்காக நேக்கட் பைக்குகளுக்கு மாறவிருக்கும் உங்களது தேர்வு மிகச் சரியானது. நேக்கட் பைக்குகள் சந்து பொந்துகளுக்குள் புகுந்து புறப்பட்டு வர அற்புதமான சாய்ஸ். இதில் ஹோண்டா ஹார்னெட், பஜாஜ் NS200, டிவிஎஸ் அப்பாச்சி RTR200 என ஹேண்ட்லிங்கில் டிஸ்டிங்ஷன் வாங்கும் பைக்குகள் பல உண்டு. இதில் டிசைனில் தனித்துவமானது என்று ஹார்னெட்டைச் சொல்லலாம். அப்பாச்சியும் டிசைனில் சளைத்தது அல்ல என்றாலும், முழுக்க முழுக்க எல்இடி ஹெட்லைட் மற்றும் USD ஃபோர்க்ஸ் கொண்ட இந்த செக்மென்ட்டின் ஒரே பைக் ஹார்னெட்தான். மற்றவை டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்தான். USD ஃபோர்க்ஸ், கட்டுமானத்துக்கும் ரைடிங்குக்கும் சொகுசுக்கும் பெயர் பெற்றவை. அதிலும் தங்கநிற ஃபோர்க்குகள் ஹார்னெட்டைத் தூக்கிப் பிடிக்கின்றன. மேலும் இதுதான் எடை குறைவான பைக்கும்கூட. இதன் எடை 142 கிலோ. மற்றவை 152 மற்றும் 156 கிலோ.

ஸ்லிப்பர் க்ளட்ச், அட்ஜஸ்டபிள் முன்பக்க ஃபோர்க், புளூடூத் கனெக்டிவிட்டி, டிவிஎஸ் ஸ்மார்ட் கனெக்ட் ஆப், நேவிகேஷன் என்று தொழில்நுட்பத்தில் வேற லெவலில் கலக்குகிறது அப்பாச்சி. இதன் ஸ்மூத்தான இன்ஜினும், டீஸன்ட்டான மைலேஜும் பக்கா. ஆனால், உயர்த்தி வைக்கப்பட்ட இதன் ஃபுட் பெக்குகளால் உயரமானவர்கள் ஓட்ட லேசாக சிரமத்தை ஏற்படுத்தும். மற்றவற்றில் இல்லாத டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ் அப்பாச்சிக்குப் பெரிய பலம்.

பஜாஜ் NS200-யை எடுத்துக் கொண்டால், இதில் வசதிகள் மிகவும் குறைவு. பல்ஸரில் சாதாரண ஹாலோஜன் ஹெட்லைட்ஸ்தான். அனலாக் மீட்டரும் அரதப் பழசு. அதேபோல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் ட்ரிப் மீட்டர், கியர் இண்டிகேட்டர், முன் பக்க வீலுக்கு மட்டும் ஏபிஎஸ் – என்று வசதிகள் கொஞ்சம் குறைவுதான். ஆனால், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கில் ஆப்ஷன் பல்ஸரில் மட்டும்தான். ஆனால், பெர்ஃபாமன்ஸ்தான் உங்களுக்கு முக்கியம் என்றால், பல்ஸர் NS200–யைத் தவிர இந்த செக்மென்ட்டில் ஆப்ஷன் இல்லை. இதன் 0–100 கிமீ வெறும் 11 விநாடிகள்தான். மற்றவை கொஞ்சம் பின்தங்கியிருக்கின்றன.

பஜாஜ், டிவிஎஸ் இரண்டின் விலையும் ஒரே பொசிஷனில் இருக்கின்றன. ஹோண்டா ஹார்னெட், இரண்டையும்விட சுமார் 5,000–7,000 ரூபாய் வரை விலை குறைவாகக் கிடைப்பதால், ஹோண்டா ஷோரூமுக்குப் போய் ஒரு டெஸ்ட் ரைடு பாருங்கள். நீங்கள் சொன்ன எக்ஸ்பல்ஸ் 200T – ஒரு அட்வென்ச்சர் பைக் என்பதால், அதைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால், அட்வென்ச்சர் உங்கள் விருப்பம் என்றால், விலைக்கேற்ற தரமான பைக் எக்ஸ்பல்ஸ்200T என்பதில் சந்தேகம் இல்லை.

மோட்டார் கிளினிக்

5 பேர் கொண்டது எங்கள் குடும்பம். ஸ்விஃப்ட் வைத்திருக்கிறேன். அதை எக்ஸ்சேஞ்சில் கொடுத்துவிட்டு ஒரு எஸ்யூவிக்குப் போகலாம் என்றிருக்கிறேன். எனது பட்ஜெட் 18–ல் இருந்து 20 லட்சம் வரை. கியா செல்ட்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டைகூன் – இப்படி ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன். நச்சென ஒரு ஐடியா சொல்லுங்களேன்!

- சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம்.

உங்கள் பட்ஜெட் அருமை. ஆனால், டீசலா பெட்ரோலா என்று சொல்லவில்லை. நீங்கள் கூறியிருக்கும் நான்கு கார்களுமே அருமையான தேர்வுகள்தான். ஆனால், சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், 18 லட்ச ரூபாய் பட்ஜெட் வைத்திருக்கும் நீங்கள் ஏன் ஒரு 7 சீட்டருக்குப் போகக் கூடாது. இதே பட்ஜெட்டில் இருக்கும் எக்ஸ்யூவி700 கார் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும் என்று நினைக்கிறோம். (இதில் 5 சீட்டரும் உண்டுதான்! உங்கள் குடும்பத்துக்கு 7 சீட்டர் சரியாக இருக்கும்!)

ப்ரீமியம் டிசைன் மற்றும் 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் என்று வசதிகளில் ஆரம்பித்து, 7 காற்றுப்பைகள், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், பென்ஸில் இருக்கும் டிரைவர் அலெர்ட் வசதி, டிஃப்ரன்ஷியல் லாக்கிங் செய்ய எலெக்ட்ரானிக் வசதி, ஏபிஎஸ், இபிடி என்று எவ்வளவு பாதுகாப்பு வசதிகள்! டீசல், பெட்ரோல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுமே உண்டு. மேனுவல்/ஆட்டோமேட்டிக் – அதுவும் இருக்கு! அட, 4வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு என்பது இதில் ஸ்பெஷல். ஆனால், அது உங்கள் பட்ஜெட்டில் அடங்காது. பெட்ரோல் மாடலில் டிரைவிங் மோடுகள் மட்டும் மிஸ் ஆகும். டீசலில் Zip, Zap, Zoom என்று டிரைவிங் மோடுகள் வெரடை்டியான அனுபவத்தை வழங்குகின்றன.

2.2லிட்டர் டீசல் இன்ஜினைப் பற்றி நல்ல ரிவ்யூ வந்து கொண்டிருக்கிறது. இது பெர்ஃபாமன்ஸில் பட்டையைக் கிளப்பக்கூடிய இன்ஜின். இதன் பவர் 184.4bhp. மேனுவல் வேரியன்ட்டே உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். இதன் டார்க், ஆட்டோமேட்டிக்கைவிட குறைவு. 42.0kgm. ஆட்டோவில் 45.0kgm. எக்ஸ்யூவி700 வேகமான எஸ்யூவி என்று பெயரெடுத்து விட்டது. சட் சட் என இதன் கியர் ஃபீட்பேக்கும், பவர் டெலிவரியும் அருமையாக இருக்கிறது. இதன் 0–100 கிமீ 10.24 விநாடிகள். 2 டன் எடை கொண்ட காருக்கு இது ஓகே! ‘பெரிய காராச்சே’ என்று பயப்படத் தேவையில்லை. நகரப் பயன்பாட்டுக்குப் புகுந்து புறப்பட்டு வரவும் ஈஸியாகவே இருக்கிறது. இதில் பாடிரோல் குறைவு என்பதும் ப்ளஸ். மேலும் ஓட்டுதல் விரும்பிகளுக்கு 190 கிமீ வரை டாப்ஸ்பீடு போகும் இந்த எக்ஸ்யூவி700. பொதுவாக, மஹிந்திரா கார்களில் க்ளட்ச் நம்மைச் சோர்வடைய வைத்துவிடும். ஆனால், எக்ஸ்யூவியில் க்ளட்ச் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. மேலும், தற்போதுள்ள எம்ஜி ஆஸ்டர் காருக்கு முன்பே ADAS (Advanced Driver Assistance System) வசதியுடன் வந்த முதல் இந்திய கார் எக்ஸ்யூவி700. மேலும் இதில் ரேடார் உதவியுடன் இயங்கும் கேமரா, FWC (Forward Collision Warning) உடன், நாம் எதிலாவது இடிக்கப் போகிறோம் என்றால் அலெர்ட் செய்யும். தானாக பிரேக் பிடிக்கும் அட்டானமஸ் பிரேக்கிங் சிஸ்டமும் சூப்பர்.

ஒரு சப் 4 மீட்டர் எஸ்யூவியைப் போல் இதன் விலை இருப்பதுதான் ப்ளஸ். உங்களுக்கு 20.07 லட்சத்துக்கு AX5 7 Seater Manual Diesel வேரியன்ட் சரியாக இருக்கும். 7 சீட்டர் என்றாலும், கடைசி வரிசை சும்மா பெயருக்குத்தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் லக்கேஜுக்கும் சரியாக இருக்கும். இதைவிட சற்று பவர் குறைந்த எஸ்யூவி வேண்டும் என்றால், அல்கஸார், டாடா சஃபாரியைக்கூட டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள்.

மோட்டார் கிளினிக்

நான் அண்மையில் எம்பிவி ஒன்றை செகண்ட் ஹேண்டில் நல்ல விலைக்கு வாங்கியிருந்தேன். 60,000 கிமீ ஓடியிருந்தது. நன்றாகவே இருந்தது. அண்மையில் ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, மலைப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. கல்லட்டி மலைச்சாலை வழியாக மலையேறியபோதே, காருக்குள் லேசாக ஒரு கருகிய வாசம் அடித்தது. கவர்னர் வருகிறார் என்று ஊட்டியில் ஒருவழிப் பாதையாக மாற்றிவிட்டார்கள். கடுமையான டிராஃபிக் வேறு. மலையேற்றங்களில் மிதந்து மிதந்து ஒருவழியாக ஊட்டி வந்தபிறகு, பானெட்டில் இருந்து ஓவராகப் புகை வரத் தொடங்கிவிட்டது. கறுகல் வாசமும் அதிகமாகி விட்டது. பயந்துபோய், காரை நிறுத்தினேன். கொஞ்ச நேரம் கழித்து, கியர் விழவே இல்லை. ஆனால், கிளட்ச் மிதிக்காமல் வெறுமனே கியர் போட்டால், விழுந்தது. பிறகு மெக்கானிக் ஷாப்பில் விட்டு 10,000 ரூபாய்க்கு கிளட்ச் பிளேட்டை மாற்றிவிட்டுத்தான் கிளம்பினேன். திடீரென எப்படி இது நேர்ந்திருக்கும்?

– லட்சுமணன், திருநெல்வேலி.

எப்போதுமே நெடுஞ்சாலை களைவிட மலைப் பயணங்களில் மட்டும் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். காரணம், ஹில் ஸ்டேஷன்களில் அதிகமாக ஓடும் வாகனங்களின் தேய்மானம் மிகவும் அதிகமாக இருக்கும். நீங்கள் வாங்கிய வாகனம், 60,000 கிமீ ஓடிவிட்டது என்று சொல்லியிருக் கிறீர்கள். ஒரு வாகனத்தின் கிளட்ச் செட், 40,000–க்கு மேல் தாங்காது. நீங்கள் அதை வாங்கும்போதே கிளட்ச் அசெம்பிளியின் லைஃப்டைம் தாண்டியிருக்கும். அதைத் தாண்டி, நீங்கள் காரை மலைச்சாலையில் வேறு ஓட்டியிருக்கிறீர்கள். அதுவும் கல்லட்டி மலைச்சாலையில் இரண்டாவது கியருக்கு மேல் ஏறவே முடியாது. மேலும், ஊட்டி டிராஃபிக்கில் நீங்கள் மலையேறும்போது, ஹாஃப் கிளட்ச்சிலேயே ஏறியிருப்பீர்கள். அதனால்தான் கிளட்ச் சூடு ஏற்பட்டு, கிளட்ச் பிளேட்டின் உள்ளே உள்ள பாகங்கள் கறுகும் வாசனை அடிக்க ஆரம்பிக்கும். லேசாக வாசனை அடிக்கும்போதே, காரை நிறுத்தி இருக்கலாம். அதோடு காரை ஓட்ட ஓட்ட பெரும்புகைப்படலம் ஏற்பட்டு, கிளட்ச் அசெம்பிளியே ஜாம் ஆகிவிட்டது. கார் ஆஃப் ஆகியிருக்கும்போது கியர் விழும்; அதுவே கிளட்ச் மிதித்து கியர் போடும்போது கியர்ஷிஃப்ட் என்கேஜ் ஆகவில்லை என்றால், கிளட்ச் பிளேட் மெட்டீரியல் உள்ளே ஜாம் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

வேறு வழியே இல்லை; கிளட்ச் பிளேட்டை மாற்றித்தான் ஆக வேண்டும். அதைத்தான் மெக்கானிக் சென்டரில் செய்திருக்கிறார்கள். மலைச் சாலைகளில் டிராஃபிக்கில் பயணிக்கும்போது, டிராஃபிக்கில் பாதி கிளட்ச்சில் பயணித்தால்தான் கார் கீழே இறங்காமல் இருக்கும் என்பது உண்மைதான். மேனுவல் கியர் கார்களில் இதற்கு வேறு வழியில்லை. எனவே, கிளட்ச் பிளேட்டின் வாழ்நாளை உறுதி செய்து கொள்ளுங்கள். இதுகூடப் பரவாயில்லை; சிலர் பிரேக் பிடித்தபடியே மலை இறங்குவார்கள். இது அதைவிடப் பெரிய ஆபத்து. தேவையான இடங்களில் மட்டும் பிரேக் பிடியுங்கள். அளவான கியரிலேயே இறங்குங்கள். பிரேக்கில் கால் வைத்தபடியே மலை இறங்கினால் பிரேக் பேடுகள் சூடாகி, இதேபோல் ஜாம் ஆகிவிட்டால் பிரேக் பிடிக்காது. எனவே, மலைப்பாதைகளில் நடுவே ரெஸ்ட் எடுத்துவிட்டு, சூடு ஓய்ந்தபிறகு வண்டியைக் கிளப்புங்கள்.

மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்

எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம். டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் USD ஃபோர்க்ஸ் – இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? நம் ஊர்ச் சாலைகளுக்கும் பைக்குகளுக்கும் எது பெஸ்ட்? ஹேண்ட்லிங்கில் எது பக்காவாக இருக்கும்? கொஞ்சம் விளக்குங்களேன்!

– பாலமுருகன், திருச்செந்தூர்.

நம் ஊரில் டூ–வீலர்களைப் பொருத்தவரை பிரபலமாக இருப்பது இரண்டே இரண்டு ஃபோர்க்குகள்தான். டெலிஸ்கோப்பிக் மற்றும் USD ஃபோர்க்ஸ். இதில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ்தான் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்யூட்டர் மற்றும் பட்ஜெட் பைக்குகளில் இருப்பவை. இதில் இன்டர்நெல் ஸ்ப்ரிங் காயிலுடன் ஹைட்ராலிக் ட்யூப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.இதன் ஒரு முனை, T வடிவ ட்ரிப்பிள் க்ளாம்ப்பின் உதவியோடு இரண்டு ஃபோர்க்குகளில், பைக்கின் ஸ்டீயரிங்குடன் இணைக்கப் பட்டிருக்கும். இதன் இன்னொரு முனை, பைக்கின் வீல்களைச் சுற்ற வைக்க உதவும் Spindle எனக்கூடிய சுழல்அச்சில் இணைக் கப்பட்டிருக்கும். இதில் இந்த ஸ்ப்ரிங் காயில்தான் உங்கள் பயணத்தை எளிதாக்குகிறது. அதாவது, பைக்கின் மொத்த எடையையும் இந்த ஸ்ப்ரிங் மற்றும் டேம்பர்கள்தான் தாங்கும். சாதாரணமாக நாம் பயன்படுத்தும் பைக்குகள் முதல் ஸ்கூட்டர்கள் வரை இருப்பது டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் செட்–அப்.

இதற்கு அடுத்த வசதிதான் USD எனப்படும் Up Side Down ஃபோர்க்ஸ். பெரிய தொழில்நுட்பம் என்று சொல்ல முடியாது; ஆனால், இதில் பலன் ஏராளம். வேறொன்றுமில்லை; டெலிஸ்கோப்பிக்கின் அப்படியே உல்டா செட்அப்தான் USD. டெலிஸ்கோப்wபிக்கில் மேலே உள்ளது கீழேயும்; கீழே உள்ளது மேலேயும் USD–யில் இருக்கும். இதைத்தான் அப்சைடு டவுன் ஃபோர்க் என்கிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், தடியாக உள்ள பகுதி டெலிஸ்கோப்பில் கீழே இருக்கும். இது USD–யில் மேலே இருக்கும். டெலிஸ்கோப்பில் மெல்லிசாக உள்ள ஃபோர்க் மேலே உள்ளது என்றால், இதில் கீழே இருக்கும். இதை டெக்னிக்கலாக UnSprung Mass என்கிறார்கள். அதாவது வீல், பிரேக்ஸ், டயர், ரைடரின் எடை என மொத்தத்தையும் அந்த ஸ்ப்ரிங் தாங்குவதைத்தான் UnSprung Mass என்று சொல்கிறார்கள். மெல்லிசான பகுதி கீழே வருவதால், UnSprung Mass நன்றாகக் குறைகிறது. இதனால் சஸ்பென்ஷனின் டிராவலும் ரியாக்ஷனும் அதிகமாக இருக்கும். இதனால் பள்ளத்தில் இறக்கும்போது, கார்னரிங் செய்யும்போது, சடர்ன் பிரேக் அடிக்கும்போது என பைக்கின் ஹேண்ட்லிங் வேகமாகவும், சொகுசாகவும் இருக்கும். எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், வேகமாக ஓடும் சிறுத்தை, மான் போன்ற விலங்குகளின் கால் வடிவமைப்பைச் சொல்லலாம். மெல்லிசான கால்கள் இருப்பதால்தான் வேகம் சாத்தியம் ஆகிறது. அதிக பவர் கொண்ட பெர்ஃபாமன்ஸ் பைக்குகளில் இந்த USD ஃபோர்க்குகளின் செயல்பாடு அபாரமாக இருக்கும். முதன் முதலாக கேடிஎம்தான் USD ஃபோர்க்ஸைக் கொண்டு வந்தது. இப்போது ஹோண்டா ஹார்னெட், பஜாஜ் டொமினார் சீரிஸ், கேடிஎம் டியூக் சீரிஸ், லேட்டஸ்ட் யமஹா ஆர்15 வெர்ஷன்–4 போன்ற பைக்குகளில் USD ஃபோர்க்குகள் வருகின்றன. இதில் பிரச்னையும் உண்டு. ஆயில் லீக்கேஜ் ஆனால் பிரேக்குகள், வீல்கள், சாலை என்று ஒழுக ஆரம்பித்தால்… சர்வீஸ் செலவில் பர்ஸைப் பதம் பார்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு