Published:Updated:

திருநெல்வேலி - மணலாறு அருவி: மனசையும் நனைக்கும் மணலாறு அருவி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பிஎம்டபிள்யூ X5 (டீசல்)

பிரீமியம் ஸ்டோரி

‘‘இந்த கிரேட் எஸ்கேப்புக்கு என்ன கலர் கார்ல போலாம்’’ என்றார் நவாஸ். ‘ஓவர் பில்டப்பா இருக்கே’ என்றுதான் நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டம் அடித்தது பிஎம்டபிள்யூ X5–க்கு. திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கும் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் நவாஸிடம், ‘‘இந்த X5 விலைக்கு ஜாகுவார் F–Pace எஸ்யூவி வாங்கியிருக்கலாமே?’’ என்று ஐடியா சொன்னால்... ‘‘அது வீட்ல ஏற்கெனவே நிக்கி’’ என்று பதில் கொடுக்கிறார். ‘‘X7 புது ஜெனரேஷன் வந்திருக்கே... பார்த்தீங்களா’’ என்றால்... ‘‘X7 புக் பண்ணிட்டன்லா. நாளைக்கு டெலிவரி ஆயிடும் பார்த்துக்கிடுங்க!’’ என்று காதில் புகை வர வைக்கிறார்.

ஆம்! நவாஸின் கராஜில் லம்போகினி, ரோல்ஸ்ராய்ஸ், மஸராட்டி, பென்ட்லி போன்ற சிலவற்றைத் தவிர்த்து, சுமார் 12-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

 திருநெல்வேலி - மணலாறு அருவி:  மனசையும் நனைக்கும் மணலாறு அருவி!

‘‘X5–ல ஒரு குட்டி ஆஃப்ரோடு, சாஃப்ட் ரோடு பண்ணலாமா?’’ என்றபோது, நச்சென ஓர் இடத்தைச் சொன்னார். ‘‘குற்றாலம்னா மெயின் ஃபால்ஸ், ஐந்தருவிதான தெரியும். குற்றாலத்தை வெச்சு ‘டேம் ஸ்பெஷல்’னு ஒரு ஆர்ட்டிக்கிளே போடலாம் பார்த்துக்கிடுங்க! அதைவிட கேரளா பார்டர்ல அச்சங்கோயில் போற வழியில ஓர் அருமையான இடம் இருக்குல்லா... பேரு மணலாறு அருவி. வாரியளா?’’ என்று திருநெல்வேலி பாஷையில் பேசி குதூகலப்படுத்திவிட்டார்.

கூடவே தனது நண்பர் ராஜசரவணனையும் போன் அடித்து, ‘ஏல, வாலே மச்சி!’’ என்று உடன் ஏற்றிக்கொண்டார். மணலாறு அருவி நோக்கிப் பறந்தது ஒரு கோடி ரூபாய் பிஎம்டபிள்யூ X5.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அச்சங்கோவில் என்பது கேரளா பார்டர். மணலாறு அருவியும் கேரளாவில்தான் வரும். குற்றாலம் வழிதான் மேப் சொல்லியது. குற்றாலத்துக்குப் போய் தண்ணி விழவில்லை என்றால் ஏமாற்றத்தோடு திரும்பும் வெளியூர்வாசிகள் இருக்கிறார்கள். ஆனால், லோக்கல் வாண்டர்லஸ்ட்டுகள் பாலருவி, மணலாறு, கும்பவுருட்டி, குண்டாறு, பண்பொலி, கண்ணுப்புளிமெட்டு என்று வெரைட்டியாக எதையாவது கண்டுபிடித்து என்ஜாய் பண்ணுவார்கள்.

 திருநெல்வேலி - மணலாறு அருவி:  மனசையும் நனைக்கும் மணலாறு அருவி!

திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்துக்குப் போகும் சாலை, பீக் அவர்ஸ் மவுன்ட்ரோடுபோல எப்போதுமே நெருக்கியடிக்கிறது. அதுவும் வீக் எண்ட் என்றால் யாரைக் கேட்டாலும், ‘‘குத்தாலத்துக்குத்தேன்... அஞ்சருவியில தண்ணி ‘பொத பொத’னு வுழுகுதாம்லா; டி.வியில காண்பிச்சானுவ... எண்ணெய்க் குளியல் போட்டாத்தானுங் உடம்பு ஃப்ரீயாகும்ங்’’ என்று பலவித தென்மாவட்ட பாஷைகளில் பேசிச் சொக்க வைக்கிறார்கள்.

தென்காசி, செங்கோட்டையில் பச்சைப் பசேல் சாலைகள் வித்தை காட்டின. புகைப்பட நிபுணர் காரை நிறுத்தி நிறுத்தி டயர்டு ஆக்கினார். செங்கோட்டை என்றாலே பார்டர் கடை புரோட்டாதானே? இன்னோர் அருமையான ஆப்ஷன் சொல்லவா? செங்கோட்டை போகும் வழியில் ‘நந்தினி கூரைக்கடை’ எனும் கூரை வேய்ந்த ஓட்டலில், ‘மட்டன் சுக்கா, சிக்கன் ஃப்ரை, இறால் வறுவல்’ என்று அசைவப் பிரியர்களுக்கு ஜென்ம சாபல்யம் கொடுக்கிறார்கள். ‘சோறு முக்கியம் பாஸ்’ டீம் கவனிக்கலாம்!

போகும் வழியில் இலஞ்சி எனும் இடத்தில் நவாஸ் நடத்தும் செய்யது பள்ளிக்கூடத்தில் ஓர் அட்டென்டென்ஸ் போட்டுவிட்டுக் கிளம்பினால்... பண்பொலி எனும் இடம். இங்குள்ள திருமலைக்கோவில் எனும் முருகன் கோயில், ஆன்மிக அன்பர்களுக்கு அற்புதமான ஆப்ஷன். ஃபார்ச்சூனர், ஸ்கார்ப்பியோக்களையே படாத பாடுபடுத்தி ஆட வைக்கும் மாலை நேரக் காற்றுதான் இங்கே ஸ்பெஷல்.

 மணலாறு அருவிக்கு இந்த வழியில்தான் ட்ரெக்கிங்
மணலாறு அருவிக்கு இந்த வழியில்தான் ட்ரெக்கிங்

பச்சைப் பசேல் வயல்களுக்கு நடுவே பிஎம்டபிள்யூவை விரட்டினால், அடவிநயினார் அணை வந்தது. ‘‘அணையில் இப்போ தண்ணி இல்லை’’ என்று தகவல் கிடைத்தது. ஆனால், மேலே அருவி இருப்பதாகச் சொன்னார்கள். கொஞ்ச நாள்களுக்கு முன்பு சில `குடிகார வாய்'கள் குடித்துவிட்டுப் போட்ட பாட்டில் துண்டுகளைக் கண்டு, கலெக்டர் இங்கே டூரிஸ்ட்டுகள் வருவதற்குத் தடா போட்டு விட்டாராம்.

குற்றாலம் வருபவர்களுக்குத் தங்குவதற்குப் பஞ்சமே இல்லை. ஆனால், வீக் எண்டில் முன்பதிவு இல்லாமல் தெரியாத்தனமாக நுழைந்துவிட்டால், அவ்வளவுதான். கொஞ்சம் தள்ளி மேக்கரை எனும் இடத்தில் மோகன் ரெஸார்ட் என்று ஒன்று உண்டு. பிக்கல் பிடுங்கல் இல்லாமல் கவனிக்கிறார்கள்.

போகும் வழியெல்லாம் இதுபோன்ற பெயர் தெரியா அருவிகள்...
போகும் வழியெல்லாம் இதுபோன்ற பெயர் தெரியா அருவிகள்...

ரெஸார்ட்டுக்குப் பக்கத்திலேயே மெல்லிசாக ஓர் அருவி விழுந்து கொண்டிருந்தது. பெயரெல்லாம் இல்லை என்றார்கள். நனைந்தால், உடல் சிலிர்த்துக் கொள்ளும் அளவு ஜில்னெஸ். இங்கே ஜீப் சவாரி உண்டாம்.

ரெஸார்ட்டில் தங்குபவர்களுக்கு தள்ளுபடி இருக்கிறது. வெளியாட்களுக்கு ஜீப்புக்கு 2,500 ரூபாய் கட்டணம். மேலே மோகன் அருவி என்றொரு தனியார் அருவிக்கு ஜீப் மூலம் ஆஃப்ரோடு சவாரி கூட்டிப் போவார்களாம்.

பண்பொலி தாண்டி குண்டாறு எனும் அணைக்குப் பக்கத்திலும் இப்படி ஒரு ஆப்ஷன் உண்டு. ஜீப் மட்டும்தான் போக முடியும் என்கிற, வழியே இல்லாத வழியில் கூட்டிப் போகிறார்கள். போகும் வழியெல்லாம் அருவிகள் சலசலத்து மனசையும் உடம்பையும் நனைக்கின்றன.

 கேரள செக்போஸ்ட்... பிளாஸ்டிக் தடை...,  நந்தினி கூரைக்கடை... நான்/ஜிஎஸ்டி, நான்/வெஜ் ஹோட்டல்...
கேரள செக்போஸ்ட்... பிளாஸ்டிக் தடை..., நந்தினி கூரைக்கடை... நான்/ஜிஎஸ்டி, நான்/வெஜ் ஹோட்டல்...

ரெஸார்ட்டில் அதிகாலை, காணவே கிடைக்காத காட்டுக் கருங்குரங்குகள், ஆள்காட்டிக் குருவிகள் விருந்தாளிகளாக வந்து அட்டெண்டன்ஸ் போட்டார்கள். லேட்டஸ்ட் புள்ளிங்கோ ஸ்டைலில் ஹேர்ஸ்டைல் வைத்திருந்த கருங்குரங்கு ஒன்று, பிஎம்டபிள்யூவின் சன் ரூஃபில் தாவித் தாவி விளையாடியது ஜாலியாக இருந்தது. இ்ந்நேரம் சன்ரூஃப் திறந்திருந்தால், பிஎம்டபிள்யூவின் இன்டீரியர்... அவ்வ்வ்வ்..!

மேக்கரை தாண்டியதும் மலைப்பயணம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. ஊட்டி, மசினகுடி, வால்பாறை போன்ற இடங்களை நினைவுபடுத்தியது போதையேற்றும் மலைப்பாதை. தமிழ்நாடு, கேரளா செக்போஸ்ட்டுகளில் கையெழுத்துப் போட்டோம். ‘‘பிளாஸ்டிக்லாம் கொண்டு போகலையே’’ என்று மலையாளத் தமிழில் ஓர் அதிகாரி காரைச் சோதனை போட்டார்.

நம் ஊரில் தெரியாத இடத்தில் போனால் திடீர் திடீரென ஸ்பீடு பிரேக்கர்கள், மேடு பள்ளங்கள் வருமே... அதுபோல், அச்சங்கோயில் போகும் பாதையில் திடீர் திடீரனெ அருவிகள், ஓடைகளின் சலசலப்புகள் அழகாய் இம்சை கூட்டின. எந்த அருவிக்கும் பெயரே இல்லை.

போகும் வழியில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, மான் எல்லாம் உண்டு என்றார்கள். சுடச் சுட யானைச் சாணத்தைப் பார்த்தோம். ‘பாகுபலி’ சைஸில் ஒரு பெரிய மான் ஒன்று மிரண்டபடி வனத்துக்குள்ளிருந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது, விகடன் சொல்வனத்துக்கான விஷுவல். ‘`இது சாம்பார் மானா.. மிளா மானா’’ என்று X5-க்குள் சண்டை மூண்டது.

 மனசையும் உடம்பையும் சேர்த்து நனைக்கும் மணலாறு அருவி...
மனசையும் உடம்பையும் சேர்த்து நனைக்கும் மணலாறு அருவி...

கொஞ்ச தூரம் தள்ளி கும்பவுருட்டி எனும் அருவி வந்தது. அருவியில் 2 பேர் அண்மையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இப்போதைக்குத் தடை போட்டிருப்பதாகச் சொன்னார்கள். கும்பவுருட்டிக்குச் சில கி.மீ தள்ளி ‘மணலாறு அருவி’ எனும் போர்டும், ‘கேரள வனத்துறை வரவேற்கிறது’ எனும் அறிவிப்புப் பலகையும் கொஞ்சம் டேமேஜ் ஆனபடி வரவேற்றன. ‘‘யானைங்களோட சேட்டை தம்பி... சுக்காப்பி சாப்பிடுறீயளா?’’ என்றார் டிவிஎஸ்50-ல் கடை வைத்திருந்த அண்ணாச்சி ஒருவர். கப்பங்கிழங்கும் சுக்குக்காபியும் செம டேஸ்ட்.

உள்ளே நுழைய 25 ரூபாய் கட்டணம். கார் பார்க்கிங்கிலேயே இரண்டு கிளைகளாக விழுந்து, நான்காகப் பிரிந்து, எட்டாகப் பரவி காடு முழுவதும் ஓர் அருவி சலசலத்துக் கொண்டிருந்தது. நீரோடையில் ஆண் குரங்குகள் பாதுகாப்பில் பெண் குரங்குகள் கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தன.

600 மீட்டர் காட்டுக்குள் ட்ரெக்கிங். 6 மணிக்கு மேல் மணலாறுக்குள் அனுமதி கிடையாது. சும்மாவா பின்னே... காட்டெருமைத் தடங்கள், யானைச் சாணம் என்று பகலிலேயே பீதியைக் கிளப்பியது ட்ரெக்கிங் ஏரியா.

கருங்குரங்கு தரிசனத்துக்கு அதிர்ஷ்டம் வேணும்...,  இது சாம்பார் மானா, மிளா மானா!
கருங்குரங்கு தரிசனத்துக்கு அதிர்ஷ்டம் வேணும்..., இது சாம்பார் மானா, மிளா மானா!

மணலாறு அருவி பெரும்பான்மை யானவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பாதையெங்கும் மணலாறு அருவி நிற்காமல் இசை மீட்டியபடியே ஓடிக்கொண்டிருந்தது.

300 மீட்டரிலேயே ஓர் அருவி வந்தது. அதைத் தாண்டி மேலே பயணித்தால்... 20 அடி உயரத்தில் இருந்து, தனியாய்... தனித்துவமாய் விழுந்துகொண்டிருந்தது மணலாறு அருவி. ‘‘செங்கோட்டையில 3 வருஷமா வேலை பாக்கேன்... இப்படி ஒரு அருவி இருக்கிறதே இன்னிக்குத்தான் தெரியும்னா பார்த்துக்கிடுங்களேன்’’ என்று ஒரு நெல்லைவாசி மணலாற்றில் மசாஜ் செய்துகொண்டிருந்தார் ஒரு நெல்லைவாசி. லக்கேஜ் போன்ற விஷயங்களைக் குரங்குகளிடம் மட்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு, அருவியின் அருகில் போய் ஜில்லென்று நீரை உடலில் வாங்கினால்... மனசும் சேர்ந்து நனைந்தது.

bmw
bmw

சும்மா வேடிக்கை பார்க்கும் ஐடியாவில் வந்தவர்களைக்கூட விடவில்லை மணலாறு. ‘இந்தப் படத்தை இன்று மாலைக்குள் 10 பேருக்கு ஷேர் செய்யுங்கள். அற்புதமான பலன் கிடைக்கும்’ என்று மணலாறு அருவியில் நனைந்தபடி எடுத்த செல்ஃபியை ஒரு வாட்ஸ்–அப் குரூப்பில் பரவ விட்டோம். ‘‘வாவ்... மணலாறா... அது எங்க இருக்கு’ என்று 100-க்கும் மேல் ரிப்ளைகள் வந்து குவிந்திருந்தன.

நோட் பண்ணுங்க!

மணலாறு அருவி பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. காட்டுக்குள் இருப்பதாலும், முக்கால் கி.மீ ட்ரெக்கிங் போக வேண்டும் என்பதாலும் இங்கே கூட்டம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், வீக் எண்டில் வாண்டர்லஸ்ட்டுகள் மணலாற்றை வளைத்துவிடுகிறார்கள்.

மலைப்பாதை என்பதால் யானைகள், மான்கள் போன்ற காட்டு விலங்குகள் க்ராஸிங் அதிகமாக இருக்கும். வாகனங்களில் செல்வோர் லிமிட்டெட் வேகத்தில் செல்வது நல்லது. நாங்கள் போகும்போது பெரிய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சாலையை மெதுவாகக் கடந்துகொண்டிருந்தது.

மணலாற்றைத் தாண்டிப்போனால் அச்சன்கோயில். அதைத் தாண்டி சபரிமலை. ஒரே நேரத்தில் ஆன்மிகம் + த்ரில்லிங் டூரிங் அடிக்க, இந்த அச்சன்கோயில் மலைப்பாதை அற்புதமான சாய்ஸ். குற்றாலம் வந்தால், மணலாற்றுக்கு வண்டியை விட மறக்காதீர்கள்.

பார்க்க வேண்டியவை:(குற்றாலத்தில் இருந்து)

குற்றாலம் என்றால் அருவி, எண்ணெய்க் குளியல்தானே தெரியும். இங்கே அணைகள் எக்கச்சக்கம் உண்டு. அடவிநயினார், கடப்பாநதி, கடணாநதி, ராமநதி, மணிமுத்தாறு என்று குற்றாலத்துக்கு வந்தால், எல்லா அணைகளுக்கும் ஒரு ரவுண்டு போய் வந்துவிடுங்கள்.

ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவியைத் தாண்டி தனியார் அருவிகள் குற்றாலத்தில் அதிகம். எருமச்சாடி, கரிக்குளம், டைமண்ட், மோகன், கண்ணுப்புளி மெட்டு, குண்டாறு, மணலாறு, கரடி அருவி, ராஜா, காட்டாற்று அருவி என்று ஏகப்பட்ட தனியார் அருவிகளையும் மறக்காதீர்கள்.

குண்டாறு (14 கி.மீ)

கீழே அணை. அணைக்கு மேலே உள்ள அருவிகளுக்கு, ஆஃப்ரோடு ஜீப் சவாரி உண்டு.

கும்பவுருட்டி அருவி (29 கி.மீ)

குற்றாலத்துக்கு வருபவர்கள், கும்ப வுருட்டிக்கு வந்து போகலாம். காட்டுக்குள் அமைந்திருக்கும் அற்புதமான அருவி.

பாலருவி (27 கி.மீ)

பால் போல் விழுவதால், இதற்குப் பாலருவி என்று பெயர்.

தென்மலை (35 கி.மீ)

கேரளா பார்டரில் அமைந்திருக்கும் தென்மலை, இயற்கை விரும்பிகளுக்குப் பிடித்த ஸ்பாட். அருவி, வியூ பாயின்ட், வனவிலங்குச் சரணாலயம், எஸ்டேட் என்று எல்லாமே உண்டு.

செண்பகா தேவி அருவி (10 கி.மீ)

இங்கு அனுமதி வாங்கித்தான் போக முடியும். காட்டு விலங்குகள் அதிகம் உலவும் இடம். த்ரில்லிங் பிரியர்களுக்குப் பிடிக்கும்.

பிஎம்டபிள்யூ X5 எப்படி?

பார்க்க பெரிய காராக இருந்தாலும், X5, பெயருக்கு ஏற்றபடி 5 சீட்டர்தான். XL சைஸில் இருக்கும் ஆசாமிகள் 5 பேர் தாராளமாகப் போகலாம். இதைத் தாண்டி 650 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருந்தது. கண்ணாடிபோல் பளபளக்கும் கிரிஸ்டல் கிளியர் கியர் லீவரே இதன் ப்ரீமியம் தரத்தைச் சொல்லிவிடும்.

பொதுவாக, காற்றுப்பைகள்தான் பக்கவாட்டில், நேரில் என்று இருக்கும். X5–ல் பின் பக்க ஏ.சி வென்ட்களையே அப்படி அமைத்திருக்கிறார்கள். 265 bhp பவர், சும்மா சாலைகளில் வெறித்தனம் காட்டுகிறது. ஆஃப்ரோடிலும் சும்மா சொல்லக்கூடாது. கி.கிளியரன்ஸும் 200–க்கு மேல்.

இதன் படா 20 இன்ச் டயர்களில் செம கிரிப். நேவிகேஷனில் இருந்து 360 டிகிரி கேமரா வரை எல்லாமே உண்டு. ‘கையை ஆட்டினாலே பாட்டுப் பாடும் ஸ்டீரியோ சிஸ்டம், இந்த X5–ன் ஸ்பெஷல். ‘‘எல்லாமே சூப்பரா இருக்குல்லா... ஆனா விலைதான் ஒரு கோடியே மூன்று லட்சம் ஆயிட்டு. இம்புட்டுக் காசுக்கு ஃப்யூச்சர்ஸ் கம்மிதான் பார்த்துக்கிடுங்க! 80 லட்சம்னா இந்த X5 ஓகே!’’ என்றார் நவாஸ்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு