Published:Updated:

குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!

குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!
பிரீமியம் ஸ்டோரி
குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!

திருநெல்வேலி – செண்பகா தேவி அருவி

குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!

திருநெல்வேலி – செண்பகா தேவி அருவி

Published:Updated:
குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!
பிரீமியம் ஸ்டோரி
குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!

ரு ஷாப்பிங் மால் போய்விட்டு, எதுவுமே வாங்காமல் எப்படித் திரும்ப முடியாதோ... அதுபோல்தான் குற்றாலம். குற்றாலத்துக்கு வண்டியை விட்டால் நனையாமல் திரும்ப மனசு வராது. நனையாமல் திரும்பினால், அதற்கு ஒரே ஒரு காரணம் – கூட்டமாகத்தான் இருக்கும்.

குற்றாலத்தில் கூட்டம் கும்மியடித்தால், சிலர், ‘என்னடா இது’ என்று சில நேரங்களில் கடுப்பில் அப்படியே ரிட்டர்ன் ஆகிவிடுவார்கள். ஆனால் விவரம் தெரிந்த வாண்டர்லஸ்ட்டுகள் – பாலாறு, குண்டாறு, பண்பொலி, கடனாநதி அணை, ராமநதி அணை, அச்சன்கோவில், மணலாறு, கும்பாவுருட்டி, தென்மலை என்று சில முக்கியமான இடங்களுக்கு வண்டியை விடுவார்கள். அப்படி ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன குற்றாலத்தில்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘குற்றாலத்தில் செண்பகா தேவி அருவிக்குப் போகலாமா? நிச்சயம் யாரும் போயிருக்க மாட்டாங்க! அங்க அனுமதி வாங்குங்களேன்... போலாம்!’’ என்று ரிக்வொஸ்ட் வைத்திருந்தார், ரவி. நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணிபுரியும் ரவி, மஹிந்திரா பிரியர் இல்லை; வெறியர். மஹிந்திரா கார்களைப் பற்றிக் குறைகூறினால், திட்டி பாடம் எடுத்து விடுவாரோ என்று பயமாகவே இருந்தது. ‘‘மஹிந்திரா கார் தவிர எதுவும் வாங்கமாட்டேன். ரொம்ப வருஷமா ஸைலோ வெச்சிருந்தேன். இப்போ மராத்ஸோ!’’ என்றார் ரவி. ‘‘என் பசங்களுக்கு லீவு கிடைக்காது. அதான் என் மாணவனைக் கூட்டி வந்திருக்கேன். இவன் இசக்கிராஜ்’’ என்று அறிமுகப்படுத்தினார்.

குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!
குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!

4 பேரை மட்டுமே ஏற்றிக்கொண்டு, 4 சிலிண்டர் - 7 சீட்டரான டீசல் மராத்ஸோ, செண்பகா தேவி அருவிக்குக் கிளம்பியது.

‘‘6.5 கி.மீ நடக்கணும். காத்தாலேயே ஆரம்பிச்சிட்டோம்னா வெயில் இருக்காது. 7 மணிக்குலாம் வந்தீங்கன்னா நல்லாருக்கும்’’ என்று முந்தின நாள் செண்பகாதேவி கோவில் பூசாரி ராஜா நமக்கு அறிவுறுத்தியிருந்தது அடுத்த நாள் காலை 7 மணிக்குத்தான் நினைவுக்கே வந்தது.

பூசாரியிடம் வழிந்து கொண்டே டைம் ஷெட்யூல் மாற்றச் சொல்லிவிட்டு, மராத்ஸோவுக்கு டீசல் நிரப்பி, வயிற்றுக்கு காபி நிரப்பி என்று திருநெல்வேலியில் இருந்து 8 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டோம். சீஸன் டைம் என்றில்லை; குற்றாலத்துக்கு பீக் அவர்ஸ் என்றாலே சீஸன் மாதிரிதான் இருக்கும். கொஞ்சம் டிராஃபிக், நிறைய டர்போ லேக் என்று மராத்ஸோவில் பயணம் ஆரம்பித்தது.

தென்காசி தாண்டி காலை உணவுக்கு, அலைந்தோம். காரின் டெம்பரேச்சர் மீட்டரும், வெளியே சூரியனும் சில பல டிகிரிக்கு மேல் தகித்துக் கொண்டிருந்தார்கள். குற்றாலமே வந்துவிட்டது. ‘லஞ்ச்க்கே போயிடலாமோ’ என்கிற முடிவுக்குக்கூட வந்துவிட்டோம். அதிர்ஷ்டவசமாக அம்மா உணவகம்தான் கைகொடுத்தது. இது அரசு நடத்தும் அம்மா உணவகம் இல்லை; தனியார் உணவகம். ‘கடைசி நேரத்துல வந்துருக்கீயளே’ என்று வாஞ்சையாக உணவளித்தார்கள்.

 மனித வாடை அறியா காட்டுக்கு நடுவில் 
செண்பகா தேவி அம்மன் கோயில்...
மனித வாடை அறியா காட்டுக்கு நடுவில் செண்பகா தேவி அம்மன் கோயில்...

மெயின் ஃபால்ஸ், பழைய குற்றாலம் என்று பலவற்றையும் தாண்டி, ஐந்தருவிக்குப் போகும் வழியில், வனத்துறை அலுவலகம் பக்கத்தில் நம்மை அழைத்துச் செல்ல பூசாரி ‘டிவிஎஸ்50’–ல் காத்துக் கொண்டிருந்தார். ‘‘மெயின் ஃபால்ஸ்ல, பழைய குற்றாலத்துல குளிச்சிருப்பீங்க... அதோட ஸ்டார்ட்டிங் பாயின்ட்டுக்குத்தான் இப்போ போறோம்’’ என்று பேராசிரியருக்கே பாடம் எடுத்தார் பூசாரி.

சில ஆண்டுகள் முன்பு வரை செண்பகா தேவி அருவிக்கு, எல்லோருக்கும் அனுமதி வழங்கிக் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் செய்த சேட்டையால் விலங்குகளுக்கு ஏற்பட்ட தொந்தரவு, காட்டுக்கு ஏற்பட்ட சீரழிவு போன்றவற்றால் இப்போது இதைத் தடை செய்துள்ளார்கள். வனத்துறையிடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற ஐடி–க்களைச் சமர்ப்பித்து, முறையான அனுமதி வாங்கித்தான் போக வேண்டும்.

சிற்றருவிக்குச் செல்லும் பாதையைத் தாண்டி, 100 மீட்டரில் வனத்துறை அலுவலகம். உள்ளே போனால் இரண்டாம் உலகமாய் விரிந்து கொண்டே போனது பாதை.

 மெயின் அருவி, சிற்றருவி, ஐந்து அருவி, அந்த அருவி, இந்த அருவி என்று எல்லா அருவிகளுக்கும் இதுதான் தல!
மெயின் அருவி, சிற்றருவி, ஐந்து அருவி, அந்த அருவி, இந்த அருவி என்று எல்லா அருவிகளுக்கும் இதுதான் தல!

‘வேள்பாரி’யில் கபிலரை அழைத்துச் செல்லும் நீலன்போல், நம்மை வெறுங்காலிலேயே அழைத்துப் போனார் பூசாரி. ‘‘இதுல யாரு கபிலர்?’’ என்று காமெடி செய்தார் பேராசிரியர். ‘‘பாதத்தால பூமியைப் பிடிச்சு நடந்தாதான் காட்டோட உயிர்ப்பு தெரியும்ணே... செருப்புப் போடாம காடேறினாத்தான் பலன்!’’ என்று ‘நீலன்’போலவே சொன்னார் பூசாரி.

உள்ளே நுழைந்த கொஞ்ச தூரத்திலேயே அருவிச் சத்தம் நம்மை அலெர்ட் செய்து கொண்டே வந்தது. வழியில் ஓர் ஓடையில் கால்/முகம் நனைத்த பேராசிரியரைக் கவனமாக இருக்கச் சொன்னார் பூசாரி. ‘‘இந்த மாதிரி ஓடைங்கள்ல பார்த்து இருக்கணும்ணே... அட்டைப் பூச்சிங்க சட்டுனு மூக்குல ஏறிடும் பார்த்துக்கிடுங்க!’’

ஓரிடத்தில் கேட் கதவு போட்டு வைத்திருந்தார்கள். அதுதான் சிற்றருவி என்றார்கள். சிற்றருவியில் ஜாலியாகக் குளிக்கலாம். பெரிய அணைக்கட்டிலிருந்து விழுவதுபோல் விழுந்தது சிற்றருவி. 6 ரூபாய் கட்டணம்.

 7 கி.மீ ட்ரெக்கிங்... ஹாட்டுக்கு எல்லாமே ரூட்டுதான்!
7 கி.மீ ட்ரெக்கிங்... ஹாட்டுக்கு எல்லாமே ரூட்டுதான்!

‘‘இனிதான் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி... பார்த்து வாங்க’’ என்று அலெர்ட் செய்தார் பூசாரி. நிச்சயம் மனிதர்களுக்கான பாதை மாதிரி தெரியவில்லை. இதுதான் அகத்தியர் வந்த பாதை என்றார். ராஜ ராஜ சோழன் காலத்துக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த அகத்தியர் இந்த இடத்தில் தவம் செய்ததாக வரலாறு உண்டு. நிஜமாக இருக்கலாம்.

சட்டென ஓரிடத்தில் பாறைகள், மலைகள் நிரம்பிய வெட்டவெளி. அருவியில் குளிக்காமலே ஈரமாகி இருந்தோம். வெயில் நனைத்திருந்தது. ‘‘அதான் உங்களைச் சீக்கிரம் வரச் சொன்னேன்’’ என்று குத்திக் காட்டினார் பூசாரி. ‘‘இனிமே வேர்க்காது. ஃபுல்லா குளுகுளுன்னு இருக்கும்.’’ என்று ஆறுதலும் சொன்னார்.

நிஜம்தான். வெயில் மறைந்து குளுமை பரவியது. காட்டுக்குள் இடது பக்கம் செடி கொடிகளை வளைத்து உள்ளே போனால்... ஓரிடத்தில் வியூ பாயின்ட் வந்தது. இதுதான் மெயின் ஃபால்ஸ் என்றார்கள். அதாவது, மெயின் அருவியின் டாப்பில் நின்று கொண்டிருந்தோம். கீழே மெயின் அருவியில் குளித்துக்கொண்டிருந்த சிலர், ‘இவனுக எப்படி டாப்புக்குப் போனாங்க’ எனும் குழப்பத்தில் நம்மைப் பார்த்திருக்கலாம்.

இரும்புப் பாலம், பாறை, புல்வெளி, மணல்வெளி, சிற்றோடைகள் என்று ஹாலிவுட் த்ரில்லர் படம் பார்ப்பதுபோல் இருந்தது பாதை. ‘‘யானைங்க நைட்டுதான் வரும். ஆனா, இந்நேரம் மிளா மான், கரடி, பாம்பு இருக்கலாம்’’ என்று கிலியேற்றினார் ராஜா.

போகும் வழியெங்கும் அட்டைப் பூச்சிகள், ரயில் பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் என்று வெரைட்டியாக கண்ணுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது காடு. ``இந்த மரத்துக்கு 800 வருஷம் ஆச்சு. வெள்ளம், மழை எதுக்கும் ஒண்ணும் ஆகலை. சந்தன மரத்தைவிட காஸ்ட்லியாக்கும்’’ என்று சாய்ந்து கிடந்த மரத்தைக் காட்டினார் பூசாரி. செண்பக மரங்கள் நிறையத் தெரிந்தன. அதனால்தான் இதற்கு செண்பகா தேவி அருவி என்று பெயர் வந்திருக்கலாம்.

 அகத்தியர் போன பாதையில் குளு குளு ட்ரெக்கிங்...
அகத்தியர் போன பாதையில் குளு குளு ட்ரெக்கிங்...

6.5 கி.மீ–க்கு மேல் நடந்திருப்போம். களைப்பே தெரியவில்லை. சுத்தமான காற்றை உள்ளே இழுத்தால், புத்துணர்ச்சிதானே வரும்! ஃப்ரெஷ்ஷாகவே இருந்தோம். செண்பகா தேவி அம்மன் கோவில் ஆர்ச்சே த்ரில்லிங்காக வரவேற்றது.

கடவுள் கையெழுத்துப் போட்டதுபோல் கிடக்கும் பொதிகை மலைக்கு இடையில், அகத்தியர் காலடித்தடங்கள் படிந்ததாகச் சொல்லப்படும் காட்டுக்கு நடுவில், மனித வாடை அறியா வனத்துக்கு மத்தியில் செண்பகா தேவி கோவில், பேரழகோடு இருந்தது. கோவில் கற்சுவரில் ஆங்காங்கே மீன் படங்கள் வரைந்திருந்ததை வைத்து, இது பாண்டியர்கள் கட்டிய கோயில் என்கிறார்கள். கோவில் அமைந்திருந்த விதமே, டைம் மெஷினில் ஏறி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயணிக்க வைத்ததுபோல் ஒரு போதையை ஏற்றியது.

ஒவ்வொரு சித்ரா பெளர்ணமி தினத்தன்றும் இந்த அம்மன் கோயிலில் திருவிழா நடக்குமாம். செண்பகா தேவி அருவிக்கு வருபவர்கள், பெளர்ணமி அன்று வந்து இந்த காட்டுக்குள் தங்கி விட்டுக்கூடச் செல்லலாம். அதற்கும் ஐடி புரூஃப், நண்பர்கள் அறிமுகம் அவசியம்.

 அருவி நீரில் அட்டைப் பூச்சிகள் ஜாக்கிரதை...
அருவி நீரில் அட்டைப் பூச்சிகள் ஜாக்கிரதை...

செண்பகா தேவி கோவிலில் இன்னொரு விசேஷம் – இங்குள்ள சடையச்சி பாட்டி. அருவிக்குப் பக்கத்தில் ஒரு குகை... அதுதான் பாட்டியின் வீடு. 18–வது வயதில் திருமணம் முடிந்த அடுத்த மாதமே கணவரைப் பிரிந்து, இங்கே வந்து செட்டில் ஆகியிருக்கிறார் சடையச்சி. பாட்டிக்கு இப்போது வயது 89. ஆனால் துறுதுறுவென இருக்கிறார். 40-களில் வெள்ளைக்காரத் துரைகள் கடத்திக் கொண்டு போய், அதிலிருந்து தப்பித்து... மறுபடியும் இங்கே வந்து செட்டில் ஆகி...என்று பாட்டியின் கதையை சீரியஸான வெப்சீரிஸாகவே எடுக்கலாம்போல! ஒரு வேளை மட்டும் சமைத்துச் சாப்பிட்டு, 70 ஆண்டுகள் சுத்தமான காற்றைச் சுவாசித்து வாழ்கிறார் பாட்டி.

‘‘நைட்டு விலங்குகள்லாம் வருமே பாட்டி?’’ என்றால், ‘‘அதுங்க பாட்டுக்கு வரும் போகும். செண்பகா தேவி அம்மன்தான் துணை. இன்னும் 200 வருஷம்கூட இங்கேயே இருப்பேன்’’ என்று திடுக்கிட வைக்கிறார்.

 மெயின் அருவியின் டாப் இதுதான்...
மெயின் அருவியின் டாப் இதுதான்...

கோயிலுக்குப் பின்னால் அருவிச்சத்தம் அளப்பறை பண்ணியது. ஆர்வம் தாங்கவில்லை. அரசாங்கம் இதற்கு பில்ட்–அப் கொடுப்பது சரிதான். இத்தனை கி.மீ வரை ஒரு பிளாஸ்டிக் சமாச்சாரமோ, குப்பைகளோ தென்படவில்லை. ஒளவையார் கோயிலுக்குப் பக்கத்தில் இரண்டு கிளைகளாக, சுமார் 30 அடியில் இருந்து பயங்கர இரைச்சலுடன் அருவி விழுவதைப் பார்த்தால்... கவிஞர்கள் சும்மா விடமாட்டார்கள். மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவி, அந்த அருவி, இந்த அருவி என்று சுமார் 5 அருவிகளுக்கு இதுான் மூலம் என்றார்கள். அதாவது காவிரிக்கு ‘தல காவிரி’போல, குற்றால அருவிகளுக்கு இதுதான் ‘தல!’

அருவியின் ஓரமாக நின்று சாறலில் நனைந்தபடி ஒரு போட்டோ ஷூட். ‘சாமுராய்’ பட விக்ரம் போல் ‘இயற்கைத் தாயின் மடியில் விழுந்து’ என்று ஃபீல் செய்ய ஆரம்பித்திருந்தார் ரவி. அருவி நீர் கீழே விழும் இடம் 100 அடி ஆழம் இருக்கும் என்றார் பூசாரி. அருவியின் வேகம் அப்படி. அங்கேயும் ஓரமாக, பாதுகாப்பாக இறங்கி என்ஜாய் பண்ணலாம். ஆனால், குளிப்பதில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ‘ஆழத்துக்குப் போகக்கூடாது’ என்று வனத்துறை எச்சரித்திருந்தது.

உண்மைதான்... பும்ராவின் பந்துவீச்சு போல் 140 கி.மீ வேகத்தில் விழுகும்போல! அருவி நீர் கீழே விழுவதைத் தலைக்கு வாங்கினால் நிச்சயம் தலை பழுத்துவிடும். இருந்தாலும் மனசில்லை. இப்போது முதல் வரியைப் படியுங்கள்.

என்ன பார்க்கலாம்?: (குற்றாலத்தில் இருந்து)

மெயின் ஃபால்ஸ், ஐந்தருவி போன்றவற்றைத் தாண்டி அணைக்கட்டுகள், முக்கியமாக தனியார் அருவிகள் எக்கச்சக்கம் குற்றாலத்தில் உண்டு. எருமச்சாடி, கரிக்குளம், டைமண்ட், மோகன், கண்ணுப்புளி மெட்டு, குண்டாறு, மணலாறு, கரடி அருவி, ராஜா அருவி, காட்டாற்று அருவி என்று வெரைட்டியான அருவிகளில் நனையலாம். அணைக்கட்டுகளும் எக்கச்சக்கம். அடவிநயினார், கடனாநதி, கடப்பாநதி, ராமநதி என்று எல்லா அணைக்கட்டுகளையும் ஒரு ரவுண்டு அடித்து விடுங்கள்.

செந்துருணி சரணாலயம் (39 கி.மீ)

தென்மலை போகும் வழியில் உள்ளது. வனவிலங்குகள் தரிசனம் கிடைக்கும்.

பொன்முடி (102 கி.மீ)

திருவனந்தபுரத்தில் இருக்கும் ஹில் ஸ்டேஷன். அணைக்கட்டு, வியூ பாயின்ட், அருவிகள், ஓடைகள் என்று எல்லாம் உண்டு.

பெப்பாரா வனவிலங்குச் சரணாலயம்

(112 கி.மீ)

ட்ரெக்கிங்குக்கு அற்புதமான இடம். அணைக்கட்டு, காரமனா ஆற்றில் போட்டிங் இதன் ஸ்பெஷல். யானை, காட்டெருமை, ஹார்ன்பில், ட்ரீப்பி எனப்படும் ஆள்காட்டிக் குருவிகள் என்று பறவைகள், விலங்குகள் வரை எல்லாம் உண்டு.

மணலாறு அருவி (28 கி.மீ)

அச்சன்கோவில் போகும் வழியில் கும்பவுருட்டி, மணலாறு, மேகா அருவி என்று அருவிகளாக நனையலாம்.

வாழ்வாந்தல் அருவி (104 கி.மீ)

கானிதாரா எனும் இடத்திலிருந்து யூகலிப்டஸ் மரங்களுக்கு இடையில் ட்ரெக்கிங் ஆரம்பிக்கும். கைடு உதவியுடன் 5 கி.மீ ட்ரெக்கிங் போக வேண்டும். இங்கே இரண்டு அருவிகள் உண்டு.

நோட் பண்ணுங்க!

சில ஆண்டுகள் முன்பு வரை செண்பகா தேவி அருவிக்கு அனுமதி இருந்தது. மனிதர்கள் செய்த சேட்டையால் விலங்குகளுக்கு ஏற்பட்ட தொந்தரவு, காட்டுக்கு ஏற்பட்ட சீரழிவு போன்றவற்றால் இப்போது இதைத் தடை செய்துள்ளார்கள். ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் நடைபெறும் திருவிழாவுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். சிற்றருவி செல்லும் வழியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஆதார் கார்டு, ஐடி புரூஃப் காட்டி, அனுமதியுடன்தான் போக முடியும்.

பொதிகை மலையினூடே 7 கி.மீ ட்ரெக்கிங் நடந்தால், செண்பகா தேவி அம்மன் கோவில் வருகிறது. வழியெங்கும் செண்பக மரங்கள் நிறைந்திருப்பதால்கூட இந்தப் பெயர் வந்திருக்கலாம். காடு முழுக்க ஒரு பிளாஸ்டிக் கூட இல்லை என்பதே இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. விலங்குகள், பாம்புகள், அட்டைப் பூச்சிகள் உண்டு. மெயின் ஃபால்ஸின் மெயின் வாட்டர் சோர்ஸ், இந்த செண்பகாதேவி அருவிதான். 100 அடி ஆழம் என்பதால், அருவியில் குளிக்கத் தடை. ஆனால், சுத்தமான காற்றை நுரையீரலில் வாங்க வேண்டும் என்றால், செண்பகா தேவி மலைக்குச் சுத்தமாக ஒரு ட்ரெக்கிங் போய் வாருங்கள்.

மராத்ஸோ எப்படி?

சுறா மீனின் இன்ஸ்பிரேஷனைக் கொண்டதாலோ என்னவோ, எதிர்க்காற்றை அழகாகக் கிழித்துக்கொண்டு போகிறது மராத்ஸோ. 7, 8 சீட் என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கும் மராத்ஸோவில், சுமார் 15 கி.மீ மைலேஜ் கிடைப்பதாகச் சொன்னார் பேராசிரியர் ரவி. ஃப்ரன்ட் வீல் டிரைவ் என்பதால், எக்கச்சக்க இடவசதி உண்டு. ரூஃபில் ஏ.சி வென்ட்டுகள் அட்டகாசம். ‘‘வைப்ரேஷன் கம்மி, ஏகப்பட்ட ஸ்டோரேஜ் ஸ்பேஸ், யுஎஸ்பி சார்ஜர், டச் ஸ்க்ரீன், பெரிய மிரர்கள் என எதிலுமே எனக்குக் குறை சொல்ல முடியவில்லை. உள்ளே ஃபிட் அண்ட் ஃபினிஷ்தான் கொஞ்சம் அதிருப்தி’’ என்கிறார் ரவி.

குற்றால அருவிகளுக்கெல்லாம் இது தல!

ஹைவேஸிலும் மேடுபள்ளங்களிலும், நிலைத்தன்மையாகவும் கட்டுறுதியாகவும் இருக்கிறது மராத்ஸோ. இன்ஜின் பன்ச் கொஞ்சம் குறைவு, டர்போ லேக் என்று சில குறைகள் இருந்தாலும், இனோவாவுக்குப் போட்டியாக இருக்கிறது மராத்ஸோ. இருந்தாலும் 18 லட்ச ரூபாய் காரில் கீலெஸ் என்ட்ரி, பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ ஹெட்லைட், வைப்பர்கள் இல்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்தான்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!