
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: வேகன்–ஆர்
“ஊரு விட்டு ஊரு வந்து கொரோனா கிரோனா பரப்பாதீங்க''னு ராமராஜன் கவுண்டமணி ஸ்டைலில், ஹெச்ஆரும் ஆசிரியரும் மெயில் போட்டு விட்டார்கள்.
``கையைக் கழுவுங்க; இருமாதீங்க; யாருக்கும் கைகொடுக்காதீங்க; சேர்ந்து இருக்காதீங்க... பிரிஞ்சே இருங்க... வேற்றுமைதான் கொரோனாவைத் துரத்த ஒரே வழி’’ என்று நம் ஊர் அலுவலகத்திலேயே அத்தனை கெடுபிடி. கேரளா சும்மா இருக்குமா என்ன? இந்த மாதம் பரம்பிக்குளம்தான் கிரேட் எஸ்கேப் டெஸ்ட்டினேஷனாக இருந்தது; கேரள காடுகளுக்குச் செல்ல தடா போட்டு விட்டது கேரள அரசு என்று, பொள்ளாச்சிக்குப் போய் இறங்கியதும்தான் தகவல் சொன்னார்கள்.

``அதுனால என்ன... நாம வால்பாறை போற வழியில் தலநார்னு ஓர் அற்புதமான எஸ்டேட்டுக்குப் போகலாம்; போற வழியில ஆத்துப்பாறைனு ஓர் அற்புதமான இடத்தில் கால் நனைச்சுட்டுப் போகலாம். யாருக்கும் இது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! என் தம்பியையும், அவனோட மனைவியையும் புல்லட்டில் ஃபாலோ பண்ணச் சொல்லிடுறேன்’’ என்றார், நமது நீண்ட நாள் பெண் வாசகரான பிங்கி. ``பெங்களூர்ல இருந்து டிரைவ் பண்ணிட்டு வர்றேனாக்கும்... அப்டியே கிளம்பலாமுங்ளா!'' என்று வேகன்–ஆரிலும், புல்லட்டிலும் பொள்ளாச்சியில் இருந்து பயணம் தொடங்கியது.
கொரோனாவால் என்டர் ஆக முடியாத 37 டிகிரி வெயிலில்தான் வேகன்–ஆரையும், புல்லட்டையும் ஸ்டார்ட் செய்தோம். ``பொள்ளாச்சி காய்ங்க; டேஸ்ட்டா இருக்கும்'' என்று சில இளநீர் வியாபாரிகளிடம் சென்னையில் வசமாக ஏமாந்திருக்கிறேன். ஆனால், பொள்ளாச்சியில் பொள்ளாச்சி இளநீர்... பதநீர்.. என்று செம குளுகுளு பயணம். வெயிலே தெரியவில்லை.

பொள்ளாச்சியில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வால்பாறை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், திருமூர்த்திமலை, மறையூர், லக்கம் அருவி, தூவானம், மூணார் என்று சுற்றி எக்கச்சக்க இடங்கள் உண்டு. ஆனால், பொள்ளாச்சியில் இருக்கும் பலருக்கே ஆத்துப்பாறை தெரிய வாய்ப்பில்லை. ``ஆத்துப்பாறையா... அது எங்க இருக்கு!'' என்று அதிர்ச்சியூட்டினார், பொள்ளாச்சியில் 14 ஆண்டுகளாக செட்டில் ஆகியிருந்த நமது நண்பர் ஒருவர்.
‘‘வின்னர் படத்துல வடிவேலு பேர்பாடியோட குளிப்பார்ல.. அந்த இடம்னு கேட்டுப் பாருங்க’’ என்றார் பிங்கி. ஆம்! ‘தம்பி, இது கலவர பூமி; ஆண் சிங்கங்கள் பாதுகாப்பில் பெண் சிங்கங்கள் குளிச்சிட்டு இருக்கு.. போங்க தம்பி’ என்று வடிவேலு, பிரசாந்த்தைக் கலாய்ப்பாரே... அதே இடம்தான் ஆத்துப்பாறை.

‘ஆக்ஷுவலா இந்த பெண் சிங்கங்கள் பாதுகாப்பில்தான் நீங்க வர்றீங்க’ என்று டைமிங்காய்க் கலாய்த்தார் செளமியா. தென்னைமரங்கள் சூழ், பனை மரங்கள் சூழ் பொள்ளாச்சி ரோட்டில் செமயான போட்டோ ஷூட்.
பொள்ளாச்சி – ஆத்துப்பாறை என்று கூகுளில் டைப் செய்தால், போனா போகுது என்று சில ஃபேஸ்புக் பக்கங்களும், சில வாண்டர்லஸ்ட் பார்ட்டிகளின் பிளாக்குகளும்தான் வரும். அந்தளவு இன்னும் ஃபெமியிலியர் ஆகாத ஸ்பாட் ஆத்துப்பாறை. ஆனால், சுந்தர்.சி போன்ற இயக்குநர்களின் ஃபேவரைட் லொக்கேஷன் இது.

ஆத்துப்பாறைக்கு சைன் போர்டு எதுவும் இல்லை. விசாரித்துத்தான் போக வேண்டும். சும்மா வெளியில் விசாரித்தோம். நிறைய பேருக்குத் தெரியவில்லை. ‘‘உள்ளூர்க்காரங்க நாங்க இருக்கோமுல்ல; கவலைப்படாதீங்’’ என்று, ஆழியார் போகும் வழியில் ஆனைமலை, கோட்டூர், பொங்காளியூர் ஆகிய ஊர்களைத் தாண்டி மயிலாடுதுறை எனும் இடத்துக்குக் கூட்டிப் போனார்கள்.
மயிலாடும்பாறை, மயிலாடுதுறை, ஆத்துப்பாறை என்று மூன்றுவிதமாக அழைக்கிறார்கள் இந்த ஏரியாவை. சட்டெனத் திரும்பிய ஓர் இடத்தில் இருந்த பாட்டி கடையொன்றில் கம்பங்கூழைக் குடித்துவிட்டு, வலதுபுறம் வாகனங்களை நிறுத்திவிட்டு, வயக்காட்டோரோம் ஒரு 400 மீட்டர் ட்ரெக்கிங்.

மாங்காய் சுண்டல், மசாலாப் பொரிகடலை என்று என்ட்ரன்ஸிலும் ஒரு பாட்டி. ‘‘ஊருக்குப் புதுசுங்ளா... ரொம்ப சோர்வா தெரியிறீயளே... சுண்டல் சாப்பிடுங்க!’’ என்றார் பாட்டி. பாட்டிக்குப் பின்னாடி ஒரு கும்பல் சிக்கன் சமைத்துக் கொண்டிருந்தது. ‘‘திருப்பூர்ல இருந்து வாராவாரம் வந்துடுவோமுங்க!’’ என்று சிக்கனை டேஸ்ட் செய்தபடி சொன்னார் ஒரு டீம் லீடர்.
ஆத்துப்பாறை கிட்டத்தட்ட 10 அடி ஆழம் என்றார்கள். ஷூவைக் கழற்றி, பேன்ட்டை மடித்துவிட்டு அணைக்கட்டு போன்றதொரு பாறையில் கால் நனைய நடந்துபோனால், யாருமே குழந்தைதான். ஆழியாரில் இருந்து வரும் தண்ணீர் என்பதால், கடைசியாக ஓர் இடத்தில் மட்டும் செம ஃபோர்ஸாக விழுந்து கொண்டிருந்தது தண்ணீர். லொக்கேஷனைப் பார்த்ததும் வடிவேலுதான் மனசில் வந்து போனார்.

இளசுகள் செம டைவ் போட்டுக் கலங்கடித்தார்கள். வாண்டுகள் அதைவிட! பாறைக்கு நடுவிலும் இன்னோர் பாட்டி கடை. வெள்ளரிக்காயோ, அன்னாச்சியையோ கடித்துவிட்டு ஆத்துப்பாறையில் டைவ் அடித்துக் குளித்தால்... இரவு அப்படியோர் தூக்கம் வரும் என்று நான் நினைத்தது சரியாகத்தான் போனது.
ஆத்துப்பாறையில் திகட்டத் திகட்டக் குளித்துவிட்டு, அப்படியே ஆழியார். ஆழியார் வரும் பெரும்பாலானவர்கள் அணைக்கட்டைப் பார்த்து வாய் பிளந்துவிட்டு, மீன் வறுவலை ருசித்துவிட்டு, பார்க்கில் செல்ஃபி எடுத்துவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், அணைக்கு எதிரே தெருத் தெருவாக உள்ளே போனால், `ஆத்துப்பாறைக்கு அண்ணன்’ போன்ற ஒரு லொக்கேஷன் இருக்கும். இதையும் விசாரித்துத்தான் போக வேண்டும்.
கல்லூரிச் சுற்றுலா போல... ஆண்கள் 33%–க்கும் குறைவாகத்தான் இருந்தார்கள். பெண் சிங்கங்கள்தான் அதிகம் இருந்தார்கள். அதனால் புகைப்படத்துக்குத் தடா! ஆற்றில் இறங்க படிகூட இல்லை. யாராவது கைகொடுத்தால்தான் கீழே இறங்கவோ அல்லது மேலே ஏறவோ முடியும். பார்த்ததே குளித்ததுபோன்ற எஃபெக்ட்டில் இருந்தது.

அடுத்து வால்பாறை மலைப்பாதை. ஆழியாரில் மீன் வறுவலை ருசித்துவிட்டு, மலையேறினோம். இங்கே 6 மணிக்குள் மலையேறி விட வேண்டும். இல்லையென்றால், மலையேறுவது கொஞ்சம் சிக்கல். அனுமதியும்தான்; டிரைவிங்கும்தான்.
இடதுபுறம் ஆழியார் அணை செம வியூ கொடுத்தது. நிற்காமல் போக யாருக்கும் மனசு வராது. சிறுத்தைகள்தான் வால்பாறையில் பிரபலம் என்றார்கள். ஆனால், நாங்கள் போகும் வழியெங்கும் வரையாடுகள் ஹாய் சொல்லின. ஹாய் மட்டும் இல்லை; போட்டோவுக்கு போஸெல்லாம் கொடுத்தன. நாம் போகும்போது வரையாடுகளை மேலே விரட்டிக் கொண்டிருந்தார்கள் வேட்டைத் தடுப்புக் காவலர்கள். ``அப்படியே ஊருக்குள்ளாற போயிரும்ங்க.. அப்புறம் வண்டில அடிபட்டுடும்ங்க.. அதான்'' என்றார்கள். நாங்களும் கொஞ்ச நேரம் வேட்டைத் தடுப்புக் காவலர்களாய் மாறி, வரையாடுகளைக் காட்டுக்குள் விரட்டினோம். ஜாலியாக இருந்தது.
வால்பாறைக்கு அடிக்கடி டூர் அடிப்பவர்களுக்குக்கூட `தலநார் எஸ்டேட்’ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், வால்பாறையில் இருந்து ஒரே ஒரு பஸ் மட்டும் போய் வருகிறது.
போகும் வழியில் வாட்டர்ஃபால் எஸ்டேட் வந்தது. இது பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரின் எஸ்டேட் என்று ஸ்கூப் நியூஸ் சொன்னார்கள். ஆனால், அங்கு பணிபுரிபவர்களிடம் வீரரின் பெயர் சொல்லிக் கேட்டால், ‘‘அப்படியா, அப்பிடி யாரும் தெரியாதுங்... ஆனா எங்கோனரு சிலோன் காரருங்’’ என்றார்கள். கிலோ 180 ரூபாய்க்கு அருமையான டீத்தூள் பேக் செய்து கொண்டோம்.

கவர்க்கல் எனும் இடத்தில் டீக்கடை வந்தது. இதுதான் தலநாருக்குப் பிரியும் இடம். நேராகப் போனால் வால்பாறை. வலதுபுறம் இறங்கும் சாலைதான் தலநார். பாதையே போதை ஏற்றியது. ‘‘ஈவ்னிங் ஆகிப்போச்சுங். யானை கீனை நிக்குமுங்க... பார்த்துப் போங்க!’’ என்று எச்சரித்தார்கள்.
இங்கேயும் செக்போஸ்ட். அதிகாரியும் யானை பயமூட்டினார். ‘‘10 அண்ணம் (எண்ணிக்கை) காட்டெருமங்க நிக்குது.’’ என்றார். இங்கிருந்து ஆள் நடமாட்டமே இல்லை.செம த்ரில்லிங்காக இருந்தது ரைடு. ‘பட் பட்’ புல்லட் சத்தத்தில் தலநாரே அதிர்ந்தது. காட்டெருமைகள் அதிராமலா இருக்கும். செக்போஸ்ட் அதிகாரி சொன்ன 10 அண்ணம் கொண்ட காட்டெருமைக் குழு ஒன்று புல்லட் சத்தத்துக்கு, மேய்வதை மறந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தது. `சாம்பார்' மான்களும் போட்டிக்கு வந்தன.
தலநாரில் மொத்தம் எண்ணிவிடக் கூடிய அளவில்தான் வீடுகள் இருந்தன. வால்பாறைக்குச் செல்பவர்களுக்குக் கூட தலநார் தெரிந்திருக்கவில்லை. அங்கங்கே அருவிகள், வாட்டர் பம்புகள், டீ எஸ்டேட்டுகள் என்று தலநார் எங்கேயும் மாசு பட்டிருக்கவில்லை.
நாம் தங்க வேண்டிய இடம் தலநார் கன்டெய்னர். ஆம்! கப்பலில் போகும் கன்டெய்னர்களைத்தான் காட்டேஜ் ஆக்கியிருக்கிறார்கள். காட்டுக்கு நடுவே கன்டெய்னர், ஏதாவது த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் படங்களுக்கு லொக்கேஷன் ஆக்கலாம். காட்டு விலங்குகள் உள்ளே புக முடியாதபடி அற்புதமாக வடிவமைத்திருந்தார்கள்.

‘‘ஒரு வாட்டி சிறுத்தை மேலேறி வந்துப்புடுச்சுங்.. போன மாசம் யானை வாட்டர் டேங்க்கைத் தள்ளி உடைச்சுப்புடுச்சு!’’ என்று ஊழியரும் தன் பங்குக்குப் பீதி கிளப்பினார். இரவு கன்டெய்னரில் தங்கியது செம த்ரில்லிங்.அதிகாலை மலையையே மூடிய பனியை ரசித்தபடி, டீ வாசத்தை நுகர்ந்தபடி கட்டஞ்சாயா குடித்து ஸ்டேட்டஸ் போட்டால், லைக்ஸ் அள்ளும். டீ குடித்துவிட்டுக் கீழே இறங்கினால்... மறுபடியும் அதே 10 அண்ணம் கொண்ட காட்டெருமைக் கூட்டம். இந்த முறை வலப்பக்கம் இருந்தது.
ஆசை தீர போட்டோ ஷூட். ஒருவழியாக தலநார் எஸ்டேட்டைப் பிரிய மனமில்லாமல், வீடு வந்து சேர்ந்த அந்த வீக் எண்டில் நமது புகைப்பட நிபுணருக்கு போன் செய்தால் எடுக்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து வாட்ஸ் அப்பில் செல்ஃபி அனுப்பியிருந்தார். ``சார், ஆத்துப்பாறைல டைவ் அடிச்சுட்டிருந்தேன். அதான் எடுக்க முடியலை!''
பார்க்க வேண்டிய இடங்கள்: பொள்ளாச்சியில் இருந்து...
டாப்சிலிப் (36 கி.மீ)
அற்புமதமான காட்டுப் பயணம். காட்டுக்கு நடுவில் தங்கினால் பேரனுபவம் கிடைக்கும். யானைச் சவாரி உண்டு.
பரம்பிக்குளம் (68 கி.மீ)
டாப்சிலிப்பைத் தாண்டிப் போனால் வரும் கேரளக் காடு. தூணக்கடவு அணைக்கட்டில் மூங்கில் படகுச் சவாரி மறக்காதீர்கள். மரவீட்டில் தங்குவதும் செம அனுபவம்.
சின்னார் வனச்சரகம் (65 கி.மீ)
மொத்தம் 34 வகையான விலங்குகளைப் பார்க்கலாம் என்கிறது கேரள அரசு. தூவானம் அருவிக்கு ட்ரெக்கிங் போய், காட்டுக்குள் தங்கலாம்.
திருமூர்த்தி மலை (38 கி.மீ)
அணை, அருவிக்குளியல், திருமூர்த்தி கோயில், ரோட்டோரக் கடைகள் என்று பக்காவான டூரிஸ்ட் ஸ்பாட். அருவிக்கு சீஸன் உண்டு.
நோட் பண்ணுங்க!
பொள்ளாச்சியில் இருந்து சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள். அதில் ஆத்துப்பாறை, ஓர் அற்புதமான ஸ்பாட். பொதுவாக, ஆத்துப்பாறை அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆழியார் போகும் வழியில், மயிலாடுதுறை அல்லது மயிலாடும்பாறை என்று இதை அழைக்கிறார்கள். கோட்டூர், பொங்காளியூர் வழியாகப் போகலாம். `வின்னர்’ படத்தில் வடிவேலு பெண் சிங்கங்களுக்குப் பாதுகாப்பாகக் குளிப்பாரே... அதே இடம்தான் ஆத்துப்பாறை. 10 அடி ஆழம் என்பதால், நீச்சல் தெரிந்தவர்கள் டைவ் அடிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிக்க ஸ்பாட் உண்டு. அதேபோல், ஆழியார் செல்பவர்கள் அணைக்கட்டையும், மீன் வறுவலையும் மட்டும் ருசி பார்த்துவிட்டு செல்ஃபி எடுத்துவிட்டுத் திரும்பி விடாமல், அணைக்குப் பின்புறம் உள்ள குளியல் ஸ்பாட்டுக்குப் போக மறவாதீர்கள். தேடித் தேடித்தான் இந்தக் குளியல் ஸ்பாட்டை அடைய வேண்டும். போகும்போதே ஷார்ட்ஸ், ஷாம்பூ, சோப்பு என்று விற்கிறார்கள். இதுவும் இயற்கையோடு இயைந்த குளியலுக்கு கேரன்ட்டி.
வால்பாறை போகும் வழியில் கவர்க்கல் எனும் இடத்தில் பிரிகிறது தலநார். இங்குதான் தலநார் கன்டெய்னர் இருக்கிறது. அதாவது, தங்கப் போகும் காட்டேஜ். விலையும் மலிவு. பிக்கல் பிடுங்கல் இல்லை. இரவில் நிச்சயம் விலங்குகளின் உலவல் இருக்கும் என்பதால், கன்டெய்னரை விட்டு இறங்காமல் இருப்பது நலம். வால்பாறைக்கு டூர் அடிப்பவர்கள், வால்பாறை நகரத்தில் தங்காமல், தலநார் கன்டெய்னரில் காட்டுக்கு நடுவில் தங்கினால், செம அனுபவம் கிடைக்கும்.
வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள்!