Published:Updated:

ரெனோ க்ளியோ... இந்தியாவுக்கு வந்தால்?

ரெனோ க்ளியோ
பிரீமியம் ஸ்டோரி
ரெனோ க்ளியோ

வெளிநாட்டு கார்கள்: ரெனோ க்ளியோ

ரெனோ க்ளியோ... இந்தியாவுக்கு வந்தால்?

வெளிநாட்டு கார்கள்: ரெனோ க்ளியோ

Published:Updated:
ரெனோ க்ளியோ
பிரீமியம் ஸ்டோரி
ரெனோ க்ளியோ

பிரெஞ்சு கார் தயாரிப்பாளரான ரெனோ, 2011-ல் ஃப்ளூயன்ஸ் செடான் காரைக் கொண்டுவந்து, தனது ஆட்டத்தை இந்தியாவில் தொடங்கியது. சில நல்ல திரைப்படங்களைப்போல வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் ஃப்ளூயன்ஸின் கலைநயமிக்க டிசைன் காண்போரைக் கவர்ந்தது. அதன் பின்னர் வெளியான டஸ்ட்டர், க்விட் ஆகிய கார்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக க்விட், 5 வாரத்தில் 50,000 புக்கிங் பெற்று சாதனை படைத்தது.

இன்று க்விட், ட்ரைபர், டஸ்ட்டர், கிகர் என 4 வெவ்வேறு செக்மென்ட்டில் தலா ஒரு கார் ரெனோவிடம் இருந்தாலும், பெலினோ, ஐ20 உடன் போட்டி போடக் கூடிய வகையில் தன்வசம் ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக் ரெனோவிடம் இல்லை. ஆனால் ஐரோப்பாவில் ரெனோவின் க்ளியோ ஹேட்ச்பேக், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஃபோர்டு ஃபியஸ்டா (ஹேட்ச்பேக்) ஆகியவற்றை விற்பனையில் பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் ஹேட்ச்பேக் ஆக உள்ளது. க்ளியோவின் ப்ளஸ், மைனஸ் மற்றும் ஏன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்பதைத்தான் இந்த இதழில் பார்க்க போகிறோம்.

டிசைன்

1990-ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் புஜ்ஜி எனக் கொஞ்சும் வகையில் க்யூட்டாக க்ளியோவைக் காட்சிக்கு வைத்தது ரெனோ. ஆனால் தற்போது விற்பனையில் இருக்கும் ஐந்தாவது ஜென் க்ளியோ, ஷார்ப்பாகவும் ஸ்போர்ட்டியாகவும் உள்ளது. இதற்குக் காரணம் Laurens van den Acker. 2009-ல் Mazda-வில் இருந்து பிரிந்து ரெனோவின் டிசைன் இயக்குனராக லாரன்ஸ் பொறுப்பேற்ற பின்புதான், அதுவரை டல்லாக இருந்த ரெனோ கார்கள் வேற லெவலில் உருமாற்றம் அடைந்தன.

LED ஹெட்லைட்டுகளின் கீழ் உள்ள L வடிவ DRL - ம், ஃபாக் லாம்பைத் தவிர்த்து பம்பர் நீளத்துக்கு விரிந்திருக்கும் ஏர் இன்டேக்கும் பார்த்த முதல் கணமே க்ளியோவின் முன்பக்கத்தை மாஸாகக் காட்டுகின்றன. பின்புற பம்பரின் நடுப்பகுதியில் உள்ள க்ரோம் பட்டையும் அதன் கீழ் உள்ள கருப்பு வண்ண கிளாடிங்கும், க்ளியோவை அகலமாகக் காட்டுவதற்கு உதவுகின்றன.

CMF - B ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட முதல் கார் என்பதால், முந்தைய ஜென் மாடல் உடன் ஒப்பிடும்போதுகூட இது மிகவும் புதிய கார். அதனால்தானோ என்னவோ புதிய க்ளியோ மிகவும் கவர்ச்சிகரமானதாகக் காட்சியளிக்கிறது. மேலும் டாடா நெக்ஸான் போல வருங்காலத்தில் இதே பாடியில் எலெக்ட்ரிக் மாடலும் கொண்டு வரும் வகையில் வடிவமைப்பு செய்துள்ளது ரெனோ.

ரெனோ க்ளியோ Dashboard
ரெனோ க்ளியோ Dashboard

உட்புற வசதிகள் & சிறப்பம்சங்கள்

க்ளியோவின் உட்புறத்தை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், `ஸ்மார்ட்’. தேவையில்லாத வீண் ஆடம்பரங்கள் இல்லாமல், கவர்ச்சிகரமான முறையில் கேபினை வடிவமைக்கும் முறையை மற்ற தயாரிப்பாளர்களுக்குப் பாடம் எடுக்கும் அளவுக்கு அழகாக வடிவமைத்துள்ளது. குறிப்பாக, மென்மையான ப்ளாஸ்டிக் கொண்ட டேஷ்போர்டு முழுவதும் நீளும் ஏசி வென்ட், நம் ஊர் வெயிலுக்கு நல்ல காற்றோட்டத்தைத் தரும்.

7.0 இன்ச் இன்போடெய்ன்மென்ட் திரையை ஸ்டாண்டர்ட் ஆக அளித்துள்ளது ரெனோ. அதுவே டாப் வேரியன்ட்டுகளில் போர்ட்ரெய்ட் முறையில் டேப்லெட் பாணியிலான 9.3 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒரு செக்மென்ட் மேலே உள்ள காரின் வசதி. இதனால் ஐரோப்பாவில் இதன் போட்டியாளர்களான ஃபீஸ்டா மற்றும் வாக்ஸ்ஹால் கோர்சா போன்றவற்றை பழைய தலைமுறை கார்களைப்போல உணர வைக்கிறது.

க்ளியோ, இருப்பினும் சில நடைமுறை தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறது. க்ளியோதான் அதன் செக்மென்ட்டில் அதிக பூட் கொள்ளவு (391 லிட்டர்) வைத்திருக்க வேண்டும் என பின்னிருக்கையின் இடவசதியில் சமரசம் செய்துள்ளது ரெனோ. ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், போலோ 690மிமீ லெக்ரூமைக் கொண்டிருக்கையில் க்ளியோவில் இருப்பது 620 மிமீதான்.

பின்பக்க ஹெட்ரூமிலும் இதே கதை தொடர்கிறது. போலோவில் 950 மிமீ. ஆனால், க்ளியோவில் 910 மிமீ மட்டுமே! இதனால் சராசரி உயரம் உள்ளவர்களுக்குக் கூட க்ளியோவின் பின்னிருக்கைகள் தடையாக இருக்கும். ரெனோவின் இந்த முடிவை புதுமணத் தம்பதிகளையும், பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ள சிறு குடும்பங்களைக் கொண்ட உரிமையாளர்களை மகிழ்விக்கலாம் என்பதால் ஏற்றுக்கொள்ளலாம்.

மற்றபடி ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக்குக்குத் தேவையான பார்க்கிங் சென்சார்கள், லெதர் சீட் கவர் ஆகியவற்றைப் பெறுகிறது. மொத்தில் பெலினோ வாங்கவிருக்கும் ஒரு ஃபேமிலிமேனைத் தன்பக்கம் ஈர்க்கும் வசியம் வைத்திருக்கிறது ரெனோ க்ளியோ.

ரெனோ க்ளியோ
ரெனோ க்ளியோ

இன்ஜின் & பெர்பாமன்ஸ்

SCe 65 மற்றும் TCe 90 என இரு 1000 cc பெட்ரோல் இன்ஜின்கள் மற்றும் ETECH 140 என்னும் ஹைபிரிட் இன்ஜினுடன் ஐரோப்பாவில் க்ளியோவை விற்பனை செய்து வருகிறது ரெனோ. Bhp கொண்டு குறிக்கப்படும் இந்த இன்ஜின் ஆப்ஷன்களில் SCe 65, 5 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் சேர்ந்து 65 bhp பவரும், 95 Nm டார்க்கும் வெளிப்படுத்தி 100 கிமீ வேகத்தை 17.1 வினாடிகளில் அடைகிறது.

ஆனால் துள்ளலான பெர்ஃபாமன்ஸ் கொண்ட TCe 90 இன்ஜின்தான் நமது சாய்ஸ். இதன் டர்போ பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸுடன் கூட்டணி வைத்து 90 bhp பவரும், 160 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனால் 100 கிமீ வேகத்தை அடைய 12.2 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை முன்புறத்தில் மெக்ஃபர்சன் ஸ்ட்ரட்ஸ் மற்றும் பின்புறம் டார்சன் பீம் செட் அப் உள்ளது. ஹேட்ச்பேக்கை பெப்பியாக ஓட்டுவதற்கு ஏற்றவாறு நல்ல கையாளுதல் இருப்பதாக, வெளிநாட்டு கார் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ரெனோ க்ளியோ
ரெனோ க்ளியோ

ஏன் இந்தியாவுக்கு வரவேண்டும்?

க்ளியோவின் படங்களைப் பார்த்தவுடனே உங்களுக்குப் புரிந்திருக்கும், இதன் டிசைன் ஃப்ரெஷ்ஷாகவும், ஸ்போர்ட்டியாகவும் இருக்கிறது. ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் 2014-ல் வெளியான இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20தான் இப்படி `பார்த்த முதல் நாளே’ எனப் பாட வைத்தது. ஐ20 ’இந்தியன் கார் ஆஃப் தி இயர்’ விருதை பெற்றதைப்போல, க்ளியோவும் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

மேலும் க்ளியோவில் உள்ள TCe 90 இன்ஜின்தான் கிகரில் சற்றே வித்தியாசமான ட்யூனிங்கில் உள்ளது என்பதால், கிகரின் இன்ஜினையே க்ளியோவில் பொருத்தலாம். இதனால் டெஸ்டிங்க்கு அதிக நாட்கள் தேவைப்படாது என்பதோடு, கிகரின் சிறப்பான மைலேஜையும் பெறமுடியும்.

வெளிநாட்டுத் தயாரிப்பாளர்களால் அவ்வளவு எளிதில் நுழைய முடியாத டாப் 10 விற்பனைப் பட்டியலில், க்விட் மூலம் நுழைந்து பல மாதம் தொடர்ச்சியாக இடம்பெற்று சாதனை படைத்தது ரெனோ. ஆனால் காலப்போக்கில், க்விட்டின் மோகம் குறைந்து, விற்பனையும் சரிந்தது. ஜூன் 2021 விற்பனை விற்பனைப் பட்டியலில் 8 மாருதி கார்களும், 2 ஹூண்டாய் கார்ளும் உள்ளன. அதில் 14,701 கார்களை விற்பனை செய்து பெலினோ 3 வது இடத்தில் உள்ளது.

ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் காலி இடத்தை நிரப்பவும், மறுபடியும் டாப் 10 விற்பனைப் பட்டியிலில் நுழையவும் ஆசையா ரெனோ? அப்படியானால், க்ளியோவை இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள்!