கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

“டெக்ஸாஸில் டெலிவரி... நியூயார்க்கில் டிராப்!”

மாதவன்
பிரீமியம் ஸ்டோரி
News
மாதவன்

வாடகை கார் எடுத்து அமெரிக்காவைச் சுற்றும் தமிழன்!

டொயோட்டா காருடன் மாதவன்
டொயோட்டா காருடன் மாதவன்

டிராவல் பிரியர்களுக்கு ‘Way2Gotamil’ யூடியூப் தளம் தெரிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள பல ஊர்களை நம்மூர் தமிழில் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார், மாதவன்! இவரின் பயணங்கள் பெரும்பாலும் வாடகை காரில்தான் நடக்கின்றன. அமெரிக்காவில் வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிப் பார்ப்பது சுலபம். பட்ஜெட்டும் கையைக் கடிக்காது என்கிறார் அவர். அவரிடம் பேசினாலே, கடனை உடனை வாங்கியாச்சும் `வாரணம் ஆயிரம்’ சூர்யா ஸ்டைலில் அமெரிக்கா கிளம்பணும்போல் வெறி ஏறுகிறது.

``அமெரிக்காவுக்கு டூரிஸ்ட்டாக வருகிறவர்கள், நம்மூரில் எடுத்த டிரைவிங் லைசன்ஸுடன் I94 என்கிற படிவத்தை (வெப் சைட்டில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம்)சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இத்தோடு, விசா முக்கியம். இவற்றைக் கொடுத்தால் போதும், உங்களுக்குத் தேவையான காரை வாடகைக்கு எடுத்து நீங்களே ஓட்டலாம்.

வேலை நிமித்தமாக அமெரிக்கா வருபவர்களும் வாடகைக்கு கார்களை எடுக்க முடியும். ஆனால், அதுக்கு அமெரிக்காவில் டிரைவிங் டெஸ்ட் முடிச்சு, இங்கேயே டிரைவிங் லைசென்ஸ் வாங்கியிருக்கணும்.

அமெரிக்காவில் இப்போது சுமார் 15 வாடகை கார் ஏஜென்சிகள் இருக்கு. இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, டெக்ஸஸ்ல நான் ஒரு கார் வாடகைக்கு எடுத்து அதை நியூயார்க்ல டிராப் பண்ணிடலாம்.

ஒரு முறை நான் கனடா பார்டருக்குள்கூட வாடகை காரைப் பயன்படுத்தி போயிட்டு வந்தேன். அந்த அளவுக்குச் சுதந்திரம் அங்கே இருக்கு. வாடகை காரை புக் பண்ண இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, ஆன்லைனில் தமிழ்நாட்டிலிருந்தே சுலபமா புக் பண்ணிடலாம். அதுக்கு எந்த அட்வான்ஸும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. என்னைக்கு நமக்கு கார் தேவை, எந்த இடத்திலிருந்து தேவைன்னு மட்டும் தேர்வு செய்து புக் பண்ணா போதும். அதேமாதிரி ஒரு வேளை நாம புக் பண்ணிட்டு போக முடியலைன்னாலும் அதுவாகவே கேன்சல் ஆகிடும். அதற்கென எந்தத் தொகையும் செலுத்த வேண்டியதில்லை.

இரண்டாவது, நாம ஃப்ளைட் விட்டு இறங்கி வரும்போது ‘Way2 Rental Car’ என ஒரு வழி இருக்கும். அங்கே ஏறக்குறைய எல்லா ஏஜென்சிக்களும் இருக்கும். நமக்குத் தேவையான ஏஜென்சியை தேர்வு செய்யணும். லக்ஸூரி கார்கள்கூட ஆச்சரியப்படும் வாடகைக்கு இங்கே கிடைக்கும். நான் பிஎம்டபிள்யூ காரை வெறும் 2,000 ரூபாய் வாடகைக்கு எல்லாம் எடுத்து ஓட்டியிருக்கேன்.

வாடகைக்கு கார் எடுக்கும்போது அவங்க நம்மகிட்ட இன்ஷூரன்ஸ் எடுத்துக்குறீங்களான்னு கேட்பாங்க. டூரிஸ்ட்டாகப் போறவங்க அதை எடுத்துக்கிறது பெஸ்ட். ஏன்னா, எங்கேயாச்சும் சின்ன ஆக்ஸிடென்ட் ஆகுதுன்னா நம்ம போன் பண்ணினா போதும். நாம இருக்கிற இடத்துக்கு வேற காரைக் கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. நாம அந்தக் காரை எடுத்துட்டுக் கிளம்பிடலாம். என்ன, காரை ரிப்பேர் பண்ணும்போதுதான் பர்ஸ் பழுத்துடும். அதுக்குத்தான் ஏஜென்சியோட இன்ஷூரன்ஸ் அவசியம்.

மாதவன்
மாதவன்

இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை அவங்க மூன்று ஆப்ஷன்ஸ் கொடுப்பாங்க. ஒன்னு கார் ஆக்ஸிடெண்ட் ஆனா அப்படியே காரை விட்டுட்டுப் போறது. இன்னொன்னு, Liability Insurance-ன்னு சொல்லுவாங்க. எடுக்கிற காரை மட்டும் கவர் பண்ணாம ஏதாவது இடத்தில் மோதிட்டாலோ, இல்லைன்னா ஆக்ஸிடென்ட் பண்ணிட்டாலோ அந்தப் பிரச்னை எல்லாத்தையும் ஏஜென்சி பார்த்துக்கும்.

அடுத்தது, Road Side Assistance. நீங்க போகிற இடத்தில் ஏதாவது பிரேக்டவுண் ஆச்சுன்னா... இல்லை அதிகமாக பனிபொழியுற நேரத்தில் கார் எங்கேயாச்சும் மாட்டிக்கிட்டா அவங்ககிட்ட சொன்னா போதும். உடனே அந்தப் பிரச்னையைச் சரி பண்ணிக் கொடுத்துடுவாங்க. இல்லைன்னா வேற கார் அனுப்பி வைச்சிடுவாங்க. இந்த ப்ளானுக்கு ஒருநாளைக்கு 200, 300 ரூபாய்தான் கூடுதலாக செலவாகும்.

இந்த ஏஜென்ஸி கொடுக்கிற இன்ஷூரன்ஸ் தேவையில்லைன்னு நினைச்சா நம்மளுடைய இன்ஷூரன்ஸைப் பயன்படுத்திக்கலாம். ஆனா, இன்ஷூரன்ஸ்ல ப்ரீமியம் கட்டும்போது, ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னா அதுல கொஞ்சம் சிக்கல்கள் வரும்.

அதனால, டூரிஸ்ட் ஆக போகிறவங்க வாடகை கார் எடுக்கும்போது அங்கே இருக்கிற இன்ஷூரன்ஸ்களைப் பயன்படுத்திக்கிறது சிறந்தது!” என்கிறார்.

அமெரிக்க வாடகை கார் லிஸ்ட்!

ஒரு நாள் வாடகை எவ்வளவு?

வழக்கமான விலை ரூபாயில்

ஆஃபர் விலை ரூபாயில்

ஃபோர்டு மஸ்டாங் 12,000 5,500

டாட்ஜ் சேலஞ்சர் 12,000 5,500

பென்ஸ் GLE 17,400 8,000

ஆடி Q7 17,400 8,000

ஆடி Q3 12,000 4,500

வால்வோ XC90 14,400 8,000

பிஎம்டபிள்யூ X5 15,000 4,500