Published:Updated:

ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?
ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?

ரோடு டெஸ்ட் - எம்ஜி ஹெக்டர் (பெ/டீ)

பிரீமியம் ஸ்டோரி

7 மாதம் காத்திருந்தெல்லாம் ஹெக்டரை வாங்குபவர்கள் பெருகி விட்டார்கள். ஹெக்டர் அறிமுகமான புதிதில் கோவை, குன்னூர், ஊட்டி என்று இந்த காரை ஓட்டியதில் நிச்சயம் இது ஹிட் அடிக்கும் என்று நினைத்தோம். நடந்துவிட்டது.

ஓட்டிய மாடல்கள்: 1.5 Sharp MT Hybrid (P) / 1.5 Sharp AT (P) / 2.0 Sharp MT (D)
0-100 கி.மீ: 12.64/14.21/11.39 விநாடிகள் 
டாப் ஸ்பீடு: 163 / 175 / 163 கி.மீ மைலேஜ்: 8.76 / 7.95 / 14.55 கி.மீ
ஓட்டிய மாடல்கள்: 1.5 Sharp MT Hybrid (P) / 1.5 Sharp AT (P) / 2.0 Sharp MT (D) 0-100 கி.மீ: 12.64/14.21/11.39 விநாடிகள் டாப் ஸ்பீடு: 163 / 175 / 163 கி.மீ மைலேஜ்: 8.76 / 7.95 / 14.55 கி.மீ

ஃபர்ஸ்ட் டிரைவில் பெருசாக ஹெக்டரை ஃபீல் பண்ண முடியவில்லை. ‘மைலேஜ் எவ்வளவு; டர்னிங் ரேடியஸ் ரொம்ப அதிகமோ... கி.கிளியரன்ஸ் எவ்வளவுனு தெரியலையே’ என்று ஏகப்பட்ட கேள்விகளுக்கு அப்போது விடை தெரியவில்லை. அப்போது ஆட்டோமேட்டிக் பெட்ரோல் வேரியன்ட் வேறு ஓட்டவில்லை. ஆனால் இப்போது, டீசல்/பெட்ரோல்/பெட்ரோல்ஆட்டோமேட்டிக் என்று மூன்று மாடல்களையும் ஓட்டிப் பார்த்து... ரோடு டெஸ்ட்டே தயாராகி விட்டது.

அவுட்லுக்

கீழே ‘ப்ளஸ்’ எனும் ஏரியாவைப் படியுங்கள் - ரோடு பிரசன்ஸ். எம்ஜி ஹெக்டரின் பெரிய பலமே இதுதான். பெரிய அகலமான முன்பக்க கிரில்லில், எம்ஜி லோகோ, ஒரு உறுதியான முகவரியைக் கொடுக்கிறது. ‘கவனிக்கலையே’ என்று யாரும் சொல்லிவிட முடியாது. மெஷின் கட் அலாய் வீல்கள், மெலிதான ஹெட்லைட் கிளஸ்டர், LED DRL–களை ஹெட்லைட்டுக்கு மேலே கொடுத்திருப்பது, L வடிவ க்ரோம் ஸ்ட்ரிப் – எல்லாமே இதற்குக் காரணம்.

ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?

அகலத்தில் பார்த்தால்... எம்மாம் பெருசு! 4,655 மிமீ... ஏறக்குறைய ஒரு 7 சீட்டருக்கான நீளம். வீல்பேஸும் அப்படித்தான். 2,750 மிமீ என்பது, இந்த செக்மென்ட்டில் வேறெந்த கார்களிலும் இல்லாதது. 17 இன்ச் அலாய் வீல்கள் மட்டும்தான், காரின் சைஸோடு பொருந்தாமல் இருக்கின்றன. 18 இன்ச்சாவது வேண்டும். ‘இவ்வளவு பெரிய காரில் ஆஃப்ரோடு அடிக்கலாம்’ என்கிற தன்னம்பிக்கையைக் குலைப்பதே, இந்த சின்ன வீல்கள்தான். கி.கிளியரன்ஸ் 183 மி.மீ என்பது ஓகே!

பின் பக்கத்தில் ஸ்வைப்பிங் ஸ்டைல் LED லைட்கள், ஆடி கார்களை நினைவு படுத்துகின்றன. லாங் ஷாட்டில் இதை ஒளிரவிட்டுப் பார்த்தால்... அத்தனை அழகு! பக்கவாட்டில் ‘மோரிஸ் கராஜஸ்’ எனும் புரொஜெக்டர் லோகோ கொண்ட க்ரோம் ரன்னிங் போர்டுகள், இன்னும் தூக்கல். ‘D’ பில்லர்தான் இதை பாக்ஸ் ஸ்டைலில் இருந்து காப்பாற்றுகிறது. இது தவிர டோர் ஹேண்டில்கள், டெயில் லைட்ஸ், பம்பர்கள் என்று ஏகப்பட்ட இடங்களில் க்ரோம் பினிஷ்கள் அருமை! குறை என்று பார்த்தால், அங்கங்கே பேனல்களுக்கு இடையில் இவ்வளவு இடைவெளியா இருப்பது? கட்டுமானத் தரத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் எம்ஜி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?

இன்டீரியர்

பெரிய ஜன்னல்களும், பனோரமிக் சன்ரூஃபுமே இதன் விஸ்தாரத்தைச் சொல்லிவிடுகின்றன. அதைவிட டச் ஸ்க்ரீன்... எம்மாம் பெருசு! 10.4 இன்ச். இந்தளவு போர்ட்ரேட் சைஸில் பெரிய டச் ஸ்க்ரீன், வேறெந்த கார்களிலும் இல்லை. ஆனால் டச் ரெஸ்பான்ஸில் இன்னும் கொஞ்சம் வேகம் வேண்டு்ம். பெரும்பான்மையான கன்ட்ரோல்களுக்கு ஸ்க்ரீனில்தான் தடவ வேண்டும். வால்யூம் கன்ட்ரோல், டிஃபாகர் போன்றவற்றுக்குத் தான் பட்டன்கள். உற்றுக் கவனித்தால், இங்கேயும் ஃபிட் அண்ட் ஃபினிஷில் எம்ஜி கொஞ்சம் சொதப்பியிருப்பது தெரிந்தது. சில ஹார்டு பிளாஸ்டிக்ஸையும் உதாரணம் சொல்லலாம்.

பிராக்டிக்கலாக நிறைய விஷயங்கள். 5V ஃபாஸ்ட் சார்ஜிங் ஸாக்கெட், USB போர்ட், AUX போர்ட்... அப்புறம் சென்டர் கன்ஸோல், ஆர்ம்ரெஸ்ட், டோர் பேடு என்று ஏகப்பட்ட இடங்களில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் உண்டு.

டிரைவர் சீட் தாழ்வாக இருந்தாலும், வெளிச்சாலை சூப்பராகத் தெரிகிறது. எஸ்யூவி அல்லவா? ஆறு விதங்களில் எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். லம்பர் சப்போர்ட் அதிகமாக இருப்பதால், சீட் கொஞ்சம் புடைப்பாக இருக்கிறது. ஆனால் நீண்ட தூரப் பயணங்களுக்கு இது வசதியாக இருக்காது. இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் அருமை. நடுவே 7 இன்ச் MID ஸ்க்ரீனில், டயர் ப்ரஷர் மானிட்டர் முதல் இன்ஃபோடெயின்மென்ட் செட்டிங்ஸ் வரை எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் வெயில் நேரத்தில், இதைப் படிப்பதற்குச் சிரமமாக இருக்கிறது என்று நம் வாடிக்கையாளர்கள் புகார் சொல்கிறார்கள். இரவில் பார்க்க செமையாக இருக்கும்.

ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?

பின் பக்கம்...

பின் பக்க சீட்களில் தொடைக்கான சப்போர்ட், பொசிஷன் என்று எல்லாமே பக்கா! சீட்களை விண்டோ லைன் வரை ரிக்லைன் செய்து, சன்ரூஃபை மல்லாக்கப் பார்த்துக்கொண்டே படுத்துக் கொண்டுகூடப் பயணிக்கலாம். பின்பக்கமும் யுஎஸ்பி ஸ்லாட் இருந்தது. போனையும் பர்ைஸயும் வைக்க ஒரு சின்ன இடமும் கூடவே இருந்தது. இதன் பூட் ஸ்பேஸ்.. அம்மாடியோவ்! 587 லிட்டர். சீட்களை மடித்தால், இன்னும் இடம் கிடைக்கும். பூட் கொஞ்சம் உயரமாக இருப்பதால், பொருட்களை ஏற்றி இறக்குவதுதான் கொஞ்சம் பெரிய டாஸ்க்காக இருக்கும்.

பர்ஃபாமென்ஸ்

பெட்ரோல்/டீசல் என ஹெக்டரில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உண்டு. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோலில் 143 bhp பவரும், 25 kgm டார்க்கும் உண்டு. டீசலைப் பொருத்தவரை ஃபியட்டின் 2.0 மல்ட்டிஜெட் இன்ஜின்தான். இது 170bhp பவரும், 35kgm டார்க்கும் தருகிறது. பெட்ரோலில் ைஹபிரிட் மாடலையும் ஓட்டிப் பார்த்தோம். இதில் 48V பேட்டரியை, முன் பக்க கோ–டிரைவர் சீட்டுக்கு அடியில் மவுன்ட் செய்திருந்தார்கள். ைஹபிரிட்டில் பவர் கூடவில்லை; ஆனால், டார்க் மட்டும் 2 kgm எக்ஸ்ட்ரா கிடைத்தது. அதனால் சாதாரண பெட்ரோலைவிட ‘சட் சட்’ எனக் கிளம்ப முடிந்தது. பிரேக் பிடித்தால் பேட்டரி சார்ஜ் ஆவது, MID ஸ்க்ரீனில் தெரிந்தது.

கியர்ஷிஃப்ட் துல்லியம். ஆனால், டிராவல் கொஞ்சம் நீளமாக இருந்தது. சிட்டிக்குள் இடது காலுக்கு நிறைய வேலை வைக்கும். ஆனால் பெடல் லைட் வெயிட்தான். ைஹபிரிட்டின் 0–100 கி.மீ வேகம்– 12.64 விநாடிகள். ஆக்ஸிலரேட்டரில் பலம் கூட்டும்போது, டர்போ லேக்கை நன்றாகவே உணர முடிந்தது. அதனால்தான் இந்த வேகக் குறைபாடு. 2–வது 3–வது கியர்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி தெரிந்தது. மலையேறும்போது இது சிக்கலாக இருக்கலாம்.

டீசலில் 6 ஸ்பீடு மேனுவல் மட்டும்தான். பெட்ரோலில் மேனுவல்/ஆட்டோ இரண்டுமே உண்டு. பெட்ரோல் ஆட்டோமேட்டிக், நினைத்தபடியே ஓட்டுவதற்கு ஈஸியாக இருந்தது. 1.5 லி இன்ஜின், நல்ல ரிஃபைன்மென்ட். சத்தம் போடவில்லை. கியர் லீவர்தான் பழைய ஸ்டைலில் இருந்தது. ‘D’ மோடுக்குத் தள்ளினால், எந்த டிலேவும் இல்லாமல் ஹெக்டர் ஈஸியாக முன்னேறியது. த்ராட்டில் மிதித்ததும், இன்ஜினும் கியர்பாக்ஸும் உடனே பார்ட்னர்ஷிப் வைத்தன. நகரத்துக்குள் இவ்வளவு பெரிய காரை எளிதாக ஓட்ட முடிந்தது.போகப் போகத்தான் இந்த கியர்பாக்ஸின் சோம்பேறித்தன முகம் தெரிந்தது. ஆக்ஸிலரேட்டரில் பலம் கொண்டு மிதித்தால்... சட்டென கார் எகிறவில்லை. டவுன்ஷிஃப்ட்டிங்கிலும் ரொம்பத் தயங்குகிறது இந்த ஆட்டோமேட்டிக். எனவே ஓவர்டேக்கிங்கில் கவனம் வேண்டும். மேனுவல் மோடுக்கு மாற்றினாலும், தேவையான கிக் கிடைக்கவில்லை.

0–100 கி.மீ–க்கு இதன் நேரம் 14.21 விநாடிகள் என்பது சுமார்தான். ஆனால், ஆக்ஸிலரேஷன் ஓகே. 20–80kph–க்கு 8.04 விநாடிகளும், 40–100kph-க்கு 10.24 விநாடிகளும் ஆனது. ‘வ்வ்ர்ர்ரூம்’ பார்ட்டிகளுக்கு இந்த ஆட்டோமேட்டிக் செட் ஆகாது என்பது புரிந்தது. ஆனால் சிட்டிக்குள் மட்டும் ஓகே!

ஃபியட் மல்ட்டிஜெட் டீசல், ஏற்கெனவே ஓட்டிப் பழக்கமானதுதான். ஜீப் காம்பஸ், டாடா ஹேரியரில் இருப்பதுதான். ஹெக்டரில் கொஞ்சம் ரீ-ட்யூன் செய்திருக்கிறார்கள். குறைவான டர்போ லேக்கிலேயே அது தெரிந்து விட்டது.

ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?

இதன் பவர் 170 bhp. ஹேரியரைவிட 30 bhp அதிகம். இதில் ரிஃபைன்மென்ட்டுக்கும் பக்கா. 0–100 கி.மீ–க்கு வெறும் 11.39 விநாடிகள்தான் ஆனது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் காம்பஸில் இருப்பதுதான். இன்ஜின் போலவே இதன் ட்யூனிங்கிலும் வித்தியாசம்; கியர் ரேஷியோ கொஞ்சம் Tall-ஆக செட் செய்திருப்பதால், ஹைவே க்ரூஸிங்குக்கு செமையாக இருக்கும்.

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

முன் பக்கம் – காயில் ஸ்பிரிங்ஸ் கொண்ட இண்டிபெண்டன்ட் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட்ஸ், பின் பக்கம் – நான்–இண்டிபெண்டன்ட் டார்ஸன் பீம் செட்–அப் கொண்டிருக்கிறது ஹெக்டர். குறைந்த வேகங்களில் இதன் ரைடு ஓகே! சின்னச் சின்னப் பள்ளங்களை எளிதாக உள்வாங்குகிறது. இருந்தாலும் இதன் சஸ்பென்ஷனை, ‘அடடா’ என்று புகழ முடியவில்லை. காரின் சின்ன டயர்கள் இதன் டைனமிக்ஸையும், ஓட்டுதலையும் காலி செய்துவிடுகின்றன.

கரடுமுரடான இடங்களில் போகும்போது, அதிர்வுகளை கேபினுக்குள் கடத்துகிறது. வேகங்களில் ஸ்டேபிளாக இருந்தாலும், திருப்பங்களில் பாடி ரோல் கொஞ்சம் தெரிகிறது.

பிரேக்கிங்கிலும் ஹெக்டருக்கு ெஷாட்டு வைத்தே ஆக வேண்டும். நான்கு வீல்களிலும் டிஸ்க் என்பதால், இன்னும் நம்பிக்கை வைக்கலாம். 80 கி.மீ வேகத்தில் போய் சடர்ன் பிரேக் அடித்தால், 26.70 மீட்டரில் நிற்கிறது ஹெக்டர்.

ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?

வசதிகள், வாய்ஸ் கமாண்ட், கனெக்ட்டிவிட்டி

வசதிகளில்தான் எகிறிவிட்டது ஹெக்டர். வசதிகளுக்குப் பெட்டிச் செய்தி பார்க்கவும். அதைத் தாண்டி எம்ஜியில் கவர்ந்த விஷயம் – வாய்ஸ் கமாண்ட் சிஸ்டம். பட்டனை ஆன் செய்துவிட்டு, ‘ஹலோ எம்ஜி’ என்றால் போதும். ஜன்னலைத் திறப்பது, ஏ.சி போடுவது, சன் ரூஃப் ஆப்பரேட் செய்வது, மியூசிக் சிஸ்டம் ஆன் செய்வது என 100 விதமான வேலைகளை இதன் மூலமே செய்து கொள்ளலாம். வேகமாகப் பயணித்துக்கொண்டே கையையும் பார்வையையும் விலக்காமல் இதைச் செய்வது ஜாலியாக இருந்தது.

கனெக்ட்டிவிட்டியிலும் அடுத்த லெவல் எம்ஜி. இதில் சிம் கார்டு எம்பெட் செய்திருப்பதால், கார் எப்போதுமே உங்கள் கன்ட்ரோலிலேயே இருக்கும். ‘ஸ்மார்ட்’ எனும் ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்துகொண்டால் போதும். டிரைவர் அலெர்ட்டில் இருந்து பார்க்கிங் அலெர்ட், ஜியோஃபென்ஸிங் சிஸ்டம் வரை எல்லாமே கவனித்துக் கொள்ளலாம். கானா ஆப், ‘டாம் டாம்’ நிறுவனத்தின் லைவ் டிராஃபிக் அப்டேட் கொண்ட நேவிகேஷன் சிஸ்டம், ரிமோட் கார் லாக்/அன்லாக் என்று இன்னும் வசதிகள் உண்டு. மற்றபடி ஏபிஎஸ் உடன் இபிடி, பிரேக் அசிஸ்ட், ட்ராக்ஷன் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்ஸார், ISOFIX குழந்தைகள் சீட், 6 காற்றுப்பைகள் என்று பாதுகாப்பிலும் தம்ஸ்–அப் காட்டுகிறது எம்ஜி.

எஸ்யூவி பிரியர்களின் மனசில் மேலோட்டமாக இடம் பிடித்துவிட்டது ஹெக்டர். இதன் அற்புதமான ரோடு பிரசன்ஸ், சன்ரூஃப், ஆல்வீல் டிஸ்க், இடவசதி, ஸ்டைல், எஸ்யூவிகள் பலவற்றில் இல்லாத வசதிகள்... எல்லாம் ஓகே... ஆனால், எம்ஜி ஹெக்டர் முழுமையான எஸ்யூவியா என்றால்... சில விஷயங்கள் கேள்விக்குறியாகின்றன. 4வீல் டிரைவ் இல்லாதது, பெரிய வீல்கள் இல்லாதது, பாடி பேனல்களின் நடுவே இடைவெளி, கட்டுமானத் தரம் என்று அடுக்கலாம்.

ஹெக்டர்... முழுமையான எஸ்யூவியா?

ஓகே... ஹெக்டர் வாங்கலாமா, வேண்டாமா? நல்ல வெளிச்சாலை விஸிபிலிட்டி, லைட் ஸ்டீயரிங், ஈஸி மூவிங் என சிட்டிக்குள் ஓட்ட நல்ல கம்ஃபர்ட் ஆக இருக்கிறது. பெட்ரோல் நல்ல சாய்ஸ். ஹைவேஸில் பன்ச் இல்லை. ஆனால், மைலேஜை எதிர்பார்க்கக் கூடாது. அதிலும் ஆட்டோமேட்டிக்கில்... மூச்! நெடுஞ்சாலைகளில் ஜாலியாக க்ரூஸ் செய்து பறக்க வேண்டுமென்றால், ஃபியட் டீசல் நல்ல சாய்ஸ். பெட்ரோலோ, டீசலோ... கொடுக்கும் காசுக்கு ஏற்ற கார், ஹெக்டர். நம்பகத்தன்மை... அது இனிமேல்தான் தெரியும். அதற்காகத்தான் 5 ஆண்டு வாரன்ட்டி கொடுத்துக் கவர்கிறது எம்ஜி. எம்ஜி–க்கு ஒரு வேண்டுகோள் – டீலர் நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்துங்கள்.

ஒரு வரி அட்வைஸ்:

ஹெக்டரில் ஷார்ப் எனும் வேரியன்ட்தான் டாப் மாடல். ஷார்ப்பில் இருக்கும் டச் ஸ்க்ரீன் முதற்கொண்டு நிறைய வசதிகள் ஸ்மார்ட் மாடலிலேயே வந்துவிடும். சன்ரூஃப் போன்ற சில விஷயங்களைத் தவிர!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு