பிரீமியம் ஸ்டோரி
எலி... கார்களுக்கு கிலி!

பைக்கோ/ காரோ… எதுவாக இருந்தாலும் சட்டுபுட்டு என்று சாவியைத் திருகிய உடனேயே 0–100 கிமீ–யை குறைந்த விநாடிகளில் கடப்பவர் என்றால், நீங்கள் ஒரு சரியான டிரைவர் இல்லை என்று அர்த்தம். காரில் அமர்ந்ததும் கண்ணாடிகளைச் சரி செய்து, சீட்பெல்ட்டை மாட்டி.. ஹேண்ட் பிரேக் ரிலீஸ் செய்து… மிக முக்கியமாக இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் உள்ள ஸ்க்ரீனில் எச்சரிக்கைச் சின்னங்கள் எதுவும் ஒளிரவில்லை என்றால் மட்டுமே… ஆக்ஸிலரேட்டரை அழுத்த வேண்டும்.

முறையாக கார் ஓட்டும் டிரைவருக்கு இதுதான் அழகு. இப்போது வசதிகள் அதிகம் கொண்ட காரில் TPMS (Tyre Pressure Monitoring System) பார்ப்பதுகூட அவசியம். ஓகே! இப்போது விஷயத்துக்கு வருகிறேன். நான் சொல்லப்போவது டொயோட்டாவின் ஃபார்ச்சூனரைக் கொண்டுவந்த டிரைவரைப் பற்றி. கெட்டதிலும் நல்லது நடந்த மாதிரி, நீண்ட தூரம் ஓடிய அந்த கார், மிகச் சரியாக எங்கள் டொயோட்டா சர்வீஸ் சென்டர் அருகில் வந்தபோதுதான் பிரேக்டவுன் ஆனது.

`‘சரியான டையத்துக்குக் கொண்டு வந்துட்டேன்ல சார்!’’ என்று அவருக்கு அவரே பாராட்டிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அவர் செய்த மிகப் பெரிய தவறும் காலதாமதமும் எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

பிரேக்டவுன் ஆன அந்த காரின் பானெட்டில் ஒரே நாற்றம். என்னவென்று திறந்து பார்த்தால்… பெருச்சாளி ஒன்று சூடு தாங்காமல் முடியெல்லாம் நட்டுக் கொண்டபடி நின்று கொண்டிருந்தது. நாங்கள் பானெட்டைத் திறந்ததும், சுடுகாட்டிலிருந்து சூடு தாங்காமல் எழும் பிணம்போல… தொப்பெனக் கீழே விழுந்தது. அந்தப் பெருச்சாளிக்கு ‘எந்திரன்’ ரஜினி மாதிரி சில டிகிரி பாரன்ஹீட்டுகளைத் தாங்கக்கூடிய சக்தி இருக்க வேண்டும் போல. லேசாக உயிர் ஊசலாடிக் கொண்டுதான் இருந்தது.

பெருச்சாளியை டிஸ்போஸ் செய்துவிட்டுப் பார்த்தால்… இன்ஜெக்டருக்குப் போக வேண்டிய ஹோஸை நன்றாகக் கடித்துத் துவம்சம் செய்திருந்தது. அதாவது, இரண்டு இன்ஜெக்டர்கள் இதில் காலி. பிரச்னை ரொம்பவும் சீரியஸாகப் போனது. காரணம், ஒரு இன்ஜெக்டரின் விலை பல ஆயிரங்கள்.

டிரைவரைக் கூப்பிட்டு விசாரித்ததில், உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். அதாவது, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இன்ஜின் மால்பங்ஷன் வார்னிங் லைட் எரிந்ததைச் சொன்னார். ஆனால், அவருக்கு அது என்ன விதமான வார்னிங் என்கிற விழிப்புஉணர்வு இல்லை.

காரின் உரிமையாளர் வெளிநாடு சென்றுவிட்டதால், கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு அவர் காரை எடுத்தபோதே இன்ஜின் மால்பங்ஷன் லைட் ஒளிர்ந்திருக்கிறது. அவர் அதைக் கவனிக்கவே இல்லை. அதாவது, இன்ஜினில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதுதான் மால்பங்ஷன் வார்னிங். அப்போதே எலி தன் கைவரிசையைக் காட்டியிருக்க வேண்டும். என்ன நடந்திருக்கிறது என்றால் சிலிண்டருக்குப் போகும் இன்ஜெக்டர் கடித்துக் குதறப்பட்டிருக்கிறது. நாங்கள் பார்க்கும்போது இரண்டு இன்ஜெக்டர்கள் காலி! இதனால், 4 சிலிண்டர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் இரண்டு இன்ஜெக்டர்கள்தான் வேலை செய்திருக்கின்றன.

‘‘கார் லேசா வைப்ரேஷன் ஆச்சு சார்… வழக்கத்துக்கு மாறா உதறுதேனு தோணுச்சு. ஒருவேளை ரொம்ப நாள் கழிச்சு காரை எடுக்குறதால அப்படி இருக்குமோனு நினைச்சேன். ஆனால், போகப் போக பிக்–அப்பும் கம்மியாகிடுச்சு!’’ என்று அப்பாவியாகச் சொன்னார் அந்த டிரைவர்.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், முதல் இன்ஜெக்டரைக் கடித்தது வேறு எலி என்பதைக் கண்டுபிடித்தோம். இந்தப் பெருச்சாளியை அவர் பாண்டிச்சேரியில் இருந்து பிக்–அப் செய்து வந்து கொண்டிருந்திருக்கிறார். இதில் பல ஆயிரங்கள் அந்தக் கார் உரிமையாளருக்குச் செலவு. அதனால்தான் சொல்கிறேன் – எப்போதுமே காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரைக் கவனித்துவிட்டு, வார்னிங் லைட் ஒளிரவில்லை என்றால்தான் காரை எடுக்க வேண்டும்.

இன்னொரு சம்பவம் உண்டு. வாடிக்கையாளர் ஒருவர் காரை ஓட்டும்போது, கூலாக இருந்த இன்ஜின், திடீரென சூடாகி இருக்கிறது. நன்றாகப் போய்க்கொண்டிருந்த காரின் டெம்பரேச்சர் மீட்டர் திடீரென சிவப்பு நோக்கிப் போனதை நல்லவேளையாக அந்த வாடிக்கையாளர் கவனித்திருக்கிறார். அவர் செய்த புத்திசாலித்தனமான விஷயம் – காரை உடனே நிறுத்தி டோ செய்து சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு போய் விட்டிருக்கிறார். அதாவது, எலி - கூலன்ட் ஆயில் டப்பாவைக் கடித்திருக்கிறது. இதனால், கூலன்ட் முழுதும் தரையில் ஒழுகி, காரின் டெம்பரேச்சர் எகிறிவிட்டது. அவர் மேற்கொண்டு கார் ஓட்டாததால், பெரிய செலவில் இருந்து தப்பித்தார். இத்தனைக்கும் டீ குடிப்பதற்காக காரை நிறுத்தியபோது, ‘‘கார்ல இருந்து ஏதோ ஒழுகுதுப்பா!’’ என்று அவரது ஒன்பது வயது மகன் எச்சரித்திருக்கிறான். ‘‘அது ஏசி தண்ணியா இருக்கும்’’ என்று அசால்ட்டாக இருந்துவிட்டார். அதன் பிறகுதான் டெம்பரேச்சர் மீட்டர் காப்பாற்றி இருக்கிறது.

இப்படி லாக்டவுனில் நிறைய எலி கேஸ்கள், எங்கள் சர்வீஸ் சென்டருக்கு வந்தன. காரணம், நீண்ட நாட்களாக காரை எடுக்காமல் இருந்ததால், எலிகள் ஏறிவிட்டிருந்திருக்கின்றன. எலிகளுக்கு என்றே ஒரு ஜாப் ஷீட் போட்டு வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது.

இன்ஜினுக்குத்தான் பெரிய பிரச்னை!

இன்ஜின் சமாச்சாரங்களில் வாய் வைப்பதுதான் எலிகளுக்குப் பிடித்த விஷயம்போல! முக்கியமாக இன்ஜெக்டர் ஹோஸ் மற்றும் சென்ஸார்கள். எப்போதுமே கார் ஓட்டும்போது, உங்களுக்கு ஏதும் அப்நார்மலாக ஒரு விஷயம் தென்பட்டால்… யோசிக்காமல் உடனே சர்வீஸுக்கு அழைத்துவிடுங்கள்.

கார் ‘தடதட’வென அலைபாயும். பிக்–அப் ஒழுங்காகக் கிடைக்காது. கார் உதற ஆரம்பிக்கும். வைப்ரேஷன் அதிகமாக இருக்கும். ஒரு மாதிரி அப்நார்மல் டிரைவிங் தெரியும். மைலேஜ் பயங்கரமாக டிராப் ஆகும். எக்ஸாஸ்ட் சத்தம் ஒரு மாதிரி இருக்கும். இன்னும் சில நேரங்களில் ஸ்டார்ட் ஆகவே செய்யாது. அதனால்தான் இன்ஜின் மால்பங்ஷன் லைட் எரிந்தால்… லாங் டிரைவிங் போகாதீர்கள். பக்கத்தில் இருக்கும் சர்வீஸ் சென்டருக்கு உடனே வண்டியை விடுங்கள்.

அதேபோல், இன்னொரு டிப்ஸ்: எப்போதுமே காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, ஆயிரம் ஐநூறுக்காகக் கஞ்சத்தனம் காட்டாதீர்கள். பம்பர் டு பம்பர் என்று மொத்தமாக காருக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துவிடுங்கள். ரேட் பைட் கவரேஜ், டிஸாஸ்டர் டேமேஜ் போன்றவை கவர் ஆவதுபோல் ஒரு பாலிஸி எடுப்பது மிகவும் நல்லது. 500 ரூபாய்க்குள் ஒயர்களைக் கடித்தால் பிரச்னை இல்லை; மொத்தமாக ஒயரிங் கிட்டையே மாற்ற வேண்டி வந்தால்… இன்ஷூரன்ஸ் இருக்கும் பட்சத்தில் பெரிய செலவு தவிர்க்கப்படலாம்

- (தொகுப்பு: தமிழ்)

எலி... கார்களுக்கு கிலி!

எதனால் எலி ஏறுகிறது?

* நீண்ட நாட்களாக காரை எடுக்காமல் ஒரே இடத்தில் பார்க் செய்திருந்தால், நிச்சயம் எலிகளுக்குக் குஷிதான். குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது காரை ஸ்டார்ட் செய்து, இரண்டு கிமீ–களாவது ஓட்டிவிட்டு வைப்பது நல்லது.

* குறைந்தபட்சம் பார்க்கிங்கில் ஒரு சூட்சுமத்தைக் கடைப்பிடிக்கலாம். அதாவது, காரை தினசரி சில அடிகள் முன்னும் பின்னும் நகர்த்தி பார்க் செய்யுங்கள். இதுவும் எலித்தொல்லையில் இருந்து நிச்சயம் பலன் தரும்.

* கார்களை மினி கேன்ட்டீன் ஆக்குவதை நிறுத்துங்கள். அப்படியே காருக்குள் நொறுக்குத் தீனி சாப்பிட்டாலும், காரை பார்க் செய்யும்போது சிதறி இருக்கும் நொறுக்குத் தீனி பண்டங்களைச் சுத்தம் செய்துவிடுங்கள். தின்பண்டங்களுக்கும் எலிகள் வரும். இதில் சீட்களுக்கும் ஆபத்து உண்டு.

* அடிக்கடி டிக்கியையும் சோதனை போட மறக்காதீர்கள். ஸ்டெஃப்னி டயரைக் கடிக்கவும் வாய்ப்புண்டு.

எதற்கு எந்த வார்னிங் லைட்?

* இன்ஜின் சம்பந்தமான எந்த ECM, ஒயர்கள், இன்ஜின் ஆயில் பாதிக்கப்பட்டிருந்தால், இன்ஜின் மால்பங்ஷன் லைட் ஒளிரும்.

* கூலன்ட் போன்ற ஆயில் சீல்களைக் கடித்தால்… டெம்பரேச்சர் மீட்டரை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

* பிரேக் ஆயில் மற்றும் பிரேக் சம்பந்தமான ஒயர்களைக் கடித்தால்… ABS சென்ஸார் ஒளிரும்.

* ஸ்டீயரிங் சம்பந்தமான ஒயர்கள், மற்றும் ஹைட்ராலிக் ஆயில் சம்பந்தமான விஷயங்களை எலி கடித்திருந்தால், ஸ்டீயரிங் மால்பங்ஷன் லைட் ஒளிரும்.

* மற்றபடி வைப்பர் ஃப்ளூயிட் பாக்ஸ், மெட்டல் மற்றும் ரப்பர் பாகங்களுக்கு வார்னிங் லைட் ஒளிராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றின் பாதிப்பை, ஓட்டுதலில் ஒளிரும் வித்தியாசங்களை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். எனவே தயவுசெய்து காரை எடுக்கும்போது, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஒரு கண் வையுங்கள்.

எலி... கார்களுக்கு கிலி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எலிகளை எலிமினேட் செய்ய…!

* எலித் தொந்தரவுக்குப் பெரிய நம்பிக்கை இதுதான். நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் நாட்டுக் கட்டுப் புகையிலையை வாங்கி வீல் ஆர்ச் மற்றும் பானெட்டில் அங்கங்கே கட்டி வைத்துவிடுங்கள். தண்ணீரில் நனைத்துக் கட்ட வேண்டும். இதன் வாடைக்கு எலி வராது.

* அதேபோல், காரை ஓட்டிவிட்டு வந்து, பானெட் சூடாக இருக்கும்போது நாட்டுப் புகையிலையைக் கட்டக்கூடாது. பார்க்கிங் செய்து பல மணி நேரம் கழித்து சூடு ஆறிய பிறகு கட்ட வேண்டும்.

* கொசுக்களை டார்ச்சர் பண்ண அல்ட்ராசோனிக் சப்தம் கொண்ட சின்ன மிஷின் இருப்பதைப்போல், எலிகளுக்கும் எரிச்சல் தரக் கூடிய இசை உண்டு. இதை இன்ஜின் பக்கத்தில் வைத்து, இரவு முழுவதும் ஓட விட்டால், எலிகள் நிச்சயம் அண்டாது.

* எலி வலைகளும் இதற்கென உண்டு. இந்த வலைகளை வாங்கி பானெட் பகுதியைச் சுற்றிப் பொருத்திக் கொள்ளலாம். இவை சர்வீஸ் செய்யும்போது எளிதாகக் கழட்டி மாட்டும் வகையில் கிடைக்கிறது.

* ரொம்பவும் ஈஸியான ஆப்ஷன் – Rodent Repellent. எலி ஸ்ப்ரே. 3M போன்ற பிராண்டட் கம்பெனிகளின் ரெப்பெல்லன்ட்கள், நல்ல பலன் தரக் கூடிய ஆப்ஷன். இந்த எலி ஸ்ப்ரேவை வீல் ஆர்ச், பானெட்டின் இண்டு இடுக்குகளில் அடித்துவிட்டால்… ஒரு மாதத்துக்கு எலிகள் அண்டாது.

எலிகளை விரட்ட இதை மட்டும் செய்யாதீங்க!

* சிலர் எலிகள் மீது கடுப்பாகி, ‘எலி மருந்து வெச்சுக் கொன்னுடலாம்’ என்று முடிவெடுப்பார்கள். எலி மருந்துகள் எலியைக் கொல்லும்தான். ஆனால், இதில் ஒரு பெரிய சிக்கல் உண்டு. விஷ பாஷானத்தைச் சாப்பிட்ட அந்த எலிகள், உங்கள் காருக்குள்ளேயே மாண்டுபோனால், துர்நாற்றம் ஏற்பட ஆரம்பித்து விடும். காரின் இன்டீரியரில் இறந்துபோனால், சீட் மொத்தத்தையும் மாற்ற வேண்டியிருக்கும். இன்ஜின் பாகங்களுக்குள் போய் இறந்து போனால்… அதைச் சுத்தம் செய்வது பெரிய டாஸ்க் மற்றும் செலவு. வாடிக்கையாளர் ஒருவர், காருக்குள் எலி மருந்து வைத்திருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து பானெட்டைத் திறந்தால்.. ஒரே புழுக்கள் மயம். காரை ஸ்டார்ட் செய்யவும் முடியாமல், நாற்றம் குடலைப் புரட்ட அவரே சுத்தம் செய்திருக்கிறார். இன்னொருவர், காருக்குப் பக்கத்தில் எலி மருந்து வைத்திருக்கிறார். அவரது செல்ல நாய் ஒன்று அதைச் சாப்பிட்டு இறந்து போனது சோகமான விஷயம். எனவே குழந்தைகள், செல்லப் பிராணிகள் புழங்கும் இடத்தில் எலி விஷமருந்து வைப்பது பெரிய ஆபத்து என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு