கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

எக்ஸ்யூவி300... பாதுகாப்பில் சாம்பியன்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300
பிரீமியம் ஸ்டோரி
News
மஹிந்திரா எக்ஸ்யூவி300

சேஃப்டி டிரைவ் டெஸ்ட்: மஹிந்திரா எக்ஸ்யூவி300

“சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதில் பொதுமக்களை விடுங்கள்; மீடியா எப்படி இருக்கிறது? உங்களுக்கு ஒரு எக்ஸாம்… வர்றீங்களா?’’ என்று அழைத்திருந்தது மஹிந்திரா.

எக்ஸாம் என்றாலே எனக்கு அலெர்ஜி. நீட் தேர்வுபோல் செம டஃப்பாக இருக்குமோ என்று பயந்தபடி போனால், செம ஜாலியாக இருந்தது எக்ஸாம். முதலிலேயே, ``பாதுகாப்பு என்றால், உங்களுக்கு ஞாபகம் வருவது என்ன?’’ என்று கொஸ்ட்டீன் போட்டார்கள். ஃபேமிலி, லைஃப், க்ரூஷியல், ரெஸ்பான்ஸிபிலிட்டி என்று ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னோம்.

எக்ஸ்யூவி300... பாதுகாப்பில் சாம்பியன்!

``பிராக்டிக்கல் டெஸ்ட் இனிமேல்தான்’’ என்று எக்ஸ்யூவி 300 காரின் சாவியைக் கொடுத்தார்கள் மஹிந்திரா அதிகாரிகள்.

எக்ஸ்யூவி 300 பற்றித் தெரியும்தானே! பாதுகாப்பைப் பொறுத்தவரை குளோபல் NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய கார், நெக்ஸானுக்குப் பிறகு எக்ஸ்யூவி300. அதனால்தான் இந்தச் சாலை விழிப்புஉணர்வு டெஸ்ட்டுக்கு எக்ஸ்யூவி300-யைத் தேர்ந்தெடுத்திருந்ததோ என்னவோ? 7 காற்றுப்பைகள், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ், ESC, முன்பக்கத்துக்குக்கூட பார்க்கிங் சென்ஸார், டைனமிக் லைன்களுடன் ரிவர்ஸ் கேமரா, நான்கு வீல்களுக்கும் டிஸ்க் என கலக்கலாக வந்திருக்கும் எக்ஸ்யூவி300-யை, பாதுகாப்பை முன்னிறுத்தி கார் வாங்கும் ஐடியாவில் இருப்பவர்களுக்கு ரெக்கமண்ட் செய்வதில் தவறேதும் இருக்காது.

வேளச்சேரி ஸுலைகா மோட்டார்ஸ் ஷோரூமில் இருந்து இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக் வரை கான்வாய் மாதிரி போக வேண்டும். `அடிக்கடி ஓவர்டேக் செய்யாதீங்க; ரேஷ் டிரைவ் வேண்டாம்; பாதசாரிகள் க்ராஸ் செய்தால் பிரேக் போடுங்கள்; ஆரஞ்ச் சிக்னல் வந்தாலே காரை ஸ்லோ செய்ய மறக்காதீர்கள், 3-ம் நம்பர் கார் கான்வாயில் இருந்து மிஸ் ஆகாதீங்க’ என்று நமது டேஷ்போர்டில் இருந்த வாக்கிடாக்கியில் அறிவுரைகள் கேட்டுக் கொண்டே இருந்தன.

ரேஸ் ட்ராக்கில் நம்மை மாணவர்களாகவே ஆக்கிவிட்டார்கள். ஆர்டிஓ அலுவலக டெஸ்ட் மாதிரி, சைன்போர்டு டெஸ்ட்டெல்லாம் வைத்தார்கள். பிராக்டிக்கல் டெஸ்ட்டுக்குத் தயாரானோம். நமது கோச் யாரென்று பார்த்தால்… அட, கார் ரேஸர் ஆதித்யா பட்டேல். போலோ கப் ரேஸர், ஆடி ரேஸிங் என்றாலே ஆதித்யாதான் நினைவுக்கு வருவார்.

எக்ஸ்யூவி300... பாதுகாப்பில் சாம்பியன்!

பொதுவாக, ரேஸர்கள் என்றாலே `வ்வ்ர்ர்ரூம்’ ஸ்டைலில் பரபரவெனத்தான் பார்த்திருப்போம். ஆனால், டிராக்கில் வேகமாகச் சீறும் ஆதித்யாவை விவேகமான ஆதித்யாவாகப் பார்த்தோம்.

வெளிநாட்டு டிரைவிங் ஸ்கூல்கள்போல் கோன்களெல்லாம் வைத்துப் பயிற்சி கொடுத்தார்கள். சீட் பெல்ட் போடுவது, சீட், மிரர்களை அட்ஜஸ்ட் செய்வது, ஹேண்ட் பிரேக் எடுத்துவிட்டு ஆக்ஸிலரேட்டர் மிதிப்பது என்று என்று எல்லாவற்றையும் நோட் செய்தார்கள். வேண்டுமென்றே பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்து காரை எடுக்கச் சொன்னார்கள். நல்லவேளையாக, நான் அவர்களையும் சீட் பெல்ட் போடச் சொன்னேன். கோ டிரைவர் சீட்டில் இருப்பவர்களை சீட் பெல்ட் போடச் சொல்லவில்லையென்றால், மார்க் குறைத்தார்கள்.

எக்ஸ்யூவி300... பாதுகாப்பில் சாம்பியன்!

என்னவென்றால், வெளிநாட்டில் டிரைவிங் லைசென்ஸ் வாங்கும்போது, இந்த நடைமுறையெல்லாம் செக் செய்வார்களாம். ரேஸ் மாதிரியே ஸ்டாப் லைனில் இருந்து காரைக் கிளப்பி - கீப் ரைட், கீப் லெஃப்ட் என்று லேன் சேஞ்ச் எப்படிச் செய்வது என்று பயிற்சி கொடுத்தார்கள். வெளிநாடுகளில் கார் ஓட்ட வாய்ப்புக் கிடைத்தால் திணறுவோமே… அதற்காக இந்தப் பயற்சியாம்.

கார் டிரைவிங்கைப் பொறுத்தவரை, காரில் இருப்பவர்களைவிட பாதசாரிகளின் பாதுகாப்புக்குத்தான் முதலிடம். அதற்காகத்தான் பானெட் உயரத்தை எல்லா கார்களிலும் ஏற்றும்படி பாதுகாப்பு நார்ம்ஸ் உள்ளது. வால்வோ போன்ற கார்களில் விண்ட்ஷீல்டில்கூட காற்றுப்பைகளெல்லாம் வந்துவிட்டதும் இதனால்தான். பெடெஸ்ட்ரியன் க்ராஸிங் ஏரியாவுக்குச் சில மீட்டர்களுக்கு முன்னாலேயே காரை 30, 20, 10 கிமீ என்று வேகத்தைக் குறைக்க வேண்டும். ``எப்போதுமே பாதசாரிகள் க்ராஸ் செய்ய உதவி புரியுங்கள்… ப்ளீஸ்’’ என்றார் ஆதித்யா. அதேபோல், க்ராஸிங் லைனுக்கு முன்பாக வந்து சடர்ன் பிரேக் போட்டு, மக்களைப் பீதிக்குள்ளாக்குவதும் தவறு.

எக்ஸ்யூவி300... பாதுகாப்பில் சாம்பியன்!

சடர்ன் பிரேக் பிடிப்பதற்கும் ஒரு டெஸ்ட் வைத்தார்கள். காரை சடர்ன் பிக் அப் செய்து, மூன்றிலக்க வேகத்தில் வந்து, திடும்மென ஹார்ட் பிரேக்கிங் போட வேண்டும். என்ன ஆச்சரியம், 90 கிமீ வேகத்தில் பறந்து, பிரேக்கில் ஏறி மிதித்த அடுத்த விநாடி, பச்சக் என நின்றது எக்ஸ்யூவி300. 4 டிஸ்க்குகள் மற்றும் ஏபிஎஸ்-ன் மகிமை இது.

நம் ஊரில் பெரும்பாலான டிரைவர்கள், ரிவர்ஸ் எடுக்கும்போது என்னதான் கழுத்தைத் திருப்பி பார்க் செய்தாலும், விபத்து ஏற்பட்டு விடுகிறது. அதற்காகத்தான் இப்போதுள்ள கார்களில் டைனமிக்ஸ் லைன்களுடன் ரிவர்ஸ் கேமரா வருகிறது. அதாவது, உங்கள் ஸ்டீயரிங்கின் திருப்புதலுக்கு ஏற்ப லைன்களும் வளைந்து நெளிந்து டிரைவர்களுக்குப் பக்காவான பார்க்கிங்குக்கு உதவும். ஏகப்பட்ட சென்ஸார்களுடன் எக்ஸ்யூவி300 செமயாக இருக்கிறது.

ரேஸ் ட்ராக் என்றால், லேப்பில் பறக்காமல் எப்படி? ஸ்பீடுக்கெல்லாம் மார்க் போடவில்லை மஹிந்திரா. ஆனாலும் டர்போ சார்ஜராச்சே… மூன்றிலக்கங்களில் சும்மா பறந்து பார்த்தேன். இறுதியில் லேன் மாறுதல், சடர்ன் பிரேக்கிங், விதிகளைக் கடைப்பிடித்தல் என்று 1 நிமிடம் 25 விநாடிகளில் நம் டெஸ்ட்டை பாஸ் செய்து, மஹிந்திரா கையால் சாம்பியன் சர்ட்டிஃபிகேட் எல்லாம் வாங்கியது பெருமைதானே!

பாதுகாப்பில் ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்: ``நம்மை விடுங்கள்; நம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு ஆபத்துகூட ஏற்படக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள்!’’ – நான் இந்த டெஸ்ட்டில் கற்றுக் கொண்டது இதுதான்.