அசிடிலின் விளக்கு முதல் அடாப்டிவ் மல்ட்டி பீம் வரை… ஹெட்லைட் ஹைபீம்… நல்லதா கெட்டதா?

ஃபரித்கான்
பாதுகாப்பு: ஹெட்லைட்
நமக்கு இரு கண்கள் எப்படியோ, அதேபோல்தான் ஒரு காருக்கு அதனுடைய முகப்பு விளக்கு கள், அதாவது ஹெட்லைட். இரவு நேரங்களில் கார்களின் ஹெட்லைட்தான் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்; பார்வையையும் குழப்பி பயத்தையும் ஏற்படுத்தும். ஹெட்லைட்டின் வரலாறு சுவாரசியமானது.

வாகனம் கண்டுபிடித்த காலங்களில் முதன் முதலில் எண்ணெய் ஊற்றிய விளக்குகளையே காரின் ஹெட்லைட் ஆகப் பயன்படுத்தினார்கள். ஆனால், அவற்றால் காற்று, மழை போன்றவற்றைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் எண்ணெய்க்குப் மாற்றாக அசிடிலின் (Acetylene) என்ற வாயுவைப் பயன்படுத்தினர். இது மிகவும் கைகொடுத்தது.

1898–ம் ஆண்டுதான் முதன் முதலில் எலெக்ட்ரிக் ஹெட்லைட் அறிமுகமானது. அசிடிலின் விளக்கு வெளிச்சத்தைவிட, எலெக்ட்ரிக் ஹெட்லைட்டின் வெளிச்சம் பிரகாசமாக இருந்ததால், இதற்கு வரவேற்பு இருந்தது. ஹெட்லைட் உடன் சேர்த்து டெயில் லைட், சைடு லேம்ப் (Tail light ,Side lamp) என அனைத்தும் எலெக்ட்ரிக்கலாகத் தயாரிக்கப்பட்டன. ஆனால், கூடவே இதில் ஒரு மைனஸ் பாயின்ட்டும் இருந்தது. அதாவது, எதிரே வாகனம் வரும்பொழுது ஒரு காரின் ஹெட்லைட் வெளிச்சம் மற்றவரைப் பாதித்தது. 1915–ம் ஆண்டு ஹெட்லைட்டில் முதன் முதலில் லோ பீம் (low beam) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஹெட்லைட்டை டிம்–டிப் செய்ய டிரைவர் காரை விட்டுக் கீழிறங்க வேண்டியிருந்தது.

1917–ம் ஆண்டு கேடில்லாக் (Cadillac) நிறுவனம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. ஹெட்லைட்டை டிம் செய்வதற்கு காரின் உள்ளேயே ஒரு லீவரைப் பொருத்தியது அது. காரின் ஸ்டீயரிங் பகுதியில் இருந்த லீவரை, பின்பு காரின் ஃப்ளோர் பகுதியில் இடதுபக்கம் பெரிய ஸ்விட்ச் ஆகப் பொருத்தினர். நம் ஊரில் உள்ள பழைய அம்பாஸடர் காரில்கூட அந்த ஸ்விட்சை நாம் பார்க்க முடியும். இப்படிப்பட்ட ஹெட்லைட்கள்தான், தற்போது LED Lights, Projector headlights என காலத்திற்கு ஏற்றாற்போல் மாறியுள்ளது.
டிம்-டிப் செய்வது என்பது விபத்துக்களைத் தவிர்த்து உயிர்களைக் காக்கும் விஷயம். இந்த விஷயத்தை எத்தனை பேர் சரியாகப் பயன்படுத்துகிறோம்?