சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார் வெச்சிருக்கீங்களா? வந்துடுச்சு பசுமை வரி!

பழைய கார்
பிரீமியம் ஸ்டோரி
News
பழைய கார்

உதாரணத்துக்கு... ஒருவர் 2006 மாடல் இண்டிகா BS-3 மாடல் காரை 90,000 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்.

நீங்கள் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார் வைத்திருந்தீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ். சமூகச் சூழலில் அக்கறை கொண்ட கார் ஓனராக இருந்தால், இதுவே உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். ஆம்! போக்குவரத்துச் சட்டத்தில் ரொம்ப நாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த Scrappage Policy–யை ஒரு வழியாக நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது மத்திய அரசு.

MoRTH (Ministry of Road Transport and Highways) எனும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம், இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிசிக்கு–க்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. ‘‘அய்யய்யோ... அப்போ நம்ம பழைய கார், இனிமேல் குப்பைக்குத்தானா’’ என்று நீங்கள் பயப்படுவது புரிகிறது. கவலைப்படாதீர்கள்… டிரான்ஸ்போர்ட் மற்றும் தனிநபரின் கார்களுக்கு இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிசி இப்போதைக்குக் கிடையாது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வாகனங்கள் போன்றவற்றுக்கு இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிசி பொருந்தும். அதாவது, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எந்த வாகனமாக இருந்தாலும், அதை De-Registration எனும் நடைமுறைக்குக் கீழ் கொண்டு வந்து, அதை இனிமேல் பயன்படுத்த முடியாதபடி மாற்றி, சுற்றுச்சூழலைக் காக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு.

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார் வெச்சிருக்கீங்களா? வந்துடுச்சு பசுமை வரி!

ஸ்க்ராப்பேஜ் பாலிசி என்றால் என்ன?

சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டுதான் எல்லா வாகனங்களையும் BS-6–க்கு அப்டேட் செய்ய வேண்டும் என்று கார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது மத்திய அரசு. BS-4–யை ஒப்பிடும்போது, கார்பனை மிகக் குறைவாக வெளியிடுகின்றன BS-6 கார்கள். இவை ஓடிக்கொண்டிருக்கும் நாட்டில், கார்பனை அதிகம் உமிழும் பழைய BS-3, BS-4 வாகனங்களும் ஓடுவது நன்றாக இருக்காது இல்லையா? அதனால், 15 ஆண்டுகள் பழைய கார்களைக் குப்பையில் போடும் திட்டம்தான் இந்த ஸ்க்ராப்பேஜ் பாலிசி. இந்த பாலிசிக்குக் கீழ்வரும் பழைய கார்களுக்கு, அந்தந்த மாடல் நிறுவனங்கள் ஒரு தேய்மானத் தொகை வழங்கும். உதாரணத்துக்கு ஜென், வேகன்–ஆர், சான்ட்ரோ, இண்டிகா போன்ற ஹேட்ச்பேக் கார்களுக்கு, 20,000 முதல் 25,000 ரூபாய் வரை கிடைக்கலாம் என்கிறார்கள். இதை அந்தந்த நிறுவனங்கள் அந்தந்த கார் உரிமையாளர்களுக்கு வழங்கும். பிரீமியம் கார்களுக்குத் தொகை அதிகமாகும். பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களுக்கு லட்சங்களில் தேய்மானத்தொகை கிடைக்கும். நீங்கள் புது கார் வாங்கும்போது, அந்தத் தொகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் மாருதியும் டொயோட்டாவும் கூட்டுச் சேரவிருப்பதாகவும் ஒரு ஸ்கூப் நியூஸ் உண்டு.

அப்படியென்றால், சொந்த வாகனம் மற்றும் T போர்டு வைத்திருக்கும் கார் உரிமையாளர்களின் நிலை?

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காரை நீங்கள் ஓட்டிக்கொண்டிருந்தால், சுற்றுச்சூழலைச் சீர்கேடு செய்வதற்காக, இப்போதைக்கு அரசுக்கு Green Tax எனும் பசுமை வரி கட்ட வேண்டும். அதாவது, வாகனங்களுக்கு FC எனும் ஃபிட்னெஸ் சர்ட்டிபிகேட், 15 ஆண்டுகளுக்கு ஒரு தடவை புதுப்பிக்க வேண்டும். 2005–க்கு முந்தைய பழைய கார்களை இப்போது ரினியூவல் செய்யும் பட்சத்தில், FC-யோடு இதற்கான வரியையும் சேர்த்துக் கட்ட வேண்டும். T போர்டு வைத்து ஓட்டும் டாக்ஸிகளுக்கு 8 ஆண்டுகள் பழசாக இருந்தாலே, இந்த Green Tax பொருந்தும். அதாவது, FC புதுப்பிக்கும்போது சாலை வரியோடு சேர்த்து 10 முதல் 25% வரை அதிகம் கட்ட வேண்டும்.

உதாரணத்துக்கு... ஒருவர் 2006 மாடல் இண்டிகா BS-3 மாடல் காரை 90,000 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். அவர் இந்த ஆண்டு FC ரினியூவல் செய்ய வேண்டும். இண்டிகா காருக்கு FC ரினியூவல் செய்ய, அதன் கண்டிஷனைப் பொறுத்து ரூ.3,500 முதல் 5,000 வரை ஆகும் (இன்ஷூரன்ஸ் தனி). இந்தத் தொகையோடு அவர் 10% முதல் 25% வரை எக்ஸ்ட்ராவாகச் செலுத்த வேண்டியிருக்கும். பெட்ரோல்/டீசல், வாகனத்தின் வகை போன்றவற்றைப் பொறுத்து, ஓன் போர்டு கார் உரிமையாளர்களுக்கு இந்த வரி விகிதம் வேறுபடும். கரியடிக்கும் டீசல் வாகனங்களுக்கு, பெட்ரோல் வாகனங்களைவிட நிச்சயம் வரி அதிகமாகத்தான் இருக்கும் என்கிறார்கள். இதுவே பொதுப் போக்குவரத்து வாகனங்களான டவுன் பஸ்கள் போன்றவற்றுக்குக் குறைவான வரி மட்டுமே! (நடைமுறையில், கமர்ஷியல் வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் FC புதுப்பிக்கும் நடைமுறை இருக்கிறது.)

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கார் வெச்சிருக்கீங்களா? வந்துடுச்சு பசுமை வரி!

மாசு அதிகம் உள்ள டெல்லி, கான்பூர், நொய்டா, பாட்னா போன்ற பல ஏரியாக்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் 50% சதவிகிதம் அதிக வரி கட்ட வேண்டும். (சென்னை இதில் இருக்கக்கூடாதுன்னு வேண்டிக்கங்க பாஸ்!)

எலெக்ட்ரிக், ஹைபிரிட், CNG, எத்தனால் LPG, விவசாயிகள் பயன்படுத்தும் ட்ராக்டர்கள், விவசாயத்துக்குப் பயன்படும் ஹார்வெஸ்டர்கள், Tiller போன்ற வாகனங்களுக்கு இந்தப் பசுமை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

‘‘எல்லாம் சரி, நான் வரி கட்டிட்டா பொல்யூஷன் குறைஞ்சிடுமா’’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கு இப்படிச் சொல்கிறார், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி. ‘‘இது ஏப்ரல் 2022-ல் இருந்து நடைமுறைக்கு வரும். பசுமை வரி மூலம் கிடைக்கும் வருவாயைத் தனியாக வைத்து, மாசுக் கட்டுப்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்! இதன் மூலம் மக்களும் BS-6 வாகனங்களுக்கு மாறி சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க உதவ வேண்டும்!’’

பசுமை வரி தொடர்பான ஆவணங்கள், இப்போது ஒவ்வொரு மாநில அரசின் ஒப்புதலுக்காகவும் வெயிட்டிங்! ஓல்டு கார் ஓனர்ஸ், விரைவில் பசுமை வரி கட்டத் தயாரா இருங்க!