Published:Updated:

செல்ஃப் டிரைவ் கார் வாடகைக்கு எடுக்கிறீங்களா?

செல்ஃப் டிரைவ் கார்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டிரைவ் கார்

செல்ஃப் டிரைவ் கார்: அனுபவம்/டிப்ஸ்

செமையான ஒரு ட்ரிப் அடிக்க வேண்டியிருக்கிறது. அல்லது ஓர் அவசர வேலைக்கு கார் தேவைப்படுகிறது. உங்களிடம் கார் இல்லை; ஆனால், உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியும். நண்பர்களிடம் கேட்கச் சங்கடம். இதற்காகத்தான் ‘ரென்ட் எ கார்’ (Rent a Car) என்றொரு சிஸ்டம் நடைமுறையில் இருக்கிறது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற இடங்களில் இந்த Rent a Car கிடைக்கிறது. சென்னையைப் பொருத்தவரை Rent a Car என்று இன்டர்நெட்டில் தேடினால், Zoom Cars, Smile Cars என்று நூற்றுக்கணக்கில் செல்ஃப் டிரைவ் கார் நிறுவனங்கள் உண்டு. ஆனால், இவற்றில் பல நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஆத்தரைஸ்டு நிறுவனங்களா என்றால்… இங்கேதான் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதில் சில டிரைவிங் ஸ்கூல்களும் செல்ஃப் டிரைவ் காரை ரென்ட்டுக்கு விட்டுத் தொழில் புரிகிறார்கள் என்பதுதான் விஷயம். டிரைவிங் ஸ்கூல்கள் தாண்டி, சில தனிநபர்களும் வாடகைக்கு விடுகிறார்கள். இது நல்லதா என்றால், பல சிக்கல்கள் இருக்கின்றன.

செல்ஃப் டிரைவ் கார் எடுப்பவர்கள், அந்த காரின் நம்பர் பிளேட்டைக் கவனியுங்கள். அதில் கறுப்பு போர்டில் மஞ்சள் நிற எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே அது ஆத்தரைஸ்டு Rent a Car நிறுவனம். இதை நீங்கள் தைரியமாக வாடகைக்கு எடுத்து ஓட்டலாம். மாநிலம் விட்டு மாநிலம் தாண்டினால்கூட போலீஸ் உங்களை நிறுத்தாது. இந்த வகை கார்களில் Geo-Fencing எனும் ட்ராக்கிங் சிஸ்டம் இருப்பதால், கார் எங்கே இருக்கிறது; யார் ஓட்டுகிறார் என்கிற எல்லாத் தகவல்களும் அந்த வாடகைக் கார் நிறுவனத்துக்கு நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். ‘‘இதில் ஒரு ப்ளஸ் – கார்களுக்கு விபத்து ஏற்பட்டால், உங்களுக்கு பர்ஸ் பெரிதாகப் பளுக்காது. கார் டேமேஜுக்கு என்று தனியாக இன்ஷூரன்ஸ் இருப்பதால், க்ளெய்ம் செய்ததுபோக மீதமுள்ள தொகையைத்தான் செலுத்த வேண்டியிருக்கும்.’’ என்கிறார் ஜூம் கார் பயன்படுத்திய வாடிக்கையாளர் ஒருவர்.

‘‘நான் சென்னை ஜூம் கார்லதான் எப்பவுமே காரை ரென்ட்டுக்கு எடுப்பேன். என்ன, டெபாசிட் அப்படி இப்படினு கொஞ்சம் பணம் மட்டும் அதிகமா செலவாகுது. மத்தபடி இதுவரைக்கும் எனக்கு எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியம்.

ஆனாலும், இந்த நிறுவனங்களில் காரை வாடகைக்கு எடுப்பதில் பல நடைமுறைகள் இருப்பதால், பலர் இதைப் பெரிதும் விரும்புவதில்லை. மேலும், சில தனிநபர் வாடகை கார்களைவிட இதற்கு வசூலிக்கப்படும் தொகையும் லேசாக அதிகம் என்பதும் காரணம். ‘சட்டுனு காரை எடுத்தோமா… போனோமா.. வந்தோமானு இருக்கணும்’ எனும் சிலர், தனிநபர் வாடகைக் கார்களை செல்ஃப் டிரைவுக்கு எடுப்பதைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

செல்ஃப் டிரைவ் கார் வாடகைக்கு எடுக்கிறீங்களா?
செல்ஃப் டிரைவ் கார் வாடகைக்கு எடுக்கிறீங்களா?
செல்ஃப் டிரைவ் கார் வாடகைக்கு எடுக்கிறீங்களா?

கோவையைச் சேர்ந்த சுந்தர், Rent a Car எடுப்பதை வழக்கமாக கொண்டவர். சென்னை – கோவையில் எங்கெங்கே செல்ஃப் டிரைவ் கார்கள் கிடைக்கும் என்பதைப் புள்ளி விவரமாகச் சொல்கிறார்.

‘‘நான் அடிக்கடி ஊட்டி, கர்நாடகா ட்ரிப் அடிப்பேன். அதனால், கோயம்புத்தூர்ல இருந்து எனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட இருந்து ஒரு காரை ரென்ட்டுக்கு எடுத்துப்பேன். அதுவே ஃப்ரண்ட்ஸோட போனா 8 சீட்டர் கார் எடுத்துப்பேன். ஒரு நாளைக்கு 1,750 ரூபாய் வாடகை கேட்பாங்க. இதுவே ஃபேமிலியோட போனா, ஹேட்ச்பேக் எடுத்துப்பேன். இதுக்கு 1,350 ரூபாய்தான் ஆகும். டீசல் நிரப்பிக் கொடுத்துடுவாங்க. நான் சென்னையில்தான் வேலை பார்க்கிறேன். அதனால், இங்கிருந்து கிளம்பி ரயில்ல கோவை வந்துருவேன். எனக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கே கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. டீசல் ஃபுல்லா இருக்கும். திரும்ப ரிட்டர்ன் பண்ணும்போது, ஃபில் பண்ணிக் கொடுத்துடலாம். சில நேரம் வீட்டுக்கே கார் வந்துடும். அங்கிருந்து அப்படியே ட்ரிப் ப்ளான் பண்ணிப்போம். இது ஆத்தரைஸ்டு நிறுவனம் கிடையாது. ஆனாலும் நான் நிறைய ட்ரிப் அடிச்சிருக்கேன். இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.’’ என்கிறார்.

இது தவிர, சில தனிநபர் வாகனங்களும் ரென்ட்டுக்குக் கிடைக்கின்றன. இவற்றில் தெரிந்தவர்கள் ரெக்கமண்டேஷனும், நல்ல டிரைவிங் அனுபவமும் இருந்தால் போதும். கார் ரென்ட்டுக்குக் கிடைத்துவிடும்.

‘‘ஜூம் மாதிரி நிறுவனங்கள்ல ஏகப்பட்ட ப்ரொஸிஜர்ஸ் இருக்கு சார். பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், 5,500 ரூபாய் டெபாசிட் தொகைனு (ரீஃபண்டபிள்தான்) பல விஷயங்களுக்கு அப்புறம்தான் பண்ணணும். கார் டெலிவரியும் சில நேரங்கள்ல நாங்களே பார்க்க வேண்டியிருக்கு. காரை ஈஸியா புக் பண்ண முடியலை. நாங்கதான் அவங்க ஆபீஸ் போய் எடுத்துட்டு வரணும். ஒரு தடவை பென்ஸ் கார் புக் பண்ணினேன். மறுநாள் அதை வேற யாருக்கோ எக்ஸ்டெண்ட் பண்ணியிருக்காங்க. நாங்க பெர்சனலா போகத்தான் காரை ரென்ட்டுக்கு எடுக்கிறோம். அவங்க ஜிபிஎஸ் வழியா கண்காணிச்சுக்கிட்டே இருக்கிறது ஒரு மாதிரி இருக்கு. அவங்க நினைச்சா, காரை ஆஃப்கூடப் பண்ணலாம். அதுகூட அவங்க கன்ட்ரோல்லதான் இருக்கு. ரோடு சைடு அசிஸ்டன்ஸ் இருக்குனு சொல்றாங்க. ஆனா, எனக்கு ஒரு தடவை இப்படித்தான் நடுரோட்ல பிரச்னை ஆகிடுச்சு. நேரடி கான்டாக்ட் நம்பர் இல்லை; ஏதோ டோல் நம்பர் மூலமாகத்தான் போக வேண்டியிருக்கு. அவங்க வந்து காரைச் சரி பண்ணித் தர்றதுக்குள்ள ரொம்ப அவஸ்தைப்பட்டுட் டோம். அதனால்தான் நானும் தனிநபர் செல்ஃப் டிரைவ் ரென்ட் காருக்கு மாறிட்டேன்’’ என்கிறார், இன்னொரு செல்ஃப் டிரைவ் பிரியரான பிரகதீஷ்.

செல்ஃப் டிரைவ் கார்களை டிரைவிங் ஸ்கூல்களிலோ, தனிநபர்களிடமோ வாடகைக்கு எடுத்து ஓட்டுவது சட்டப்படி குற்றமா என்றால், அதில் சில சட்டச் சிக்கல்கள் இருவருக்குமே இருக்கின்றன. ஏதேனும் பிரச்னை நடக்காத வரை தெரியாது. விபத்து போன்ற சூழ்நிலைகளில்தான் நமக்குப் பெரிய சிக்கலே ஆரம்பிக்கும்.

மதுரையைச் சேர்ந்த சதீஷ் (பெயர் மாறியிருக்கிறது), தனக்குத் தெரிந்த ஒரு தனிநபரிடம் ஃபோர்டு காரை வாடகைக்கு எடுத்தவர், ஹைவேஸில் ஒரு வயதான நபர் மேல் மோதி விபத்தைச் சந்தித்திருக்கிறார். இதில் காருக்கும் அடி. அந்த முதியவர் இப்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. சதீஷுக்கு இதில் மிகப் பெரிய மனஉளைச்சலும், நேர விரயமும் ஏற்பட்டிருக்கின்றன. காரை வாடகைக்கு விட்ட அந்த நபரும் இதனால் பண/நேர விரயத்துக்கும் ஆளாகியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

கோவையில் `Onroadz’ என்றொரு நிறுவனத்தில் செல்ஃப் டிரைவ் மஹிந்திரா கார் ஒன்றை ரென்ட்டுக்கு எடுத்த சென்னை நண்பர்கள் சிலர், ஊட்டியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் பயணிக்க நேர்ந்து, க்ளட்ச் பிளேட் எரிந்தே விட்டது. நட்ட நடுச் சாலையில் காரைத் தள்ளிக் கொண்டு, அந்த ரென்ட் எ கார் நிறுவனத்துக்குப் போன் செய்தால்… ‘‘உங்க மேலதான் மிஸ்டேக். மலையில் ஓட்டத் தெரியாம ஓட்டி க்ளட்ச் எரிச்சே போட்டீங்க… அதுக்கும் சேர்த்து உங்ககிட்ட பில் வசூலிச்சாதான் சரிப்பட்டு வருவீங்க!’’ என்று நிலைமை புரியாமல் பேச, இவர்கள் வேறு வழியின்றி ஹோட்டல் ஒன்றில் பார்க்கிங்கை வாடகைக்கு எடுத்து, பஸ் பிடித்து கோவை வந்து, அந்த நிறுவனத்தில் தங்கள் ஒரிஜினல் டாக்குமென்ட்களை வாங்கப் படாதபாடு பட்டுவிட்டார்கள். இத்தனைக்கும் அது முறையான ‘ரென்ட் எ கார்’ நிறுவனம் என்கிறார்கள். எனவே, ஆத்தரைஸ்டு நிறுவனமாக இருந்தாலும், வாகனத்தின் கண்டிஷனையும் செக் செய்ய மறக்காதீர்கள்!

அப்படியென்றால், இவர்களிடம் செல்ஃப் டிரைவுக்கு எடுப்பதற்கு என்னதான் செய்ய வேண்டும்?

‘‘பரஸ்பரப் புரிந்து கொள்ளல் அடிப்படையில் கார்களை ரென்ட்டுக்கு விடுவது தவறில்லை; ஆனால், அதை ஓட்டுபவர், டிரைவருக்கான பேட்ஜ் வைத்திருப்பது அவசியம்!’’ என்கிறார், ஓய்வுபெற்ற ஆர்டிஓ அதிகாரி ஒருவர்.

நாம் மேலே சொன்ன மதுரை சதீஷ் விபத்து விஷயத்தில், அவருக்கு பேட்ஜ் இல்லை; பேட்ஜ் வைத்திருந்த ஒருவர் காரை ஓட்டி விபத்து ஏற்பட்டதாகத்தான் அந்த வழக்கு போய்க் கொண்டிருக்கிறதாம். (!) இன்னும் சிலர் – மஞ்சள் போர்டு கொண்ட டாக்ஸி கார்களையும் செல்ஃப் டிரைவுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். மறந்து போய்க்கூட மஞ்சள் போர்டு கார்களை வாடகைக்கு எடுத்துடாதீங்க!

கறுப்பு போர்டில் மஞ்சள் நிற எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே, அது நம்பிக்கையான ரென்ட் எ கார். டிரைவரோடு சேர்த்து காரையும் வாடகைக்கு எடுப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், செல்ஃப் டிரைவ் கார் எடுக்கும்போது, ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும் மக்களே!

இந்த கலர் நம்பர் பிளேட் இருந்தாதான் காரை வாடகைக்கு எடுக்கணும்!

நம்பர் பிளேட்டில் கறுப்பு போர்டில் மஞ்சள் நிற எழுத்துக்கள் இருந்தால் மட்டுமே அது ஆத்தரைஸ்டு Rent a Car நிறுவனம். இதை நீங்கள் தைரியமாக வாடகைக்கு எடுத்து ஓட்டலாம். மாநிலம் விட்டு மாநிலம் தாண்டினால்கூட போலீஸ் உங்களை நிறுத்தாது. மறந்து போய்க்கூட மஞ்சள் போர்டு டிராவல் கார்களை வாடகைக்கு எடுத்துடாதீங்க! மற்றபடி, ஓன் போர்டு கார்களைப் பொருத்தவரை – பரஸ்பரப் புரிந்து கொள்ளல் அடிப்படையில் கார்களை ரென்ட்டுக்கு விட்டால், அதை ஓட்டுபவர், டிரைவருக்கான பேட்ஜ் வைத்திருக்க வேண்டும்!

செல்ஃப் டிரைவ் கார் வாடகைக்கு எடுக்கிறீங்களா?