Published:Updated:

சிறிய சைஸில் பெரிய எஸ்யூவி!

செல்ட்டோஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ட்டோஸ்

பின் சீட் இடவசதியில் சோனெட்டைப் பற்றி எல்லோரும் குறை சொன்னாங்க. மோட்டார் விகடன் ரிவ்யூவில்கூடப் படிச்சேன்.

‘சின்ன செல்ட்டோஸ்’ – இப்படித்தான் சோனெட்டைச் செல்லமாக அழைக்கிறார்கள். அதற்காக செல்ட்டோஸ், சோனெட்டுக்குப் போட்டி என்று நினைத்து விடாதீர்கள். 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியில் இத்தனை வசதிகளா, இத்தனை இன்ஜின் ஆப்ஷன்களா, இத்தனை வேரியன்ட்களா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. பெட்ரோல், டீசல், மேனுவல், ஆட்டோமேட்டிக், டர்போ என சோனெட்டில் மொத்தம் 17 வேரியன்ட்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு நாள் திடீர் சர்ப்ரைஸாக, சோனெட்டின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டீசல் மாடல், நம் அலுவலகத்துக்கு வந்திருந்தது. சென்னையைச் சேர்ந்த சென்னியப்பனுக்கும் பாபுவுக்கும் - திடீர் சர்ப்ரைஸாக சோனெட்டின் சாவியைக் கொடுத்து ஓட்டச் சொன்னோம்.

‘‘கியா சோனெட் எப்படி இருக்குனு உங்க பார்வையில சொல்லுங்க!’’ என்றதற்கு, இரண்டு நாள் ஒப்பந்தம் போட்டு சோனெட்டை ஓட்டி, மாறி மாறி ரிவ்யூ செய்ய ஆரம்பித்து விட்டார்கள் இருவரும்.

 டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், அற்புதம் செய்யுது!
டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், அற்புதம் செய்யுது!
 பாபு, கார்த்திக் சென்னியப்பன்
பாபு, கார்த்திக் சென்னியப்பன்

இந்த இருவரிடமும் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், இருவரிடமுமே கியா செல்ட்டோஸ் இருக்கிறது. இருவருமே கார் காதலர்கள். கார்களைப் பற்றிய ரிவ்யூக்களைப் பிரித்து மேய்பவர்கள். ‘‘டர்போ 1,500ஆர்பிஎம்–க்கு மேல்தான் முழிக்குது’’ என்று நுணுக்கமாகச் சொல்வார்கள்.

முதலில் தன் செல்ட்டோஸை பார்க் செய்துவிட்டு, சோனெட்டை எடுத்தார் பாபு. பின் சீட்டில் கார்த்திக் சென்னியப்பன். இவர் குடும்பத்திலும் செல்ட்டோஸ் இருக்கிறது. தவிர ஏமியோ மற்றும் அபார்த்தும் உண்டு. ‘`பின் சீட் இடவசதியில் சோனெட்டைப் பற்றி எல்லோரும் குறை சொன்னாங்க. மோட்டார் விகடன் ரிவ்யூவில்கூடப் படிச்சேன். உயரமானவங்களுக்குச் சிக்கலாக இருக்கும்னு. ஆனா, எனக்கு என்னமோ அப்படி ஒண்ணும் சோனெட்டில் பின் சீட் இடவசதியில் பெருசா குறை தெரியலை. லெக்ரூம், ஹெட்ரூம் எல்லாம் ஓகே! ஆனா என் ஹைட் வெயிட்டுக்கு 2 பேர்னா ரொம்ப கம்ஃபர்ட்டா உட்காரலாம்!’’ என்றார் சென்னியப்பன்.

 டீசலில் 4,200rpm வரை பவர் டெலிவரி சூப்பர்!
டீசலில் 4,200rpm வரை பவர் டெலிவரி சூப்பர்!
 2 பேர் செம கம்ஃபர்ட்டா உட்காரலாம்!
2 பேர் செம கம்ஃபர்ட்டா உட்காரலாம்!

‘‘ஓ... ஆட்டோமேட்டிக்கா... வாவ்!’’ என்று கியரை D மோடுக்குத் தள்ளி சோனெட்டைக் கிளப்பினார் பாபு. ‘‘எனக்கு டிரைவிங்தான் மெயின் விஷயம். அதனால நான் டிரைவிங்குக்குப் போயிடுறேன்’’ என்று ஆரம்பித்தார். ‘‘டீசலுக்குள்ள உட்காரும்போது, டீசலுக்கே உண்டான சவுண்ட் கேட்டாலும் செம ஸ்மூத்தாக மூவ் ஆகுது. இதோட NVH லெவல் அருமை. சிட்டிக்குள்ள ஸ்மூத்தா மூவ் ஆகுது. நான் செல்ட்டோஸ்தான் ஓட்டிக்கிட்டிருக்கேன். ஆனா அது பெட்ரோல். செல்ட்டோஸ் டீசலில் இருக்கிற அதே காம்போதான் சோனெட்டிலும் இருக்கு. 115bhp பவரும் 25kgm டார்க்கும் இந்த டீசல் சோனெட்டில் இருக்கு. எனக்கு இதில் ரொம்பப் பிடிச்ச விஷயம் – இதோட கியர் ஷிஃப்ட்டிங். இந்த டீசலுக்கு ஏத்த மாதிரி செமயா வேலை செய்யுது. கியர் ஷிஃப்ட் ஆவதே தெரியலை. டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் நல்ல ஸ்மூத். நான் ஏன் இதைச் சொல்றேன்னா, இந்த மாதிரி காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில், ஆட்டோமேட்டிக்னாலே AMT மாதிரி விலை மலிவான ஆப்ஷன்ஸ்தான் கிடைக்கும்.

உண்மையிலேயே இந்த 1,493சிசி – 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜினை நான் ஒரு ஜெம்னுதான் சொல்வேன். அந்தளவு ஜென்டிலா வேலை செய்யுது. இதோட 0–100 கிமீ– 11.48 விநாடிகள்னு படிச்சிருக்கேன். எனக்கும் கிட்டத்தட்ட அதேதான் ஆகியிருக்கும். இதோட த்ராட்டில் ரெஸ்பான்ஸ் அருமை. டர்போ லேக் இருந்தாலும், லேசாதான் ஃபீல் ஆகுது. 2,000ஆர்பிஎம் தாண்டிட்டா போதும். பவர் டெலிவரியில் ஒரு ஸ்டெப்–அப் தெரியுது. 4,200 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி சூப்பர். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி கியர்ஷிஃப்ட்டிங்கில் ஒரு அற்புதம் சொல்றேன். ஓவர்டேக்கிங்கில் சட்னு தானாகவே கியர் டவுன்ஷிஃப்ட் ஆகி, ஈஸி டிரைவிங் கிடைக்குது. இதுதான் சோனெட் டார்க் கன்வெர்ட்டரோட அற்புதம்! மத்தபடி இதோட ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கும் சும்மா சொல்லக் கூடாது. என்னா ஒரு ஸ்டெபிலிட்டி! என் சகோதரி கார் வாங்கணும்னு சொன்னாங்க. அவங்களுக்கு இந்தச் சின்ன செல்ட்டோஸைத்தான் ரெக்கமண்ட் பண்ணப் போறேன்!’’ என்றார் பாபு.

சிறிய சைஸில் பெரிய எஸ்யூவி!

அடுத்து சென்னியப்பன், பின் சீட்டில் இருந்து டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டீயரிங் பிடித்தார். ‘‘நமக்கு பவர் பவர் பவர்தாங்க. அதனால்தான் நான் அபார்த் பயன்படுத்துறேன். நான் எதிர்பார்த்த மாதிரியே இதில் டிரைவிங் மோடுகள் கொடுத்திருக்காங்க. அட, ஸ்போர்ட் மோடு. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சென்னியப்பா! என்னா ஒரு அக்ரஸிவ்னெஸ். என்னை மாதிரி ஸ்போர்ட்டியான ஆசாமிங்களுக்கு ஸ்போர்ட் மோடுதான் சரினு நினைக்கிறேன். இதில் மைலேஜ் லேசா அடிவாங்கும். அதெல்லாம் எனக்கு நோ மேட்டர். இதோட ஆவரேஜ் அராய் மைலேஜ் 19 கிமீ. எனக்குத் தெரிஞ்சு இது வென்யூவைவிட அதிகம்னு நினைக்கிறேன். காலையில் இருந்து 100 கிமீ கவர் பண்ணியிருப்பேன். ஃப்யூல் மீட்டர் 1 பாயின்ட்தான் குறைஞ்சிருக்கு.

சோனெட்டோட பெர்ஃபாமன்ஸ் செமையா இருக்கு. சிட்டி டிரைவிங்கில் சில எஸ்யூவிக்கள் ஓட்டுறதுக்குப் பயமா இருக்கும். இது அப்படி இல்லை. ஈஸியா, ஜாலியா இருக்கு. இதோட ஸ்டீயரிங் ஃபீட்பேக்கையும், காரோட சைஸையும் வெச்சு சொல்றேன். கார்னரிங்கில் பெருசா பாடி ரோல் இல்லை. ஹைவேஸ் ஸ்டெபிலிட்டியும் பாபு சொன்னது மாதிரி செம!

சோனெட்டில் ஒரு பெரிய நம்பிக்கையான விஷயம் – இதோட கிரவுண்ட் கிளியரன்ஸ். 205மிமீங்கிறது ஒரு பெரிய எஸ்யூவிக்கான அம்சம். பள்ளம் மேடுகளைப் பத்திலாம் கவலையே பட வேண்டியதில்லை. இதோட சஸ்பென்ஷன் செல்ட்டோஸ் மாதிரியே செமையா இருக்கு.

சிறிய சைஸில் பெரிய எஸ்யூவி!

பேனல்ஸ்லாம் கறுப்பா இருந்தாலும், இன்டீரியர் டூயல் டோன் டிசைன் அருமை. மேக்னைட், எக்கோஸ்போர்ட்டையெல்லாம் ஒப்பிடும்போது இதில் சன் ரூஃப் வேற கொடுத்திருக்காங்க. கார் கொஞ்சம் வெளிச்சமா, பெருசா தெரியுது. போஸ் சவுண்ட் சிஸ்டம் ரொம்பத் தரம். சில பேர் கார் வாங்கிட்டு, சவுண்ட் சிஸ்டம் அப்கிரேடு பண்ணுவாங்க. அது இதில் தேவையிருக்காது. அதைத் தாண்டி வசதிகள்தாங்க சோனெட்டின் யுஎஸ்பி. வென்டிலேட்டட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங்கெல்லாம் வேற லெவல்.

முக்கியமா இதோட பராமரிப்புச் செலவு ரொம்ப மலிவா இருக்கும்னு நம்புறேன். இதை ஏன் சொல்றேன்னா, எங்க குடும்பத்தில் ஏற்கனவே இரண்டு செல்ட்டோஸ் பெட்ரோல் இருக்கு. ஒரு வருஷத்துக்கே அதோட சர்வீஸ் காஸ்ட் 3,500 ரூபாய்தான் வந்துச்சு. ஸோ, கூடிய சிக்கிரமே எங்க கராஜ்ல ஒரு சோனெட்டும் வர வாய்ப்பிருக்கு!’’ என்று, சோனெட்டைப் பிரிய மனமில்லாமல் சாவியைக் கொடுத்தார் சென்னியப்பன்.

ரீடர்ஸ் ரிப்போர்ட்: கியா சோனெட் டீசல் ஆட்டோமேட்டிக்