Published:Updated:

"எல்லா கார்களிலும் 6 காற்றுப்பைகள் இருக்கவேண்டும்!" - கோரிக்கை விடுக்கும் நிதின் கட்கரி

நிதின் கட்கரி | SIAM
நிதின் கட்கரி | SIAM

2014–க்கு முன்பு விற்பனையான சில கார்களில் ஆரம்பவிலை வேரியன்ட்டில் சுத்தமாகக் காற்றுப் பைகளே இல்லாமல் இருந்தன. விலை அதிகமான வேரியன்ட்டுகளில் மட்டுமே காற்றுப்பை ஆப்ஷன் இருந்தது.

கார்களில் பாதுகாப்பைப் பொருத்தவரை ஏர்பேக்ஸ்… அதாவது காற்றுப்பைகள்தான் முக்கிய காவலன். 2014–க்கு முன்பு விற்பனையான சில கார்களில் ஆரம்பவிலை வேரியன்ட்டில் சுத்தமாகக் காற்றுப் பைகளே இல்லாமல் இருந்தன. விலை அதிகமான வேரியன்ட்டுகளில் மட்டுமே காற்றுப்பை ஆப்ஷன் இருந்தது. ஒரு காற்றுப்பை இருந்தால்கூட காரின் விலையில் கூடுதலாக 20,000 ரூபாயை ஏற்றுவிற்றன கார் நிறுவனங்கள்.

அதன்பிறகு கார்களில் டிரைவருக்கு மட்டுமாவது காற்றுப்பை இருக்க வேண்டும் என்கிற சட்டம் வந்தது. வேறு வழியில்லாமல் சில கார் நிறுவனங்கள், டிரைவருக்கு மட்டும் காற்றுப்பைகள் கொண்டு வந்து, கோ–டிரைவர் சீட்டை அம்போவென விட்டன. இதிலும் விபத்துப் பலிகள் அதிகமாக… ஏப்ரல் 2021–ல் இருந்து விற்பனையாகும் எல்லா கார்களுக்கும் டிரைவருக்குப் பக்கத்துப் பயணிக்கும் காற்றுப் பை வேண்டும் என்கிற சட்டம் கொண்டு வரப்பட்டது.

airbag
airbag

மாருதி எஸ்–ப்ரெஸ்ஸோ, செலெரியோ, வேகன்–ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ, ரெனோ க்விட், மஹிந்திரா பொலேரோ, டட்ஸன் ரெடி கோ போன்ற கார்கள் – இரண்டாவது காற்றுப் பை இல்லாமல் விற்பனையாகிக் கொண்டிருந்தன. அந்தக் கார்களுக்கு மட்டும் ஜூன் 2021 வரை கெடு விதித்தது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம். இதனையடுத்து எல்லா கார்களும் குறைந்தது 2 காற்றுப்பைகளுடன் விற்பனையாவது மகிழ்ச்சியான விஷயம்.

இப்போது கார் நிறுவனங்களுக்கு மேலும் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. ‘‘தயவுசெய்து, இனிமேல் 6 காற்றுப்பைகள் கொண்ட கார்களைத் தயாரித்தால், விபத்துகளைக் கணிசமாகக் குறைக்கலாம்!’’ என்று கேட்டிருக்கிறார் அவர்.

நேற்று மாலை டெல்லியில் Society of Indian Automobile Manufacturers (SIAM) மற்றும் சில கார் நிறுவனத் தயாரிப்பாளர்களுடன் நடந்த மீட்டிங்கில்தான் இப்படி ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார் நிதின் கட்கரி. இதுபோக எலெக்ட்ரிக் கார்கள் தவிர்த்து, FFVs (Flex-Fuel Vehicles) என்று சொல்லக்கூடிய எத்தனால் போன்ற எரிபொருளில் 100% இயங்கும் கார்களையும் இந்தியாவில் தயாரிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

பிரேசில் போன்ற நாடுகளில், எத்தனால் கொண்டு இயங்கும் கார்கள் அதிகம். பெட்ரோலுக்கு மாற்றாக இயங்கும் எத்தனால் கார்கள், பெர்ஃபாமன்ஸில் தெறி காட்டுபவை. ஆனால், இன்ஜினுக்கு ஏற்றபடி இந்த எத்தனால் கார்களைத் தயாரிப்பது பெரிய சவால்.

காற்றுப்பைகளோடு கார்களை விற்பனை செய்ய வேண்டுகோள் விடுத்திருக்கும் அமைச்சர், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான இறக்குமதி வரி தொடர்பான விவகாரத்திலும் கவனம் செலுத்தினால் கார் பயன்பாட்டின் சூழலே மாறும்!
அடுத்த கட்டுரைக்கு