கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

வருது… ஸ்கோடாவின் மிட்சைஸ் எஸ்யூவி! குஷாக்

ஸ்கோடா குஷாக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கோடா குஷாக்

க்விக் லுக்: ஸ்கோடா குஷாக்

மஹிந்திராவுக்கு `O’ மாதிரி, ஸ்கோடா வுக்கு `Q’. புரியலையா? மஹிந்திராவின் கார்கள் ஸ்கார்ப்பியோ, பொலேரோ, எக்ஸ்யூவி 300 (இதை, த்ரீ டபுள் ஓ என்றுதான் உச்சரிக்க வேண்டும்) மாதிரி, ஸ்கோடாவும் தனக்கென்று ஒரு ட்ரெண்டை உருவாக்கி விட்டிருக்கிறது.

லேட்டஸ்ட்டாக லாஞ்ச் ஆகும் கார்களின் பெயர் எல்லாமே `Q’–வில் முடிவதுதான் ஸ்கோடா கடைப்பிடிக்கும் ஒரு ட்ரெண்ட். கோடியாக் (Kodiaq), கரோக் (Karoq), காமிக் (Kamiq).... அந்த வரிசையில் புதிதாக குஷாக் (Kushaq) என்றொரு மிட்சைஸ் எஸ்யூவியைக் களமிறக்க இருக்கிறது ஸ்கோடா. (ரேபிட், சூப்பர்ப் – லாம் `Q’–வில் முடியலையேனு புத்திசாலித்தனமா கேட்கக்கூடாது. சொல்லிப்புட்டேன்.)

க்ரெட்டா, செல்ட்டோஸ், டஸ்ட்டர், கிக்ஸ், ஹெக்டர், ஹேரியர் என்று பலத்த போட்டி நிலவும் மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் வரவிருக்கும் குஷாக், நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, சாலைகளில் பறக்க ஆரம்பித்திருக்கும். ஓகே. இன்னும் குஷாக்கை ஓட்ட வாய்ப்பு கிடைக்காத சூழலில், குஷாக் பற்றிய ஒரு க்விக் லுக் பார்க்கலாம்.

வெளிப்பக்கம்

ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் ‘இந்தியா 2.0’ எனும் ஆப்பரேஷனின் கீழ் தயாராகும் முதல் கார் குஷாக். ஸ்கோடாவின் ஃபெமிலியரான Vision-In கான்செப்ட் கார் பற்றி நாம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். அந்த காரின் டிசைனை அடிப்படையாகக் கொண்டுதான் குஷாக்கை டிசைன் செய்திருக்கிறது ஸ்கோடா டீம். ஸ்கோடா கார்கள், இயல்பாகவே கட்டுமானத்துக்கும் தரத்துக்கும் பெயர் பெற்றவை. அவை ரெடியாகும் ப்ளாட்ஃபார்மே அப்படித்தான். MQB A0-IN ப்ளாட்ஃபார்ம், உறுதியான கட்டுமானத்துக்கு உத்தரவாதம் தரும் இந்த ப்ளாட்ஃபார்மில் ரெடியாவதால், செம ஸ்ட்ராங்காக இருக்கிறது குஷாக். வெளித்தோற்றத்தில் ரொம்பவும் முரட்டுத்தனமாக இல்லாமல், கட்டுமானத்தில் தனது உறுதியைக் காட்டும் ஸ்கோடா கார்கள் வரிசையில் நிற்கிறது குஷாக். கோடியாக் அப்படிப்பட்ட ஒரு கார்தான். இதன் ரோடு பிரசன்ஸ் வெறித்தனம் என்று சொல்ல முடியாது; ஓகே என்றுதான் சொல்ல முடியும். இப்படிச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

வெளிப்பக்கம்
வெளிப்பக்கம்


இதன் போட்டியாளர்களான மற்ற எல்லா கார்களைவிடவும் நீளத்தில் அகலத்தில் உயரத்தில் என எல்லா டைமென்ஷன்களிலும் அளவு குறைந்த காராக இருக்கிறது குஷாக். மிட் சைஸ் எஸ்யூவியாக இருந்தாலும், இதன் நீளம் 4,225 மிமீதான். இது ஹெக்டரைவிட 430 மிமீ குறைவு; உயரத்தில் 148 மிமீ குறைவு. ஹெக்டரை விடுங்கள்; இந்த செக்மென்ட்டில் உயரம் குறைவான செல்ட்டோஸைவிட 33 மிமீ குறைவு. அகலத்திலும் இந்த அளவுக் குறைபாடு உண்டு. க்ரெட்டாவைவிட 30 மிமீ குறைவு. ஆனால், ஹெக்டரைத் தவிர மற்ற எல்லா கார்களிலும் இருப்பதுபோல், இதிலும் 17 இன்ச் அலாய் வீல்கள் கொடுத்திருக்கிறது ஸ்கோடா. இதிலுள்ள டைமன்ட் கட் அலாய் வீல், கொஞ்சம் ஃபேன்ஸியாக வித்தியாசமாகவே இருக்கிறது. ஆனால், இது டாப் எண்டான Style வேரியன்ட்டில் மட்டும்தான் இருக்கும். ஆரம்ப மாடலான Active வேரியன்ட்டில் ஸ்டீல் வீல்கள் மட்டும்தான்! அதுவும் 16 இன்ச்தான்.

குஷாக் ஹைலைட்ஸ்!

  • முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பாக, கட்டுமானத்துக்குப் பெயர் பெற்ற MQB A0 - IN ப்ளாட்ஃபார்மில் தயாராக இருக்கிறது குஷாக்.

  • மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் களமிறங்கும் குஷாக் – க்ரெட்டா, டைகூன், டிகுவான், டஸ்ட்டர், கிக்ஸ், செல்ட்டோஸ், ஹெக்டர், ஹேரியர் போன்றவற்றுக்குக் கடும் போட்டியாக வரவிருக்கிறது.

  • இதன் டாப் எண்டில் 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் இருக்கும்.

  • 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என இரண்டு டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் வரும் குஷாக்.


இதிலுள்ள டூயல் ஹெட்லைட் செட் அப், வாவ்! பானெட்டில் ஆரம்பித்து பக்கவாட்டுப் பக்கம், பின் பக்கம் என காரைச் சுற்றி ஷார்ப் லைன்கள் இருப்பது, குஷாக்கைக் கொஞ்சம் ஸ்போர்ட்டியாகக் காட்டுகிறது. ஹெட்லைட்டுக்குக் கீழே LED DRL… அதுவும் ஸ்லிம்மாக, ஸ்போர்ட்டியாகவே இருக்கிறது. முன் பக்கம் பெரிய, அகலமான ஸ்கோடாவுக்கே உரிய அந்த செங்குத்தான ஸ்லாட் கொண்ட கிரில். அதற்கு மேலே ஸ்கோடாவின் லோகோ.

அப்படியே பின் பக்கம் போனால், அதிலும் ஷார்ப்பான க்ரீஸ்களை வைத்து விளையாடி இருக்கிறார்கள். பூமராங் ஸ்டைலில் Wrap-around டெயில் லைட்ஸ் இருந்தன. இவைதான் அநேகமாக காரைக் கொஞ்சம் அகலமாகக் காட்ட முயற்சிக்கின்றன. கீழே ஸ்கஃப் பிளேட் சில்வர் கலரில் கான்ட்ராஸ்ட்டாகவே இருக்கிறது. காரின் டிக்கியில் ஒரு பெரிய க்ரோம் பட்டை இருந்தது. அநேகமாக டிக்கியைத் திறப்பதற்கு வசதியாக இருக்குமோ?

அப்படியே டாப் ஆங்கிளில் வந்தால், மேலே ரூஃப் ஸ்பாய்லர். இத்தனை லட்சம் கொண்ட குஷாக்குக்கு பனோரமிக் சன்ரூஃப் இல்லையா ஸ்கோடா?

எஸ்யூவியாகவும் இருக்க வேண்டும். சாலைகளில் பறக்கவும் வேண்டும் என்பதற்காக குஷாக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸில் ரொம்பவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் ஸ்கோடா டீம். இதன் கி.கிளியரன்ஸ் 188 மிமீ. இது அதிகமும் இல்லை; குறைவும் இல்லை. ஹெக்டரைவிட ஒரு விஷயத்தில் அதிகமாக இருக்கிறது என்றால், அது கி.கிளியரன்ஸில்தான். இது ஹெக்டரைவிட 5 மிமீ அதிகம். இதுவே மற்ற போட்டியாளர்கள் 200–யைத் தாண்டியிருக்கிறார்கள். இதன் பூட் கொள்ளளவு – 385 லிட்டர் என்பது சுமார்தான்.

ஓவர்ஆலாக, ஸ்கோடாவின் பெரிய தம்பிகள் கோடியாக், கரோக் போலவே கொஞ்சம் பெரிய ஸ்டைலிஷ் எஸ்யூவியாக மிளிர்கிறது குஷாக்.

இன்டீரியர்
இன்டீரியர்


இன்டீரியர்

குஷாக்கின் இன்டீரியரில் நுழைந்தால், அத்தனை ப்ரீமியம். டேஷ்போர்டு நடுவில், அந்த டச் ஸ்க்ரீனை சுற்றி இருக்கும் டெக்ச்சர் அருமை! ஒரு மெல்லிய க்ரோம் பட்டை ஒன்று, அந்த டேஷ்போர்டை இரண்டாகப் பிரிக்கும் டிசைன் அருமை. அறுங்கோண வடிவில் ஏசி வென்ட்கள் மிளிர்ந்தன. காரணம், அதிலும் க்ரோம் ஃபினிஷிங்.

குஷாக்கின் இன்டீரியரில் முதலில் கவர்வது அந்த Free Standing 10 இன்ச் டச் ஸ்க்ரீன்தான். இதில் ஸ்மார்ட்போன் கனெக்ட் செய்து பார்த்தேன். நன்றாகவே வேலை செய்தது. க்ரெட்டா, ஹெக்டர், கிக்ஸ் போன்ற போட்டியாளர்களைப் போல குஷாக்கும் ஒரு கனெக்டட் கார்தான். நடுவில் உள்ள ஏசி வென்ட்களை டச் ஸ்க்ரீனுக்குக் கீழே கொடுத்திருக்கிறார்கள். ஏசி வென்ட்களுக்குக் கீழே அதென்ன… அட ஃபெதர் டச்சில் HVAC (Heating Ventilation and Air Conditioning) கன்ட்ரோல்கள். நிஜமாகவே சாஃப்ட் டச்தான். சிலருக்கு இந்த டிசைன் பிடிக்கும். பலருக்கு பிசிக்கலாக பட்டன்களை அழுத்தி மாற்றுவதுபோல் ஒரு திருப்தியும் புரிதலும் கிடைக்காது என்பதுதான் நிஜம்.

Vision In கான்செப்ட் காரின் இன்டீரியரைப் பார்த்தபோது, ஆரஞ்ச் நிற சீட்கள் கொண்டு, செம ஸ்போர்ட்டியான டிசைனாக இருந்தது. இதில் பல விஷயங்களைக் காணவில்லை. அந்த செம ஸ்டைலிஷான டிஜிட்டல் கன்சோலைக் காணோம். இதில் மரபு வழி இன்ஸ்ரூட்மென்ட் டயல்கள் நன்றாகத்தான் இருந்தன. ஆனாலும், முழுக்க முழுக்க அனலாக் மீட்டர் கொடுத்திருப்பது, காஸ்ட் கட்டிங் என நன்றாகவே தெரிகிறது. அட, டாப் வேரியன்ட்டான Style–லாவது டிஜிட்டல் மீட்டர் கொடுத்திருக்கலாம் என்பது எங்கள் கருத்து.

இன்னொன்றும் கவனிக்க முடிந்தது. கான்செப்ட் காரில் 3 ஸ்போக் அலாய் வீல் கொடுத்திருந்தார்கள். இதில் சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியாவில் காணப்படும் அதே 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல்தான் பொருத்தியிருந்தார்கள். பரவாயில்லை; ப்ரீமியமாகத்தான் இருக்கிறது. ஆடியோவுக்கும் போன் கன்ட்ரோல்களுக்கும் அந்த Knurled ஸ்டைல் ஸ்க்ரோல் வீல்களும் பட்டன்களும் நச்! கார் ஓட்டிக் கொண்டே ஈஸியாக ஸ்க்ரோல் செய்து கொள்ளலாம்.

சீட்டிங்
சீட்டிங்


சீட்டிங்

ஸ்கோடா கார்களில் பிடித்த விஷயம் – அதன் டிரைவிங் பொசிஷன். முன் சீட்டில் உட்கார்ந்து பார்த்தால், கேபினைத் தாண்டி வெளிச்சாலை நன்றாகத் தெரிந்தது. ஸ்டீயரிங் பிடிப்பதற்கு வாகாக இருந்தது. இப்போதெல்லாம் வென்டிலேட்டட் சீட்ஸ் கொடுக்கவில்லை என்றால், வாடிக்கையாளர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும். நல்லவேளையாக – ஸ்கோடா இதில் கஞ்சத்தனம் காட்டவில்லை. சீட்கள் நல்ல சப்போர்ட்டிவ் ஆக இருந்தன.

அப்படியே பின் பக்கம் அமர்ந்தால், இடவசதியில் ஸ்கோர் செய்கிறது குஷாக். 6 அடி உயரம் உள்ளவர்களுக்குக்கூட நல்ல லெக்ரூம் கிடைத்தது. செல்ட்டோஸ், க்ரெட்டாவைவிட கால்களை நீட்டி மடக்கி உட்கார நல்ல இடவசதி. காரணம், இதன் வீல் பேஸ் 2,651 மிமீ. இவை இரண்டைவிட இது 41 மிமீ அதிகம். ஆனால் கிக்ஸ், டஸ்ட்டரைவிட 22 மிமீ குறைவு. அதேநேரம், ஹெக்டரைவிட சுமார் 100 மிமீ குறைவு என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். ஆனால், சீட்கள் நல்ல கம்ஃபர்ட். தொடைக்கான சப்போர்ட்டும் அருமை. அதேநேரம், 6 அடி உள்ளவர்களுக்கு குஷாக்கின் ஹெட்ரூம் கொஞ்சம் டைட்டாகத்தான் இருக்கும்.

பிராக்டிக்காலிட்டி, வசதிகள்
பிராக்டிக்காலிட்டி, வசதிகள்


பிராக்டிக்காலிட்டி, வசதிகள்

டஸ்ட்டரை ஒப்பிடும்போது, பிராக்டிக்காலிட்டியில் கலக்குகிறது குஷாக். டேஷ் போர்டுக்குக் கீழே இருக்கும் க்ளோவ் பாக்ஸ் எவ்ளோ பெருசு! கூடவே இரட்டை கப் ஹோல்டர்கள், சென்டர் ஆர்ம்ரெஸ்ட்.. அங்கங்கே பொருட்கள் வைக்க ஸ்டோரேஜ் ஸ்பேஸ் என கேபின் முழுக்க இடவசதி. மற்ற வசதிகளான ஆம்பியன்ட் லைட்டிங், வென்டிலேட்டட் சீட்கள், கூல்டு க்ளோவ் பாக்ஸ், 6 ஸ்பீக்கர்கள், 50W சப் வூஃபர், இன்டர்நெல் மெமரி ஸ்டோரேஜ், ஒயர்லெஸ் ஸ்மார்ட்லிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, Type-C USB போர்ட்டுகள், Skoda Play App கனெக்டட் சிஸ்டம் – போன்ற எல்லா அம்சங்களும் உண்டு.

இன்ஜின்

குஷாக், இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. 1.0 லிட்டர்–3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5 TSI லிட்டர்–4 சிலிண்டர் டர்போ பெட்ரோல். குஷாக்கில் டீசல் கிடையாது என்பதைக் கவனியுங்கள். குஷாக்கில் இல்லை; இனி ஸ்கோடாவில் இருந்து வரும் எந்த கார்களுக்குமே டீசல் இருக்காது போல! 1.0லிட்டர் 115bhp பவருடன் வரும் இன்ஜினில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்கள் இருக்கும். இதுவே 1.5லி TSI யூனிட் இன்ஜினில், 150bhp பவரும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனும் வரும். இந்த இரண்டு இன்ஜின்களுமே ஸ்கோடாவில் உள்ள சக்கான் தொழிற்சாலையில்தான் தயாராகின்றன என்பது ஸ்பெஷல்.

இன்ஜின்
இன்ஜின்


பாதுகாப்பு

பாதுகாப்பைப் பொருத்தவரை இதன் டாப் வேரியன்ட்டில் 6 காற்றுப்பைகள் கொடுத்திருப்பது நல்ல விஷயம்! ISOFIX குழந்தைகள் மவுன்டட் சீட்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் மற்றும் வைப்பர்ஸ், விபத்தின்போது பாதுகாக்கும் மல்ட்டி கொலிஷன் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை உண்டு. ஒரே ஒரு விஷயத்தில் கண்டனம் – இதில் பிரேக்ஸைப் பொருத்தவரை முன் பக்கம்தான் டிஸ்க். பின் பக்கம் டிரம்தான். டாப் வேரியன்ட்டிலாவது டிஸ்க் ஆப்ஷன் கொடுத்திருக்கலாம். க்ரெட்டா, கிக்ஸ், ஹெக்டரெல்லாம் இதில் அடுத்த லெவல்.

குஷாக்
குஷாக்


குஷாக் தாக்குப் பிடிக்குமா?

பொதுவாக, ஸ்கோடா கார்கள் விலைக்குப் பெயர் போனவை. காரணம், பாகங்களை இம்போர்ட் செய்து பொருத்துவதுதான். குஷாக்கில் ஒரு ஸ்பெஷல் என்னவென்றால், ஏற்கெனவே சொன்னதுபோல், இன்ஜின் முதற்கொண்டு மெக்கானிக்கல் பாகங்கள் வரை சுமார் 95% பாகங்கள் லோக்கலைஸ் ஆவதுதான். அதனால், வசீகரமான விலைக்கு வாய்ப்புண்டு என்று நம்புகிறோம். ரேபிட்டின் விலையில் ஒரு சந்தோஷ ஷாக் கொடுத்ததுபோல், குஷாக்கிலும் அப்படி ஒரு அதிரடி விலை அறிவிப்பை நிகழ்த்துங்கள் ஸ்கோடா. குஷாக், தாக்குப் பிடிக்கலாம்.