Published:Updated:

ஸ்கோடா ரேபிட்டின் அண்ணன் ஸ்லாவியா!

ஸ்கோடா ஸ்லாவியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்கோடா ஸ்லாவியா

ஃபர்ஸ்ட் லுக்: ஸ்கோடா ஸ்லாவியா

க்ராஸ்ஓவர் மற்றும் எஸ்யூவிகளுக்குத்தான் இந்தியாவில் அதிக தேவை இருக்கிறது என்று அனைத்து கார் உற்பத்தியாளர்களும் உறுதியாக நம்பி, தங்கள் வணிகத் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் செடான்களுக்கும் இங்கே நிச்சயமாகத் தேவை இருக்கிறது என்று ஸ்கோடா உறுதியாக நம்புகிறது.

இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக, ப்ரீமியம் மிட் சைஸ் செடான் செக்மென்ட்டில், தன் ரேபிட் காருக்கு மாற்றாக, ஸ்கோடா அறிமுகம் செய்திருக்கும் கார்தான் ஸ்லாவியா. இந்தக் காருக்கான முன்பதிவை ஏற்கெனவே துவங்கியிருக்கும் ஸ்கோடா, இந்தக் காரை தவணை முறையில்தான் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, வெளித்தோற்றத்தை மறைத்து ஸ்லாவியாவை ஓட்டக் கொடுத்த ஸ்கோடா, இப்போது அதன் மீது ஒட்டப்பட்டிருந்த மறைப்புகளை அகற்றி Walkaround செய்ய வாய்ப்பு கொடுத்தது.

மும்பைத் துறைமுகத்தில், நீலக்கடலின் பின்னணியில் அலங்கார விளக்குகள் ஏதுமில்லாமல் அதை பகல் வெளிச்சத்தில் பார்த்தபோது... ஸ்லாவியா, தேர்ந்த சிற்பியால் செதுக்கப்பட்ட சிற்பம்போல காட்சியளித்தது. செதுக்கப்பட்டது என்று சொல்வதற்குக் காரணம், எல்லாக் கார்களையும்போல இதுவும் பல நூறு உதிரிபாகங்களால் கோர்க்கப்பட்ட கார்தான் என்றாலும், அது கோர்க்கப்பட்டிருக்கும் விதம் இதற்கு ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சிற்பம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. இதுதான் ஸ்கோடா கார்களின் அடையாளம் என்றாலும், இதையும் மீறிய இன்னொரு தனியடையாளம் இதன் பட்டாம்பூச்சி வடிவ கிரில் மற்றும் பானெட்டில் இருக்கும் அழுத்தமான க்ரீஸ் கோடுகள். அவை அப்படியே ஸ்லாவியாவிலும் இருக்கின்றன. இன்ஜினை இயக்குவதற்குத் தேவையான காற்றை இழுத்து உள்ளே அனுப்பும் கிரில், பெரிதாகவும் கலை ரசனையோடும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. L வடிவத்தில் இருக்கும் LED ஹெட்லைட் மற்றும் DRL டிசைனும் ஸ்லாவியாவின் முன்னழகுக்குப் பொருத்தமாக இருக்கிறது.

இதற்கு ஸ்போர்ட்டியான கார் என்ற மேலும் ஒரு அடையாளத்தைக் கொடுப்பது, கூபே போன்று சரியும் காரின் கூறையும், ரசனையோடு டிசைன் செய்யப்பட்டிருக்கும் 16 இன்ச் அலாய் வீல்களும், விண்டோ லைன்களும் ஷோல்டர் லைன்களும்தான். கச்சிதமாகக் காட்சியளிக்கும் இதன் பின்னழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது - இதன் C வடிவ டெயில் லைட்டும், ஸ்கோடா என்ற ஆங்கில எழுத்துக்களும். அழகு மட்டுமல்ல, அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற கார் என்பதைப் பறைசாற்றுகிறது இதன் 521 லிட்டர் டிக்கி. 40:60 வடிவில் மடக்கக் கூடிய இதன் பின்னிருக்கைகளை மடித்து விட்டால், டிக்கியின் கொள்ளளவு இரட்டிப்பாகிவிடும்.

அகலத்திலும் சரி, வீல்பேஸிலும் சரி, போட்டிக் கார்களான ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ், ஆகியவற்றோடு ஒப்பிடும்போது இது பெரிது. ஆனால் நீளத்திலும், உயரத்திலும் ஹோண்டா சிட்டியைவிட சில மிமீக்கள் குறைவு. ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஆகிய கார்கள் தயாரிக்கப்படும் அதே MQB A0 IN ப்ளாட்ஃபார்மில்தான் இதுவும் தயாரிக்கப்படுகிறது. இதன் உதிரிபாகங்கள் எல்லாம் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இதன் விலை போட்டிக் கார்களோடு போட்டி போடும் அளவுக்குத்தான் இருக்கும்.

டொர்னாடோ ரெட், க்ரிஸ்டல் புளூ, கேண்டி வொய்ட், ரிஃப்லக்ஸ் சில்வர், கார்பன் ஸ்டீல் என்று ஐந்து வண்ணங்களில் வரப்போகும் ஸ்லாவியா ஆக்டிவ், ஆம்பிஷன், ஸ்டைல் என்று மூன்று வேரியன்ட்டுகளிலும் கிடைக்கும்.

பூட் ஸ்பேஸ் 521 லிட்டர் தாராளம்.
பூட் ஸ்பேஸ் 521 லிட்டர் தாராளம்.
2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டூயல் டோன் டேஷ்போர்டு ஸ்போர்ட்டி. குஷாக்கை நினைவுபடுத்துகிறது டிசைன்.
2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டூயல் டோன் டேஷ்போர்டு ஸ்போர்ட்டி. குஷாக்கை நினைவுபடுத்துகிறது டிசைன்.
10 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஏகப்பட்ட வசதிகள். இது ஒரு கனெக்டட் கார்.
10 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஏகப்பட்ட வசதிகள். இது ஒரு கனெக்டட் கார்.
ஸ்கோடா பேட்ஜிங்கே செம ஸ்போர்ட்டி.  MQB A0 IN ப்ளாட்ஃபார்ம் என்பதால், கட்டுமானம் அருமை.
ஸ்கோடா பேட்ஜிங்கே செம ஸ்போர்ட்டி. MQB A0 IN ப்ளாட்ஃபார்ம் என்பதால், கட்டுமானம் அருமை.

உள்ளலங்காரம்:

கார் கதவை திறந்து மூடும்போது கேட்கும் சத்தமே.. இது எந்த அளவுக்கு உறுதியான கார் என்பதைச் சொல்லிவிடுகிறது. ஸ்கோடா குஷாக்கின் தாக்கம் ஸ்லாவியாவின் கேபினில் ஆங்காங்கே புலப்படுகிறது. லெதரால் அழகாக கவர் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல், அப்படியே அச்சு அசலாக குஷாக்கில் இருப்பதைப் போலவே இரண்டு ஸ்போக்ஸ் கொண்டதாக இருக்கிறது. தொடுதிரையில் இருக்கும் பல அம்சங்களை, ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டிருக்கும் கன்ட்ரோல்களைக் கொண்டே மாற்ற முடிகிறது. நாம் Walkaround செய்தது ஆட்டோமேட்டிக் வேரியன்ட் என்பதால், அதில் பேடில் ஸ்ஃப்ட்டர்ஸும் இருந்தன.

ஸ்லாவியாவின் டூயல் டோன் - அதாவது, இரட்டை வண்ணதில் வடிவமைக்கப் பட்டிருக்கும் டேஷ்போர்டு, அதின் ஊடாக இருக்கும் மரக்கலரில் இருக்கும் ஓர் அலங்காரம் இதற்குப் பொருத்தமானதாக இருக்கிறது. முன்பக்க இருக்கைகள் உட்கார வசதியாக இருக்கின்றன. இவை பெர்ஃபரேட்டட் சீட்ஸ் என்பதால். தேவைப்பட்டால் சீட்டில் இருந்துகூட குளிர்காற்று வெளிப்பட்டு நம்மை ஆற்றுப்படுத்தும்.

ஸ்லாவியாவின் ஹைலைட், அதன் 10 இன்ச் டச் ஸ்க்ரீன், 8 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இதன் எலெக்ட்ரிக் சன் ரூஃப் ஆகியவைதான். ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளோடு வந்திருக்கும் இதில் Skoda Connect வசதி இருப்பதால் இது ஒரு கனெக்டட் காரும்கூட! ஒயர்லஸ் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி, க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் இருக்கின்றன.

ஸ்கோடாவில் எப்போதுமே பாதுகாப்புக்குப் பஞ்சமிருக்காது. ஆறு காற்றுப்பைகள், EBS என்கிற எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், EDS எனக்கூடிய எலெக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் சிஸ்டம், டயர் ப்ரஷர் மானிட்டர், ஹில்-ஹோல்டு அசிஸ்ட், குழந்தைகளுக்கான ISOFIX சீட் பொருத்துவதற்கான வசதி ஆகியவற்றையும் கொடுத்திருக்கிறார்கள்.

ஸ்கோடா  ரேபிட்டின்
அண்ணன் ஸ்லாவியா!
ஸ்கோடா  ரேபிட்டின்
அண்ணன் ஸ்லாவியா!

இன்ஜின்

ஸ்கோடா குஷாக்கில் இருக்கும் அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்கள்தான் இதிலும். மூன்று சிலிண்டர்களைக் கொண்ட 1 லிட்டர் டர்போ TSI பெட்ரோல் இன்ஜின் 115bhp சக்தியையும் 175Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 6 கியர்கள் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 கியர்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் என்று இந்த இன்ஜினுக்கு இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்ஸ் கொடுத்திருக் கிறார்கள்.

இது தவிர 4 சிலிண்டர்கள் கொண்ட 1500சிசி, TSI இன்ஜினும் உண்டு. இது 150bhp சக்தியையும், 250Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் Cylinder Deactivation Technologyயையும் கொடுத்திருக்கிறார்கள். சக்தி குறைவாகத் தேவைப்படும் நேரங்களில் இரண்டு சிலிண்டர்கள் மட்டுமே செயலாற்றும் என்பதால், இது எரிபொருளையும் மிச்சப்படுத்தும்.

இதில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது என்பது குறை. 10 முதல் 16 லட்சம் என்ற விலையில் வெளிவரக்கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. இதன் செயல்திறன், கையாளுமை மற்றும் விலை ஆகியவைதான் - இந்த செக்மென்ட்டில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா சிட்டிக்கு இது எப்படிப்பட்ட போட்டியைக் கொடுக்கும் என்பதை முடிவு செய்யும்.

ஸ்கோடா  ரேபிட்டின்
அண்ணன் ஸ்லாவியா!