Published:Updated:

யெட்டி... ஏன் எட்டிப் போனது?

ஸ்கோடா யெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கோடா யெட்டி

ஃப்ளாப் கார்: ஸ்கோடா யெட்டி

யெட்டி... ஏன் எட்டிப் போனது?

ஃப்ளாப் கார்: ஸ்கோடா யெட்டி

Published:Updated:
ஸ்கோடா யெட்டி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கோடா யெட்டி

ஜெ ர்மன் கார்களுக்கு உலகம் முழுவதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அந்த அளவுக்கு இல்லவிட்டாலும் அதன் அண்டை நாடான செக் குடியரசும் தனித்துவமான இன்ஜினியரிங்கில் புகழ்பெற்றது. டூவீலரில் ஜாவாவும், கார்களில் ஸ்கோடாவும் அதற்குச் சான்று.

இதனால்தான் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், இந்தியச் சந்தைக்குள் நுழைய ஸ்கோடா பிராண்டைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே தான் ஒரு பிரீமியம் பிராண்ட் என்பதில் தெளிவாக இருந்தது ஸ்கோடா. இதனால் ஆக்டேவியா, ஃபேபியா, லாரா என தன் அனைத்து மாடல்களும் போட்டி கார்களைக் காட்டிலும் குறைந்தது 60,000 முதல் 2 லட்சம் வரை விலை கூடுதலாக இருந்தது. இருப்பினும் ஐரோப்பிய பில்டு குவாலிட்டி மற்றும் சொகுசுக்காகவும், ஸ்கோடாவுக்கென வசதியான வாடிக்கையாளர் வட்டம் இருக்கத்தான் செய்தது. இதையும் தாண்டி படுதோல்வி அடைந்த கார் ‘யெட்டி’. இமயமலை நாட்டுப்புறக் கதைகளில் குரங்கு ஆஜானுபாகுவான பனிமனிதனின் பெயர் தான் யெட்டி. மனிதனின் கால்தடத்தை விட யெட்டியின் கால் தடம் இருமடங்காக இருக்குமாம். ஆனால் ஸ்கோடாவின் யெட்டி, ஏன் மார்க்கெட்டில் தடம் பதிக்க முடியவில்லை எனப் பார்ப்போம்.

இன்டீரியர் தரத்திலும் ப்ரீமியத்திலும் அசத்தியது. 4வீல் டிரைவில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உண்டு.
இன்டீரியர் தரத்திலும் ப்ரீமியத்திலும் அசத்தியது. 4வீல் டிரைவில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உண்டு.

பார்ப்பதற்கு எப்படி?

2014-ம் ஆண்டு யெட்டிக்கு ஒரு பெரிய ஃபேஸ்லிஃப்ட் கொடுத்தது ஸ்கோடா. இதனால் கிமு, கிபி போல ஃபேஸ்லிஃப்ட்க்கு முன், ஃபேஸ்லிஃப்ட்டுக்குப் பின் என இரண்டு கட்டங்களாக யெட்டியைப் பிரிக்கலாம்.

பெயருக்குச் சற்றும் சம்பந்தமில்லாமல், வழக்கத்துக்கு மாறாக ஹெட்லேம்பைத் தொட்டதுபோல கொடுக்கப்பட்டிருந்த பனி விளக்குகள், யெட்டியை க்யூட்டாகக் காட்டின. இதை ஒரு கட்டத்தில் ஸ்கோடாவும் உணர்ந்தது. அதனால் ஃபேஸ்லிஃப்ட்டுக்குப் பின், குவாட் ஹெட்லைட் அமைப்புக்குப் பதிலாக, ஸெனான் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்புகளுடன் புதிய ஒற்றை ஹெட்லைட் அசெம்பிளி கிடைத்தது. தவிர, பனி விளக்குகள் அதற்கு உரிய இடமான பம்பருக்குச் சென்றது.

4.2 மீட்டர் நீளத்தில், ஸ்கோடாவின் லேட்டஸ்ட் வெளியீடான குஷாக் உடன் ஒப்பிடும் வகையில் இருந்தன யெட்டியின் நீள, அகல அளவுகள். குஷாக் உடன் மேலும் ஒரு ஒப்பீடு உள்ளது. அதைக் கடைசியாகப் பார்ப்போம்.

வசதிகள் & சிறப்பம்சங்கள் எப்படி?

முன்பெல்லாம் விலை, மைலேஜை மட்டும் வைத்துத்தான் கார் வாங்கும் முடிவை மிஸ்டர்.பொதுஜனம் எடுத்துக் கொண்டிருந்தார். 2010-க்குப் பின்னர் வந்த புதிய தலைமுறை பொதுஜனங்கள், எந்த கார் கொடுக்கும் காசுக்கு அதிக அம்சங்களைத் தருகின்றன என பார்த்தனர்.

இதனால் உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள், சிறப்பம்சங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். ஆனால், அப்போதே ஐரோப்பியத் தொழில்நுட்பத்துடன் ஸ்கோடா தனக்கென ஒரு பெயர் வைத்திருந்தது. உள்ளே நுழைந்து, கதவைச் சார்த்திய உடன் உறுதி அளிக்கும்விதமாகக் கேட்கும் ‘தட்’ சத்தம் வாடிக்கையாளருக்கு ஒரு நல்ல ‘ஃபர்ஸ்ட் இம்பிரஷன்’ கொடுத்தது. புளூடூத் மற்றும் பிற இணைப்புகளுடன் கூடிய தொடுதிரை இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுன்ட் கண்ட்ரோல்கள் மற்றும் சிறந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை அன்றைய காலகட்டத்துக்கு நவீனமான உட்புற அம்சங்களைக் கொண்டிருந்தது.

யெட்டியில் பெட்ரோல் இன்ஜின் இல்லை. டீசல் மட்டும்தான்.
யெட்டியில் பெட்ரோல் இன்ஜின் இல்லை. டீசல் மட்டும்தான்.

ஓட்டுவதற்கு எப்படி?

துரதிர்ஷ்டவசமாக டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே வந்தது ஸ்கோடா யெட்டி. 2.0 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜின் இரண்டு செட் ட்யூனிங்கில் கிடைத்தது.

4X4 மாடல் - 138 bhp பவரையும், 32.0 kgm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 4X2 மாடல், 107bhp பவர் மற்றும் 25.0kgm டார்க்கை உற்பத்தி செய்தது. இரண்டு இன்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருந்தன. வீல்களுக்கு பவர் செல்லும் முறையே மாறுபட்டாலும், கியர் ஷிப்ட்டிங்கில் ஓனர்கள் மட்டும் உணரும் வகையில் மெல்லிய மாற்றம் மட்டுமே இருந்தது.

4X4 ஆப்ஷன் கொண்டிருந்தாலும், இதன் ஸ்டிஃப் சஸ்பென்ஸன் செட் அப் காரணமாக ஆப்-ரோடிங்குக்கு இது செட் ஆகவில்லை. அதையும் மீறி மேடு பள்ளங்களில் எடுத்துச் சென்றால், கேபினுக்குள் அதிர்வுகளை அப்படியே கடத்தியது.

வாரம் முழுவதும் நகருக்குள் சுற்றி வர பெட்ரோல் இன்ஜின் எஸ்யூவி தேவைப்படும் ஒரு பெரும் வாடிக்கையாளர் வட்டத்தில் கால்வாசிப் பேர் கூட, விசாரிப்புக்குக்கூட ஸ்கோடா ஷோரூமுக்கு வரவில்லை. ஃபேஸ்லிஃப்ட்டிலாவது பெட்ரோல் ஆப்ஷன் கொண்டு வந்திருக்கலாமே ஸ்கோடா?

மிஸ்ஸானது ஏன்?

குஷாக்குடன் நடத்திய முந்தைய ஒப்பீட்டைத் தொடர்வோம். 2010-ல் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய 2 வீல் டிரைவ் மாடல் 16.2 லட்சத்துக்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இன்று விற்பனையில் இருக்கும் குஷாக் மேனுவல் டாப் எண்ட் வேரியன்ட்டின் விலை 16.22 லட்சம். வசதிகள், சிறப்பம்சங்கள் என அனைத்திலும் மேம்பட்டிருக்கும் அதே செக்மென்ட் மாடல் - பத்து ஆண்டுகள் கழித்து அதே விலையில் விற்பனையாகிறது எனில், முன்னர் யெட்டிக்கு ஸ்கோடா எந்த அளவு அதிக விலை நிர்ணயம் செய்திருந்தது என்பது கண்கூடாகிறது.

ஸ்கோடா யெட்டிக்கு நேரான போட்டி இல்லை. XUV 500, சஃபாரி என உள்நாட்டு எஸ்யூவிகள் முடிந்து, ஃபார்ச்சூனர், எண்டேவர் என முரட்டு வெளிநாட்டுப் போட்டியாளர்களும் வர, யெட்டியை எட்டிக்கூடப் பார்க்கவில்லை யாரும். ஐரோப்பிய பில்ட் குவாலிட்டி இருந்தபோதிலும், ஒரு செக்மென்ட் கீழே உள்ள கார்களில் இருந்த சில அம்சங்கள் கூட யெட்டியில் மிஸ்ஸிங். இதனால், 17 லட்சம் வந்துவிட்டோம், இன்னும் கொஞ்சம் செலவழித்து நல்ல சொகுசான காரை வாங்கலாம் என மக்கள் நினைத்ததுதான் யெட்டியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்!யெட்டி...

ஏன் எட்டிப் போனது?