சினிமா
Published:Updated:

இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?

இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான (Infrastructure) கட்டமைப்பு, அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்கள், இறக்குமதி வரிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன

‘ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் – மோட்டார் விகடன் பத்திரிகைக்காக 11 ஆண்டுகளுக்கு முன்பு கமல் தன்னுடைய பைக் பற்றியும், பெட்ரோல் விலையேற்றம் பற்றியும் பேசும்போது தனிப்பட்ட முறையில் இப்படிச் சொன்னார்: ‘‘இன்னும் 15 ஆண்டுகள் கழித்து எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள் மக்கள். அமெரிக்காவில் டெஸ்லா என்றொரு கார் நிறுவனம் இருக்கிறது. அது இந்தியாவுக்கு வரலாம்!’’ அப்போது பல பேருக்கு டெஸ்லா என்றால் என்னவென்றே தெரிந்திருக்கவில்லை.

நிஜமாகவே இப்போது டெஸ்லாவை இந்தியாவுக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகள்தான் நடந்துகொண்டிருக்கின்றன. ‘‘மம்தா இருக்காங்க; வங்காளம் என்றால் வணிகம். இங்க வாங்க!’’ என்று மேற்கு வங்க மந்திரியும், ‘‘பேட்டரியின் மாநகரமான லூதியானாவுக்கு வரவேற்கிறோம்!’’ என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவும், ‘‘தெலங்கானாதான் உங்களுக்குச் சரியான சாய்ஸ்!’’ என்று தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவும், ‘‘மகாராஷ்டிரா வாங்களேன்… பழகலாம்; வணிகம் பண்ணலாம்!’’ என்று அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சரும் போட்டி போட்டுக்கொண்டு எலான் மஸ்க்குக்கு ரிக்வெஸ்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 5–வது மாநிலமாக, ‘‘இந்தியாவின் டெட்ராய்டுக்கு வந்து உங்கள் தொழிற்சாலையை அமையுங்கள்’’ என்று நமது தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் ரிக்வெஸ்ட் அனுப்பிவிட்டார்.

இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?

தங்கம் தென்னரசு சொன்னதுபோல், ‘தமிழகம், இந்தியாவின் டெட்ராய்டு’ என்று சொல்வதில் தப்பேதும் இல்லை. காரணம் - தமிழ்நாட்டில்தான் ஓலா, ஆம்பியர், ஏத்தர், ப்ராணா, பூம் மோட்டார்ஸ் என்று பல எலெக்ட்ரிக் வாகனத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. (எரிபொருளில் ஓடும் ICE - Internal Combustion Engine வாகனத் தொழிற்சாலைகள் தனி!) இது தவிர சிம்பிள் எனெர்ஜி ஒன், ராப்டீ எனெர்ஜி, ஜியான் (சார்ஜிங் ஸ்டேஷன்), ப்ரொப்பெல் இண்டஸ்ட்ரீஸ் என்று ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது. இவ்வளவு பேர் அழைத்தும், டெஸ்லா இந்தியாவுக்கு வர ஏன் இவ்வளவு பிகு பண்ணுகிறது என்றால்... இந்த எலெக்ட்ரிக் எல்லாமே டூ–வீலர்கள் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய முதல் விஷயம்.

இரண்டாவது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான (Infrastructure) கட்டமைப்பு, அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்கள், இறக்குமதி வரிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.உதாரணத்துக்கு, ஹம்மர் என்றொரு அமெரிக்கக் காரை எடுத்துக்கொள்ளலாம். அதை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து கொண்டு வந்து, இங்கே அந்தக் காரை ஓட்ட வேண்டுமென்றால், 100% வரி கட்ட வேண்டும். அமெரிக்காவில் இதன் விலை 30,000 டாலர் என்று வைத்துக் கொள்வோம். இங்கே வரும்போது அப்படியே டபுள் ஆகும். கூடவே நுழைவு வரி, சாலை வரி செஸ் வரி என்று சேர்த்தால்… 80,000 டாலரில் வந்து நிற்கும். பெட்ரோல்/டீசல் கார்கள் என்றால் தனவான்களுக்குப் பிரச்னை இல்லை.

இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?

கார்களில் CBU (Complete Built Up) மற்றும் CKD (Completely Knocked Down) என்று இரண்டு வகைகள் உண்டு. மொத்தமாக, ஒரு காராகவே இறக்குமதி செய்து கொண்டு வந்து, இங்கே ஓட்டுவது CBU. (ஹம்மர் CBU முறை). கியர், சேஸி, இன்ஜின் என்று சில முக்கியமான பாகங்களை மட்டும் இறக்குமதி செய்து இங்குள்ள ப்ளான்ட்டில் அசெம்பிள் செய்வது CKD. இதில் CBU முறையைவிட CKD–க்கு வரி குறைவு. 30%தான் இறக்குமதி வரி. இதற்கு அடுத்த முறைதான் SKD (Semi Knocked Down). குறைந்தபட்ச பாகங்களை மட்டும் இறக்குமதி செய்து பொருத்துவதுதான் இந்த SKD. இந்த முறையைக் கொண்டு வரத்தான் டெஸ்லா முயற்சி செய்கிறது. ஆனால் மத்திய அரசிடமிருந்து கிரீன் சிக்னல் வரவில்லை.

இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?

டெஸ்லா இங்கே வந்தால் தாக்குப்பிடிக்குமா என்பதையும் பார்க்கலாம்! டெஸ்லாவில் விலை குறைந்த மாடல் என்றால் மாடல் 3தான். இதைத்தான் முதலில் இந்தியாவுக்குக் கொண்டு வரவிருக்கிறது டெஸ்லா. இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் இதன் விலை எப்படியும் 50 – 60 லட்சத்துக்குள்ளாக வரலாம். நம் ஊரில் டாடா, மஹிந்திரா, எம்ஜி போன்ற நிறுவனங்களின் 20 லட்ச ரூபாய்க்குட்பட்ட எலெக்ட்ரிக் கார்களுடன் இது போட்டி போடப் போவதில்லை. பென்ஸ், ஆடி, ஜாகுவார், வால்வோ என்று படா ஜாம்பவான்களுடன்தான் போட்டி போடப்போகிறது.

இன்னொரு ப்ளஸ்ஸும் டெஸ்லாவுக்கு இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை உதிரி பாகங்கள் மிகக் குறைவுதான் என்பதால் பாகங்களின் சப்ளையும் ஈஸியாகக் கிடைக்கும் டெஸ்லாவுக்கு. எந்த வெளிநாட்டுக் காரை எடுத்துக்கொண்டாலும், அதில் இந்தியத் தயாரிப்பு இல்லாமல் இருக்காது. உதிரிபாகங்கள் தயாரிப்பில் இந்திய நிறுவனங்கள் கில்லி. உதாரணத்துக்கு ஜேம்ஸ்பாண்ட் ஓட்டும் ஆஸ்ட்டன் மார்ட்டினை எடுத்துக்கொண்டால் அதன் ஹேண்ட் பிரேக் லீவர் இந்தியத் தயாரிப்பு; ஃபெராரியில் உள்ள சீட் ட்ராக்‌ஷன் கேபிள்கள் மேக்–இன் இந்தியா. இப்படி பல ப்ளஸ்கள் இருக்கையில், டெஸ்லாவை இந்தியாவில் தயாரிப்பது மஸ்க்குக்கு ரஸ்க் சாப்பிடுவதுபோல் ஈஸியான டாஸ்க்காகவே இருக்கலாம்.

இந்தியாவுக்கு வருமா டெஸ்லா?

2021 ஜனவரியில் பெங்களூரில் ஓர் அலுவலகத்தை அமைத்தது டெஸ்லா. அலுவலகம் மட்டும்தான் இயங்குகிறது. இன்று வரை கார்கள் இந்தியாவில் ஓடவில்லை. இவ்வளவு ஆசை இருந்தும் எலான் மஸ்க் யோசித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம் – எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியத் தொகை குறைவாக இருப்பதும், அதிகமான இறக்குமதி வரிகளும்தான். அட்லீஸ்ட், இந்த CKD முறையில் வரி எவ்வளவு என்றாவது தெரிந்தால் மஸ்க், ஒரு தெளிவுக்கு வருவார்.

‘‘மத்திய அரசுடன் இன்னும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இது முடிந்ததும்தான் ஒரு தெளிவு கிடைக்கும்!’’ என்று அவரே சொல்லியிருக்கிறார். இந்தச் சிக்கல்கள் தீர்ந்தால் நம்மூரிலும் பார்க்கலாம் டெஸ்லா கார்களை!