கார்ஸ்
பைக்ஸ்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

கியா கார்னிவல் எம்பிவி... டொயோட்டா & பென்ஸுக்குப் போட்டியா?

கியா கார்னிவல் எம்பிவி...
பிரீமியம் ஸ்டோரி
News
கியா கார்னிவல் எம்பிவி...

SPY PHOTO ரகசிய கேமரா

கார்னிவல் ப்ரீமியம் எம்பிவி, Qiy கான்செப்ட்டை அடிப்படையாக கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி, ரியோ ப்ரீமியம் ஹேட்ச்பேக், ரியோவை அடிப்படையாகக் கொண்ட க்ராஸ் ஹேட்ச்பேக் என இந்தியாவில் வரிசையாக கியா நிறுவனத்தின் மாடல்கள் படையெடுக்க உள்ளன.

SPY PHOTO ரகசிய கேமரா
SPY PHOTO ரகசிய கேமரா

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கார்னிவல் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கார் தற்போது இறுதிக்கட்ட டெஸ்ட்டிங்கில் இருப்பதைப் பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எஸ்.பி.பாலசுப்ரமணியன்.

காரின் அளவுகள், கேபின்

கியா செடோனா மற்றும் கிராண்ட் கார்னிவல் எனும் பெயர்களில் 7, 8, 11 எனப் பல்வேறு சீட்டிங் ஆப்ஷனில், சர்வதேச சந்தைகளில் இந்த எம்பிவி ஏற்கெனவே விற்பனையாகிறது. நியூயார்க் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மாடல் அமெரிக்காவை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதாலோ என்னவோ - 5,115மிமீ உயரம் – 1,985மிமீ அகலம் – 1,740மிமீ உயரம்- 3,060மிமீ வீல்பேஸ் – 5 கதவுகள் என இனோவா க்ரிஸ்டாவைவிடப் பெரிய சைஸில் திடகாத்திரமாக இருக்கிறது. இந்தியாவுக்கு வரும்போது, நம் ஊருக்கு ஏற்றபடி டிசைனில் சில மாற்றங்கள் இருக்கலாம். பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படலாம்.

கியா கார்னிவல் எம்பிவி... டொயோட்டா & பென்ஸுக்குப் போட்டியா?
கியா கார்னிவல் எம்பிவி... டொயோட்டா & பென்ஸுக்குப் போட்டியா?

லேடர் ஃப்ரேம்- ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டிருக்கும் இனோவா க்ரிஸ்டாவுடன் ஒப்பிட்டால், இது ஃப்ரன்ட் வீல் டிரைவ் மற்றும் மோனோகாக் சேஸியைக் கொண்டிருப்பது பெரிய ப்ளஸ். இதனால் காரின் எடை குறைவாக இருக்கும் என்பதுடன், கேபின் இடவசதியும் அதிகமாகவே இருக்கும்.

இரண்டாவது வரிசை இருக்கை சொகுசு மிகவும் முக்கியம் என்பதால், அநேகமாக இங்கே 6/7/8 சீட் ஆப்ஷன்களுடன் பல்வேறு வேரியன்ட்டில் வருவதற்கான சாத்தியம் அதிகம். கடைசி வரிசையை எலெக்ட்ரிக்கலாகவும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கும். மேலும் இதன் ஸ்லைடிங் பாணி கதவுகளையும் எலெக்ட்ரிக்கலாக இயக்கலாம். ஸ்பை படங்களில் இருந்த கார், 3 வரிசை இருக்கையைக் கொண்டிருந்தது. எனவே மூன்று வரிசை இருக்கைகளும் பயன்பாட்டில் இருக்கும்போதும்கூட, சுமார் 1,000 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸ் இருக்கலாம். எர்டிகாவில் இருப்பதோ வெறும் 209 லிட்டர்தான் மக்களே!

சிறப்பம்சங்கள், இன்ஜின் - கியர்பாக்ஸ்

நடுவரிசை இருக்கையில் Leg Rest & Armrest இருக்கும். மேலும் என்டர்டெயின்மென்ட் அம்சங்களுக்காக, ஒவ்வொரு முன்பக்க இருக்கையின் பின்னாலும் ஒரு 10.1 இன்ச் ஸ்க்ரீன் இருக்கும். இதனுடன் UVO – In Car கனெக்ட்டிவிட்டி Suite, பெரிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம், இரட்டை சன்ரூஃப், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, சீட் மெமரி & எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான டிரைவர் இருக்கை எனச் சிறப்பம்சங்களின் பட்டியல் நீள்கிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை 4 காற்றுப்பைகள், ABS, EBD, ESC, TPMS, பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மூன்று வரிசை இருக்கைகளுக்கும் USB சார்ஜிங் பாயின்ட் ஆகியவை உள்ளன. 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினுடன் கார்னிவல் இருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இது, 202bhp@3,800rpm பவர் - 44.1kgm@1,750rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக வழங்கப்படலாம்.

போட்டியாளர்கள்

கார்னிவல், இனோவா க்ரிஸ்டாவைவிட அதிக விலையில் அறிமுகமாகும். இன்ஜின் CBU முறையில் வந்தாலும், மற்றவற்றை CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்து, அனந்தபூரில் உள்ள தனது தொழிற்சாலையில், இந்த காரை அசெம்பிள் செய்யத் தீர்மானித்துள்ளது கியா மோட்டார்ஸ். எனவே, விலை உத்தேசமாக 30 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் விலை) வரலாம்.

SPY PHOTO ரகசிய கேமரா
SPY PHOTO ரகசிய கேமரா

டொயோட்டா இனோவா க்ரிஸ்டா மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் V-க்ளாஸ் இடையே பெரிய வெற்றிடம் இருப்பதால், அதனை நிரப்பக்கூடிய தயாரிப்பாக இந்த எம்பிவி இருக்கும் என நம்பலாம் (டொயோட்டா Vellfire வேறு வரப்போகிறது). 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கார்னிவல் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றதாகவும், அதன்படி ஒரு மாதத்துக்கு சுமார் 1,000 கார்கள் விற்பனை ஆகும் திறன் அதற்கு இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. எனவே கியாவுக்குப் ப்ரீமியம் அடையாளத்தைத் தரப்போகும் இந்த எம்பிவி, Private Buyers & Fleet Owners-க்கும் பிடித்தமான தயாரிப்பாகவும் மாறலாம்.

கார்னிவலைப் படம்பிடித்த வாசகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி: ரகசிய கேமரா, மோட்டார் விகடன்,757, அண்ணா சாலை, சென்னை-600002. email: motor@vikatan.com