Published:Updated:

2022-ல் வரப்போகும் எஸ்யூவிகள்!

2022-ல் வரப்போகும் எஸ்யூவிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
2022-ல் வரப்போகும் எஸ்யூவிகள்

சர்வே: எஸ்யூவிகள்

கடந்த சில வருடங்களாக எஸ்யூவிகளின் மீதான மோகம் அதிகரித்திருக்கிறது. டிரைவிங் பொசிஷன், உள்பக்க இடவசதி, முக்கியமாக அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை கார் வாடிக்கையாளர்களின் பார்வையை எஸ்யூவிக்களின் பக்கம் திருப்பியிருக்கிறது. 2021-ல்கூட கணிசமாக வெளியான கார்கள் என்றால் அது எஸ்யூவிகள்தான். இந்த ட்ரீட் அடுத்த ஆண்டும் காத்திருக்கிறது. 2022-ல் வெளியாக இருக்கும் எஸ்யூவிக்கள் என்னென்ன? (விலைகள் அனைத்தும் உத்தேசமானவை)

ஆடி Q3

வெளியீடு: 2022-ன் கடைசியில்

விலை: 40 - 45 லட்சம் ரூபாய்

இரண்டாம் தலைமுறை Q3-யை நீண்ட காலமாகவே இந்தியாவில் வெளியிடாமல் காத்திருப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது ஆடி. 2018-ல் வெளிவந்து தற்போது ஓர் அப்டேட்டுக்காகக் காத்திருக்கிறது இரண்டாம் தலைமுறை Q3. சர்வதேச சந்தையில் அப்டேட் செய்த கையோடு அப்படியே இந்தியாவிலும் அதனை ஆடி வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தலைமுறை Q3-யை விட வெளிப்பக்கமும் சரி உள்பக்கமும் சரி பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் பெரிதாகவே இருக்கிறது ஆடி Q3. ஆடி Q8-ன் ஸ்டைலிங்கைப் பிரதிபலிக்கிறது இந்தக் குட்டி வெர்ஷன். புதிய அப்டேட்டாக எக்ஸ்ட்ரா ஸ்க்ரீன்கள் மற்றும் ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வரும் இந்த Q3-க்குப் போட்டியாக GLA, பிஎம்டபிள்யூ X1 மற்றும் வால்வோ XC40 ஆகியவை இருக்கின்றன.

ஆடி Q3
ஆடி Q3

ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட்

வெளியீடு: 2022 தொடக்கத்தில்

விலை: 75 - 90 லட்சம் ரூபாய்

இந்தியாவில் விற்பனையை நிறுத்தும் வரை ஆடியின் பிரபலமான கார்களில் ஒன்றாகவே இருந்து வந்தது ஆடி Q7. நிறுத்திய விற்பனையை மீண்டும் 2022-ல் ஆடி துவக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக இந்தியாவில் வெளியாகவிருக்கிறது Q7. புதிய ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷன் புதிய அக்ரஸிவ்வான கிரில், முன்பக்க பம்பர், டிஆர்எல்லுடன் கூடிய ஹெட்லைட், புதிய டெய்ல்லைட் மற்றும் மறுவடிவம் செய்யப்பட்ட பின்பக்க பம்பர்களைப் பெற்றிருக்கிறது. இந்த மாற்றங்களுடன் புதிய பொலிவான தோற்றத்தைப் பெற்றிருக்கிறது Q7. வெளிப்பக்கத்தை விட உள்பக்க அப்டேட் இன்னும் சிறப்பாக இருக்கிறது. புதிய ஆடி கார்களில் இருப்பதுபோன்ற ஸ்டைலான டேஷ்போர்டை Q7 ஃபேஸ்லிப்டுக்குக் கொடுத்திருக்கிறது ஆடி. ட்வின் டச்ஸ்கிரீன், முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு 7 சீட் கொண்ட மாடலை வெளியிடவிருக்கிறது. 340hp பவரை வெளிப்படுத்தும் Q7-ல் 3.0 லிட்டர் V6 டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஆடி. ஆடியில் டீசல் கார்கள் இந்தியாவில் இனி இல்லை.

ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட்
ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட்

பிஎம்டபிள்யூ X3, X4 ஃபேஸ்லிப்ட்

வெளியீடு: 2022 பாதியில்

விலை: 55 - 70 லட்சம் ரூபாய்

விலை: 65 - 80 லட்சம் ரூபாய்

X3 மற்றும் X4 மாடல்களில் சின்னச் சின்ன டிசைன் மாற்றங்களை மட்டும் ஃபேஸ்ஃலிப்ட் வெர்ஷனில் செய்திருக்கிறது பிஎம்டபிள்யூ. புதிய கிரில், புதிய ஹெட்லைட், எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டிருக்கின்றன இதில். பிஎம்டபிள்யூவின் லேசர் லைட் சிஸ்டத்தைப் பெற்றுக் கொள்ளும் ஆப்ஷனும் உண்டு. புதிய ஃப்ரன்ட் ஏப்ரானைப் பெற்றிருக்கும் இந்த மாடல்களில் விண்டோ கிராபிக்ஸ் மற்றும் ரூஃப் ரெய்ல்களில் அலுமினியம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிய எக்ஸாஸ்ட் பைப்களைக் கொடுத்து, பின்பக்க விளக்கைக் கொஞ்சம் குட்டியாக்கியிருக்கிறது. சர்வதேச சந்தையில், 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல், 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என நான்குவிதமான இன்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கின்றன. இவை தவிர X3 மாடலானது ப்ளக் இன் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களிலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு IC இன்ஜின் மட்டும்தான்.

ஃபோர்ஸ் கூர்க்கா 4 டோர்

பிஎம்டபிள்யூ X3, X4 ஃபேஸ்லிப்ட்
பிஎம்டபிள்யூ X3, X4 ஃபேஸ்லிப்ட்

ஃபோர்ஸ் கூர்க்கா 4 டோர்

வெளியீடு: 2022-ன் இறுதியில்

விலை: 15 லட்சம் ரூபாய்

4 டோர் கொண்ட புதிய கூர்க்கா மாடல் ஒன்றைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது ஃபோர்ஸ். அந்த மாடலைத்தான் 2022-ல் வெளியிடவிருக்கிறார்கள். கூர்க்காவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் லேடர் ஃபிரேம் சேஸியின் வீல்பேஸை அதிகரித்து, அப்டேட் செய்து புதிய கூர்க்காவில் பயன்படுத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை தற்போது இருக்கும் கூர்க்காவில் இருந்து பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது. ஆனால், தற்போது இருக்கும் மூன்று டோர்களுக்குப் பதிலாக நான்கு டோர்கள் இருக்கும். தோற்றத்தில் மெர்சிடீஸின் G க்ளாஸையும் நினைவுபடுத்துவதுபோல் இருக்கும் புதிய கூர்க்கா. இதிலும் அதே 2.6 லிட்டர் டீசல் இன்ஜின்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்ஸ் கூர்க்கா 4 டோர்
ஃபோர்ஸ் கூர்க்கா 4 டோர்

ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்

வெளியீடு: 2022 பாதியில்

விலை: 7 - 12 லட்சம் ரூபாய்

க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்பாக, வென்யூவின் ஃபேஸ்லிஃப்ட்டை ஹூண்டாய் இந்தியாவில் வெளியிட்டுவிடும் எனத் தகவல்கள் பரபரக்கின்றன. ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷனை தென்கொரியாவில் ஏற்கெனவே சோதனை செய்து பார்த்து வருகிறது ஹூண்டாய். முதலில் தென்கொரியாவிலும், பின்னர் மற்ற நாடுகளுக்கும் என வென்யூவின் வெளியீட்டை ப்ளான் செய்திருக்கிறது ஹூண்டாய். அப்டேட் செய்யப்பட்ட வென்யூவில் க்ரெட்டா மற்றும் டூஸானில் பயன்படுத்தப்பட்டது போலவே பாராமெட்ரிக் கிரில்லை ஹூண்டாய் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. டெய்ல்லைட், பம்பர்கள், அலாய் வீல் என சின்னச் சின்ன டிசைன் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இன்ஜினைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இன்றி, தற்போது இருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகியவையே இருக்கும்.

ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்
ஹூண்டாய் வென்யூ ஃபேஸ்லிஃப்ட்

ஜீப் கிராண்ட் செரோக்கி

வெளியீடு: 2022 பாதியில்

விலை: 65 - 75 லட்சம் ரூபாய்

கடந்த செப்டம்பர் மாதம் புதிய செரோக்கி ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஜீப். அந்த மாடல் தான் அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. ஆக்டிவ் கிரில் ஷட்டர்ஸ், ஏர் கர்டெய்ன்ஸ் மற்றும் ஏரோடைனமிக் திறன்களை அதிகப்படுத்தும் விதமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரியர் பில்லர்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது இந்த செரோக்கி. மூன்று வரிசை சீட்கள் கொண்ட நீளமான செரோக்கி L ஒன்றையும் ஜீப் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டேஷ்போர்டில் 10.1 இன்ச் சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன், டிஜிட்டல் இன்ட்ரூமன்ட் கிளஸ்டர், வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பேடு, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது செரோக்கி. இந்தியாவில் 290 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 3.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட ப்ளக் இன் ஹைபிரிட் ஆகிய இரு வேரியன்ட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் வெளியாகும் ஜீப் மாடல்களின் ப்ளாக்ஷிப் மாடலகாவும் இந்த செரோக்கி இருக்கும்.

ஜீப் கிராண்ட் செரோக்கி
ஜீப் கிராண்ட் செரோக்கி

ஜீப் மெரிடியன்

வெளியீடு: 2022 பாதியில்

விலை: 35 - 50 லட்சம் ரூபாய்

ஜீப்பின் காக்டெய்ல் கார் என இந்த மெரிடியனைச் சொல்லலாம். இந்த மெரிடியனுக்கு ஒன்றல்ல; பல பெயர்கள் இருக்கிறது. ஆம், காம்பஸையே கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆக்கி மூன்று வரிசை கொண்ட காராக மெரிடியனை உருவாக்கி வருகிறது ஜீப். ஆனால், இந்தியாவைக் கடந்து, வெளிநாடுகளுக்குச் சென்று விட்டால் இதன் பெயர் கமாண்டர். ஆம், வெளிநாடுகளில் கமாண்டர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியதைத்தான் இந்தியாவில் மெரிடியன் என்ற பெயரில் வெளியிடவிருக்கிறது ஜீப். இந்தியாவில் ரன்ஜன்கோனில் காம்பஸுடன் சேர்த்து, இந்த மெரிடியனையும் தயாரிக்கவிருக்கிறது ஜீப். காம்பஸைப்போலத்தான் இருக்கும் எனக் கூறினாலும், செரோக்கியின் டிசைனையும் ஆங்காங்கே தெளித்துவிட்டிருக்கிறது ஜீப்.

உள்பக்க டிசைனைப் பொறுத்தவரை அப்படியே காம்பஸ்தான். ஆனால், கூடவே சில பல வசதிகளை எக்ஸ்ட்ராவாக ஜீப் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைல்டு ஹைபிரிட் டெக்னாலஜியுடன் கூடிய 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைக் கொண்ட ஒரே ஒரு மாடல் மட்டுமே இந்தியாவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதன் போட்டியாளர்களாக ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல் ஸ்பேஸ் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவை இருக்கும்.

ஜீப் மெரிடியன்
ஜீப் மெரிடியன்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

வெளியீடு: 2022 தொடக்கத்தில்

விலை: 11 - 18.5 லட்சம் ரூபாய்

ஒரு வழியாக புதிய ஸ்கார்ப்பியோவைச் சந்தைக்குக் கொண்டு வரவிருக்கிறது மஹிந்திரா. ஸ்கார்ப்பியோ வெளியானதில் இருந்தே பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றியே இருந்து வந்தது. தற்போது ஒரு புதிய லுக்குடன் தயாராகி இருக்கிறது ஸ்கார்ப்பியோ. இரண்டாம் தலைமுறை தாரில் பயன்படுத்தப்பட்டு வரும் அப்டேட் செய்யப்பட்ட லேடர் ஃப்ரேம் சேஸியை ஸ்கார்ப்பியோவில் பயன்படுத்தவிருக்கிறது மஹிந்திரா. முற்றிலும் ஒரு புதிய வடிவத்திலும் வெளியாகவிருக்கிறது.

அப்போ ஸ்கார்ப்பியோவுக்கான ஸ்டைலிங் எல்லாம் இருக்காதா என டென்ஷன் ஆக வேண்டாம். பழைய ஸ்கார்ப்பியோவுக்கு புதிய ஸ்டைலிங்கை செய்திருக்கிறது மஹிந்திரா அவ்வளவுதான். மஹிந்திராவின் புதிய XUV700-ல் இருந்து டச்ஸ்கிரீன், இன்ஜின் உள்ளிட்ட சில அம்சங்களையும் கடன் வாங்கியிருக்கிறது ஸ்கார்ப்பியோ.

2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் mStallion பெட்ரோல் இன்ஜின் ஆகியவை புதிய ஸ்கார்ப்பியோவில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டும் 4 வீல் ட்ரைவ் கொடுக்கப்படலாம். XUV700 கொஞ்சம் சாப்ட்டான லுக்குடன் இருக்கும். ஆனால் கொஞ்சம் முரட்டுத்தனமான தோற்றத்துடன் அப்டேட்டான மாடல் வேண்டும் என்பவர்களுக்காக ஸ்கார்ப்பியோவைச் செதுக்கிக் கொண்டிருக்கிறது மஹிந்திரா.வெளியீடு: 2022 தொடக்கத்தில்

விலை: 11 - 18.5 லட்சம் ரூபாய்வெளியீடு: 2022 தொடக்கத்தில்

விலை: 11 - 18.5 லட்சம் ரூபாய்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மாருதி சுஸூகி ஜிம்னி

வெளியீடு: 2022 இறுதியில்

விலை: 15 லட்சம் ரூபாய்

சர்வதேச சந்தையில் மூன்று டோர் ஜிம்னிதான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் 5 டோர்கள் கொண்ட ஜிம்னியை ஸ்பெஷலாகக் களமிறக்கவிருக்கிறது மாருதி சுஸூகி. இந்தப் புதிய ஜிம்னி எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே நாம் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும். மாருதியின் ஸ்மார்ட் ஹைபிரிட் டெக்னாலஜியைக் கொண்ட 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜினைத் தான் புதிய ஜிம்னியில் மாருதி பயன்படுத்துகிறது. ஜிம்னியில் டீசல் வேரியன்ட் இல்லை. ஒரு காம்பேக்ட் எஸ்யூவி டைப்பில் இந்த ஜிம்னியை இந்தியாவில் வெளியிடவிருக்கிறது மாருதி சுஸூகி. 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், லேடர் ஃப்ரேம் சேஸி, 4 வீல் டிரைவ் என ஒரு ஆஃப் ரோடிங் வாகனத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் பக்காவாகக் கொண்டிருக்கிறது இந்த ஜிம்னி.

மாருதி சுஸூகி ஜிம்னி
மாருதி சுஸூகி ஜிம்னி

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்

வெளியீடு: 2022 தொடக்கத்தில்

விலை: 35 - 45 லட்சம் ரூபாய்

BS-6 விதிகள் அமலாக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் விற்பனையை நிறுத்திய கோடியாக்கை, மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வரும் திட்டத்துடன் இருக்கிறது ஸ்கோடா. 150 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய TDI டீசல் இன்ஜினை ஒதுக்கிவிட்டு, இம்முறைய ஃபோக்ஸ்வாகனின் ஆஸ்தான 2.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் கோடியாக்கைக் கொண்டு வரவிருக்கிறது ஸ்கோடா. இந்தப் புதிய இன்ஜின் 190 bhp பவரை வெளிப்படுத்தும் திறனுடன் இருக்கிறது. இந்தாண்டு தொடக்கத்தில் சின்னச் சின்ன டிசைன் அப்டேட்களுடன் சர்வதேச சந்தையில் கோடியாக்கின் ஃபேஸ்லிஃப்ட்டைக் களமிறக்கியது ஸ்கோடா. நிமிர்த்தி வைக்கப்பட்டது போன்ற கிரில், கொஞ்சம் மேலே தூக்கி வடிவமைக்கப்பட்ட பானெட், மறுவடிவம் செய்யப்பட்ட முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள் எனச் சில பல காஸ்மெட்டிக் மாற்றங்கள் நடைபெற்றன. இந்தியாவில் முன்பு விற்பனையில் இருந்த கோடியாக்கின் வசதிகளோடு இந்த டிசைன் அப்டேட்டையும் இணைத்து ஸ்கோடா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிகுவான் ஆல் ஸ்பேஸ் மற்றும் ஜீப் மெரிடியனுக்குப் போட்டியாக அடுத்த ஆண்டு களமிறங்குகிறது கோடியாக்.

ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்
ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்

டொயோட்டா ஹைலக்ஸ்

வெளியீடு: 2022 இறுதியில்

விலை: 25 - 35 லட்சம் ரூபாய்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் போட்டியின்றி தனித்து விற்பனையாகி வந்து கொண்டிருந்த இசுஸூ V-க்ராஸுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறது டொயோட்டா ஹைலக்ஸ். இனோவா மற்றும் ஃபார்ச்சூனர் உருவாகிய அதே ப்ளாட்ஃபார்மில்தான் இந்த ஹைலக்ஸையும் உருவாக்கியிருக்கிறது டொயோட்டா. இந்தியாவில் 5 பேர் பயணிக்கக் கூடிய வகையில் இருக்கும் ஹைலக்ஸின் டபுள் கேப் வேரியன்ட்டையே டொயோட்டா வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இசுஸுவின் பாதையைப் பின்பற்றி 2 பேர் பயணிக்கும் கமர்ஷியல் வாடிக்கையாளர்களுக்கான சிங்கிள் கேப் வேரியன்ட்டை வெளியிட்டாலும் வெளியிடலாம். இனோவா மற்றும் ஃபார்ச்சூனரில் பயன்படுத்திய பல பாகங்களை ஹைலக்ஸிலும் பயன்படுத்தியிருக்கிறது டொயோட்டா. இன்ஜின்கூட இனோவா மற்றும் ஃபார்ச்சூனரில் இருக்கும் இன்ஜின்கள்தான்.

2 வீல் ட்ரைவ் கொண்ட, இனோவாவின் 150 bhp பவரை வெளிப்படுத்தும் 2.4 லிட்டர் டீசல் இன்ஜினைத் தொடக்கநிலை வேரியன்டிலும், ஃபார்ச்சூனரில் இருக்கும் 204 bhp பவரை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜினை ஹைலக்ஸின் ஹை-எண்ட் மாடலிலும் பயன்படுத்தியிருக்கிறது டொயோட்டா. இந்த ஹை-எண்ட் மாடலானது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், 2 வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டு டிரைவ் ஆப்ஷன்களிலும் வெளியாகலாம்.

டொயோட்டா ஹைலக்ஸ்
டொயோட்டா ஹைலக்ஸ்

ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்

வெளியீடு: 2021 டிசம்பர்

விலை: 25 - 30 லட்சம் ரூபாய்

இந்தியாவில் BS-6 விதிகள் அமலானபோது, டிகுவானின் விற்பனையை நிறுத்தி அதற்கு மாற்றாக டிகுவான் ஆல் ஸ்பேஸ் மாடலைக் கொண்டு வந்தது ஃபோக்ஸ்வாகன். தற்போது மீண்டும் பழைய டிகுவானை புதிய இன்ஜினோடு களமிறக்கவுள்ளது. ஸ்கோடா கோடியாக்கில் நாம் பார்த்த 190 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய அதே 2.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜினுடன் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது டிகுவான்.

ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் என்பதால், கொஞ்சம் டிசைன் மாற்றங்களைச் செய்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். புதிய ஹெட்லைட்கள், டெய்ல் லைட்கள், மறுவடிவம் செய்யப்பட்ட முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், புதிய 18 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும்விதமாக ஆங்காங்கே க்ரோமைத் தெளித்துவிட்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். முன்பு போலவே இப்போதும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவிருக்கிறது டிகுவான்.

ஃபோக்ஸ்வாகன் 
டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்
ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்

வெளியீடு: 2022 பாதியில்

விலை: 8.5 - 11.5 லட்சம் ரூபாய்

2020-லேயே சின்னச் சின்ன மாற்றங்களுடன் பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிப்ட்டை அறிமுகப்படுத்தி இருந்தது மாருதி. ஆனால், தற்போது இன்னும் கொஞ்சம் பெரிய மாற்றங்களுடன் புதுப்பொலிவுடன் பிரெஸ்ஸாவை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மாருதி சுஸூகி. புதிய மாடலை இந்தியச் சாலைகளில் சோதனை ஓட்டமும் செய்து கொண்டிருக்கிறதாம். பிரெஸ்ஸாவுக்கு ஒரு புதிய லுக்கைக் கொடுக்க விரும்பியிருக்கிறது மாருதி. வெளிப்புற ஸ்டைலிங்கைப் பொறுத்தவரை அந்த முரட்டுத்தனமான எஸ்யூவிக்கான தோற்றத்தை அப்படியே வைத்து, தற்போது அப்டேட்டான ஸ்டைலிங்கை அதனுடன் சேர்த்து வெளியிடவிருக்கிறது மாருதி. உள்பக்கமும் புதிய டிசைன் மற்றும் புதிய வசதிகள் சிலவற்றையும் இந்த ஃபேஸ்லிஃப்ட்டோடு கொடுக்கவிருக்கிறார்கள். இன்ஜினைப் பொருத்தவரை தற்போது பயன்பாட்டில் இருக்கும் 105bhp பவரை உற்பத்தி செய்யக்கூடிய அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டுமே உண்டு.

மாருதி சுஸூகி விட்டாரா 
பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்
மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்

ரேஞ்ச்ரோவர்

வெளியீடு: 2022 இறுதியில்

விலை: 75 லட்சம் - 2 கோடி ரூபாய் வரை

கடந்த அக்டோபர் மாதம்தான் ஐந்தாம் தலைமுறை ரேஞ்ச்ரோவரை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது லேண்ட்ரோவர். நார்மல் மற்றும் லாங் வீல் பேஸ் என இரண்டு வகையில் புதிய ரேஞ்ச்ரோவரை அறிமுகப்படுத்தியிருக்கிறது லேண்ட்ரோவர். புதிய ரேஞ்ச்ரோவரை JLR-ன் MLA Architecture ப்ளாட்ஃபார்மில் உருவாக்கியிருக்கிறது லேண்ட்ரோவர். இந்த ப்ளாட்ஃபார்மானது எலெக்ட்ரிக், ப்ளக் இன் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் மாடல் கார்களை உருவாக்குவதற்காகத் தயார்படுத்தியிருந்தது ஜாகுவார். இந்த ப்ளாட்ஃபார்மில் மைல்டு ஹைபிரிட் மாடலாக தற்போது உருவாகி அறிமுகமாகியிருக்கிறது ரேஞ்ச்ரோவர். ரேஞ்ச்ரோவரின் பழைய டிசைனை அப்டேட் செய்து மினிமலிஸ்டிக்காக அழகாகக் கொடுத்திருக்கிறது லேண்ட்ரோவர். உள்பக்கத்தையும் முழுவதுமாக மாற்றி வடிவமைத்து மினிமலிஸ்டிக்காக சிறப்பாக டிசைன் செய்திருக்கிறார்கள். டேஷ்போர்டில் 13.1 இன்ச் இன்ஃபோடெய்ன்மன்ட் ஸ்கிரீன், புதிய 13.7 இன்ச் HD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் என நீட்டாக சிறப்பான வசதிகளோடு இருக்கிறது.

தொடக்கநிலையில் 246 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய D250 டீசல் இன்ஜின் முதல் 395 hp பவரை வெளிப்படுத்தக்கூடிய P400 பெட்ரோல் இன்ஜின் வரை ஐந்து இன்ஜின்களைக் கொண்டு வெவ்வேறு வேரியன்ட்களுடன் இருக்கிறது ரேஞ்ச்ரோவர். ஐந்தாம் தலைமுறையின் 523 hp பவரை வெளிப்படுத்தும் டாப் எண்ட் மாடல் 4.4 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் 48V மைல்டு ஹைபிரிட் அசிஸ்டன்ஸூடன் வருகிறது. 2024-ல் முழுவதுமான எலெக்ட்ரிக் மாடல் ஒன்றும் இதன் மாடல் லைன்-அப்பில் இருக்கிறதாம். தற்போது இதன் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் சர்வதேச சந்தையில் வெளியாகி, சில மாதங்களுக்குப் பின்பு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஞ்ச்ரோவர்
ரேஞ்ச்ரோவர்

மஸராட்டி கிரெகாலே: (Grecale)

வெளியீடு: 2022 பாதியில்

விலை: 85 லட்சம் ரூபாய்

இந்தியாவில் தங்களது இரண்டாவது எஸ்யூவியாக கிரெகாலேவை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மஸராட்டி. இந்த ஆண்டு இறுதியில் சர்வதேசச் சந்தையில் இந்த கிரெகாலேவை மஸராட்டி அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்ஷேவின் மக்கானுக்குப் போட்டியாக இந்தியாவில் களமிறங்கும் இந்த மாடலானது இரண்டுவிதமான இன்ஜின்களுடன் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்ஃபா ரோமியோவின் ஸ்டெல்வியோவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்ட் ஒன்றும், மஸராட்டியின் MC20-யில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3.0 லிட்டர் V6 இன்ஜின் கொண்ட மற்றொரு வேரியன்ட்டும் இருக்கிறதாம். முழுவதுமான எலெக்ட்ரிக் வெர்ஷன் ஒன்றையும் ஐடியாவாக வைத்திருக்கிறது மஸராட்டி. இந்தியாவில் தனது கால்தடத்தை விரிவுபடுத்த விரும்புகிறது மஸராட்டி, அதற்கு இந்த கிரெகாலே ஒரு சிறந்த சாய்ஸாக இருக்கும்.

மஸராட்டி கிரெகாலே: (Grecale)
மஸராட்டி கிரெகாலே: (Grecale)