கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

டர்போ போட்டி… எது பியூட்டி?

டர்போ போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
டர்போ போட்டி

டர்போ போட்டி: டாடா அல்ட்ராஸ் Vs ஹூண்டாய் i20 Vs ஃபோக்ஸ்வாகன் போலோ (Turbo Petrol)

‘சின்ன காராக இருந்தாலும், நல்ல காரா இருக்கணும்; விருட்டுனு 5 மணிநேரத்துல மதுரையில் இருந்து சென்னைக்குப் போகணும்’ என்பவர்களுக்கு ஹேட்ச்பேக்குகள் வேலைக்கு ஆகாது. ஆனால், டர்போவை அப்படிச் சொல்ல முடியாது. சாதாரண NA (Naturally Aspirated) இன்ஜினைவிட, டர்போ இன்ஜின்களின் பெர்ஃபாமன்ஸ் ஒன்றரை மடங்காவது அதிகமாக இருக்கும். ‘நான் ஒரு பெட்ரோல் வெறியன்; பெரிய பெர்ஃபாமன்ஸ் பிரியன்; எந்த டர்போ ஹேட்ச்பேக் வாங்கலாம்’ என்று நீங்கள் டயலமாவில் இருந்தால், உங்களுக்கான கட்டுரை இது.

டர்போவுக்கெல்லாம் முன்னோடி என்று ஃபோக்ஸ்வாகனைச் சொல்லலாம். 2013–லேயே போலோவில் (GT TSI) டர்போவைச் சொருகிவிட்டது ஃபோக்ஸ்வாகன். இப்போது 1.0 TSI யூனிட்தான் சாலைகளில் பறக்கிறது. ஹூண்டாயும் விடவில்லையே… கிராண்ட் ஐ10 நியோஸ், ஐ20 என்று குட்டிக் குட்டி ஹேட்ச்பேக்குகளைச் சீற விட்டிருக்கிறது. நாம் இங்கே போட்டிக்கு எடுத்துக் கொண்டது 1.0 TGDI இன்ஜின் கொண்ட ஐ20 கார். இப்போது லேட்டஸ்ட்டாக ஸ்பாட்லைட்டில் இருப்பது அல்ட்ராஸ். ‘அவசரப்பட்டு சாதா அல்ட்ராஸ் வாங்கிட்டோமோ’ என்பவர்களை யோசிக்க வைத்திருக்கிறது 1.2லி டர்போ கொண்ட ரெவோட்ரான் இன்ஜின்.

இந்த மூன்றையும்தான் போட்டிக்கு எடுத்துக் கொண்டேன். எந்த டர்போ பெஸ்ட் டர்போனு இப்போ தெரிஞ்சுடும்!

அல்ட்ராஸ்
அல்ட்ராஸ்

டிசைன்

அல்ட்ராஸ்: இந்த மூன்று கார்களையும் நீங்கள் ஏற்கெனவே சாலைகளில் பார்த்துப் பழகியிருப்பீர்கள். அதனால், டிசைனைக் கொஞ்சம் ஷார்ட்டாக முடித்துக் கொள்ளலாம். அல்ட்ராஸை எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. கட்டுமானத் தரம்… ஜாகுவாரின் வாசம் அடிக்கிறது. சும்மாவா… க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய காராச்சே! இந்தியாவின் பாதுகாப்பான ஒரே ஹேட்ச்பேக்கின் டர்போ, Harbour Blue எனும் நீலநிற வண்ணத்தில் மனதை மயக்குகிறது. நீல நிறம் என்றால் டர்போ என்று உணர்ந்து கொள்க.

ஐ20: ஐ20–யையும் அதற்காக சும்மா சொல்லிவிட முடியாது. அங்கங்கே ஷார்ப் கட்கள், கோடுகள் என்று ஸ்போர்ட்டியாகத்தான் இருக்கிறது. சிவப்பு நிறத்தில் ஐ20–யை எங்கு பார்த்தாலும் நின்று ரசிக்கத்தான் தோன்றுகிறது. முக்கோண வடிவ கிரில், ஓகே. ஆனாலும் அல்ட்ராஸுக்கு முன் ஐ20–ன் டிசைன் ஒரு படி கீழேதான்.

போலோ: இங்கிருப்பதிலேயே சீனியர் இவர்தான். அதாவது, வயதான டிசைன் போலோவுக்குத்தான். போலோவைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் போய்விட்டது. ஆனாலும் போர் அடிக்கவே இல்லை. அதுதான் போலோவின் ஸ்பெஷல். பக்கவாட்டில் அந்த ரேஸிங் ஸ்ட்ரிப்ஸை ஸ்டிக்கராக்கி ஒட்டியிருக்கிறார்கள். கான்ட்ராஸ்ட்டாக கறுப்பு நிற ரூஃப் மட்டும் வித்தியாசம். இருந்தாலும், ஃபோக்ஸ்வாகனுக்கு ஒரு வேண்டுகோள்… ஹெட்லைட் அல்லது கிரில் டிசைனையாவது மாற்றலாமே!

ஐ20
ஐ20

உள்ளே…

அல்ட்ராஸ்: வெளிப்பக்கம் எந்த மாறுதல்களும் இல்லாவிட்டாலும், உள்பக்கம் சின்னச் சின்ன கிம்மிக்ஸ் செய்திருக்கிறது டாடா. லேசான கிரே மற்றும் கறுப்பு கலர் தீமில் இதன் XZ+ டாப் எண்டில் இருக்கிறது. லெதர் சீட்களையும் கொடுத்திருக்கிறார்கள். அருமை. இந்தச் சின்ன விஷயங்களுக்கே அல்ட்ராஸின் உள்பக்கம் செம ப்ரீமியமாக மாறியிருக்கிறது. டேஷ்போர்டில் வித்தியாசமான டெக்‌ஷ்ச்சர் மற்றும் வேலைப்பாடுகள் அருமை. அந்த செமி ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் அருமை. ஆனால், பேனல்களுக்கான இடைவெளியில் டிசைனர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். டாடா கார்கள் கட்டுமானத்தில் பெயர் பெற்றதால், இதன் பில்லர்களைக் கொஞ்சம் தடிமனாக வைத்துவிடுகிறார்கள். ஹேரியர், நெக்ஸான் என்று பல உதாரணங்கள். அல்ட்ராஸிலும் A பில்லர் கொஞ்சம் திக்காக இருந்ததால், வெளிச்சாலை விஸிபிலிட்டியைக் காலி செய்துவிடுகிறது. அந்தச் சதுர வடிவ செமி டிஜிட்டல் டயல்கள், படிப்பதற்குத் தெளிவாக இல்லை. இங்கிருக்கும் கார்களிலேயே ஸ்டீயரிங் ரீச் அட்ஜஸ்ட் இல்லாத கார், அல்ட்ராஸ் மட்டும்தான். எர்கானமிக்ஸ் லெவலில் இன்னும் மேம்பட வேண்டும்.

ஐ20: இந்தச் சின்ன காருக்கு பெரிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் கொடுத்திருக்கிறார்கள். வாவ்! ஐ20–ன் டேஷ்போர்டு தாழ்வாக இருந்தாலும், விஸிபிலிட்டி குறையவில்லை. இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், அந்த Counter Clockwise டேக்கோமீட்டர், எப்படி பாஸ் உணர முடியும்? பழக நாள் பிடிக்கும் என்று நினைக்கிறேன். முழுக்க கறுப்பு நிறத்தில் இன்டீரியரை ஸ்போர்ட்டியாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது கவர்ச்சிகரமாக இல்லை. பொதுவாக, ஹூண்டாய் கார்களின் தரம் பற்றி ஒரு நல்ல பேச்சு இருக்கிறது. ஆனால், இந்த ஐ20–யைப் பொருத்தவரை சந்தேகப்பட வைக்கிறது. காஸ்ட் கட்டிங் வசதிகளுக்காக குறைந்தவிலை கொண்ட ப்ளாஸ்டிக்ஸ் பயன்படுத்தி இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

போலோ: ரஃப் அண்ட் டஃப்பான ஜெர்மன் கட்டுமானத் தரம்தான் போலோவின் ஸ்பெஷல். கதவை மூடும்போதே போலோவின் உறுதித்தன்மை புலப்பட்டு விடும். ஆனால், அவுட்லுக்கைப் போலவே இன்டீரியரையும் பார்த்துப் பழசாகி விட்டது. காலத்தால் அழிந்து போன டேஷ்போர்டைத்தான் இந்த மில்லியனிலும் பயன்படுத்தி வருகிறது ஃபோக்ஸ்வாகன். போலோவின் குறுகலான கார் என்பதாலோ என்னவோ, மற்ற கார்களை ஒப்பிடும்போது, கொஞ்சம் இன்டீரியரே சின்னதுபோல்தான் தெரிகிறது. ‘5 பேர் கொண்ட குடும்பத்துக்கு..’ என்று நினைத்தால்… போலோ உங்களுக்கான கார் இல்லை. பின் பக்கம் லெக்ரூமும் லிமிட்டட் ஆகத்தான் கொடுத்திருக்கிறார்கள். கேபினும் இரண்டு பேருக்கு மட்டுமே வசதியாக வடிவமைக்கப்பட்டதுபோல் இருக்கிறது.

செமி ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் அருமை. ஸ்டீயரிங் ரீச் அட்ஜஸ்ட் இல்லை.
செமி ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் அருமை. ஸ்டீயரிங் ரீச் அட்ஜஸ்ட் இல்லை.
லெதர் சீட்கள் அருமை. A பில்லர்கள் கொஞ்சம் தடிமன்.
லெதர் சீட்கள் அருமை. A பில்லர்கள் கொஞ்சம் தடிமன்.
அல்ட்ராஸின் டிசைன், வேற லெவல்.
அல்ட்ராஸின் டிசைன், வேற லெவல்.

பானெட்டுக்குக் கீழே.... எது பெருசு… எது சிறுசு?

அல்ட்ராஸ்: முதல் பாராவிலேயே சொல்லிவிட்டேன். அல்ட்ராஸில் மட்டும்தான் 1.2 லிட்டர் டர்போ இன்ஜின். சந்தேகமின்றி இதுதான் இங்கிருப்பதிலேயே கொஞ்சம் பெரிய இன்ஜின். இன்ஜின் மட்டும்தான் பெருசு; ஆனால், இதில் Di (டைரக்ட் இன்ஜெக்ஷன்) இல்லாமல் வேலை செய்யும் இன்ஜின் என்பதால், இதன் டார்க் (14kgm) மற்ற கார்களைவிட ரொம்பக் குறைவானது. அல்ட்ராஸுக்கு முதலில் 120bhp பவர் - 17kgm டார்க் கொண்ட இன்ஜினைத்தான் பயன்படுத்துவதாக இருந்தார்களாம். இது இன்ஜீனியரிங் பக்கம் கொஞ்சம் வேலையும், செலவும் அதிகமாகும் என்பதால், டாடா இந்த குறைந்த பவர் இன்ஜினையே அல்ட்ராஸுக்குப் பொருத்தி விட்டதாம். மேலும், நெக்ஸானில் இருக்கும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸைத்தான் பொருத்துவது போல் இருந்திருக்கும். அதுவும் வேலைக்கு ஆகாது என்பதால்தான், அல்ட்ராஸுக்கு இந்த இன்ஜின். மேலும் இங்கிருப்பதிலேயே அல்ட்ராஸில் மட்டும்தான் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்.

ஐ20: ஹூண்டாயின் டர்போவும் போலோவின் டர்போவும் கிட்டத்தட்ட ஒரே அளவுகள். 1.0TSI இன்ஜின். இதில் இருப்பது டைரக்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம். இரண்டுமே மேக்ஸிமம் டார்க்கை வெளிப்படுத்துகின்றன. ஐ20–ன் டார்க் 17.2kgm டார்க் 1,500-4,000 rpm–லேயே கிடைத்து விடுகிறது. இங்கிருப்பதிலேயே அதிக பவர் ஐ20–ல்தான். 120bhp பவர் என்பது இந்தச் சின்ன ஹேட்ச்பேக்குக்கு செம பவர். இந்த டர்போவில் இருப்பது ஹூண்டாயின் ஃபேவரைட்டான IMT (Intelligence Manual Transmission) கியர்பாக்ஸ். அதாவது, கியர் லீவர் இருக்கும். மேனுவலாக கியர் போட வேண்டும்; ஆனால் க்ளட்ச் பெடல் இருக்காது. அதை ஆக்சுவேட்டர்கள் ஆட்டோமேட்டிக்காகக் கவனித்துக் கொள்ளும்.

போலோ: ஒரு காலத்தில் போலோதான் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் என்ற பட்டியலில் இருந்தது. இப்போதும்தான். என்ன, இந்தக் காலத்துக்கு இந்தப் பவர் குறைவுதான். இதில் இருப்பது அல்ட்ராஸில் இருப்பது மாதிரியே 110bhp பவர்தான். இதன் 17.5kgm டார்க், 1,750–4,000 ஆர்பிஎம்–மில்கிடைத்து விடுகிறது. இது ஐ20–யை ஒப்பிடும்போது குறைவுதான். அதாவது, ஐ20–ல் 1,500–லேயே கிடைத்து விடுகிறது. போலோ TSI–ல் இருப்பது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். ஆனால், ஃபோக்ஸ்வாகனின் கியர்பாக்ஸ் ஸ்மூத்னெஸுக்குப் பெயர் பெற்றது என்பது தெரியும்தானே!

10.25’’ இன்ச் பெரிய டச் ஸ்க்ரீன், வாவ்! Counter Clockwise டேக்கோமீட்டர்... பழக வேண்டும்.
10.25’’ இன்ச் பெரிய டச் ஸ்க்ரீன், வாவ்! Counter Clockwise டேக்கோமீட்டர்... பழக வேண்டும்.
பின் பக்க இடவசதி நெருக்கியடிக்கவில்லை. ஆனால், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்டும், ஆர்ம்ரெஸ்ட்டும் இல்லை.
பின் பக்க இடவசதி நெருக்கியடிக்கவில்லை. ஆனால், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்டும், ஆர்ம்ரெஸ்ட்டும் இல்லை.
டிசைனில் அல்ட்ராஸுக்கு இணையாகப் போட்டி போடுகிறது. பின் பக்கம் ஆட்டோ வைப்பர் கிடையாது.
டிசைனில் அல்ட்ராஸுக்கு இணையாகப் போட்டி போடுகிறது. பின் பக்கம் ஆட்டோ வைப்பர் கிடையாது.

கோ… கோ… டர்போ!

அல்ட்ராஸ்: நீங்கள் அல்ட்ராஸின் சாதாரண NA இன்ஜினை ஓட்டிவிட்டு, இந்த டர்போ அல்ட்ராஸை ஓட்டினால், ‘அட’ என்று உணர்வீர்கள். குறைந்த வேகங்களில் சாதா அல்ட்ராஸ் தயங்கும். இது அப்படியில்லை. டிராஃபிக்கில்கூட ஒரு ஃபன் டு டிரைவ் கிடைக்கிறது டர்போ அல்ட்ராஸில். அட, அந்த 1,800 ஆர்பிஎம்–ல் ஒரு எகிறல் தெரிவது சிட்டிக்குள் நன்றாகத்தான் இருந்தது. அதிலும் மோடுகள் வேறு… City மற்றும் Sport. இது இந்த மாடலில் மட்டும்தான். ஒரு அதிக பவர் கொண்ட (120bhp) ஒரு 1,200 சிசி பெரிய இன்ஜினுக்கு 5 ஸ்பீடு எப்படிக் கட்டுபடியாகும் என்று நினைத்தேன். ஆனால், 6–வது கியர் இல்லாத குறையே தெரியாமல் பார்த்துக் கொள்கிறது இதன் ரெவ் ரேஞ்ச். ஸ்மூத்தாக க்ரூஸ் ஆகிறது அல்ட்ராஸ். கியர் மாறுவதும் நைஸ்!

இனிமேல்தான் விஷயமே… டர்போ என்றதற்கு நியாயம் கற்பிக்கவில்லை அல்ட்ராஸ். மிட் ரேஞ்சில் ஒரு பன்ச் இல்லையே! லோ ஸ்பீடு மாதிரி மிட் ரேஞ்சில் இன்ஜின் ரெவ் வேகமாக ஆகவில்லை. அதேபோல், பெர்ஃபாமன்ஸ் விநாடிகளும் சொல்லிக் கொள்வதுபோல் இல்லை. 0–100 கிமீ–யை பொறுமையாக 12.68 விநாடிகளில் கடக்கிறது டர்போ. போலோவை எல்லாம் ஒப்பிடும்போது, 3 விநாடிகள் அதிகம் இது. 5,500rpm வரை தாக்குப் பிடிக்கவில்லை. அதிவேகங்களில் சத்தம் போடும் இன்ஜின், கொஞ்சம் அதிருப்தியாகத்தான் இருக்கிறது.

ஐ20: வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது ஐ20 டர்போ. காரணம், இந்த கியர்பாக்ஸ். காலுக்குக் கீழே வெறும் 2 பெடல்கள்தான் இருந்தன. ‘க்ளட்ச் இல்லை; ஆனால் கியர் இருக்கு’ என்பதே புதுமையாகத்தான் இருந்தது. ஆனால், இதை ஓட்டிப் பழக நாட்கள் பிடிக்கும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். ஆனால், சிட்டிக்குள் இதை ஓட்டுவது ஜாலியாகவே இருக்கிறது. க்விக் ஷிஃப்ட்டிங்கில் ஆக்சுவேட்டர் சிஸ்டமும் எலெக்ட்ரானிக் சிஸ்டமும் திணறவில்லை. ‘க்ளட்ச் மிதிக்கணும்; பெர்ஃபெக்ட்டா வண்டி ஓட்டணும்’ எனும் ஜென்டில்மேன்களுக்கு இந்த ஐ20 செட் ஆகுமா என்று தெரியவில்லை. இதில் ஒரே ஒரு சிக்கல் – பக்கத்தில் இருப்பவர் கியர் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஹூண்டாயின் இந்த 1.0லி டர்போ இன்ஜினும் மனம் கவர்கிறது. கியர் ஆக்ஸிலரேஷனுக்குத் தகுந்தாற்போல், இது பவர் டெலிவரியை அளிக்கிறது. இதன் ஆக்ஸிலரேஷன் டைமிங்கையும் நோட் செய்யுங்கள். சட் சட் என கியர் மாற்றிப் பறந்தேன். இது 0–100 கிமீ-யை அடைய 11.2 விநாடிகள் எடுத்துக் கொண்டது. இது அல்ட்ராஸைவிட வேகம்தான். ஆனால், போலோவைவிடக் குறைவு. லோ ரெவ்களில் அப்படியே கிராஜுவலாக ஸ்பீடை உருவாக்குகிறது ஐ20. ஆனால், இதுவே 3–வது கியரில் 20–80kph போட்டியிலும் (9.08 விநாடிகள்), 40–100kph போட்டியில் 4–வது கியரிலும் (12.39 விநாடிகள்) முன்னிலை வகிக்கிறது. இந்த ஆக்ஸிலரேஷனில் ஐ20 தான் வின்னர். அதேநேரம் மிட் ரேஞ்சில், போலோவை முந்த முடியவில்லை இருவரும். 6,000rpm வரை இம்ப்ரஸ் செய்கிறது ஐ20.

போலோ: டிரைவிங்கில் போலோவை அடித்துக் கொள்ள முடியுமா என்ன? இதன் TSI இன்ஜினை நீங்கள் எவ்வளவு படுத்தினாலும், சந்தோஷமாகவே வேலை செய்கிறது. 1,800rpm –ல் ஆரம்பிக்கும் பவர் 6,200rpm வரை கிர்ரென இழுத்துப் போகிறது. இதில் இதன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் சேரும்போது, ஃபன் இன்னும் கூடுகிறது. என்ன, DCT கொடுத்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும். மற்ற கார்களைப்போல், ஹை ரெவ்களில் அதிகமாகச் சத்தமும் போடவில்லை போலோ. பெட்ரோல் பிரியர்களுக்கு இந்த போலோவை ஓட்ட ரொம்பவும் பிடிக்கும். வெறும் ‘10 எண்றதுக்குள்ள’ இந்த போலோ 100 கிமீயைத் தொட்டு விடுகிறது. (9.9 விநாடிகள்). மிட் ரேஞ்ச், டாப் ஸ்பீடு எல்லாமே ஓகே! போலோ ஓட்டுதலில் ஒரே ஒரு இடத்தில் மிஸ் செய்தது. அது க்ளட்ச். எப்போதுமே போலோவில் லாங் டிராவல் க்ளட்ச்தான் பயன்படுத்தி இருப்பார்கள். இதிலும் அப்படித்தான். இது சிட்டி டிராஃபிக்கில் கொஞ்சம் உச் கொட்ட வைப்பது உண்மைதான். இதனோலயே லோ ரெவ்களில் ஒரு ஃபீல் மிஸ் ஆனது உண்மை. புதுசாக கார் ஓட்டுபவர்களுக்கு இது கொஞ்சம் சிக்கல்தான்.

கோ… கோ… டர்போ!
கோ… கோ… டர்போ!
  • இங்கிருப்பதில் 12 வருட சீனியர் கார் போலோ. ‘நீங்கள் ஒரு வெறித்தனமான டிரைவர்’ என்றால், கண்ணை மூடிக் கொண்டு போலோவின் ஸ்டீயரிங்கைப் பிடித்து விடுங்கள். இதன் உற்சாகமூட்டும் இன்ஜின், கட்டுமானம், கார்னரிங்கில் இதன் செயல்பாடு, நெடுஞ்சாலைகளில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் இதன் டைனமிக்ஸும் நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகை வரவழைக்கும். இதன் மைலேஜும் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படிதான் இருக்கிறது. (அராய்: 18 கிமீ). இங்கிருப்பதிலேயே விலை குறைவான காரும் போலோதான். இதன் Highline Plus TSI மாடலின் ஆன்ரோடு விலை 9.84 லட்சம். ஆனால், போலோவில் சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கிருப்பதில் சின்ன/குறுகலான கார் இதுதான். இடவசதியில் ப்ச்!. அதேபோல், எல்இடி ஹெட்லைட், கீலெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் கேமரா போன்ற சில முக்கியமான வசதிகள்கூட இல்லை. அதனாலேயே இந்தப் போட்டியில் பின்தங்கிவிடுகிறது போலோ.

  • அல்ட்ராஸ் – 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியதற்காகவே பெருமையாகப் பார்க்க முடிகிறது அல்ட்ராஸை. பெரிய இன்ஜின்தான் என்றாலும், குறைவான பவர் டெலிவரியும், மிகக் குறைவான டார்க்கும்… ப்ச்! இங்கிருப்பதிலேயே அராய் மைலேஜும் குறைவு அல்ட்ராஸில்தான். (18.1கிமீ) நெக்ஸானின் டெக்னிக்கல் அம்சங்களைக் கொடுத்திருந்தால் இந்தப் போட்டியில் ஒரு வேளை அல்ட்ராஸ் ஜெயித்திருக்குமோ என்னவோ? சாதா அல்ட்ராஸை விட 60,000 ரூபாய் விலை அதிகமாக இருக்கும் i-Turbo, இதன் மிட் ரேஞ்சில் சொதப்புகிறது. டர்போ என்றதற்கு ஏற்ப இதன் செயல்பாடு இல்லை. ஆனால், சிட்டிக்குள் ஜம்மென்று போய்வர அல்ட்ராஸ், பெஸ்ட்டாக இருக்கும். இதன் ஆன்ரோடு விலை 10.34 லட்சம்.

  • மீதமிருப்பது ஐ20தான். `செம கார்; வின்னருக்கான அத்தனை தகுதியும் உண்டு’ என்று ஐ20–ல் சொல்லிவிட முடியாதுதான். போலோவின் டைனமிக்ஸுக்கும் ஓட்டுதலுக்கும் ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும், கிட்டத்தட்ட எல்லா ஏரியாக்களிலும் சொல்லியடிக்கிறது ஹூண்டாய். ஒரு நிம்மதியான டிரைவ், அற்புதமான டைனமிக்ஸ், ஓட்டுவதற்கு யூஸர் ஃப்ரெண்ட்லியான அந்த IMT கியர்பாக்ஸ் (பக்கத்தில் இருப்பவர் கவனம்) என்று கவனம் ஈர்க்கிறது. அதேபோல், வசதிகளைக் கவனியுங்கள் – ஒயர்லெஸ் சார்ஜிங், கீலெஸ் கோ, பெரிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன், ரிவர்ஸ் கேமரா, டிஜிட்டல் மீட்டர், எல்இடி ஹெட்லைட்ஸ் என்று கலக்குகிறது. ஆட்டோ டிம்மிங் மிரர், ரியர் ஆர்ம்ரெஸ்ட், அட்ஜஸ்டபிள் பேக்ரெஸ்ட் – இவை மட்டும்தான் ஐ20–ல் இல்லை. இங்கிருப்பதிலேயே விலை அதிகம் என்றாலும், (11.45 லட்சம்/ஆன்ரோடு) கொடுக்கும் காசுக்கு ஏற்ற நியாயமான/உற்சாகமான கார் ஐ20.

போலோவின் டிரைவிங் பொசிஷன் பக்கா. பின் பக்க இடவசதிதான் நெருக்கடி.
போலோவின் டிரைவிங் பொசிஷன் பக்கா. பின் பக்க இடவசதிதான் நெருக்கடி.
பார்த்துப் பழகிய டிசைன். முழுக்க முழுக்க அனலாக் மீட்டர்தான். க்ரூஸ் கன்ட்ரோல் உண்டு.
பார்த்துப் பழகிய டிசைன். முழுக்க முழுக்க அனலாக் மீட்டர்தான். க்ரூஸ் கன்ட்ரோல் உண்டு.


கார்னரிங் கிங் எது?

அல்ட்ராஸ்: இப்போதெல்லாம் டாடா கார்கள், ஹேண்ட்லிங்கில் பல படிகள் முன்னேறிவிட்டன. அல்ட்ராஸும் தன் பங்குக்குச் சிறப்பான ஹேண்ட்லிங்கைத் தருகிறது. இதன் டர்னிங் செம ஷார்ப். இதன் எடை கூடும் ஸ்டீயரிங்குக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், காற்றடிக்கும் நெடுஞ்சாலைகளில் போலோ போன்ற ஒரு நிலைத்தன்மை அல்ட்ராஸில் மிஸ்ஸிங். அதேபோல், அதிக க்ரூஸிங்குகளில் வெளிச்சாலைச் சத்தம், கேபினுக்குள் கேட்கிறது. NVH லெவலில் முன்னேற்றம் வேண்டும். எனவே, லாங் டிரைவுக்கு அல்ட்ராஸ், ரிலாக்ஸ்டான காராக இருக்காது. குறைந்த வேகங்களில் கொஞ்சம் இறுக்கமாகப் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதுவே மோசமான சாலைகளில் பாசமாகப் பார்த்துக் கொள்கிறது இதன் சஸ்பென்ஷன்.

ஐ20: ஹூண்டாயின் ஸ்டீயரிங் ஃபீட் பேக் பற்றியும், ஹேண்ட்லிங் பற்றியும் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும்.நேரான சாலைகளிலும் சரி; கார்னரிங்கிலும் சரி – பழைய ஹூண்டாய் கார்களை ஒப்பிடும்போது, இதில் இப்போதெல்லாம் நல்ல முன்னேற்றம். இதன் டைனமிக்ஸ் பற்றி நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், க்ளாஸ் பெஸ்ட் என்று சொல்ல முடியவில்லை. சிட்டிக்குள் இந்த ஐ20–யை வளைத்து நெளித்து ஓட்டினேன். ஓகேதான். ஆனாலும் அந்த பாடி ரோல் நன்றாகவே தெரிகிறது. நகரத்தில் இது கொஞ்சம் சொகுசான பயணத்தையே தருகிறது. ஒரு விஷயம் – ஐ20 டீசல் மாடல் பெட்ரோலைவிட எடை அதிகம். ஆனால், டீசலைவிட பெட்ரோல்தான் ஹெவியாக இருப்பதுபோல் தெரிகிறது.

போலோ: ஃபோக்ஸ்வாகனில் எல்லாமே எக்ஸைட்டிங் ஆகத்தான் இருக்கும். இதன் டர்போ இன்ஜின் மட்டுமில்லை; போலோவின் கட்டுமானமும் டைனமிக்ஸும் ஃபன் டு டிரைவைக் கொடுக்கவல்லவை. ஓட்டுதல்தான் போலோவின் பலம். ஒரு கார்னரில் போலோவை வளைத்து ஒடித்து ஓட்டிப் பாருங்கள். வேறு எந்த காரிலும் அப்படி ஓர் உற்சாகம் தெரியவில்லை. துல்லியமான இதன் ஸ்டீயரிங், அற்புதமான டயர் கிரிப், நன்கு கேலிப்ரேட்டட் செய்யப்பட்ட இதன் பிரேக்குகள் – தன்னம்பிக்கையின் உச்சம். பலமான காற்றடிக்கும் நெடுஞ்சாலைகளில்கூட, சும்மா ‘கிண்’ணென்று ஆடாமல் அசையாமல் பறக்கிறது போலோ. இதன் ஓட்டுதலில் ஓர் அனுபவம் தெரிகிறது. குறைந்த வேகங்களில் மொக்கையான சாலைகளையும் ஜெர்மன் தரத்தில் எதிர்கொள்வது அருமை. அதாவது, ஓட்டுதலிலும் கையாளுமையிலும் போலோவைக் குறை சொல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை.

என்ன உண்டு; என்ன இல்லை?
என்ன உண்டு; என்ன இல்லை?