Published:Updated:

காற்றைக் கிழிக்கும் எலெக்ட்ரிக் கட்டுமரம்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஃபர்ஸ்ட் லுக்: டாடா அவின்யா எலெக்ட்ரிக் கான்செப்ட்

காற்றைக் கிழிக்கும் எலெக்ட்ரிக் கட்டுமரம்!

ஃபர்ஸ்ட் லுக்: டாடா அவின்யா எலெக்ட்ரிக் கான்செப்ட்

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

இது கொஞ்சம் ஓவர் பில்டுஅப்பாகத்தான் தெரியும்; ஆனால் உண்மையில் சொல்லப்போனால், அமெரிக்காவுக்கு T E S L A எனும் ஐந்தெழுத்து என்றால், இந்தியாவுக்கு T A T A எனும் நான்கெழுத்துதான் மூச்சாக இருக்கிறது. அதாவது, எலெக்ட்ரிக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு டாடா மோட்டார்ஸ்தான் எலெக்ட்ரிக் மொபிலிட்டியைக் கச்சிதமாகப் பிடித்துக் காய் நகர்த்தி வருகிறது.

நீங்கள் ஒரு பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்றால், டிகோர், நெக்ஸான் என்று டாடா மோட்டார்ஸை விட்டால் வேறு ஆப்ஷன் இல்லை. அதிக பட்ஜெட்டில் ப்ரீமியம் எலெக்ட்ரிக் வேணும் என்பவர்கள், கோனா அல்லது எம்ஜி ZS EV தான் என்பதையும் மாற்றி எழுத இருக்கிறது டாடா. ஆம், ப்ரீமியம் எலெக்ட்ரிக் செக்மென்ட்டில் ஓர் அற்புதமான காரை இறக்க இருக்கிறது டாடா மோட்டார்ஸ். அதன் பெயர் அவின்யா. ஏற்கெனவே `கர்வ்வ்' எனும் எலெக்ட்ரிக் மிட்சைஸ் எஸ்யூவியை அன்வெய்லிங் செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். இப்போது அடுத்த அதிரடியாக அவின்யா வரவிருக்கிறது. இப்போதைக்கு இதை கான்செப்ட் காராக மட்டுமே லாஞ்ச் செய்திருக்கும் டாடா, இதை இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மார்க்கெட்டில் இறக்க இருக்கிறது.

டாடா அவின்யாவின் வாக் அரவுண்டுக்காக மும்பை வரை பறந்து வந்தோம் நமது டீமுடன். டாடா அவின்யா பற்றி ஒரு ஃபர்ஸ்ட் லுக் பார்த்து விடலாம்.

காற்றைக் கிழிக்கும் எலெக்ட்ரிக் கட்டுமரம்!
காற்றைக் கிழிக்கும் எலெக்ட்ரிக் கட்டுமரம்!

அவின்யா… வெளிப்பக்கம் என்ன இனோவேஷன்?

‘‘முதலில் அவின்யா என்றால் என்ன?’’ – இப்படித்தான் டாடா மோட்டார்ஸ் டிசைனர்களிடம் கேட்டோம்.

‘‘இனோவேஷன்’’ என்றார்கள் சிம்பிளாக. சமஸ்கிருதத்தில் இதற்கு இப்படித்தான் அர்த்தம். நிஜம்தான்; கார் முழுக்க இனோவேஷனாக ஜொலிக்கிறது. எக்ஸ்போவில் மட்டும் இதைக் காட்சிப்படுத்தி இருந்தால்… அனைவரது செல்ஃபி கேமராக்களும் அவின்யாவின் பக்கம்தான் ஃப்ளாஷ் அடித்திருக்கும்.

டாடாவின் இப்போதைய லேட்டஸ்ட் கார்கள் எல்லாம் ஜென்–1, ஜென்–2 ஆர்க்கிடெக்ச்சர் எனும் ப்ளாட்ஃபார்ம்களில் தயாராகி வருகின்றன. உதாரணத்துக்கு, டிகோர், நெக்ஸான் போன்ற ஐசி கம்பஷன் கார்களிலிருந்து எலெக்ட்ரிக்காக மாறிய கார்கள் எல்லாம் ஜென்–1 ப்ளாட்ஃபார்ம்.

டாடாவின் கர்வ் – ஜென்2 ஆர்க்கிடெக்ச்சர் கட்டுமானத்தில் தயாரிக்கப்பட்டது. இப்போது அவின்யா எல்லாத்துக்கும் மேல, ஜென்3 EV ப்ளாட்ஃபார்மில் ரெடியாகி இருக்கிறது. இது மற்ற இரண்டையும்விட கொஞ்சம்... இல்லை நிறையவே அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் என்கிறது டாடா. பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் கட்டுமானம் இவற்றை மையமாக வைத்துத்தான் இந்த ப்ளாட்ஃபார்மே இயங்குகிறது. அவின்யாவைப் பார்த்தாலே அது புலப்படுகிறது.

ஹெட்லைட்னா இப்படித்தான் இருக்கணும்; இன்டீரியர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எல்லா மரபுகளையும் உடைத்திருக்கிறார்கள். வேண்டுமென்றே எலெக்ட்ரிக்குக்காகவே எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருக்கிறது டாடா. அட, லோகோவைக்கூட டாடா மாற்றிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முன்பக்கம் நீளமான கிரில் லைன் போன்று ஒன்று இருந்தது. என்னனு பார்த்தால்… அது எல்இடி லைட் பார். எல்இடி சிக்னேச்சர் லைட்டை அந்த காரின் அகலம் முழுக்க பரப்பிவிட்டிருக்கிறார்கள். அதற்கு நடுவே T எனும் எழுத்தை வைத்து, அதற்கு ஏற்றாற்போல் டிசைன் செய்திருக்கிறார்கள். அவின்யாவுக்கு இந்த T லோகோதான் டாடா என்பதைச் சொல்லும். ஒரு கட்டுமஸ்தான கிரில் செக்ஷனில் இதை இணைத்திருப்பது அழகு. அந்த கிரில்லே ஒரு இலுமினேட்டட் ஸ்டைலில் இருப்பது செம மாடர்ன். ஹெட்லைட்களை இவ்வளவு ஸ்லிம் அண்ட் ஸ்லீக் ஆகவும் பண்ண முடியுமா தெரியவில்லை. அத்தனை ஒல்லி.

பின் பக்கம் பார்த்தால்… அதே T லோகோ அப்படியே இங்கேயும் தொடர்கிறது. என்ன, இது டெயில் லைட்! அவ்வளவுதான். காரின் அகலம் முழுக்க T லோகோ கலக்கலாக இருக்கிறது. இதுவும் ஃப்ளோட்டிங் டிசைன்தான்; மிதப்பதுபோல் இருக்கிறது டெயில் லைட். கறுப்பு A பில்லர்களும் காரின் ரூஃபுக்கு ஃப்ளோட்டிங் எஃபெக்ட்டைத் தருகின்றன.

எக்ஸ்ட்ரீயரில் இன்னொரு அசத்தலான அம்சம் உண்டு. காரின் ரியர்வியூ மிரரை உற்றுப் பார்த்தேன். அங்கே மிரரே இல்லை. அது ஒரு கேமரா. உள்ளே இருக்கும் டிஸ்ப்ளேவில் இந்த கேமரா படம்பிடித்துக் காட்டும். இதன் மூலம் ஓட்டுநருக்கு ஓட்டுதல் எளிதாக்கப்படுகிறது. இதன் கதவுகள், அட, ரோல்ஸ்ராய்ஸ்–Esque கதவுகள் போல இருந்தன.

ஒரு காருக்கு ஏரோ டைனமிக் என்பது மிக முக்கியம். இதுதான் மைலேஜுக்குத் துணை புரியும். எலெக்ட்ரிக் மொபிலிட்டி வாகனங்களுக்கு இது மிக மிக முக்கியம். ஒரு காருக்கு ஏரோ டைனமிக்கை எங்கிருந்து கணக்குப் பண்ணுவார்கள்.. காரின் முன் பக்கம்தானே!? ஆனால், அவின்யாவின் பக்கவாட்டில்கூட இதன் ஏரோடைனமிக் டிசைன் தெரிகிறது. கடற்கரையில் மிதக்கும் கட்டுமரங்கள் தெரியும்தானே! அந்தக் கட்டுமரத்தை கான்செப்ட்டாக வைத்துத்தான் இந்த அவின்யா கான்செப்ட்டின் பக்கவாட்டு ஏரியாவை டிசைன் செய்திருக்கிறார்கள். ஓவர் ஆலாக இதை 4.3 மீட்டர் நீளமுள்ள கட்டுமரமாக வடிவமைத்து அசத்தியிருக்கிறது டாடா.

இந்த நீளத்துக்கு அவின்யாவை ஒரு எஸ்யூவியாகவும் வடிவமைக்கலாம்; ‘பி’ செக்மென்ட் செடானாகவும் கொண்டு வரலாம்; ஆனால், இது நிச்சயம் ஒரு எஸ்யூவி எலெக்ட்ரிக்காகத்தான் வரும்.

இன்டீரியரில் என்ன புதுமை?

வெளிப்பக்கமே மிரட்டியது. அவின்யாவின் இன்டீரியரைப் பார்க்க ஆர்வமாக இருந்தேன் – டாடா உள்ளே எப்படி தனது கைவித்தையைக் காட்டியிருக்கப் போகிறதோ! நினைத்தது சரிதான்.

கதவைத் திறக்கும்போதே உற்சாகமாக இருந்தது. உள்ளே… ஒரு காருக்கான இன்டீரியர் டிசைன் இல்லை; அது ஒரு எதிர்காலத்துக்கான இன்டீரியர் டிசைன் போல் இருந்தது. அத்தனை எளிமை ப்ளஸ் எதிர்காலம். கசகசவெனக் குழப்பியடிக்கவில்லை. பீஜ் கலரில் வெளிச்சமாக, ஏதோ ஒரு வெளிச்சமான வீட்டுக்குள் நுழைவதுபோல் இருந்தது.

காற்றைக் கிழிக்கும் எலெக்ட்ரிக் கட்டுமரம்!
சவுண்ட் பார்.. ஸ்க்ரீன், Oyester Shell எனக்கூடிய சிப்பி ஓடு மற்றும் ரீ-சைக்கிள்டு ப்ளாஸ்டிக்ஸ் போன்றவற்றால் டைல்ஸ் போடப்பட்ட ஃப்ளோர், காரின் இரண்டு பக்கமும் ரியர்வியூ மிரருக்கான ஸ்க்ரீன்... என்று கலக்குகிறது அவின்யாவின் இன்டீரியர்.
சவுண்ட் பார்.. ஸ்க்ரீன், Oyester Shell எனக்கூடிய சிப்பி ஓடு மற்றும் ரீ-சைக்கிள்டு ப்ளாஸ்டிக்ஸ் போன்றவற்றால் டைல்ஸ் போடப்பட்ட ஃப்ளோர், காரின் இரண்டு பக்கமும் ரியர்வியூ மிரருக்கான ஸ்க்ரீன்... என்று கலக்குகிறது அவின்யாவின் இன்டீரியர்.

கார் என்றால் டேஷ்போர்டு இருக்கும்தானே! அதுவே இல்லை; அதாவது, அதை ஒரு டேஷ்போர்டு என்றே சொல்ல முடியவில்லை. படிக்கட்டுகள்போல் அழகாகச் செதுக்கியிருந்தார்கள் டேஷ்போர்டு டிசைனை! டேஷ்போர்டில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இல்லை; அதற்குப் பதிலாக ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக காருக்குள்ளேயே செதுக்கப்பட்ட ஒரு ஸ்க்ரீன் கொடுத்திருந்தார்கள்.

இதை வீடு என்று சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. இதன் ஃப்ளோரையே உதாரணமாகச் சொல்லலாம். நமது வீடுகளில் பயன்படுத்துவதுபோல், டைல்ஸ் மாதிரியே இதன் ஃப்ளோரை வடிவமைத்திருக்கிறார்கள். இதை ரீ–சைக்கிள்டு ப்ளாஸ்டிக்ஸ் மற்றும் Oyster Shell எனக்கூடிய சிப்பி ஓடுகள் போன்றவற்றில் செய்திருக்கிறார்கள்.

உள்ளே ஒரு சவுண்ட் பார் சிஸ்டம் இருந்தது. வீடுகளில்தான் இதை ஃபிட் செய்திருப்போம். ஒரு காரில் இதைப் பார்ப்பது புதுமையாக இருந்தது. அதற்கு மேலே அந்த ஸ்லிம் ஸ்க்ரீன் இருப்பது, ஏதோ டிவிக்குப் பக்கத்தில் ஒரு சவுண்ட் சிஸ்டத்தை வைத்திருப் போமே… அதுபோலவே இருந்தது. டேஷ்போர்டின் இரண்டு முனைகளிலும் ஒரு ஸ்க்ரீன் இருந்தது. அது, ரியர் வியூ மிரர் கேமராக்களுக்கான விஷுவல் தெரியும் திரை.

ஸ்டீயரிங் வீல் இதுவரை பார்த்திராத டிசைன். வீலுக்குள்ளேயே இன்டக்ரேட் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரீன். சாதா கார்களில் ஸ்டீயரிங் மவுன்டட் கன்ட்ரோல்கள் இருக்குமே… அதற்குப் பதிலாக இந்தப் புதுமையான ஸ்க்ரீன்! லைட் வெயிட் ரீ–சைக்கிள்டு உலோகங்களால் முழுக்க முழுக்க இது செய்யப்பட்டி ருப்பதால்… நிச்சயம் காரின் எடை கூடாது. ஸ்டீயரிங்குக்குக் கீழே சில்வர் கலரில் இண்டிகேட்டர் ஸ்டாக் மாதிரி ஒன்று இருந்தது… இது பார்ப்பதற்கே புதுமையாக இருந்தது.

உள்ளே நுழைந்ததும், சென்டர் ஆர்ம்ரெஸ்ட்டில் உள்ள அரோமா டிஃப்யூஸர், நல்ல நறுமணத்தைத் தருகிறது. இதில் காரில் உள்ளே நுழைபவர்களின் மனநிலையையும் சென்ஸ் செய்து, அதற்கேற்றபடி நம்மைத் தயார் செய்யும் தொழில்நுட்பம்.

டிரைவர் சீட்களில் மெமரி சீட்தான் கேள்விப்பட்டி ருப்பீர்கள். இதில் ரொட்டேட்டிங் சீட் வசதி கொடுத்திருந்தார்கள். ஆனால், இது புரொடக்ஷன் மாடலில் வருமா என்று தெரியவில்லை.

பின் பக்கம் 3 பேருக்கான இடவசதி தாராளமாக இருக்கிறது. இதை லாஞ்ச் டைப் சீட் என்று சொல்லலாம். இதில் இன்னொரு சிறப்பு… ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஏசி புளோயர்கள் மற்றும் கன்ட்ரோல்கள் கொடுத்திருக்கிறார்கள். டோர் பேடுகளில் இதை மவுன்ட் செய்திருக்கிறார்கள். அனைத்துப் பயணிகளுக்கும் வாய்ஸ் ஆக்டிவேட்டட் சிஸ்டமும் இருக்கிறது. இது தவிர AI (Artificial Intelligence) தொழில்நுட்பமும் உண்டு.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

ஜென் 2 EV-ல் தயாரான கர்வ் காரின் பேட்டரி, மோட்டார் போன்றவையே பவர்ஃபுல்லாக இருக்கப் போகும் நிலையில், ஜென் 3 EV-ல் அதாவது ஒரு டெடிகேட்டட் எலெக்ட்ரிக் ப்ளாட்ஃபார்மில் தயாராக இருக்கும் அவின்யாவின் பேட்டரி மற்றும் மோட்டார் சமாச்சாரங்கள் நிச்சயம் வெயிட்டாகத்தான் இருக்கும். கர்வ் கார் சுமார் 400 கிமீ ரேஞ்ச் போகும் என்று சொல்லப்படுகிறது. அவின்யா, எப்படியும் 500 கிமீ அராய் ரேஞ்ச்சைத் தொட்டாலும் ஆச்சரியமில்லை.

மேலும், சாதாரண கார்களின் ஃபாஸ்ட் சார்ஜிங் தெரியும்; இதில் டாடா அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்க இருக்கிறதாம்.

கர்வ் வெளிவந்த பிறகுதான் இந்த அவின்யா புரொடக்ஷன் மாடலுக்கு ரெடியாகும். கர்வ்வுக்கு 2024 வரை காத்திருக்க வேண்டும்; அவின்யாவுக்கு எக்ஸ்ட்ரா ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும்.

எலெக்ட்ரிக்கில் புதுமைகளைப் புகுத்தப் போகும் மின்சாரக் கண்ணனான டாடாவுக்கு வாழ்த்துகள்!

காற்றைக் கிழிக்கும் எலெக்ட்ரிக் கட்டுமரம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism