கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

டாடாவின் 5 ஸ்டார் பஞ்ச்!

டாடா பஞ்ச்
பிரீமியம் ஸ்டோரி
News
டாடா பஞ்ச்

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா பஞ்ச்

டாடா பஞ்ச்
டாடா பஞ்ச்

நாட்டில் நூறு எஸ்யூவி விற்பனையானால், அதில் 6 டாடா உடையதாக இருக்கும். இதைப் பத்தாக உயர்த்த, டாடா இறக்கியிருக்கும் துருப்புச் சீட்டுதான் டாடா பஞ்ச். இது பெரிய ஹேட்பேக் காரா... அல்லது சிறிய எஸ்யூவியா என்று கேட்டால், சப்-காம்பேக்ட் எஸ்யூவி என்று சொல்லும் டாடா, இதை நெக்ஸானுக்கு ஒரு படி கீழே பொசிஷன் செய்திருக்கிறது. அல்ட்ராஸ் உற்பத்தி செய்யப்படும் அதே Agile Light Flexible Advanced (ALFA) ப்ளாட்ஃபார்மில்தான் பஞ்ச் உற்பத்தியாகிறது. அதனால் மேலோட்டமாகப் பார்த்தால், இதில் அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகிய இரண்டின் அடையாளங்களும் ஆங்காங்கே தென்படும்.

வெளித்தோற்றம்:

மாருதி ஸ்விஃப்ட் அளவுக்குத்தான் இதன் சைஸ் இருக்கிறது. ஆனால் இதன் உயரம்தான் இதை சப்-காம்பேக்ட் எஸ்யூவி என்று அடைமொழிக்கு உரியதாக மாற்றுகிறது. ஆம்! இது நெக்ஸான் அளவுக்கு உயரமாகவே இருக்கிறது. இதன் ஹை ஸ்டான்ஸ், பானெட், ப்ரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ், LED டே டைம் ரன்னிங் லாம்ப்ஸ், கிரில் மற்றும் பெரிய ஏர் டேம் முழுதும் நிறைந்திருக்கும் மும்முனை கொண்ட அம்பு டிசைன்கள் - இதற்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. இதன் 16 இன்ச் அலாய்வீல்கள், கதவுகளின் கீழ்ப்பகுதியில் தாராளமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் கிளாடிங், ரூஃப் ரெயில், டூயல் டோன் வண்ணம், அல்ட்ராஸ் போலவே சி-பில்லருக்கு இடம்மாறியிருக்கும் கைப்பிடி ஆகியவை இதன் பக்கவாட்டுத் தோற்றத்துக்கு அழகூட்டுகின்றன. இதன் டெயில் லைட்ஸ், பிரமாண்டமாய் தெரியும் பின்பக்க பம்பர்கள் ஆகியவையும் இதற்குத் தனி அடையாளத்தைக் கொடுக்கின்றன.

டாடாவின் 5 ஸ்டார் பஞ்ச்!


உள்ளலங்காரம்:

அல்ட்ராஸ் மாதிரியே காரின் கதவுகள் விசாலமாகத் திறக்கின்றன. அதனால் காரின் உள்ளே செல்வதும், வெளியே வருவதும் சுலபமாக இருக்கிறது. காரின் டேஷ்போர்டில் கொடுக்கப்பட்டிருக்கும் வெள்ளை நிறப் பட்டை இதற்கு டூயல் டோன் தோற்றத்தைக் கொடுக்கிறது. இதின் யூஎஸ்பி என்னவென்றால், உயரமான டிரைவர் சீட். இதில் உட்கார்ந்்தால் சாலை தெளிவாகத் தெரிகிறது. டில்ட் ஸ்டீயரிங் மற்றும் சீட் ஆகியவற்றை வசதிக்கு ஏற்றபடி டிரைவர் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். ஜன்னல் கண்ணாடி அகலமாக இருப்பதால், 180 டிகிரிக்குக் காரைச் சுற்றிச் சுலபமாகப் பார்க்க முடிகிறது.

டனல் எதுவும் இல்லாமல், காரின் தரைப்பகுதி தட்டையாக இருப்பது வசதியாக இருக்கிறது. பின் சீட்டில் மூன்று பேர் உட்கார முடியும் என்று டாடா சொல்வது நகர்ப்புறப் பயன்பாட்டிற்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். மணிக்கணக்கில் பயணிக்க வேண்டியிருந்தால், இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். பின்னிருக்கைகளில் உட்காருகிறவர்களுக்கு ஏசி வென்ட் இல்லை. ஆனால், அது ஒரு குறையாகத் தெரியவில்லை.

ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றோடு இணைக்கக் கூடிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன், 7 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 6 ஸ்பீர்க்கர்கள் கொண்ட ஹர்மான் மியூசிக் சிஸ்டம், ஃபாலோ மீ லாம்ப்ஸ், iRA எனப்படும் கனெக்டட் கார் தொழில்நுட்பம், What3Words, வாய்ஸ் டெக்னலாஜி, க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களை விலை உயர்ந்த வேரியன்ட்டுகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள். டிக்கி 366 லிட்டர் அளவுக்கு இருப்பதால், தேவையான பெட்டி படுக்கைகளைத் தாராளமாக வைத்துக் கொள்ள முடியும்.

டாடாவின் 5 ஸ்டார் பஞ்ச்!


பாதுகாப்பு:

டாடா என்றால் பாதுகாப்பு. பாதுகாப்பு என்றால் டாடா என்று மக்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்கு டாடா எடுத்த முயற்சிக்குப் பலன் கிடைத்துவிட்டது. ஆம்! இதற்கு குளோபல் NCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங் கிடைத்திருக்கிறது. இரட்டை ஏர்பேக்ஸ், ABS, EBD ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் வைப்பர், ISOFIX சீட்ஸ் என்று பாதுகாப்பு விஷயத்தில் டாடா கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது நன்றாகத் தெரிகிறது.

இன்ஜின்:

டியாகோ, டிகோர், அல்ட்ராஸ் ஆகியவற்றை இயக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் ரெவோட்ரான் இன்ஜின்தான் இதையும் ஸ்மூத்தாக, சத்தமில்லாமல் இயக்குகிறது. ஆனால், 4,000 ஆர்பிஎம் தாண்டினால் சத்தம் போடுகிறது.

1,035 கிலோ எடை கொண்ட இது 86 bhp சக்தியையும், 11.3kgm டார்க்கையும் சீராக வெளிப்படுகிறது. 0-100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்க இது 16.44 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. அதாவது, மாருதி ஸ்விஃப்ட்டைவிட 5 விநாடிகள் தாமதமாகத்தான் 100 கிமீ வேகத்தை எட்டுகிறது. நகர்ப்புறப் பயன்பாட்டிற்கு வசதியாக இருக்கும் பஞ்ச், நெடுஞ்சாலைகளிலும் ஒத்துழைக்கிறது. கிளட்ச் பெடல் ஸ்மூத்தாக இயங்குகிறது. மேனுவல் கியர் ஸ்மூத்தாக மாறுகிறது. ஆனால், கிளட்ச் நாப் அந்த அளவுக்கு ஸ்மூத்தான ஃபீலிங்கைக் கொடுக்கவில்லை.

அடுத்து AMT-யை ஓட்டிய அனுபவத்துக்கு வருவோம். டியாகோவில் இருக்கும் அதே AMTதான் இதிலும். என்றாலும், அதைவிட இது ஸ்மூத்தாக இயங்குகிறது. வேகத்துக்கு ஏற்றபடி கியர் மாறுவது தெரிந்தாலும், அது ஸ்மூத்தாக இருப்பதால் உறுத்தல்கள் இல்லை.

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்டைப் போலவே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட்டிலும் ECO மற்றும் CITY என இரண்டு டிரைவிங் MODEகள் கொடுத்திருக்கிறார்கள். சிட்டி மோடில் வைத்து ஓட்டினால் 0 - 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்க இது 19.98 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. வேகமாகச் செல்லும்போது இது நிலைத்தன்மையோடு பயணிக்கிறது. எடை அதிகமான கார்களைப் போல இதன் சஸ்பென்ஷன் நன்றாக வேலை செய்வதால் மேடுபள்ளங்களில் பயணிக்கும்போது அவ்வளவாக அதிர்வுகள் தெரியவில்லை.

இதன் AMT வேரியன்ட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் Traction Pro Mode வசதியும் 190 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் இதற்கு எஸ்யூவி குணத்தைக் கொடுக்கிறது. சேறும் சகதியும் நிறைந்த பகுதியில் ஒரு சக்கரம் சிக்கிக்கொண்டால் இந்த வசதியைப் பயன்படுத்தி, சுலபமாக காரை வெளியே எடுத்துவிட முடியும். காரின் அடிப்பாகம் அடிபடாமல், மேடு பள்ளங்களில் இது சுலபமாக ஏறி இறங்கியது. காரணம், 20.3 டிகிரி கொண்ட அப்ரோச் ஆங்கிளும், 37.6 டிகிரி கொண்ட டிப்பார்ச்சர் ஆங்கிளும், 22.2 டிகிரி ரேம்ப் ஓவர் ஆங்கிளும்தான். தேங்கி நிற்கும் மழை நீர் நிறைந்த பள்ளத்தில் இதை இறக்கியபோதுகூட இன்ஜின் ஆஃப் ஆகவில்லை. இதன் ஸ்டீயரிங் லைட்டாக இருக்கிறது. அதனால் சிட்டியில் சுலபமாக ஓட்ட முடிகிறது. பிரேக்ஸ் சொன்ன இடத்தில் நிற்பதால், இதைத் தன்னம்பிக்கையோடு ஓட்ட முடிகிறது.

டாடாவின் 5 ஸ்டார் பஞ்ச்!

மோட்டார் விகடன் தீர்ப்பு

பாதுகாப்புக்காக இது வாங்கியிருக்கும் 5 ஸ்டார் ரேட்டிங் இதைப் பல படிகள் நமக்கு அருகில் வந்து நிறுத்திவிடுகின்றன. இதன் உயர்ந்த உருவம், பாடி ஸ்டைல், உயரமான டிரைவர் சீட்ஸ், உறுதியான கட்டமைப்பு, நிலைத்தன்மை ஆகியவை இதன் பலம். இன்ஜின் இன்னும் கூடுதல் சக்தி கொண்டதாக இருந்திருக்கலாம். AMT கியர் பாக்ஸிலும் நிறைய முன்னேற்றம் தேவைப்படுகிறது. மாருதி இக்னிஸ், மஹிந்திரா XUV 100 மற்றுமல்ல; விலை குறைவான நிஸான் மேக்னைட் மற்றும் ரெனோ கிகர் ஆகியவையும் டாடா பஞ்ச் உடன் போட்டி போடுகின்றன என்பதால் இந்த களத்தை போட்டிகள் நிறைந்ததாக இது மாற்றியிருக்கிறது.