Published:Updated:

நிஜமாகவே புத்திசாலியா இந்த டாடா டியோகோ சிஎன்ஜி?

டியோகோ சிஎன்ஜி
பிரீமியம் ஸ்டோரி
டியோகோ சிஎன்ஜி

சிஎன்ஜி வேரியன்ட் என்றால், பேஸ் வேரியன்ட்டில்தான் வர வேண்டுமா? ட்ரெண்டிங்கை உடைத்த டாடா மோட்டார்ஸ்!

நிஜமாகவே புத்திசாலியா இந்த டாடா டியோகோ சிஎன்ஜி?

சிஎன்ஜி வேரியன்ட் என்றால், பேஸ் வேரியன்ட்டில்தான் வர வேண்டுமா? ட்ரெண்டிங்கை உடைத்த டாடா மோட்டார்ஸ்!

Published:Updated:
டியோகோ சிஎன்ஜி
பிரீமியம் ஸ்டோரி
டியோகோ சிஎன்ஜி

சரியான நேரத்தில் ஒரு கச்சிதமான முடிவை எடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். பெட்ரோல் விலைவாசி ஏற்றம் கண்டிருக்கும் நேரத்தில் எலெக்ட்ரிக்கைத் தவிர்த்து இருக்கும் ஒரு மாற்று விஷயம் – சிஎன்ஜி எனப்படும் Compressed Natural Gas கார்கள். ஏற்கெனவே மாருதியில் எர்டிகா, வேகன்–ஆர், செலெரியோ, ஹூண்டாய் செலெரியோ என்று பல சிஎன்ஜி கார்கள் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்போது டாடா சும்மா இருந்தால் நன்றாக இருக்காது. அதுதான் களத்தில் இறங்கிவிட்டது. ஹேட்ச்பேக்கில் தனது டியாகோவை சிஎன்ஜி மாடலாக்கிக் கொண்டு வந்துவிட்டது.

ஆன்ரோடு விலை கூட அறிவிக்காத நிலையில், ஃபேக்டரியில் இருந்து சூடாக இறங்கிய சிஎன்ஜி காரை சென்னையில் டெஸ்ட் டிரைவ் செய்தேன்.? முதலில் இதை சிஎன்ஜி எனும் பேட்ஜோடு i எனும் எழுத்தையும் சேர்த்து i–CNG என்று லாஞ்ச் செய்திருக்கிறது. i என்றால் Intelligence. நிஜமாகவே புத்திசாலியாக இருக்கிறதா இந்த டாடா டியாகோ i–CNG?

அழகு… அளவுகள்!

டிசைனைப் பொருத்தவரை பெரிதாக எந்த மாற்றங்களும் தெரியவில்லை – பெட்ரோல் டியாகோவுக்கும் இந்த சிஎன்ஜி டியாகோவுக்கும்! பின் பக்கம் அந்த i–CNG எனும் பேட்ஜை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். முன்பக்கம் கூட சிஎன்ஜி பேட்ஜ் வைத்திருக்கலாம்தான்; ஆனால் இல்லை. சில க்ரோம் வேலைப்பாடுகள் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ் மூலம் வித்தியாசம் கண்டுபிடிக்கலாம். ஆனால் எல்இடி இல்லை; ஹாலோஜன் பல்புதான். அதேநேரம் டிஆர்எல்–களுக்கு எல்இடி கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி இதைத் தனித்துக் காட்ட டிசைனில் ஏதாவது புதுமை செய்திருந்தால்கூட… சாலையில் போகிறவர்களின் கவனம் திரும்பியிருக்கலாம்.

டாடா டியாகோவின் டிசைன் பலரையும் கவர்ந்த டிசைன் என்பதால், அதை மாற்றவில்லைபோல இருக்கிறது. ஆம், ஹேட்ச்பேக்கில் அல்ட்ராஸுக்கு அடுத்து இதன் டிசைன் ஆஹா! அதிலும் இந்த சிஎன்ஜி–க்கு ‘மிட்நைட் ப்ளம்’ என்றொரு கலர் கொடுத்திருக்கிறார்கள். பிரெளனாகவும் இல்லாமல், கறுகறுவென்று கறுப்பும் அடிக்காமல்… ஒரு மாதிரியாக மனதை மயக்குகிறது இந்த மிட்நைட் ப்ளம். நமது புகைப்பட நிபுணர்கூட ‘சூப்பர் கலர் இது... வித்தியாசமா இருக்கே’ என்று கோவளம் கடற்கரையில், ஈசிஆர் சாலையில் சுற்றிச் சுற்றிப் படம் எடுத்துத் தள்ளினார். மற்றபடி இதன் ஸ்போர்ட்டியான அலாய்வீல்கள், முன் பக்கம் டிஸ்க், ஷார்ப் டிசைன் என்று கலக்குகிறது டியாகோ சிஎன்ஜி. இதன் போட்டியாளரான செலெரியோவைவிட (3,695/1,655மிமீ) – நீளத்திலும் (3,765mm), அகலத்திலும் (1,677mm) என்று கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது டியாகோ. அதேபோல் வீல்பேஸிலும் செலெரியோவைவிட 30 மிமீ குறைவுதான். இதன் வீல்பேஸ் 2,400 மிமீ.

இன்டீரியர், வசதிகள்

உள்பக்கம் நுழைந்தால்… டியாகோவைப் பார்த்த அதே உணர்வுதான். அதனால்… ஃப்ரெஷ் அப்பீலுக்கு வழியில்லை என்றும் சொல்ல முடியவில்லை. அதாவது, ப்ரீமியம் லுக்கில் தவறவில்லை டியாகோ இன்டீரியர். காரணம், அந்த பீஜ் மற்றும் பிளாக் டூயல் டோன் இன்டீரியர். அப்புறம் அந்த பட்டர்ஃப்ளை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை வைத்துக் கண்டுபிடிக்கலாம்; இது சிஎன்ஜி மாடல் என்று. காரணம், ஃப்யூல் மீட்டர் இரண்டு இருந்தன. ஒன்று பெட்ரோலுக்கு; மற்றொன்று சிஎன்ஜிக்கு. இந்த ஃபுல்லி டிஜிட்டல் மீட்டர் செம ப்ரீமியம் ஸ்டைல். இதன் பெட்ரோலின் கொள்ளளவு 35 லிட்டர்; சிஎன்ஜியின் கொள்ளளவு 8.5 கிலோ. இது 60 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவுக்கு உள்ள சிலிண்டர்.

பொதுவாக, சிஎன்ஜி கார்களை ‘போனால் போகட்டும்’ என்று லோ எண்ட் கார்களில்தான் கொண்டு வருகின்றன கார் நிறுவனங்கள். ஆனால்… டாடா இதில் முன்னோடியாகப் போகிறது. ஆம், இந்த சிஎன்ஜி மாடலை டாப் எண்டில்கூட கொண்டு வருகிறது டாடா. XE, XM, XT, XZ+ என நான்கு வேரியன்ட்களில் வருகிறது டியாகோ சிஎன்ஜி. நாம் ஓட்டியது XZ+ மாடல்.. வசதிகள் போதுமான அளவில் கொட்டிக் கிடக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

3 ஸ்போக் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் சும்மாவே ஸ்போர்ட்டி. அதில் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள் இன்னும் சூப்பர். சென்டர் கன்ஸோலுக்கு நடுவே 7 இன்ச் டச் ஸ்க்ரீன் – அதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே வசதிகள், ‘தம் தும்’ என அடிக்கும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மான் ஆடியோ சிஸ்டம், உள்ளேயே அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ORVM மிரர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ரிவர்ஸ் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார், ரியர் வாஷ் வைப்பர் – டிஃபாகருடன் என்று எத்தனை வசதிகள்!

ஆனால், சில பிராக்டிக்கல் வசதிகளும் கொடுத்திருக்கலாம். உதாரணத்துக்கு, பின் பக்கம் ஏசி வென்ட்கள் இல்லை; முன் பக்கம் கதவு பாக்கெட்டுகளில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் வைக்க முடியவில்லை; அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் இல்லை. இருந்தாலும், இதைக் குறையாகவெல்லாம் சொல்ல முடியாது.

பின் பக்கம் வீல்பேஸ் 2,400 மிமீ என்பதற்கேற்ப… இதன் லெக்ரூம், ஹெட்ரூம் எல்லாமே நன்று. அதிலும் ரியர் ஏசி வென்ட் டனல் இல்லாதது கால்களை நீட்டி மடக்கி உட்கார வசதியாகவே, சொகுசாகவே இருக்கிறது. ஆனால், இரண்டு தடிமன் பார்ட்டிகள் உட்கார்ந்தால்… கார் நிரம்பி விடுகிறது. பின் பக்கம் இரண்டு பேர் என்றால்… செம சொகுசு உறுதி.

சில சிஎன்ஜி கார்களை எடுத்துக் கொண்டால்… பவர் விண்டோக்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங்தான் அதிகபட்ச வசதிகளாக இருக்கும். வேகன்–ஆர் போன்ற சிஎன்ஜி–க்களில் ஸ்டீரியோ சிஸ்டம்கூட இல்லை என்பதும் ஏமாற்றம். நன்றி டாடா!

சிஎன்ஜி மாடலில் இவ்வளவு ப்ரீமியம் லுக் மற்றும் வசதிகள் கொடுத்ததற்காக, டாடாவுக்கு நன்றி!
சிஎன்ஜி மாடலில் இவ்வளவு ப்ரீமியம் லுக் மற்றும் வசதிகள் கொடுத்ததற்காக, டாடாவுக்கு நன்றி!
பட்டர்ஃப்ளை இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில், சிஎன்ஜி/பெட்ரோல் என இரண்டுக்கும் தனித்தனி ஃப்யூல் மீட்டர்கள்...
பட்டர்ஃப்ளை இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில், சிஎன்ஜி/பெட்ரோல் என இரண்டுக்கும் தனித்தனி ஃப்யூல் மீட்டர்கள்...

டிரைவிங் மேனர்!

ஓட்டுதலிலும் பெர்ஃபாமன்ஸிலும் இதைவிடச் சொல்லியடிக்கிறது டியாகோ சிஎன்ஜி. இது விற்பனையில் இருக்கும் அதே 3 சிலிண்டர் NA பெட்ரோல் டியாகோதான். அதைத்தான், அதிலேயேதான் சிஎன்ஜி வேரியன்ட்டைக் கொண்டு வந்திருக்கிறது. பெட்ரோலில் ஓட்டும்போது இதன் பவர் 86bhp. இதுவே சிஎன்ஜியில் ஓட்டும்போது இதன் பவர் 73bhp. என்னடா இது பவர் குறைஞ்சிடுச்சே என்று நினைக்காதீர்கள்.

செலெரியோ, வேகன்–ஆர், சான்ட்ரோ – என்று இதன் எல்லா போட்டி சிஎன்ஜி கார்களையும் நாம் ஓட்டியிருக்கிறோம். எல்லாமே 3 சிலிண்டர் NA இன்ஜின்கள்தான். இதன் பவர்களை முறையே கவனியுங்கள் (57/59/60bhp). ஒரு 1,040 கிலோ எடை கொண்ட குட்டி சிஎன்ஜி ஹேட்ச்பேக்குக்கு இது ஓகே இல்லை; ஆஹா என்றே சொல்லலாம். சிட்டிக்குள் இதன் பெர்ஃபாமன்ஸ் அடடாவாக இருக்கிறது. 2,500 ஆர்பிஎம் வரை எகிறியடித்து கியர் மாற்றினால்… ஜிவ்வெனச் சீறுகிறது டியாகோ சிஎன்ஜி. மூன்றாவது கியரிலேயே 75 கிமீ வரை ஓட்ட முடிகிறது. அதேபோல், இந்த வேகத்தில் 5–வது கியரிலும் நாக்–டவுன் ஆகாமல் போக முடிகிறது என்பது ஸ்பெஷல். இது ஒரு லாங் த்ரோ கியர்பாக்ஸ் ஆகத் தெரிகிறது. அதனால், சிட்டிக்குள் அடிக்கடி கியர் மாற்றும் வேலை இருக்காது. டிராஃபிக்கில் நிம்மதியாகவே ஓட்டலாம். இதன் டார்க் – 9.5kgm. இதுவும் மற்ற போட்டி கார்களைவிட அதிகமாகவே இருக்கிறது. இது சிட்டி சிக்னல்களில் டார்க் கிடைக்க ஓரளவு உதவியாகவே இருக்கிறது.

அதைவிட நெடுஞ்சாலைகளிலும் இதன் டிரைவிங் மேனர்ஸ் அற்புதமாகவே இருக்கிறது. 5–வது கியர்தான் இதில் டாப். டாப் கியரில் சுமார் 124 கிமீ வரை டாப் ஸ்பீடு போக முடிந்தது. இதற்கு மேலும் போயிருக்கலாமா என்று தெரியவில்லை. டாடாவின் டைனமிக்ஸ் – இப்போது வேறு லெவலில் இருக்கிறது. கிச்சென ஒரே நேர்கோட்டில் பறந்தால்… பயப்படவே தேவையில்லை. ஸ்டெபிலிட்டி அத்தனை அருமை. எங்களை மிகவும் இம்ப்ரஸ் செய்தது இதன் ஹைவே பெர்ஃபாமன்ஸ் டிரைவிங் பக்குவம்.

பின் பக்கம் உள்ள அந்த சிஎன்ஜி சிலிண்டரின் எடையால், காரின் எடையும் ஒரு 100 கிலோ ஏறியிருக்கிறது. ஆனாலும், அந்த எடைக்கு ஏற்றவாறு இதன் மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் செட்அப்பைக் கொஞ்சம் இல்லை… நன்றாகவே ட்யூன் செய்திருக்கிறார்கள். மேடு பள்ளங்களை நன்றாகவே தாங்குகிறது டியாகோ சிஎன்ஜி. பின் பக்கம் சிலிண்டர் இருப்பதால்… அதன் சத்தமும் கேட்கும் என்று நினைத்தேன். பெரிதாகத் தெரியவில்லை. சில இடங்களில் மட்டும் ஸ்டிஃப்பாக இருந்தது. ஆனால், பெரிய குறையாகத் தெரியவில்லை. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 மிமீ. இதுவே டிகோரின் கி.கிளியரன்ஸ் 165 மிமீதான். இந்தக் குறைவான கி.கிளியரன்ஸும் இதன் டைனமிக்ஸுக்கு உதவுகிறது என்றே சொல்ல வேண்டும். 14 இன்ச் வீல்கள், இந்த காருக்கு நன்றாகவே வேலை செய்கின்றன.

பாதுகாப்பில் டியாேகோ சிஎன்ஜி எப்படி?

டாடா கார்கள் இப்போது பாதுகாப்பில் மிகவும் முன்னேறிப் போய்க் கொண்டிருப்பது தெரிந்த விஷயம். இந்த டியாகோவும் அப்படித்தான். குளோபல் க்ராஷ் டெஸ்ட்டிங்கில் இது 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய கார் என்பது நம்பிக்கை. கதவை மூடும்போதே இதன் கிண்ணென்ற பில்டு குவாலிட்டி தெரிகிறது. பாதுகாப்பு என்றால் கட்டுமானம் மட்டும்தானா?

இல்லை; அதற்கும் நிறைய வசதிகள் வைத்திருக்கிறது டாடா. இரட்டைக் காற்றுப்பைகள், EBD உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங், டிரைவர் சீட் ஹைட் அட்ஜஸ்ட், கார்னர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், முன் பக்கம் டிஸ்க் (பின் பக்கம் டிரம்) என்று ஏகப்பட்ட வசதிகள். ஹில் ஹோல்டு அசிஸ்ட் மட்டும் கொடுத்திருக்கலாமோ?

பொதுவாக, மற்ற சிஎன்ஜி கார்களை சிஎன்ஜி மோடில் வைத்து ஸ்டார்ட் செய்ய முடியாது. ஆனால், டியாகோவில் அப்படி இல்லை. சென்டர் கன்ஸோலின் நடுவில் உள்ள சிஎன்ஜி பட்டனை ஆன் செய்தால்… இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் `CNG Activated’ என்று டிஸ்ப்ளே வருகிறது. இதிலேயே ஸ்டார்ட் செய்து கொள்ளும் வசதி டியாகோவில் இருக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் – சிஎன்ஜி போன்ற கேஸ் ஃபில்டு கார்களை ஓட்டும்போது, ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். காரணம், கேஸ் லீக்கேஜ். இந்த டியாகோவில் அதற்கும் பயப்படத் தேவையில்லை என்கிறது டாடா. சிங்கிள் ECU மூலம் கேஸில் ஏதும் லீக்கேஜ் இருந்தால்… இது தானாகவே கண்டறிந்து, ஆட்டோமேட்டிக்காக பெட்ரோலுக்கு மாறிக் கொள்ளும் தொழில்நுட்பமும் இருக்கிறது. இதைத்தான் intelligence என்கிறது டாடா. மேலும் மற்ற கார்களைப்போல், இதில் சிஎன்ஜி காலியாகும் பட்சத்திலும், தானாகவே டாகிள் ஆகிக் கொள்ளும்.

மேலும், இந்த சிலிண்டர் ஹை குவாலிட்டி ஸ்ட்ரென்த் ஸ்டீலால் தயாரிக்கப்பட்டதால்… கேஸ் லீக்கேஜுக்கும் வாய்ப்பில்லை என்று அடித்துச் சொல்கிறது டாடா.

பூட்டில் 313 லிட்டர் இடவசதியையும் ஸ்டெஃப்னியும் சிலிண்டருமே முக்கால்வாசி ஆக்கிரமித்துக் கொள்கிறது. மேலே உள்ள ட்ரேயில்தான் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம்.
பூட்டில் 313 லிட்டர் இடவசதியையும் ஸ்டெஃப்னியும் சிலிண்டருமே முக்கால்வாசி ஆக்கிரமித்துக் கொள்கிறது. மேலே உள்ள ட்ரேயில்தான் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம்.
சிஎன்ஜி
சிஎன்ஜி

பூட் வசதி பெரிய கேள்விக்குறி?

டாடா டியாகோவில் பெரிய கேள்விக்குறியாக இருப்பது அந்த டிக்கி இடவசதி மட்டும்தான். பூட்டைத் திறந்ததும் நமது புகைப்பட நிபுணரில் இருந்து கேமரா மேன் வரை எல்லாருமே, `கேமரா பேக்-ஐ எங்கண்ணே வைக்க?’ என்று ஷாக் ஆகிப் போனார்கள். காரணம், பூட்டில் இடவசதி இல்லை. மேலே ட்ரே மட்டும்தான் இடவசதி. இதன் பூட் லிட்டர் கொள்ளளவு 242 லிட்டர். இதில் சிலிண்டரே எல்லா இடத்தையும் அடைத்துக் கொண்டுவிட்டது. இதுவே போட்டி காரான செலெரியோவில் 313லிட்டர் இடவசதி உண்டு. சிலிண்டர் ஆக்கிரமிப்பு தவிர பொருட்கள் வைக்கவும் செலெரியோவில் இடம் இருந்தது. அப்படியென்றால்… 4 பேர் பயணித்தால்… லக்கேஜ்களை பின் பக்கப் பயணிகள்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

வாங்கலாமா?

நமக்குத் தெரிந்து பூட் இட வசதியைத் தவிர, இந்த டியாகோ சிஎன்ஜியில் வேறெந்தக் குறைகளும் பெரிதாகத் தெரியவில்லை. மாறாக, கலர் – டிசைனில் இருந்து வசதிகள், பெர்ஃபாமன்ஸ், டிரைவிங் மேனர்கள், பாதுகாப்புவரை எல்லாமே இன்டலிஜென்ஸ்தான் இந்த டியாகோ. இதன் சிஎன்ஜி மைலேஜ் பற்றியும் சொல்ல வேண்டுமே! இதன் அராய் மைலேஜாக 26.49 கிமீ (செலெரியோ இதைவிட அதிகம் 35.6கிமீ) க்ளெய்ம் செய்கிறார்கள். அதேபோல், சிஎன்ஜி ஃபுல் ரேஞ்சுக்கு 300 கிமீ என்றும் க்ளெய்ம் செய்கிறது. ஆனால்… 8.5 கிலோ சிஎன்ஜி நிரப்பினால்.. சிட்டிக்குள் நிச்சயம் 220 கிமீ–ஆவது பயணிக்க முடியும் என்பது உறுதி.

இது 6.10 முதல் 7.64 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலை வருகிறது. நாம் ஓட்டிய டாப் மாடல், சுமார் 8.6 லட்சம் வரை ஆன்ரோடு வரலாம். அசத்தலான பாதுகாப்பான மைலேஜ் தரக்கூடிய இந்த சிஎன்ஜி ஹேட்ச்பேக் டியாகோ நிச்சயம் வாடிக்கையாளர்களை ஏமாற்றாது என்றே சொல்லலாம்.

‘சிஎன்ஜி என்றால்… லோ வேரியன்ட்டில் தான் வாங்க முடியும்’ என்கிற விதியை உடைத்ததற்காகவே இந்த புத்திசாலி டியாகோவுக்கு ஒரு டிக் அடிக்கலாமே!

டியாகோ சிஎன்ஜி
டியாகோ சிஎன்ஜி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீ/அ/உ : 3,765/1,677/1,535 மிமீ

வீல்பேஸ்: 2,400 மிமீ

கி.கிளியரன்ஸ் : 168 மிமீ

சிஎன்ஜி டேங்க் : 60 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு

பெட்ரோல் டேங்க்: 35 லிட்டர்

கெர்ப் எடை : 1040/1087 கிலோ

இன்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல், NA, 3 சிலிண்டர்

கியர்பாக்ஸ் : 5 ஸ்பீடு

பவர்: 73bhp@6,000rpm

டார்க்: 9.5bhp@3,500rpm

டயர்: 175/65 R14 இன்ச்

பிரேக்ஸ்: டிஸ்க்/டிரம் (மு/பி)

ஏபிஸ்: EBD உடன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism