
ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா டியாகோ எலெக்ட்ரிக்


மின்சார வாகனங்களின் சந்தையில் முன்னணியில் இருக்கும் டாடா, தன்னுடைய நெக்ஸான், டிகோர் ஆகிய கார்களை அடுத்து டியாகோ காரிலும் EV மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் முதல் ஹேட்ச்பேக் EV, பத்து லட்சம் ரூபாயில் கிடைக்கக் கூடிய முதல் EV- ஒரே EV என்று இதற்கு நிறைய பெருமைகள் இருக்கின்றன. அதனால் இது அறிமுகமான அதே வேகத்தில் இருபது ஆயிரம் கார்களுக்கு முன்பதிவு முடிந்துவிட்டது.
இதன் வெளிப்புறம் மற்றும் உட்புறத் தோற்றங்கள், வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கடந்த இதழிலேயே விரிவாகப் பார்த்து விட்டதால், இது பற்றிச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு இதன் பேட்டரி, மோட்டார் செயல்பாடு, ஓட்டுதல் மற்றும் கையாளுமை ஆகியவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
வெளிப்புறத் தோற்றம்
அகலம், நீளம், உயரம் ஆகியவற்றில் எல்லாம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தாலும், டாடா கார்களுக்கு உரிய அதன் முன்று முனைகள் கொண்ட நட்சத்திரக் கூட்டங்களின் சிதறல் டாடா EVயின் முகப்பில் வேறு வண்ணத்திலும் வேறு இடத்திற்கும் இடம் மாறியிருக்கிறது. மின்சார கார் என்பதால் காரின் ஆட்டோமேட்டிக் ப்ரொஜெக்டர் ஹெட்லாம்ப் துவங்கி, பல இடங்களிலும் மின்சாரத்தின் குறியீடாக நீல வண்ணத்தைக் காண முடிகிறது. ஃபாக் லைட்டைச் சுற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் க்ரோம் வேலைப்பாடுகளும், LED DRL-ம் காருக்குத் தனித்தன்மையைக் கூட்டுகின்றன.
அலாய் வீல் இல்லை என்றாலும், 14 இன்ச் வீல்களுக்கு இரட்டை வண்ணத்தில் ஹைப்பர் ஸ்டைல் வீல் கொடுத்திருக்கிறார்கள். காரின் மேற்கூரைக்கு கான்ட்ராஸ்டிங்காகக் கறுப்பு வண்ணம் கொடுத்திருப்பது ஸ்போர்ட்டியான லுக்கைக் கொடுக்கிறது. காரின் டெயில் கேட் எலெக்ட்ரிக் கேட்டாக இருப்பதால், சுலபமாகத் திறக்க முடிகிறது. ஆனால் டிக்கியின் கொள்ளவு 240 லிட்டர்தான். அதிலும் பார்சல் ட்ரேயை எடுத்தால்தான் இந்த அளவுக்கு டிக்கியில் இடம் கிடைக்கும். காரணம் - டிக்கியின் அடியில்தான் காரின் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. ஆகையால், ஸ்பேர் வீல் வைக்கவும் இடம் இல்லை. அதனால் ஸ்பேர் வீல் இல்லை. அதை ஈடு செய்ய பஞ்சர் கிட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.



உள்ளலங்காரம்:
இதன் கேபினில் அதிக மாற்றங்கள் இல்லை. என்றாலும், வெள்ளை நிறத்தில் லெதரைட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் சீட்டுகளால் காருக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. கூடுதலாக ஏசி வெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் நீல நிறம் படர்ந்திருக்கிறது. இதில் கியர் லிவர் தேவையில்லை என்பதால், ரோட்டரி மாடலில் இருக்கும் திருகைப் பயன்படுத்தி காரை ஸ்போர்ட்ஸ் அல்லது டிரைவ் மோடில் ஓட்ட முடியும்.
டிரைவர் சீட்டின் உயரத்தை மேனுவலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிகிறது. மற்றபடி டியாகோவுக்குரிய இட வசதி கார் முன்னிருக்கைகளில் அப்படியே இருக்கிறது. ஆனால், காரின் பின்சீட்டுக்கு அடியிலும் பேட்டரி இருப்பதால் பின் சீட்டுக்கு அடியில் காலை உட்புறமாக மடக்கி உட்கார முடியவில்லை. தாராளமான கார்தான் என்றாலும், பின் சீட்டில் நடுவில் உட்காரும் மூன்றாவது பயணி கால் வைக்கும் இடத்தில் ஒரு டனல் இருப்பது இடைஞ்சல்தான். முன் வரிசையைப் போலவே பின் வரிசையிலும் ஆர்ம் ரெஸ்ட் இல்லை.
வசதிகள்:
ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்ப்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், டெலிமேட்டிக்ஸ் வசதி ஆகியவை உண்டு.
பாதுகாப்பு:
GNCAP-ல் நான்கு நட்சத்திரம் வாங்கிய ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கபடும் இந்தக் காருக்கும் சட்டப்படி கொடுக்க வேண்டிய இரண்டு காற்றுப்பைகள் மற்றும் ABS ஆகியவற்றைத் தாண்டி EBD, ரிவர்ஸ் கேமரா, டயர் ப்ரஷர் மானிட்டர், ஃபாக் லாம்ப் ஆகியவற்றையும் கொடுத்திருக்கிறார்கள்.
ஓட்டுதல் மற்றும் கையாளுமை:
ஸ்டீயரிங் வீலுக்கு லெதரட் கவர் கொடுத்திருப்பது பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. ஸ்டீயரிங் வீல் நம் கட்டளைகளுக்கு ஏற்றபடி காரைக் கச்சிதமாகச் செலுத்துகிறது. டியாகோ EV, 24kWh மற்றும் 19.2kWh என்று இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனில் விற்பனைக்கு வருகிறது. இதை அவர்கள் லாங் ரேஞ்ச் பேட்டரி, மிட் ரேஞ்ச் பேட்டரி என்று குறிப்பிடுகிறார்கள். 24kWh சக்தி கொண்ட லாங் ரேஞ்ச் பேட்டரி என்றால், 75 bhp சக்தியையும், 114 Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுவே 19.2kWh பேட்டரியாக இருந்தால், இது 60 bhp அளவுக்குச் சக்தியையும், 110Nm அளவுக்கு டார்க்கையும் வெளிபடுத்தும்.
நாம் ஓட்டியது 24kWh சக்தி கொண்ட டியாகோ EV. இதை D என்கிற டிரைவ் Mode-ல் வைத்து ஓட்டும்போதே முக்கால்வாசி டார்க்தான் கிடைத்தது. காரணம், காரின் எடை 1,155 கிலோ. இதில் பேட்டரியின் எடை மட்டும் 220 கிலோ. இதையே ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டியபோது முழு டார்க்கும் கொப்புளித்துக் கொண்டு வந்தது. இதில் சிங்கிள் பெடல் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் ஓட்டுவது எளிதாக இருக்கிறது. நெடுஞ்சாலைகளில் நூறு கிமீ வேகத்தைத் தாண்டி ஓட்டும்போது மட்டுமே இது கொஞ்சம் திணறியது.
இதில் 0, 1, 2, 3 என நான்கு விதமான ரிஜெனரேட்டிவ் mode-ல் வைத்து ஓட்ட முடியும். இதை கோவாவில் நாம் டெஸ்ட் டிரைவ் செய்தபோது, காலியான நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது 0 அதாவது ரிஜெனரேஷனே வேண்டாம் என்று கேன்சல் செய்துவிட்டு ஓட்டுவது நன்றாக இருக்கிறது. இதுவே சரிவான பாதைகளிலும் மலைப்பாதைகளிலும் இறங்குவது என்றால், 3 என்ற Mode தேர்ந்தெடுத்து ஓட்டலாம். இதில் என்ன நன்மை என்றால், வேகத்தைக் குறைக்க ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து காலை எடுத்தாலே, லைட்டாக பிரேக் போட்டதுபோல காரின் வேகம் குறையும்.
24kWh பேட்டரி காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 315 கிமீ போகும் என்றும், இதுவே 19.2kWh சக்தி கொண்ட பேட்டரியாக இருந்தால் 257 கிமீதான் போகும் என்கிறது டாடா. 24kWh பேட்டரியாக இருந்தாலும் சரி, 19.2kWh பேட்டரி பொருத்தப்பட்ட டியாகோவாக இருந்தாலும் சரி, இவற்றை பெட்ரோல் பங்க் அல்லது சர்வீஸ் ஸ்டேஷன்களில் இருக்கும் DC சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், 10 - 80% சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம்தான் ஆகும். இது தவிர, மேலும் மூன்று விதமான சார்ஜிங் ஆப்ஷன்களையும் டாடா கொடுக்கிறது. அதில் முக்கியமானது, வீட்டில் இருக்கும் 3 பின் கொண்ட சாக்கெட். இதில் 10 - 80% சார்ஜ் செய்ய 24kWh பேட்டரியாக இருந்தால் சுமார் 9 மணிநேரமும், 19.2kWh பேட்டரி கொண்ட டியாகோவாக இருந்தால் 7 மணி நேரமும் ஆகும்.
IP67 என்ற தர முத்திரை கொண்ட பேட்டரி என்பதால், இதில் தண்ணீர், சேறு சக்தி பட்டாலோ ஒன்றும் ஆகாது என்கிறது டாடா. அது மட்டுமல்ல; இந்த பேட்டரிகளுக்கு 8 வருடம் அல்லது 1,60,000 கிமீ அளவுக்கு வாரன்ட்டியும் கொடுக்கிறது.
மோட்டார் விகடன் தீர்ப்பு:
இந்த செக்மென்ட்டில் இதற்குப் போட்டியே இல்லை. இன்னொருபுறம் இந்த டியாகோ, ரெகுலர் ICE டியாகோவை விட சுமார் மூன்று லட்ச ரூபாய் விலை அதிகம். ஆனால், இதன் ஆப்பரேட்டிங் காஸ்ட் குறைவு என்று டாடா வைக்கும் வாதத்தைப் புறம் தள்ள முடியாது. ஆம், இதை ஓட்டுவதற்கு ஒரு கிமீட்டருக்கு ரூ.1.20தான் ஆகும். இதுவே பெட்ரோல் வாகனமாக இருந்தால் சுமார் 8 ரூபாய் ஆகும். ஒருவர் சராசரியாக மாதம் ஆயிரம் கிமீ-கள் ஓட்டுவதாக எடுத்துக் கொண்டால்... சுமார் ரூ.6,500 மிச்சமாகும். வருடத்திற்கு 75,000 ரூபாய் மிச்சமாகும்.
அது மட்டுமல்ல, ஆட்டோமேட்டிக் வசதி, கனெக்டட் கார் என்பதால் கிடைக்கக் கூடிய ஜியோ ஃபென்சிங், டைம் ஃபென்சிங் போன்ற வசதிகள் டியோகோ EVக்குச் சாதகமாக இருப்பதால்... பத்து லட்ச ரூபாய்க்குள் மின்சார வாகனம் வாங்க வேண்டும் என்கிறவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

