கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

டிகோர் எலெக்ட்ரிக்கின் உண்மையான ரேஞ்ச் என்ன? பெங்களூர் முழுக்க டிரைவ்!

டிகோர் Ziptron EV
பிரீமியம் ஸ்டோரி
News
டிகோர் Ziptron EV

டாடா டிகோர் Ziptron EV

டிகோர் Ziptron EV
டிகோர் Ziptron EV
டிகோர் Ziptron EV
டிகோர் Ziptron EV

விலை: ரூ.13.5 லட்சம் (சென்னை ஆன்ரோடு),

ஃபுல் ரேஞ்ச்: சுமார் 190 - 200 கிமீ

டாடாவில் Ziptron தொழில்நுட்பம் ரொம்ப ஃபேமஸ். அந்தத் தொழில்நுட்பத்தில்தான் தனது நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடலைக் கொண்டு வந்தது டாடா. இப்போது Ziptron டெக்னாலஜியை அடிப்படையாகக் கொண்டு இரண்டாவது மாடலைக் கொண்டு வந்திருக்கிறது டாடா. அந்த டிகோர் Ziptron EV மாடலின் லான்ச் ஈவென்ட்டை விர்ச்சுவலாக நடத்திய டாடா மோட்டார்ஸ், டிகோரை டெஸ்ட் டிரைவ் செய்ய பெங்களூரு அழைத்திருந்தது.

பெங்களூருவில் உள்ள மிகப் பெரிய டாடா டீலர்ஷிப்பில்தான் நமக்கான டிகோர் EV காத்திருந்தது. மாசு நிறைந்த பெங்களூருவில், சத்தமே இல்லாமல் எலெக்ட்ரிக் காரில் ஒரு ரவுண்டு போனது நல்ல அனுபவம். ‘சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கு; பயப்படாமப் போங்க’ என்று வழிகாட்டினாலும், ஒரு பயத்தோடே நந்தி ஹில்ஸ் வரை ஒரு ரவுண்டு அடித்தோம்.

போன முறை டிகோர் Ziptron EV–ன் ஃபர்ஸ்ட் லுக் பார்த்தாகி விட்டது. இருந்தாலும் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அவுட்லுக்கில் அப்படியே ICE டிகோருக்கும் இதற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் கிரில்லிலேயே வித்தியாசம் ஆரம்பித்து விடுகிறது. ஏர் டேமுக்குப் பதில் டாடாவின் அந்த ட்ரை ஆரோ பேட்டர்ன் கிரில் சூப்பர். 15 இன்ச் வீல்கள் முதல் கார் முழுக்க அங்கங்கே புளூ கலர் ஆக்சென்ட்கள்தான் இது எலெக்ட்ரிக் என்பதைத் தனித்துக் காட்டுகின்றன. ஃப்ளீட் மாடலான XPress T-யை ஒப்பிடும்போது, இதில் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் கொடுத்திருப்பது அருமை.

இப்போது டிரைவ், பெர்ஃபாமன்ஸ் மற்றும் ரேஞ்ச்தான் பாக்கி. அதற்கும் ஒரு தீர்வு கிடைத்துவிட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்த ஃப்ளீட் மார்க்கெட் மாடலான XPress T மாடலுக்கு மாற்றாக, மக்களுக்கான ஃபேஸ்லிஃப்ட்டாகத்தான் இந்த டிகோர் Ziptron EV வந்திருக்கிறது. ஃப்ளீட் மாடலில் 72V எலெக்ட்ரிக் சிஸ்டம் என்றால், இதில் 350V Ziptron எலெக்ட்ரிக்கல் சிஸ்டம். ஃப்ளீட் மாடலின் ரேஞ்ச் 163 கிமீ என்றால், டிகோரின் ரேஞ்ச் 306 கிமீ என்கிறது ARAI. அதான் ஓட்டப் போறோமே… இப்போது தெரிந்து விடும்!

நேரடியாக டிரைவுக்குப் போய் விடலாம். காரை ஸ்டார்ட் செய்தால், ஒரு சத்தமும் கேட்கவில்லை. MID க்ளஸ்ட்டரில் Ready என்கிற சிம்பலை வைத்துத்தான் கார் ஐடிலிங்கில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதிலுள்ள பேட்டரி சைஸ் 26KW. 25KW DC சார்ஜரில் இதை சார்ஜ் செய்து கொள்ளலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனும் வைத்திருக்கிறார்கள். 80% பேட்டரி சார்ஜிங் வெறும் 60 நிமிடங்களில் கிடைத்து விடும். நம் வீட்டில் உள்ள சாதாரண 15A ப்ளக் பாயின்ட்டில் சார்ஜ் செய்தால், சுமார் 8.45 மணி நேரம் ஆகும்.

டேஷ்போர்டு, ரெகுலர் டிகோர்தான். நீல நிற ஆக்ஸென்ட்டுகள்தான் ஸ்பெஷல்.
டேஷ்போர்டு, ரெகுலர் டிகோர்தான். நீல நிற ஆக்ஸென்ட்டுகள்தான் ஸ்பெஷல்.
ரர்கள் உள்ளே இருந்தே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்
ரர்கள் உள்ளே இருந்தே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்
EV பேட்ஜ், எலெக்ட்ரிக் கார் என்பதைச் சொல்லும்.
EV பேட்ஜ், எலெக்ட்ரிக் கார் என்பதைச் சொல்லும்.
புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் அருமை.
புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் அருமை.


இந்தப் பெரிய பேட்டரியால்தான் 306 கிமீ செல்கிறார்கள். நாம் காரைக் கிளப்பி 2.1 கிமீ–க்கு ஒரு முறை ஜர்ரென 1% வரை பேட்டரி லெவல் இறங்கிக் கொண்டிருந்தது. கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்படியென்றால் சுமார் 180 கிமீ முதல் 200 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக் கொண்டோம்.

இதன் பெர்ஃபாமன்ஸ் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ஜிவ்வென ஒரு பெட்ரோல் கார் ஓட்டுவதுபோல்தான் இருக்கிறது. கேபினுக்குள் வெளிச்சாலைச் சத்தம்தான் அதிகமாகக் கேட்டது. அதாவது, அத்தனை ஸ்மூத்தாக இயங்கிக் கொண்டிருக்கிறது இதன் எலெக்ட்ரிக் மோட்டார். இதன் பவர் 75bhp மற்றும் டார்க் 17.0kgm.

டாடாவில் டிரைவிங் மோடுகள் இல்லாமலா? இதில் Normal, Sport என இரண்டு மோடுகள் இருந்தன. சிட்டிக்குள் நீங்கள் ஒரே வேகத்தில் போகப் போகிறீர்கள் என்றால், நார்மல் மோடு போதுமானது. ஆக்ஸிலரேஷன் பெப்பியாகவே இருந்தது. நார்மல் டிகோரில் இருந்து இதற்காக ட்யூன் செய்துள்ளதாகச் சொல்கிறது டாடா.

ஸ்போர்ட் மோடில் ஓட்டிப் பார்த்தேன். ‘ஜிவ்’வெனப் பறந்தது. ஹைவேஸில் ஓவர்டேக்கிங்கில் ஸ்போர்ட் மோடுதான் எங்களின் ரெக்கமண்டேஷன். ஆனால், இதில் சார்ஜிங் பயம் இருந்து கொண்டே இருக்கும். 0–100 கிமீ–யை செக் செய்து பார்த்தோம். 14 விநாடிகளுக்கு மேல் ஆனது. இது ஸ்போர்ட் மோடில். இதுவே நெக்ஸான் 10 விநாடிகளுக்குள் 100 கிமீ–யைக் கடந்துவிடும். டிகோரின் டிரைவ் மோடு இன்னும் ஸ்லோ. 20 விநாடிகளுக்கு மேல் ஆகிவிட்டது.

எலெக்ட்ரிக் கார்களுக்கே உண்டான, ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இதில் இருந்தது. ஆனால், மற்ற எலெக்ட்ரிக் கார்கள் மாதிரி நிச்சயம் இதன் ரீ–ஜென் பவர்ஃபுல்லாக இருக்காது. காரணம், சின்ன மோட்டாராச்சே!

டிகோரில் இன்னொரு பிடித்த விஷயம் – ஹில் ஹோல்டு அசிஸ்ட். கர்நாடகாவின் நந்தி ஹில்ஸில் பயமே இல்லாமல் ஏறினோம். சில மலைச்சரிவுகளில் வேண்டுமென்றே நிறுத்தியபோது, கார் கீழே இறங்கவே இல்லை. இதன் க்ரீப் ஃபங்ஷனும், ஹில் அசென்ட் அசிஸ்ட் கன்ட்ரோலும் பிரமாதம். புதிதாய் கார் ஓட்டப் பழகுபவர்களுக்குச் சரியான சாய்ஸாக இருக்கும் டிகோர் Ziptron EV. அதேபோல், மலைப்பாதைகளில் ICE கார்களில் டர்போ லேக் தெரியும்தானே… டிகோர் EV–ல் மலையேற உற்சாகமாக இருக்கிறது. ஜாலியாக மலையேறினோம்.

இதன் பிரேக்கிங் பெர்ஃபாமன்ஸ் ஓகேதான். ஆனால், எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி போன்ற விஷயங்களால், சாதா டிகோரைவிட 200 கிலோ எடை கூடியதால், இதன் பிரேக்கிங் தூரம் கொஞ்சம் தூரமாகவே இருக்கிறது. பின் பக்கமும் டிஸ்க் கொடுத்திருக்கலாம். வெறும் டிரம்தான் இருந்தது. ஹைவே டிரைவர்கள் கவனம்.

டிகோர் Ziptron EV
டிகோர் Ziptron EV
டிகோர் Ziptron EV
டிகோர் Ziptron EV


டிகோர் எலெக்ட்ரிக்கில் இன்னொரு பிடித்த விஷயம் – இதன் ரைடு அண்ட் ஹேண்ட்லிங். பெரிய மேடு பள்ளங்களை ஈஸியாக உள்வாங்குகிறது இதன் சஸ்பென்ஷன் செட்–அப். பெரிதாக கேபினுக்குள் அதிர்வுகளும் தெரியவில்லை. இதன் ஸ்டீயரிங் ஃபீட்பேக்கும் அற்புதம் என்றே சொல்லலாம். கார்னரிங் செய்து பார்த்தேன். அதுவும் அருமையாகவே இருந்தது. டாடாவின் டைனமிக்ஸும் சூப்பர். பாடி ரோல் பெரிதாகப் படுத்தி எடுக்கவில்லை. காரணம், இதன் பேட்டரிகளைக் கொஞ்சம் தாழ்வாக வைத்திருப்பதால், சென்டர் ஆஃப் கிராவிட்டியைக் காப்பாற்றுகிறது. இதன் கி.கிளியரன்ஸ் 172 மிமீ என்பது ஓகே. எங்கேயும் இடிக்கவில்லை.

இதன் 15 இன்ச்; 175 செக்ஷன் அலாய் வீல்கள் நல்ல கிரிப். இது அலாய் இல்லை; இதை ஹைப்பர் ஸ்டைல் வீல்கள் என்று சொல்ல வேண்டும். ‘அலாய் இல்லை; ஆனால் அலாய் மாதிரி!’ டாடா டிசைனர்களுக்குப் பாராட்டுக்கள். அதேபோல், குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியதற்கும் பாராட்டுகள். இருந்தாலும், குட்டி அல்ட்ராஸே 5 ஸ்டார் வாங்கும்போது, டிகோர் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம்.

காருக்கு உள்ளே அப்படியே ரெகுலர் டிகோர் மாதிரிதான் இருக்கிறது. நீல நிற வேலைப்பாடுகள்தான் இங்கேயும் வித்தியாசம். 7 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி, iRA தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என்று வசதிகளிலும் அருமை. இதன் வீல்பேஸ் அதே 2,450 மிமீதான். அதனால் இடவசதி, அப்படியே ரெகுலர் டிகோர்தான். IC இன்ஜின் டிகோரைவிட, சுமார் 1.5 – 2 லட்சம் விலை அதிகமாக இந்த டிகோர் Ziptron EV கிடைக்கிறது.

மலைச் சாலை, ஹைவேஸ், சிட்டி என்று நாள் முழுக்க டிகோரை ஓட்டிவிட்டு, மறுபடியும் காரை ஒப்படைக்கும்போது, நமது பேட்டரி லெவல் 17% இருந்தது. ட்ரிப் மீட்டரை செக் செய்தேன். 143 கிமீ ஓட்டியிருந்தோம். அதாவது, 83%–த்துக்கு 145 கிமீ ஓடியிருந்தது. இன்னும் 17% வைத்து சுமார் 40 – 50– கிமீ ஓட்டலாம். அப்படியென்றால் டிகோர் Ziptron EV–ன் ரியல் டைம் ரேஞ்ச் சுமார் 190 – 200 கிமீ வரை கிடைக்கும்.

அதாவது, சிட்டி பயன்பாட்டுக்கு மட்டும்தான் இந்த எலெக்ட்ரிக் டிகோர் சரியாக இருக்கும். ஹைவே ரைடிங்குக்கு 300 கிமீ–யாவது இருந்தால்தான் பயமில்லாமல் இருக்கும்.

நீ/அ/உ 3,993/1,677/1,532 மிமீ

வீல்பேஸ் 2,450 மிமீ

கி.கிளியரன்ஸ் 172 மிமீ

பூட் ஸ்பேஸ் 316 லிட்டர்

பிரேக்ஸ் (மு/பி) டிஸ்க்/டிரம்

எடை 1,235 கிலோ

டிரைவ் ஃப்ரன்ட் வீல் டிரைவ்

மோட்டார் Permanent Magnet Synchronous Motor எலெக்ட்ரிக்

பவர் 75bhp

டார்க் 17.0 kgm

பேட்டரி 26kW

பேட்டரி வால்ட்டேஜ் 350V

கியர் ஆட்டோமேட்டிக் – 1 கியர்

ரேஞ்ச் சுமார் 190 – 200 கிமீ