ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

கார்களை பாதிக்குமா கொரோனா?

கார்/பைக்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்/பைக்

கார்/பைக் டிப்ஸ்

லாக்டெளனுக்குப் பிறகான வாழ்க்கை, நமக்குக் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கப்போகிறது. இத்தனை நாள் வீடு கற்றுத் தந்த பொறுமையை எல்லாம், நம் வாகனங்கள் சோதிக்கப் போகின்றன. ஆம், கோமாவில் தூங்கிக்கிடந்த வாகனங்களை வெளியில் எடுக்கப்போகும் ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும், `எலி எந்த ஒயரைக் கடிச்சு வெச்சிருக்குமோ’ என்ற பயமும் கூடவே இருக்கிறது.

லாக்டெளன் என அறிவித்தவுடன், வாகனத்தை அப்படியே இருக்கும் இடத்தில் நிறுத்திவிட்டு, ஊரை விட்டு வேகமாகக் கிளம்பி வந்தாச்சு! திரும்பப் போனா வண்டி ஸ்டார்ட் ஆகுமா, ஆகாதா என்ற குழப்பம் இருக்கும்; லாக்டெளன் முடிந்த பிறகு, வாசகர்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கார்
கார்

உஷார்! கார்களை எடுப்பதற்கு முன்...

``பல நாள்கள் கழித்து வாகனத்தை வெளியே எடுப்பவர்கள், இதை ஃபாலோ செய்யவேண்டும்’’ என்கிறார், நம் இதழில் சர்வீஸ் அனுபவம் தொடர் எழுதும் விமல்நாத்.

 • கார், பைக் என எதுவாக இருந்தாலும், ஆன் செய்த உடனேயே வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூடாது. நாளை அலுவலகம் செல்ல வேண்டும் என்றால், முந்தைய நாளே வாகனத்தை ஆன் செய்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

கார்
கார்
 • லாக்டெளன் முடிந்து கார், பைக்கை வெளியில் எடுக்கும்போது, வாகனத்தில் ஏறும் முன்பு அதை ஒருமுறை சுற்றிப் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தின் கீழே நாய், பூனை என மிருகங்கள் ஏதாவது குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்! நாய்கள்கூட பெரிய பிரச்னை இல்லை. சிறிய பூனைக்குட்டிகள்தான் எங்கேயாவது ஏறிச் சொருகிக் கொள்ளும்.

 • கார் கவரைப் போடும்போது விவரம் தெரிந்தவர்கள், ஆன்ட்டெனாவைக் கழற்றிவிட்டு கவர் போட்டிருப்பார்கள். ஆனால் பலர் அப்படியேதான் போட்டிருப்பார்கள். இந்த ஆன்ட்டெனா சுலபமாகக் கழன்றுகொள்ளும் பாகம். ஏனெனில், கவரை எடுக்கும்போது எக்குத்தப்பாகக் கழன்று, கார் கவரிலேயே மாட்டியிருக்கும். எனவே, ஆன்ட்டெனாவைக் காணோமே எனக் கலங்க வேண்டாம்.

 • காரைத் துடைக்கும்போது, நம்பர் பிளேட்டுக்குக் கீழே கிரில் இருக்கும். அந்தப் பகுதியில் குறைவான பிரஷரில் தண்ணீரை அடித்துச் சுத்தம் செய்யவேண்டும். இதனால் கண்டன்ஸர், ரேடியேட்டர் போன்றவற்றில் இலைகள் ஏதாவது சொருகியிருந்தால், அவை கீழே விழுந்துவிடும். பானெட் மற்றும் இன்ஜின் பகுதியில், தண்ணீர் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 • இத்தனை நாள்கள் ஒரே இடத்தில் நின்றிருந்ததால், டயரில் நிச்சயமாகக் காற்று இறங்கியிருக்கும். எனவே, அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்குக்கு வாகனத்தை எடுத்துச் சென்று, காற்றும் எரிபொருளும் அடித்துவிட்டுச் செல்லலாம். ஃப்ளாட் டயர் என்றால், முதலில் காற்றடித்துவிட்டு வாகனத்தை எடுங்கள். கூடவே, ஸ்டெஃப்னியை டாப்-அப் செய்ய மறக்காதீர்கள்.

கார்களை பாதிக்குமா கொரோனா?
 • காரை வெகு நாள் கழித்து ஆன் செய்வதால், ஏசி, புளோயர், ஹெட்லைட் எல்லாவற்றையும் ஆஃப் செய்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்யவும். எல்லா ஜன்னல்களையும் இறக்கி விட்டுவிட்டு, புளோயரை முதலில் ஆன் செய்யவேண்டும். 5 நிமிடம் கழித்து ஏசியை ஆன் செய்யலாம். இரண்டு நிமிடங்கள் கழித்து ஜன்னல்களை ஏற்றிவிடுங்கள்.

 • பேட்டரியில் சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியாது. இதனால் காரை முதல்முறை ஸ்டார்ட் செய்த உடனேயே ஆஃப் செய்யாமல், தொடர்ச்சியாக 10-20 நிமிடங்களுக்கு ஐடிலிங்கில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் இதர விஷயங்களை செக் செய்யலாம்.

 • அனைத்துக் கதவையும் திறந்துவிட்டு, ஃப்ளோர் மேட் எல்லாவற்றையும் வெளியில் எடுத்துப் போட்டுச் சுத்தம் செய்யுங்கள். சீட், டோர் ஹேண்டில், கியர் லீவர், ஸ்டீயரிங், டேஷ்போர்டு போன்ற இடங்களில் சோப் ஆயிலை ஸ்ப்ரே செய்து துடையுங்கள். சானிடைஸர் இருந்தால் இன்னும் சிறப்பு.

 • காரை முன்னும் பின்னும் நகர்த்தி, பிரேக் சரியாக வேலை செய்கிறதா எனப் பாருங்கள். ஹெட்லைட்ஸ், டெயில் லைட்ஸ், இண்டிகேட்டர்கள், ரிவர்ஸ் கேமரா, பாஸ் லைட், ஹாரன், FM, வைப்பர், வால்யூம், Defogger, வாஷர் என ஒரு பட்டன் விடாமல் எல்லாவற்றையும் அழுத்தி, எல்லாமே சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஒயரிங் பிரச்னை ஏதாவது இருந்தால், இதில் உடனே தெரிந்துவிடும். வைப்பரை செக் செய்யும் முன்பு, கண்ணாடியில் இருந்து வைப்பரைத் தூக்கிவிட்ட பிறகே ஆரம்பியுங்கள்.

கார்களை பாதிக்குமா கொரோனா?

உஷார்! பைக், ஸ்கூட்டர்களை எடுப்பதற்கு முன்...

 • பைக்கைப் பொறுத்தவரை, சிக்கலான நடைமுறை எதுவும் கிடையாது. இன்ஜின் ஆயில், இன்ஜினின் அனைத்துப் பாகங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால், பைக்கை எடுக்கும்போது முதல் 5 நிமிடங்கள் ஐடிலிங்கில் விட வேண்டும். டயரில் காற்று குறைந்திருக்கும். முதல் வேலையாக டயரில் காற்று நிரப்பிக் கொள்ளுங்கள்.

பைக், ஸ்கூட்டர்
பைக், ஸ்கூட்டர்
 • செயினில் போதுமான லூப்ரிகேஷன் இருக்கிறதா, இல்லையெனில் செயின் துருப்பிடித்தோ அல்லது தூசாகவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். அழுக்கு அதிகம் இருந்தால், அதைச் சுத்தம் செய்த பிறகே செயின் ஸ்ப்ரே அடிக்கவும். செயின் அட்ஜஸ்ட்மென்ட்டையும் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.

 • உங்கள் டூ-வீலரைக் கவர் வைத்து மூடியிருந்தீர்கள் என்றால், கவரை எடுக்கும்போது கவனமாக இருக்கவும். சில சந்தர்ப்பங்களில் பூனை அல்லது எலி ஆகியவை, உங்கள் வாகனத்தை வாடகை இல்லா வீடாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஃபுல் ஃபேரிங் பைக் என்றால் இன்னும் கவனம் தேவை.

 • மற்றபடி டயர், பிரேக், பேட்டரி, சஸ்பென்ஷன், எலெக்ட்ரிக்கல் அம்சங்கள் ஆகியவற்றின் கண்டிஷனைச் சோதனை செய்யவும். தேவைப்பட்டால் உராய்வு இருக்கும் இடங்களில் (ஆக்ஸிலரேட்டர், க்ளட்ச், ஃபுட் பெக்ஸ், ஸ்டாண்டு, லாக் செட், பெட்ரோல் டேங்க் மூடி) ஆயில் விடலாம்.

உஷார்! சர்வீஸ் சென்டர்களில்...

 • சர்வீஸ் சென்டர்கள் ஒரு மாதத்துக்கு மேல் மூடப்பட்டுள்ளதால், ஃப்ரீ சர்வீஸ், AMC, ஜெனரல் பெய்டு சர்வீஸ் என எல்லாமே நின்றிருக்கும். கடையைத் திறந்த பிறகு, ஏறக்குறைய எல்லோருமே சர்வீஸ் சென்டர் வருவார்கள். இது மட்டுமில்லை... 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட கார்களும் சர்வீஸ் சென்டருக்கு நிச்சயம் வரும். வாகனங்கள் அதிகம் வருவது ஒரு பக்கம் என்றால், சர்வீஸ் சென்டரில் கடைப்பிடிக்கப்படும் சில பல செயல்பாடுகள் மாறியிருப்பதால், உடனே உங்களது கார் அல்லது பைக்கை டெலிவரி எடுத்துக்கொண்டு போக முடியாது. இதை மனதில் வைத்துக்கொண்டு ஒர்க்‌ஷாப்புக்குச் செல்லுங்கள்.

சர்வீஸ் சென்டர்களில்
சர்வீஸ் சென்டர்களில்
 • கார்/பைக் சர்வீஸ் சென்டர்களுக்கு, தயாரிப்பாளர்கள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை எல்லோரும் ஒரு சில பரிந்துரைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதன்படிதான் ஒர்க்‌ஷாப்கள் இயங்கப் போகின்றன. முக்கியமாக டீலருக்குச் சொந்தமான சர்வீஸ் சென்டர்கள்.

 • முதல்கட்டமாக சர்வீஸ் சென்டர்கள், 25 முதல் 50 சதவிகித தொழிலாளர்களோடு மட்டுமே இயங்கும். கொரோனா ஹாட் ஸ்பாட் இடங்களில், அதைவிடக் குறைவான ஆள்களோடு மட்டுமே சர்வீஸ் சென்டர்கள் இயங்கும்.

 • கார் அல்லது பைக் வந்தவுடனேயே, சர்வீஸ் ஃப்ளோருக்குக் கொண்டுசென்று வேலையை ஆரம்பிக்க முடியாது. முதலில் வாகனத்தைக் கழுவி சானிடைஸ் செய்வார்கள். அதன்பிறகே வேலையைத் தொடங்குவார்கள். முன்புபோல ஜாப் கார்டு சிஸ்டம் கிடையாது. அதை முழுக்கவே டிஜிட்டலுக்கு மாற்றியுள்ளார்கள். மாருதி சுஸூகி போன்ற பல நிறுவன சர்வீஸ் சென்டர்களில் உங்களுக்குக் கொடுக்கப்படும் லிங்க்கில், உங்கள் காருக்கான ஜாப் கார்டை நீங்களே உருவாக்கலாம்.

 • கூட்டத்தைக் கட்டுப்படுத்த முன்பதிவுகள் மூலமாகவே சர்வீஸ்கள் எடுக்கப்படவுள்ளன. இதனால் ஒருவர் நேரடியாகச் செல்வதைவிட, சர்வீஸ் சென்டரை அழைத்து முன்பதிவு செய்து கொண்ட பிறகு செல்வது நல்லது.

 • சமூக விலகல் கடைப்பிடிக்கப்படும் காரணத்தால், ஷாப் ஃப்ளோரில்கூட கார்களுக்கு சமூக இடைவெளி விட்டுத்தான் வேலை செய்வார்கள். இதனால் முன்பைவிட 50 சதவிகித குறைவான வாகனங்களையே சர்வீஸ் சென்டர்கள் எடுத்துக் கொள்ளமுடியும். இதனால் சர்வீஸ் சென்டரிடம் வாகனத்தைத் திணிக்காதீர்கள். ஒன்று அல்லது இரண்டு நாள் தாமதமாக சர்வீஸ் விட்டால் கூடப் பரவாயில்லை... உங்கள் வாகனம் உங்கள் கையில் இருப்பதே பாதுகாப்பானது.

நமக்கு நாமே மெக்கானிக்!

 • நாம் எல்லோருமே மெக்கானிக் கிடையாது. ஆனால் சில அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டால், எல்லா நேரமும் மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல், சுயமான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு இந்த காலத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 • சர்வீஸ் சென்டர் போவதை, கொஞ்ச நாளைக்குத் தவிர்ப்பது நல்லது. ஆட்டோமொபைல் டீலர்கள் கடந்த 15 மாதமாக, சரியான தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். இதில் லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால், ஒரு மாதத்துக்கு மேல் பிசினஸ் இல்லை.

இன்ஜின் ஆயில்
இன்ஜின் ஆயில்
 • கடை திறந்தாலும் வாகனங்களை உடனடியாக வாங்குவதற்கு கஸ்டமர்கள் அதிகம் வரமாட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே தொழில், சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ்.

 • இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் டீலர்கள், சிறிய விஷயங்களுக்குக்கூட அதிக சர்வீஸ் சார்ஜ் போடுவது முதல், தேவையில்லாத ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் ஆக்ஸசரீஸ்களை விற்பதில் கவனம் செலுத்துவார்கள். மாட்டிக்கொள்ளாமல் இருக்கவே ஒரு முன்னெச்சரிக்கை.

 • சர்வீஸ் சென்டர் போகாமல், வாகனங்களை வீட்டிலேயே கூட பராமரிக்கலாம். இதற்கு முதலில் உங்களுக்கு எந்தெந்த விஷயங்களுக்கு சர்வீஸ் சென்டர் அல்லது மெக்கானிக் ஷாப் செல்ல வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். வாகனத்தில் ஏதாவது பிரச்னை இருப்பதுபோலத் தெரிந்தால், சர்வீஸ் சென்டர் செல்லுங்கள். இல்லையென்றால் யூஸர் மேனுவலின் உதவியை நாடலாம்.

 • கார்/பைக்கில் இப்போதைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஜெனரல் சர்வீஸ் மற்றும் செக் அப் மட்டுமே தேவை என்பவர்கள், அதை வீட்டிலோ அல்லது அருகில் இருக்கும் தெரிந்த மெக்கானிக்கிடமோ செய்து கொள்ளலாம். ஜெனரல் சர்வீஸில் என்ன அடங்கும் என்பதற்கான செக் லிஸ்ட் இதோ!

1. இன்ஜின் ஆயில் மாற்றவேண்டும்

2. ஸ்பார்க் பிளக் செக் செய்து, தேவையென்றால் மாற்றவேண்டும்.

3. ஆயில் ஃபில்ட்டர் மாற்றவேண்டும்.

4. ஏர் ஃபில்ட்டர் பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் மாறியிருந்தால், அதை நிச்சயமாக மாற்ற வேண்டும்.

5. ரேடியேட்டர் கூலன்ட் - பிரேக் ஆயில் - வாஷர் ஃப்ளூயிட் செக் செய்துகொள்ளுங்கள்.

மேலே சொல்லப்பட்ட செக் லிஸ்ட், கார் மற்றும் பைக் இரண்டுக்குமே பொதுவானது. வாகனத்தில் ஜெனரல் சர்வீஸ் செய்யும்முன்பு, ஒரு முறை ஓனர்ஸ் மேனுவலை எடுத்துப் பாருங்கள். வாகனம் எத்தனை கி.மீ ஓடியிருக்கிறது என்பதை வைத்து, எந்தெந்த இடங்களில் கவனிக்க வேண்டும் என்பதை அதிலேயே கொடுத்திருப்பார்கள்.

பிரேக் பேட் மாற்றுவது, வீல் அலைன்மென்ட் செக்கிங், கியர் ஆயில் மாற்றுவது... டூவீலரில் ஃபோர்க் செட் அப், பிரேக் பேட்களை மாற்றுவது, பியரிங் மாற்றுவது போன்ற சிக்கலான வேலைகளுக்கு சர்வீஸ் சென்டர்தான் சரி.

உஷார்! சாலைகளில்...

 • இதுவரை தங்களது தனி வாகனத்தைப் பயன்படுத்தாமல், ரயில் மற்றும் பேருந்துகளில் சென்றவர்கள்கூட, ஊரடங்கு தளர்ந்தவுடன் தினமும் சொந்த பைக் மற்றும் கார்களையே பயன்படுத்துவார்கள். இதனால் சாலையில் முன்பைவிட டிராஃபிக் அதிகமாக இருக்கும். எனவே அதற்கேற்ப பயணத்தைத் திட்டமிடுங்கள்.

சாலை
சாலை
 • டிராஃபிக் ஒரு பிரச்னை என்றால், பார்க்கிங் இன்னொரு பிரச்னையாக உருவெடுக்கும். பல அலுவலகங்களில் குறைவான பார்க்கிங் வசதியே இருக்கும். சில இடங்களில் அதுகூட இருக்காது. பைக் அல்லது காரை எங்கே பார்க் செய்யப் போகிறீர்கள் என முடிவெடுக்கவில்லை என்றால், தினமும் அலுவலகம் என்பது சிரமம்தான்.

 • பைக்கில் பயணிப்பவர்கள் குறுகலான சாலைகளைத் தவிர்த்துவிட்டு, நெடுஞ்சாலை மற்றும் பெரிய சாலைகளில் பயணிக்கலாம். இதனால் ஒரு வாகனத்துக்கும் இன்னொரு வாகனத்துக்கும் இடைவெளி விட்டுப் பயணிக்க முடியும். சாலையில்கூட சோஷியல் டிஸ்டென்சிங் தேவை மக்களே!

 • லாக்டெளன் முடிந்தவுடன் பயணம் கிளம்பலாம் எனும் திட்டத்தை, சானிடைஸர் போட்டுக் கழுவி விடுங்கள். எல்லாமே சகஜ நிலைக்குத் திரும்புவதற்குக் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகும். பல துறைகள், தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, சுற்றுலாத்துறை பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் கூட முழுமையாக இயங்க, எப்படியும் குறைந்தபட்சம் 3-6 மாதங்கள் ஆகும். அதனால் சேமிப்புதான் இப்போதைக்குச் சிறந்த வழி.

குறைந்தபட்சம் ஆறு மாதத்தைச் சமாளிக்கும் அளவுக்கான சேமிப்பு இருந்தால் மட்டுமே பயணம் கிளம்புங்கள். இல்லையென்றால் எல்லாமே சகஜ நிலைக்குத் திரும்பியதும், இன்னும் செமையான ஒரு திட்டத்தோடு கிளம்பலாம்.